(முக நூலிலிருந்து)
14.10.1942ல் பிறந்த எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் ,நாவல்,சிறுகதை,பயணக்கட்டுரை,இலக்கியக்கட்டுரை ,நேர்காணல் ,மொழிபெயர்ப்பு என பல்வேறு தளங்களில் தன் எழுத்துத்திறமையை பதித்தவர்.
சிவசங்கரியின் முதல் சிறுகதை:
” அவர்கள் பேசட்டும்”என்கிற முதல் சிறுகதை 1968ல் கல்கியில் பிரசுரமானது அதற்குப் பிறகு 150சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ளார்.35 நாவல்கள்,13 பயணக்கட்டுரைத்தொகுப்புகள், 7 கட்டுரைத்தொகுப்புகள் ,2 வாழ்க்கைச்சரிதங்கள் . குறுநாவல்கள்.
1996ல் அம்மா சொன்ன கதைகள் என்ற ஒலிநாடாவையும் வெளியிட்டார்.
1998 முதல் 2009 வரை “இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு “என்கிற அவரின் அரிய முயற்சியின் வாயிலாக இந்திய இலக்கியகர்த்தாக்களையும் அவர்தம் படைப்புகளையும் நாம் அறிந்து கொள்ள வைத்திருக்கிறார்.
1983 ல் ஆனந்த விகடனில் வெளிவந்த சிவசங்கரி அவர்களின் ” பாலங்கள் ” கதை இன்றும்,என்றும் பேசப்படுகிற ,ஆவணப்படுத்தப்பட வேண்டிய அரியதொரு கதை.
பிராம்மண சமூகத்தின் அக்கால சம்பிரதாயங்களையும் படிப்படியாக அவை உருமாறுகிறதையும் அந்த நாவலில் சொல்லியிருப்பார்.
அந்த சமயத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற நாவல் அது.
இவருடைய பாரத தரிசனம் என்னும் நூலுக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர்க்கான பரிசினைப்பெற்றவர்.( 2010 ஆண்டில்)
நண்டு,மற்றும் 47 நாட்கள் ஆகிய இவரின் கதைகள் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டன.
” ஒரு மனிதனின் கதை” மற்றும் ” கருணைக்கொலை” இந்த இரண்டு தொடர்கதைகளும் வெளிவந்தபொழுது மிகுந்த பரபரப்பை வாசகர்களிடம் ஏற்படுத்தின.
இவரின் அதிதீவிர வாசகி ” லலிதா” என்பவரே இவரின் வளர்ப்புமகளாக மிக நீண்ட வருடங்கள் இவருடனே இருந்து சமீபத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இல்லாத காலங்களாதலால் அப்பொழுதெல்லாம் இவரின் தொடர்கதைகள் இடம்பெறும் வார ,மாத இதழ்களை எதிர்நோக்கிக் காத்திருந்த வாசக ,வாசகியர் அதிகம்.
” சின்ன நூல்கண்டா நம்மை சிறைபடுத்துவது” என்கிற கட்டுரைத்தொடர் மிகவும் முக்கியமானது என் பார்வையில். மத்தியதர மக்களின் அன்றாட வாழ்வியலுக்கு வேண்டிய அத்தனை அறிவுரைகளும்,கருத்துக்களும் அந்தப்புத்தகத்தில் இருக்கும். சிவசங்கரி பரதநாட்டியக்கலைஞர் என்பதால் அவர் கதைகளில் ” இசை” இயல்பாகவே இருக்கும். இலக்கியவாதிகள் அவரை சேர்த்துக்கொள்ளவில்லையெனினும் மிகப்பரந்த வாசகர் வட்டத்தை பெற்றவர்.இவரின் எல்லா படைப்புகளை ஓரளவுக்கு நான் படித்திருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.
மேல்தட்டு மக்களின் வாழ்க்கைமுறையைக்கூறுதல்,இவர் கதைகளின் ஆண்,பெண் பாத்திரங்கள் மிக மிக நல்லவர்களாகவே இருப்பது, எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் மனிதர்களாகவே காதலர்களோ,கணவன் மனைவியோ இருப்பது என்பதே மிகைப்படுத்தப்பட்டது..
இவைதான் இவர் எழுத்தின் குறைகளென சொல்வார்கள். ஆனால் பெண்களின் உள்ளம் கவர்ந்த எழுத்தாளராகவே என்றும் அவர் இருக்கிறார் என்பதே உண்மை.
எனது மாணவப்பருவத்தில் என் இதயம் கவர்ந்த எழுத்தாளராக விளங்கியவர், சிவசங்கரி. அதனாலேயே என் மகளுக்கு அவர் பெயரையே வைத்தேன். ஆதத்த வாரம் (14-10-2018) அன்று 76 -வது பிறந்தநாள் காணப்போகும் சிவசங்கரிக்கு தமிழ் வாசகர்கள் சார்பில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். – இராய செல்லப்பா சென்னை
LikeLike