கோழைகளின் சரணாலயம் “தற்கொலை”
தினமணி.காம் மின்னிதழில் என்னுடைய “தற்கொலை எனும் வியாதி” வியாசம் வெளியான சமயம், ஈரோடு பக்கத்திலிருந்து மிரட்டும் குரலில் ஒரு போன் கால் வந்தது – ‘தற்கொலைகள் தூண்டப்படுகின்றன – சமூகமே அதற்குப் பொறுப்பு. நீங்கள் வியாதி என்கிறீர்களே?’ அமைதியாக நான் சொன்னேன், “யார் தூண்டினாலும், மனதில் நோய் உள்ளவர்களே பெரும்பாலும் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள் – அதற்கான மருத்துவ ஆதாரங்கள் வலுவாக உள்ளன”. போன் உடனே அமைதியான வேகம், மறுமுனையின் கோபம், வெறுப்பு – ஏதோ ஒன்றை உணர்த்தியது!
சமீபத்தில் வாசித்த இரண்டு ‘தற்கொலை’ சிறுகதைகளைப் பார்ப்போம்.
கதை 1:
கு.அழகிரிசாமியின் ‘குமாரபுரம் ஸ்டேஷன்’ சிறுகதைத் தொகுப்பில் உள்ள (விகடன் பிரசுரம்) ”கற்பக விருட்சம்” கதை.
எஸ் எஸ் எல் சி பரீட்சையில் பெயில் ஆகிவிடும் ஒரு ஏழை மாணவன், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறான் – கோவில் பட்டராக இருக்கும் அவனது அப்பா, இவன் பாஸ் செய்து, ஏதாவது ஒரு கடையில் வேலை செய்துகொண்டே, தட்டச்சு பயின்று பின்னர் பெரிய வேலைக்குப் போவான் – என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார். மொத்த குடும்பமும் – அப்பா, அம்மா, தங்கை – இவனது கையை எதிர்பார்த்து நிற்கிறது.
பல காரணங்களால் நான்கு வருடங்கள் தாமதமாக படிப்பதால், வகுப்பில் இவனே பெரியவன். எதிர்வீட்டுக்குப் புதிதாய்க் குடிவந்த சுகன்யா, இவனிடம் சந்தேகம் கேட்டுப் படிக்கிறாள் – அவளைப்பற்றிய எண்ணங்கள் அவனுள் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. இன்று ரிசல்ட் வந்துவிட்டது – அவள் தேறி விட்டாள், இவன் தேறவில்லை! இந்த எண்ணம் அவனை மிகவும் துன்புறுத்துகிறது – சுகன்யா மீது கோபமாக மாறுகிறது – அதுவே வெறுப்பாக மாறித் தற்கொலை முடிவுக்குத் தள்ளுகிறது!
வீட்டின் வறுமையும், தங்கையின் திருமணமும் இவனை வருத்தம் கொள்ள வைக்கின்றன; ஆனாலும், எதிர்வீட்டு சுகன்யா பாஸ் செய்து விடுவது இவனுக்கு அவமானமாக இருக்கிறது – இவர்களையெல்லாம் எதிர்கொள்வதைவிட, மரணத்தை எதிர்கொள்வது இவனுக்கு எளிதாகத் தோன்றுகிறது.
இருட்டிய பிறகு ரயில் முன்னால் விழுந்து தற்கொலை செய்துகொள்ள சைதாப்பேட்டை ஸ்டேஷனில் வந்து அமர்ந்திருக்கிறான். ரயில்வே சிப்பந்திகள், வந்து, போகும் பயணிகள் எல்லோரையும் பார்த்து, ஒரு வித பயத்துடன் இருட்டுவதற்காகக் காத்திருக்கிறான்.
இந்த தாமதிக்கும் நேரம், அவனை மரண பயமும், வாழ்க்கை பயமும் மாறி மாறி ஆட்கொள்கின்றன. தற்கொலைக்குப் பிறகு தன் குடும்பம் என்னாகும் என்று நினைத்துப் பார்க்கிறான் – அழகிருந்தாலும், தேறிவிட்டாலும், பாடம் கற்றுக்கொண்டதற்கு ஒரு முறை கூட நன்றி சொல்லாத சுகன்யாவுக்காக உயிரை விடுவதா? என்று தெளிந்து, தன் முடிவை மாற்றிக் கொள்கிறான் –
மிக அழகான இந்தச் சிறுகதையில், அழகிரிசாமி படிப்படியாக தற்கொலைக்கான காரணங்களையும், பின்னர் அவை எவ்வளவு முட்டாள்தனமானவை என்றும் சொல்லிச் செல்கிறார் – உயிரைவிட எதுவும் பெரியதில்லை – எல்லாவற்றையும் எதிர்த்து நின்று ஜெயிப்பதுதான் வாழ்க்கை என்று அழகாக நிறுவுகிறார்.
கதை 2.
சுந்தர ராமசாமியின் “கோழை” சிறுகதை சதங்கை இதழில் டிசம்பர் 1971 இல் வெளிவந்தது – காலச்சுவடு அக்டோபர் 2017 இல் மீண்டும் பிரசுரித்துள்ளது.
மீண்டும் மீண்டும் தற்கொலை செய்து கொள்ள முயன்று தோற்கிறான் கதையின் நாயகன் – தாங்க முடியாத துக்கமும், நிவர்த்திக்கும் மார்கமும் தெரியாதபோதெல்லாம் கடல் நினைவுக்கு வந்து, தற்கொலை செய்துகொள்ளப் போகிறார்! போகும் முன் முகத்தில் தாடி, பார்க்கும் பெண்களைச் சகோதரியாய் நினைப்பது, இரத்த பந்தங்களை ’நன்றாக அழுங்கள்’ என்று மனதாற சபிப்பது – இவை ரெகுலராக நடக்கும்!
இம்முறை நிச்சயமாக தற்கொலை என முடிவுசெய்து, பஸ்ஸில் போகும்போது, விலைமாது ஒருவரும் உடன் பயணிக்கிறார். இவர் அவளைப் பார்த்திருக்கிறார். அவளுக்கும் இவரைத் தெரியும் பார்த்திருக்கும் அளவில்!
கன்னியாகுமரிக் கடலில் ஒரு மணல் மேட்டின் மீது நின்றுகொண்டு, தானே பேசிக்கொண்டும், அழுதுகொண்டும் நிற்கிறார். அப்போது அவளும் அங்கே சற்று தூரத்தில் வானத்தைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாள். வழக்கம்போல் திரும்பி விடுகிறார் – இம்முறை அப்பெண் தற்கொலை செய்து கொள்வதாக நினைத்து, பயந்து ஓடிவந்து விடுகிறார்! அந்தப் பெண்ணே இவரிடம் வந்து பேசுகிறாள் – அவளது மனதில் இருக்கும் வாழ்க்கை குறித்த தெளிவு இவரிடம் இல்லை எனபது வெளிப்படுகிறது. திரும்புவதற்குக் கூட இவர் கையில் பணம் இல்லை – அவள் காசைக் கொடுத்து வீட்டுக்குப் போகச் சொல்லி, “எங்கு பார்த்தாலும், உங்களைத் தெரியும் என்ற வகையில் நான் புன்னகைக்க கூட மாட்டேன்” என்று கூறிச் செல்கிறாள். “இனி இந்த இடத்திற்கு வரக்கூடாது” என்றெண்ணித் திரும்புகிறார் அந்தக் கோழை!
இந்த இரு கதைகளும் தற்கொலைக்குப் பின் உள்ள மன இயல் ரீதியான போராட்டங்களைச் சுவையுடன் சொல்கின்றன.
சமீபத்தில் படித்த டொரதி பார்கர் (DOROTHY PARKER – 1893-1967) கவிஞரின் “தற்கொலை” பற்றிய கவிதை ஒன்று – முடிந்த வரை தமிழ்ப் ’படுத்தி’. இருக்கிறேன்.
சவரக் கத்திகள் வலி கொடுக்கும்
ஆறுகள் மிகவும் ஈரப்பதத்துடன் குளிர் கொடுக்கும்
அமிலங்கள் கறை படியும்
மருந்துகள் சதைகளைப் பிடிக்கும்
துப்பாக்கிகள் சட்டத்திற்கெதிரானவை
சுருக்குகள் அவிழ்ந்து விடும்
விஷ வாயுக்கள் துர்நாற்றம் தாங்கமுடியாது
அதனால்
நீ வாழ்ந்துவிட்டுப் போவதே மேல்!
(ஒரிஜினல் ஆங்கில மூலம் வேண்டுவோர் டாக்டர் ஜி.லக்ஷ்மிபதி அவர்களின் “HOW TO BE MIDDLE CLASS AND HAPPY” –புத்தகத்தின் 53 ஆம் பக்கம் பார்த்துக்கொள்ளவும் !)
ஜெ.பாஸ்கரன்.
ஒப்பிட்டு-வேறுபாட்டை என்ற வர்ணனையான “எக்ஸ்போஸிட்ரீ” கட்டுரை என்ற வகையில் இதை எழுதி இருக்கிறார். இருப்பதை இருக்கிறபடி, இரு உதாரணங்களைக் கொடுத்து அதில் காரணிகளை விவரிக்கச் செய்து விட்டார். விளைவுகளையும் அதிலேயே சொல்லப் பட்டிருக்கிறது.
இப்படி, “எக்ஸ்போஸிட்ரீ” முறையான கட்டுரையில் வாசகரான நம்மை , அதில் உள்ள அம்சங்களை க்ரஹிக்க விட்டு விடுவார்கள். அதாவது கதையை சொல்லி அதற்கு இதுதான் உள்ளர்த்தம் என்று வெளிப்படையாக சொல்லாமல், அர்த்தங்களை நாம் (வாசகர்) எடுத்துக் கொள்வது போல் எனலாம்.
இதன் சிறந்த அம்சமே, படிப்பவரும் விவரம் தெரிந்தவர்கள். அவர்கள், யோசித்து ங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்வது அவரவர்களைப் பொருத்தது என்பதே இதன் ஒரு மெய் கருத்து.
மிக்க நன்றி டாக்டர்.பாஸ்கரன்! தங்களால் பல வருடங்களுக்குப் பிறகு என்னுடைய ஆங்கில இலக்கிய வகுப்புக்குப் போன சுகம் உணர்ந்தேன்.
LikeLike
‘தன்னை அழித்துக்கொள்ளுதல்’ என்பதைத் தன் தலைவனுக்குச் செய்யும் மிக உயர்ந்த சமர்ப்பணமாகக் கருதும் மனநிலை, தற்கால அரசியல் சூழ்நிலையில் தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ளதை நீங்கள் கவனிக்காமல் இருக்க முடியாது. இத்தகைய ‘முனைந்து செய்யும்’ தற்கொலைகளுக்குச் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியாலும், அக்கட்சி ஆட்சியில் இருக்குமானால் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்தும் சிறந்த வெகுமதி – பெரும்பாலும் பல லட்சங்கள்- வழங்கப்படுவதும் வாடிக்கையாகி இருக்கிறது. இதுவும் பெருகிவரும் தற்கொலைகளுக்கு ஒரு காரணமாக இருக்கிறது.
இது பற்றிய மருத்துவவியல் நோக்கிலான கட்டுரையொன்றைப் பின்னொருநாளில் நீங்கள் வழங்கக்கூடும் அல்லவா? – இராய செல்லப்பா சென்னை
LikeLike