அப்படியும் இருக்குமோ…?
அன்று ஏனோ காலையிலிருந்து ஆஸ்த்மா ரொம்பத் தொந்தரவு
கொடுத்துக் கொண்டிருந்தது. எளிதாக மூச்சு விடமுடியாமல்
திணறிக் கொண்டிருந்தேன். என் மனைவியும், பெண் மிதிலாவும்
ஆதரவோடும், வருத்தத்தோடும், அக்கறையோடும் பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.
‘பூர்வ ஜன்மத்தில் என்னெல்லாம் பாவங்கள் செய்தேனோ..
இந்த ஆஸ்த்மா இப்படித் தொந்தரவு செய்யுது…’ என்றேன்
ஈனஸ்வரத்தில்.
என்னையே பார்த்துக் கொண்டிருந்த மிதிலா, ‘அப்பா…
நீ சின்ன வயதிலே பூச்சிகளையெல்லாம் பிடித்துத் தண்ணீரில்
போட்டிருப்பாய்.. அது மூச்சு விடமுடியாம எப்படித் தவிச்சுப்
போயிருக்கும்..? அதேபோலே மீன்களைப் பிடித்துத் தரையில்
போட்டிருப்பாய்.. அவை மூச்சு விடமுடியாமல் எப்படித் துள்ளித்
துடிச்சு செத்திருக்கும்..? அவை கொடுத்த சாபங்கள்தான் உன்னை
இப்படி வாட்டி எடுக்குது….’ என்றாள்.
நானும், என் மனைவியும் திகைத்துப் போய் அவளையே
பார்த்துக் கொண்டிருந்தோம்.
ஒரு வேளை அப்படியும் இருக்குமோ..?