சங்க்ராம்ஜெனா நான்கு கவிதை நூல்களை ஒடியா மொழியிலும் இரண்டு நூல்களை ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளார். ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் இவரின் கவிதைகள் இந்தியன் லிட்டரேச்சர், காவ்யபாரதி, நியூ இங்கிலீஷ் ரிவியூ மற்றும் மாஸ்டர் பொயட்ரி இன் டிரான்ஸ்லேசன் போன்ற முக்கிய இதழ்களில் வெளியாகியுள்ளன. காந்திஜியின் ஒடிசா ( இரு தொகுதிகள் ), பர்மிய நாட்கள் என்ற நூல்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலம், ஒடிய மொழிகளில் எழுதியும் மொழிபெயர்த்தும் தொகுத்தும் வெளியிட்டிருக்கிறார். நவீன ஒடியக் கவிதைகளை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருக்கிறார்.இந்திய அரசின் கலாச்சாரத் துறையில் மூத்த பெல்லோசிப் பெற்றவர். மொழிபெயர்ப்பிற்காக சாகித்ய அகாதமி விருது, பானுஜி விருது கவிதைக்காக –உட்பட பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார். நிசாந்த ( ஒடிய ) மார்க் ஏசியா ( ஆங்கிலம் ) என்ற இரு இதழ்களின் ஆசிரியராக விளங்கி வருகிறார். .
இந்தக் கவிதைகள் Looking for things என்ற அவரின் கவிதைத் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும். இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தவர்கள் பிபுபந்தி, அர்ரபிந்தோ பெஹேரா. ஆங்கில வழியில் தமிழுக்குத் தந்திருப்பவர் சுப்ரபாரதிமணியன்.
உங்கள் கவிதை
அன்று உங்கள் கவிதைகளை வாசித்தேன்
எப்படி உணர்ந்தேன் என்று தெரியவில்லை
வார்த்தைகள், ஒலிகள் மற்றும் அகரவரிசைகள்
தனிமை இருட்டின் சாலை நீண்டது
உங்களின் பின்னப்பட்ட கூந்தல் போல.
உங்கள் கண்கள் திறந்தும்
ஆனால் ஈர்ப்பில்லாமலும் இருப்பது போல்
பலவார்த்தைகள் புரியாமல்
ஒவ்வொருவரியின்
ரிதம் தொலைந்து போயிருந்தது
நிஜமானது என்றாலும் இறுக்கமான
உங்கள் உறவினைப் போல்.
உங்கள் வார்த்தைகள் முறையற்றும்
உங்களின் ஆழமான தொடர்பு மாதிரி.
வரிகளில் எந்த குறியீடுகளும் இல்லை
இடையில்… அல்லது முற்றுப்புள்ளி இறுதியில்
உங்கள் முடிவற்ற ஞாபகமறதி போல்.
பல வார்த்தைகளின் அர்த்தங்கள்
விளங்காதவையாக.
உங்கள் மனதின் பதிவுகள் போல
உங்கள் அன்பான மற்றும் நியாய கோபம் போல.
உங்கள் கவிதைகளைப் படிக்க
இடைவெளி விட்டு
நான் கண்களை மூடிக் கொண்டேன்
உங்கள் கையெழுத்தில் பிரதியில்
என் உள்ளங்கைகளைப் பதித்தேன்
உங்கள் உடம்பு ஆழமான சிநேகித்ததில்
இருப்பதைப் போல் அதன் உணர்தல்
நெருக்கமாக, முற்றுப்பெறும் வட்டமாக
உங்களின் கவிதைகளைப் போலில்லாமல்.
காந்தி
கண்ணாடிகள், செருப்புகள், மற்றும் நடைக் கைத்தடி
சரித்திரத்தின் பல பக்கங்களில்
ஒருவரை அறிந்து கொள்ளலாம்.
அரை நிர்வாணப் பக்கிரி ஒருவரைக்
கண்டுகொள்ளலாம்.
எண்ணற்ற பல நூல்களின் மூலம்
அவரின் வார்த்தைகள் கூர்மையாக அறியப்பட்டன.
கூட்டங்களில் ஒரு நம்பகமான,
உறுதியான குரல் கேட்டது.
நவகாளியின் நெருப்பில்
பயமோ, சந்தேகமேயில்லாமல்
தடையில்லாமல் ஒரு தனிமனிதன் நடந்தார்.
அவரின் கைகளில் ஆசைகளோடான தடி
கண்களில் எண்ணற்ற கனவுகள்
மாற்றங்களால் தொடப்படாத நம்பிக்கை.
மத வேலிகளுக்கு அப்பால்
ஜாதி, வர்ணம்,
அவர் நிச்சயமாக நம்பினார்
எல்லாவற்றின் இறுதியிலும்
அவர் நிச்சயமாக அந்த ஆண்களை,
பெண்களைச் சந்திக்கலாம் என்று.
தன் சொந்த இன்பங்களை விட
பிறரின் வலியை முக்யமானதாக கருதுபவைகளுக்கு
பெரிதும் விரும்புகிறார் வெறும் நிலத்தைவிட,
கடவுளைவிட மனிதர்களை இன்னும்.
சூத்திரம்
மலையின் மீது ஒரு கல்லை எறியுங்கள்
யாரும் பார்க்காத போது
அது ஒரு பழக்கமாகிவிடும்.
மரங்கள், பறவைகள், வயல்கள் காடுகளுடன் பேசுங்கள்
யாரும் பக்கத்தில் இல்லாதபோது
அது மெல்ல ஒரு பழக்கமாகிவிடும்.
நிலவு, வானத்து நட்சத்திரங்களைப் பார்த்து
வாய்விட்டு சிரியுங்கள்
மைதானமொன்றில் தனியாக நின்றுகொண்டு
அந்த நாளின் இறுதியின்
வருத்தங்கள், வலிகள், மயக்கங்கள்
தோல்விகள் அனைத்தும்
மெல்ல ஒரு பழக்கமாகிவிடுவதை
தெரிந்து கொள்வீர்கள்
யாரும் உங்களை கவனிக்காத போது.
வீட்டில், வெளியில்
எல்லோரும் இருக்கும் போது
நீங்கள் இல்லாதது போல
நீங்கள் வாழ்வது
யாரும் பார்க்காதோ, உங்களை கேட்காதோ போல்
நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்
வாழ்வது ஒரு பழக்கமாகிவிடும்.