“தயக்கம்! மறுப்பு!” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்

Madrasa teacher Hafiz Abdul Khalid

நான் “வாத்ஸல்யா” என்ற மனநல ஆலோசனை மையம் தொடங்கியிருந்த நாட்கள். தினம் காலை இரண்டு மணி நேரம் ஒரு அரசு புற்றுநோய் பிரிவில் தொண்டர் பணி புரிந்தேன்.

ஒரு நாள், பெரிய டாக்டர், அவசரமாக என்னை அழைத்து, அப்துல் என்பவரைப் பார்க்கப் பரிந்துரைத்தார். “அவருக்கு ரத்தப் புற்றுநோய் (ல்யூகேமியா), ஆனால் சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார்” என்றார். அவரை ஒப்புக்கொள்ள வைக்க முயற்சிக்கச் சொன்னார். அவர் அபாய கட்டத்தில் இல்லை என்று சொன்னார்.

நான் போய் சேர்ந்த அடுத்த பத்து நிமிடங்களில் அப்துல் வந்து சேர்ந்தார். நல்ல உயரம், கச்சிதமான உடல் அமைப்பு, அடர்த்தியான முடி, வெள்ளை வெளேர் பான்ட்- ஷர்ட், பளபளப்பான கருப்பு பூட்ஸ். நடையில் ஒரு கம்பீரம் தெரிந்தது.

35 வயதானவர், ஈரோடில் பெயர்பெற்ற ஜவுளிக்கடையின் உரிமையாளர். அத்துடன் பதப்படுத்தப்பட்ட விலங்குத் தோல்களில் காலணிகள், மேலாடைகள் உற்பத்தி செய்யும் தொழில் அதிபராக இருந்தாலும், அரசு மருத்துவமனையில் கவனம் இருக்கும் என்று தேர்ந்து எடுத்தாகக் கூறினார்.

அவர் சொல்லின் முழு வீச்சை என்னால் ஏற்றுக் கொள்ளமுடிந்தது. என்னுடைய முதுகலை பட்டப்படிப்பிற்கான ஆராய்ச்சி அரசு மருத்துவமனையில்தான் செய்தேன். அங்குள்ள டாக்டர், நர்ஸ் மேன்மையாக, சாந்தமாக நோயாளிகளை அணுகுவதையும் கவனிப்பதையும் பார்த்துப் பிரமித்துப் போனேன். பல நோயாளிகள் பொருளாதாரத்தில் எளியவர்கள், அதைப் பொருட்படுத்தாமல் அவர்களை மனிதர்களாக நடத்தினார்கள்.  இப்படிப்பட்ட இடத்தை அப்துல் தேர்ந்தெடுத்ததை மனதிற்குள் பாராட்டினேன்.

தன் ஊரில், அப்துல் தன் குடும்ப டாக்டரிடம் போவதுண்டு. சமீப காலமாக, யார் எங்கே இருமினாலும் இவருக்கு உடனே ஜலதோஷம், கூடவே காய்ச்சல் வந்துவிடும். உடம்பு மிகச் சோர்வாக இருப்பதையும் கவனித்தார். அவர் மனைவி ஆயிஷா, இவர் காலை வேளையில் தொழுகைக்கு எழுந்து கொள்ள முடியவில்லை என்று சொல்வதால் கவலை கொண்டாள்.

மூன்று பிள்ளைகள். அந்தக் காலகட்டத்தில், இரண்டு பிள்ளைகள் சட்டம். மூன்றாவது கர்ப்பம் என ஊர்ஜிதம் ஆனதும், அங்குள்ள மாவட்ட அதிகாரிகள், அரசு ஊழியர்களைச் சந்தித்து, இதற்கு அனுமதி வாங்க வேண்டுமா என்று விசாரித்தார். இப்படிச் சட்ட திட்டங்களை மதிப்பதைப் பார்த்து எல்லோரும் வியந்து போனார்கள், பலர் நண்பர்கள் ஆனார்கள்.

சென்ற வாரம், தன் குடும்ப டாக்டர் சொன்னபடி, புற்றுநோய்தானா என்று ஊர்ஜிதப்படுத்த, சென்னை வந்து முதல்முறையாக டாக்டர்களைச் சந்தித்தார். ரத்தப் பரிசோதனை எல்லாம் செய்துகொண்டார். டாக்டர் அவரை மூன்று நாட்களுக்குப் பிறகு வரச்சொன்னார். வேலை இருந்ததால் ஒரு வாரத்திற்குப் பின்தான் வர முடிந்தது. டாக்டர்கள், அப்துலுக்கு விவரித்து, சிகிச்சையைச் சீக்கிரமாக ஆரம்பிக்க வலியுறுத்தினார்கள்.

அப்துலுக்குத் தனக்கு புற்றுநோய் எனக் கேட்டதும் ஒரு பக்கம் வியப்பு. மறுபக்கம் இதைத் தன் வாழ்விற்கு இடையூறாகக் கருதி கோபம், அழுகை. எனக்கு, பிற்காலத்தில் “வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்”ல் வரும் ஜாகிர் பாத்திரத்தைக் கண்டதும் இவர் ஞாபகம்தான் வந்தது. அப்துல் தன் பெற்றோரை ஹஜ்ஜுக்கு அழைத்துச்செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். “அதை முடிக்காமல் எப்படி சுயநலவாதியாகச் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்?” என்றார். தன் கடைசிக் குழந்தையை சினிமாவிற்கு கூட்டிச் செல்வதாகச் சொல்லி இருந்தாராம். அந்த வாக்கை உடைப்பதா?

எல்லாவற்றுக்கும் மேலாக எதற்காகச் சிகிச்சை என்றார். “எப்படியும் புற்றுநோயால் மரணம் நிச்சயம். ஏன் பணத்தை வீணாகச் செலவு செய்யவேண்டும்” என்று திரும்பத்திரும்பக் கேட்டார்.

நோயாக இருந்தாலும் வாழ்வின் தரம் நிலைத்திருக்கவே சிகிச்சை. அதுவும் அப்துலுக்குப் புற்றுநோய் எனக் கண்டறிந்ததும் சிகிச்சை ஆரம்பித்துக் கொண்டால் அது பரவுவதைத் தடுக்க முடியும், விளைவாக, உடல் நிலை சுதாரித்தால், எடுத்திருந்த ஹஜ் ப்ளான்களையும் நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்புண்டு என்று சொல்லிச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வலியுறுத்தினோம்.

சில சமயங்களில் அதிர்ச்சியான செய்தியைப் பெறுபவர்கள், டாக்டர் முதலில் சொன்ன விஷயத்தை முழுதாக உள்வாங்கிக் கொள்ளாமலும் இருக்கலாம். அப்துலிடம் தனக்கு வந்த புற்றுநோய் பற்றியும், அதன் சிகிச்சை முறைகளையும் மறுபடி விவரித்தால் அதை உள்வாங்கிக் கொண்டு, தன்னம்பிக்கையும் இருப்பதால், சிகிச்சை முடிவெடுக்க உதவும் என்று எனக்குத் தோன்றியது. டாக்டரிடம் தொலைபேசியில் பரிந்துரைத்தேன். அப்துல் டாக்டரைச் சென்று சந்தித்தார். பிறகு பயம், குழப்பத்துடன் ஊர் சென்றதாகவும், இரண்டு நாட்களில் திரும்புவார் என்றும் டாக்டர் எனக்குத் தெரிவித்தார்.

சொன்னது போலவே இரண்டு நாட்களுக்குப் பிறகு அப்துல் வந்தார், பத்து பேருடன்! பல விதமானவர்கள். அவருடைய நற்செயலால் கூடிய கூட்டம். அப்துலின் உடல்நிலைபற்றிக் கவலைகொண்டு வந்திருந்தார்கள். டாக்டரும், நானும் நிலையை விவரிக்க, கண்கலங்கி விட்டார்கள்.

அப்துலை அழைத்து, இந்தப் பக்கபலத்தைப்பற்றி விவரிக்கச் சொன்னேன். வந்தவர்களிடமும் கேட்டேன். அச்சமின்றி, ஒவ்வொருவரும் பலவற்றைப் பட்டியலிட்டு, தன்னால் எப்படி, என்ன செய்யமுடியும் என்பதை வரிசைப்படுத்திச் சொன்னார்கள். இதை அங்குள்ள மற்ற நோயாளிகளின் நிலைமையுடன் அப்துலை ஒப்பிடச் சொன்னேன். இப்படி ஆதரவாளர்கள் சிகிச்சையின்போது நமக்கு ஊக்குவிக்கும் விதங்களைக் கணிக்க, அப்துலின் மனம் மாற ஆரம்பித்தது.

டாக்டர், என்னை அழைத்து, எவ்வளவு சீக்கிரமாக சிகிச்சை ஆரம்பிக்க முடியுமோ அவ்வளவு நல்லது என்றார். என்னுள் ஒரு ஐ.சி.யூ விறுவிறுப்பு நடனமாடியது.

அப்துல் மதத்தில் கல்யாணத்தில் “மெஹர்” தரும் பழக்கம், மணப்பெண்ணிற்கு உத்திரவாதமாக. பணம் மட்டும் அல்ல, நம்மை நம்பி வந்தோரைக் காப்பாற்றுவது தர்மமே. அப்துல் கடமையின் முழு வீச்சில் இருந்ததால் இதை விலாவாரியாகப் பேசி வலியுறுத்தினேன். சிகிச்சை நிராகரிப்பு, கடமைகளிலிருந்து ஓடுவதாகும் என்றேன். பொறுப்பானவரான அப்துலை, இந்த ஒப்பீடு திகைக்க வைத்தது. யோசிக்கத் தொடங்கினார்.

தனக்குள் இருந்த பயங்களினால் தத்தளிப்பதாக அப்துல் சொன்னார். மரணத்தைப்பற்றிப் பேச ஆரம்பித்தார். புற்றுநோய் என்றால் எப்படியும் மரணம் நிச்சயம் என்ற தன் புரிதலைப்பற்றிக் கூறினார். சிகிச்சைத் தொல்லை வேறா என்றார்.

சிகிச்சையால் பின்விளைவுகள் நேரலாம், ஆனால் அவை நிரந்தரமானது அல்ல. சிகிச்சை, புற்றுநோயைத் தடுத்து நிறுத்தும் கருவி. அதற்கு நாம் ஒப்புக்கொள்ளாதது நாமே முட்டுக்கட்டை போடுவதுபோல் ஆகும் எனச் சிந்திக்கச் சொன்னேன். இன்னொரு விதத்தில், சிகிச்சை எடுக்காதது தற்கொலை செய்வதற்குச் சமம். அது அவர் மதக் கோட்பாட்டை அவமதிப்பது போல் ஆகும் என நினைவூட்டினேன். அப்துலிடம் இதையும் பகிர்ந்தேன், சிகிச்சையால் பிரயோஜனம் இல்லை என்றால் அதை இந்த அளவிற்குச் சொல்லமாட்டோம் என்பதையும் சொன்னேன்.

அடுத்த கட்டமாக, தன்னுடைய இளம் வயதில் பலவற்றை சாதிக்கப் பட்டியலிட்டு நேரம் சுருங்கிப் போவதை நினைத்துப் பதறினார். அப்துலை தன்னுடைய இந்த வருத்தமும், சிகிச்சை செய்து கொள்ளாததும் நேர் எதிராக இருப்பதை அவருடைய கவனத்திற்குக் கொண்டு வந்தேன். நேரத்தைக் கூட்டிக்கொள்ள சிகிச்சை ஒரு வழியாகுவதைப்பற்றி உரையாடினோம்.

அப்துலுக்கு வருத்தம், கோபம், பீறி வந்தது. க்யூப்லார் ராஸ் அவர்களின் யதார்த்தமான “டெத் அண்ட் டையிங்” (Death and Dying) புத்தகத்திலிருந்து பல பக்கங்களை அப்துலுடன் படித்தேன். அதில், இவர் நிலையில் இருப்பவர்களின் விவரிப்பும், அப்துலுக்கு ஏற்பட்ட குழப்பங்கள்பற்றியும் பல சர்ச்சை உண்டு. வாழ்க்கையில்  திடீரென எந்த  மாற்றங்கள் ஏற்பட்டாலும், நாம் எல்லோரும் அனுபவிப்பது: அதிர்ச்சி அடைவது, மறுப்பது, தனிமையை விரும்புவது, நிலையை மாற்றப் பேரம் பேசுவது, மனம் உளைச்சலுக்கு ஆளாகுவது, கடைசியாக ஏற்றுக் கொள்வது என்று படித்தோம். ஒவ்வொரு பாகமாகப் படிக்க, அப்துல் தன் அந்தரங்கத்தில் அது ஓடுவதைக் கண்டறிந்தார். அந்த ஆசிரியர், புத்தகத்தை நோயாளிகளிடம் கேட்டுப் பதிவு செய்ததாலும், அதில் கற்பனையோ, போதிப்பதோ இல்லாததாலும்தான் இப்படியோ? படிக்கப் படிக்கத் தயக்கம் நகர்ந்து, சிகிச்சைக்கு அப்துல் ஒப்புக்கொண்டார்.

நடுநடுவில், கடவுள் மீது நம்பிக்கைபற்றிப் பல அலசல் மோதல். அப்துல் ஆண்டவனை நம்புவர். மதத்தில் சொல்வதைச் செய்பவர். ஐந்து முறை தொழுவது, தானம் செய்வது எனப் பல. சிகிச்சை செய்துகொள்ள அவருடைய நம்பிக்கை உபயோகப்பட்டது. ஒரு சமரசக் கருத்தைச் சற்று மாற்றி, நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் கடவுள் பல அடிகளை எடுத்து, முயற்சிகளுக்குத் துணை நிற்பார் என்றேன்.

அவருக்குத் தெளிவானது, சிகிச்சைக்கு ஒத்துழைப்பதும் ஒரு தேவையான சுயமுயற்சி! தன்நம்பிக்கையைச் சோதிக்க இப்படி நிகழவில்லை. கடவுள் பரிசோதனையாளர் இல்லையே! நம்பிக்கை இருப்பதால், தாங்கி-சமாளித்து-வெளியே வர முடியும். ஏனென்றால், இந்த நிலைகளில் ஆதரவுகளை, வளங்களை, நமக்குத் தோள் கொடுத்து காப்பாற்றுவாரை, நம் ஆசிகளை எண்ணிக் கொள்வது மருந்தாகும்! அப்துல் இவை ஒவ்வொன்றையும் பெரிய சொத்தாகக் கருதினார். அப்துல் தன்னுடைய அனுபவிப்பைத் திடநம்பிக்கையுடன் சேர்த்து அதை வைத்தியத்தின் மூலப் பொருளாக்கினார்

இந்தக் கட்டத்தில் ஆயிஷாவையும் சேர்த்துக் கொண்டேன். அவர்களும் நிலையைப் புரிந்துகொண்டு ஒத்துழைத்தார். அப்துலினுள் ஒரு அச்சம், இதுவரையில் தானே எல்லாம் கவனித்துக் கொண்டதால் இப்பொழுது யாரிடம் பொறுப்பை ஒப்படைப்பது என்று திகைத்தார். “என் சிகிச்சையின்போது, ஏதாவது நடந்து விட்டால் ஆயிஷா எப்படிச் சமாளிப்பாள்”? என்ற கேள்வி. ஆயிஷா ஒவ்வொன்றையும் கையாளுவதைப் பார்த்து, அவளிடம் இதுவரையில் பார்க்காத திறன்களைப் பார்த்து, தெம்பானார் அப்துல். மெதுவாகப் பதில் கிடைக்க, சமாதானம் ஆனார். இதையொட்டி அவர் பகிர்ந்தார்: எப்பொழுதெல்லாம் இந்தச் சந்தேகம் எழுகிறதோ அவரை உற்சாகப் படுத்தும் பாடல் வரி, “கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா..”. தன் நம்பிக்கை, உற்றார் உறவினரின் ஆதரவு, தெம்பைத் தருகிறதை உணர்ந்தார்.

ஆயிஷா-அப்துல் புற்றுநோய் என்றாலே மரணம் என்ற முடிவெடுத்து முற்றுப்புள்ளி ஏன் வைக்கிறார்கள் என்று
ஆராய்ந்தோம். மரணம் வரும்பொழுது வரும். காத்திருப்பது, செயலற்ற நிலையை உணர்த்தும். நம்மால் முடிந்ததை, முடியும்வரை செய்வதை, மரணமோ, புற்றுநோயோ தடுக்க முடியாது என்பதை இருவரும் ஒப்புக்கொண்டார்கள்.

டாக்டரும் நானும் இதையே வலியுறுத்தினோம். சிகிச்சை தன் பங்கிற்கு நலன் கொண்டு சேர்க்கும் என்று உறுதி அளித்தோம். நம்பிக்கை இருந்ததால் அப்துல் இதை ஏற்றுக் கொண்டார்.

நம்பிக்கையால் தெம்பு கூடும். அப்துல் அந்தத் தெம்பில் முயற்சியை எடைபோட்டு, பெரிது, சிறிது என்றில்லாமல் முயற்சி என்பதை மட்டும் மனதில் கொண்டு செய்தார். தெம்பு அதிகரித்தது. ஆன மாற்றங்களை எடை போடாமல் கவனிக்க, ஒவ்வொன்றும் நேர்மறை சிந்தனையானது. மெதுவாக, இதுவே ஊக்குவித்தது; மனப்பான்மையானது. தினமும் இப்படியே இருந்துவர, நிரந்தரமாக, நிலையைக் கையாள நல்ல ஆயுதமானது!

இதை அனைத்தையும் அப்துல் திட்டமிட்டுச் செய்தார். நல்லாசிகளைக் குறித்து, பகிர்ந்துகொண்டார். அன்றாடம் அடைந்த வெற்றி, மைல்கற்கள் உற்சாகத்தைக் கூட்டியது. அப்துல் திருப்தி அடைய, அவர் குடும்பம், உற்றார் உறவினர்கள் சந்தோஷப்பட்டார்கள்.

முடிவு எல்லோருக்கும் நிச்சயமாக உண்டு. நிச்சயமே. அப்துல் தன் நிலையை மாற்றி, தன் முடிவை எதிர்பார்த்துக் காத்திருப்பதில் பயம், செயலற்ற நிலை கொண்டு வந்ததை உணர்ந்து அதிலிருந்து விடுதலை பெற்று நகர்ந்துகொண்டார். அதற்குப் பதிலாக, தினப் பொழுதை அளிக்கப்பட்ட இனிய வாய்ப்பாக எடுத்துக்கொண்டார்.

கீமோதெரபிக்கு வருபவர்கள் ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்திக் கொண்டார்கள். பலருக்குப் பல தற்காலிக மாற்றங்கள் இருந்தாலும், சிலரின் கண்களில் திகழும் வீரத்தையும், புன்னகைகளையும் பார்த்துக் கற்றுக்கொண்டார்கள் – வருவதை வெல்லுவது நம்மிடத்தில்தான் இருக்கிறது என்று. எதிர்கொள்ள இதயத்துடன், தோள் கொடுக்க பலர் இருப்பதே மருந்தாகும். அப்பொழுது தினம் ஒரு வரம் என்று வாழ்ந்து அப்துலைப்போல் நோயை (எதிர்ப்புகளை) வீழ்த்தி வாழமுடியும்!
**********************************************************************

3 responses to ““தயக்கம்! மறுப்பு!” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்

  1. உருக்கமான உண்மையான நிகழ்வின் விவரிப்பு. இது தொடரவேண்டும். பலருக்குப் பல உண்மைகளை உணரவைக்கும் ஒரு பதிவு.- கிருங்கைசேதுபதி

    Like

  2. I shared this with my family members, Malathi, im crying while reading such posts, I am constantly relating with someone n crying to God, why such counseling wasn’t given…such a blissful task .. Malathi vazhga valamudan

    Like

  3. என்னது, சிகிச்சைக்கு உடன்பட மறுக்கும் நோயாளிகளும் உண்டா, அதிலும் புற்றுநோய் போன்ற சீரியசான நோயாளிகள்? அப்துல் விஷயத்தில் தங்கள் முயற்சி பலனளித்ததை எண்ணி மகிழ்ந்தேன். – இராய செல்லப்பா சென்னை

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.