திரு வாஜ்பாய் பிரதமராக முதன்முதல் பதவி ஏற்ற
தருணத்தில் ஒரு நேர்காணலில் தனது கவிதை ஒன்றைச் சொன்னார்
அதிலிருந்து சில வரிகளின் தமிழாக்கம் ( கிருபானந்தன்)
நெடிதுயர்ந்த மலைகளிலே
மரங்கள் இருப்பதில்லை
செடிகள் வளர்வதில்லை
புல் பூண்டுகள் கூட முளைப்பதில்லை
காணுமிடமெல்லாம் எல்லாம் பனிக்கட்டிகள்
ஒரு சமாதியை ஒத்த வெளுப்புடன்
இறப்பினைப் போன்ற குளிர்ச்சியுடன் ….
நீரினைக் கல்லாக்கும் அந்த உயரம் எதற்கு
என்று தொடங்கும் கவிதையினை
ஆண்டவனே,
எனக்கு அவ்வளவு உயரத்தை
எப்போதும் கொடுக்காதே
சக மனிதனுடன் கைகுலுக்க இயலாத
உயர்ந்த நிலையினை
எப்போதும் கொடுக்காதே
என்று முடிக்கிறார் திரு வாஜ்பாய்
அதைப்போல அவரது ‘பனித்துளி’ கவிதை நம் இதயத்தை மெல்ல வருடும் வரிகள்:

சூரியன் மீண்டும் எழுவான்
வெய்யிலோ மீண்டும் தோன்றும்
ஆனால் என் தோட்டத்துப்
பச்சைப் பசும்புல்லில்
பனித்துளிகள்
எல்லாப் பருவங்களிலும்
காண இயலாது