ஞானபீட மற்றும் சாஹித்ய அகடமி விருதுகள் பெற்ற வங்காளப் படைப்பாளி மகாஸ்வேதா தேவி அவர்களின் ‘ஹஜார் சௌராசின் மா’ என்னும் நாவல் நாடக வடிவில் தமிழில் 1084இன் அம்மா என்கிற பெயரில் சென்னை அல்லயான்ஸ் பிரான்சிஸ் அரங்கில் செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெற்றது.
இடதுசாரி இயக்கம் வங்காளத்தில் வலுப்பெற்று வந்த காலத்தில் போராளிகளாகப் பல இளைஞர்கள் பங்குபெற்றனர். அதில் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் போலீசாரால் கொல்லப்பட்டார்கள். வங்காள சரித்திரத்தில் அந்தக் காலகட்டம் கொடூரமானது.
அந்தப் பின்னணியில் மகாஸ்வேதாதேவி அவர்களின் படைப்பான ‘ஹஜார் சௌராசின் மா’ மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ஹிந்தியில் எடுக்கப்பட்ட படம் தேசிய விருதையும் பெற்றது.
சுஜாதா என்னும் பெண்மணிக்கு உடனே பிணக்கிடங்கிற்கு வருமாறு தொலைபேசியில் சொல்கிறார்கள். அவளது மகன் ப்ரதி கொல்லப்பட்டு சடலம் எண் 1084 ஆக அங்கே கிடக்கிறான். செய்தி கேட்ட ப்ரதியின் தந்தையும் அண்ணனும் அந்த விஷயத்தை வெளியில் வராமல் தடுப்பதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள்.
சுஜாதா மட்டும் தனியாகச் சடலத்தைப் பார்க்கிறாள். அங்கே கிடக்கும் மற்ற சடலங்களும் அவர்களின் குடும்பத்தாரின் சோக அலறல்களும் நெஞ்சை உலுக்குகின்றன.
அவனுடன் கடைசியில் கூட இருந்து பலியான நண்பனின் தாய், பெண் நண்பரான நந்தினி ஆகியோரைச் சந்திக்கிறாள். அவர்கள் மூலம் அவள் அறியும் தகவல்கள், தாயான அவளுக்கே தெரியாத விஷயங்கள்.
ப்ரதி மரணத்தையும் மறந்து., அவன் சகோதரிக்கு நிச்சயதார்த்தம் செய்கிறார்கள் அண்ணனும் தந்தையும். போராளியான ப்ரதியின் மறைவு குடும்பத்தாருக்கு – (தாய் சுஜாதாவைத் தவிர) சோகத்தை விட நிம்மதியைத் தருகிறது என்பதுதான் அபத்தமான நிதர்சனம்.
நாடகத்தில் அனைத்து நடிகர்களும் உணர்ச்சிபூர்வமாக அதேசமயம் யதார்த்தமாக நடித்தார்கள். முக்கியமாக சுஜாதாவாக, நந்தினியாக மற்றும் போலீஸ் அதிகாரியாக நடித்தவர்கள் எல்லோரது கவனத்தையும் கவர்ந்தார்கள்.
பின்னணியில் வங்காள மொழிப் பாடல்கள், ஒளி அமைப்பு, நான்கு இளைஞர்களின் நடனம் ஆகியவை நாடகத்தின் இறுக்கத்தன்மைக்கு வலு சேர்த்தன. ஆளைவிட உயரமான ஜெயில் கம்பிகள் கொண்ட நான்கு ஜன்னல் போன்ற அமைப்புதான் காட்சி அமைப்பு. அவற்றையே ப்ரதியின் வீடு, பிணக்கிடங்கு, நண்பனின் வீடு, போலீஸ் விசாரணை அறை என்று ஒவ்வொரு இடத்திற்கும் வித்தியாசம் தெரியும் வகையில் உபயோகப்படுத்தியிருந்தார்கள்,
நாடகத்தைப் பார்க்க வந்திருந்த அற்புதம்மாள் (பேரறிவாளனின் தாய்) நாடகத்தை வியந்து பாராட்டினார். தனது 27 ஆண்டு காலப் போராட்டத்தையும் சற்று விளக்கினார்.
–
சார் MP4 பைலை வலையேற்றம் செய்யவும்
(MP$ file attached to mail) endru padhivu veliyaakivittadhu
LikeLike