“உறுபங்கம்” அல்லது (உறூபங்கா) என்ற நாடகம் கிபி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்றாலே நமது மதிப்பில் அது எகிறுகிறது அல்லவா?
மஹாகவி பாஸா என்பவர் எழுதியது ‘உறுபங்கா’ என்ற நாடகம் . மகாபாரதத்தின் கிளைக்கதை.
போர்க்களத்தின் ஓரத்தில் துரியோதனன் பீமனால் தொடை பிளந்து கிடக்கும் காட்சி.
அதற்குப்பின் நிகழும் காட்சிகள்தான் நாடகமே.
இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் , இந்த நாடகம் துரியோதனனை நாயகனாக வரிக்கிறது.
வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டதா அல்லது அந்தக் காலத்து மனோகரால் அமைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.
துரியோதனன் மற்போரில் பீமனை அடித்துக் கீழே தள்ளிவிடுகிறான். அவன் நினைத்திருந்தால் பீமனைக் கொன்றிருக்க முடியும். ஆனாலும் யுத்த தர்மத்தின்படி கிழே விழுந்தவனை எழுந்து போரிட வா என்று காத்திருக்கிறான். பீமன் யுத்த நெறிகளுக்கு மாறாக துரியோதனனைத் தொடையில் பிளந்து வெற்றி கொள்கிறான். வெற்றி பெற்ற பீமனைப் பாண்டவர்கள் இழுத்துச் சென்று விடுகிறார்கள்.
அதன்பின் துரியோதனின் செயல்களும் உரையாடல்களும் அவனைத் துன்பயியல் நாடகத் தலைவனாக மாற்றுகின்றன.
மல்யுத்தத்தில் நடந்த அநீதியைக் கண்ட பலராமர் பொங்கி பீமனை அழிக்க எண்ணும்போது துரியாதனன் அவரைத் தடுக்கிறான். பாண்டவர் தவறு எதுவும் இல்லை, அனைத்தும் கிருஷ்ணன் எண்ணப்படியே நடக்கின்றன என்றும் கூறுகிறான்.
தன் மகனை மடியில் வைத்துக் கொஞ்ச தொடையில்லையே என்று வருந்துகிறான். கண் இல்லாத தன் தந்தை தாயின் கதி இனி என்னாகுமோ என்று கலங்குகிறான். போரில் நடைபெற்ற கொடுமைகளை எண்ணி வேதனைப்படுகிறான்.
அந்தக்கால மரபுப்படி துன்ப இயல் நாடகத்தை அப்படியே முடித்துவிடக் கூடாது.
அதனால் முடிவில் அஷ்வத்தாமன் மேடைக்கு வந்து பாண்டவர்களை எப்படியாவது கொல்வேன் என்று துரியோதனன் முன் சபதம் எடுக்கிறான். துரியோதனன் மகனை அடுத்த மன்னனாக்கி நாடகத்தை முடிக்கிறார்கள்.
சமீபத்தில் கன்னடம் வங்காளம் போன்ற மொழிகளில் “உறுபங்கம்” நாடகமாக வந்து மக்களின் பாராட்டைப் பெற்றது.