ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து

Related image

அக்கம்பக்கம் பார்க்காதே .. ஆளைக் கண்டு மிரளாதே
இடுப்பை இடுப்பை வளைக்காதே … ஹாண் டில் பாரை ஒடிக்காதே

கையக் கைய வளைக்காதே… கண்ணைக் கண்டு மிரளாதே
பையப் பைய ஒதுங்கதே… பள்ளம் பார்த்துப் போகாதே.

காலையில் பயிற்சி வகுப்பிற்குச் செல்லவேண்டும். அண்ணனுக்கு வேறு வேலை இருந்தாலும் என்னைப் பயிற்சி மையத்தில் விட்டுவிட்டுப் பிறகு தனது ‘ஜோலி’யைப் பார்க்கப் போவேன் என்று சொன்னான். அந்த வார்த்தை ஜோலி மிகப் புதியதாகப்பட்டது அதிலும் என்னோடு கூடவே வளர்ந்த அண்ணன் ‘ஜோலி, நாஷ்டா, கிருஷ்ணாயில், பேஜார், கலீஜ், ரவுசு’ என்றெல்லாம் சகஜமாகப் பேசுவது வேடிக்கையாக இருந்தது. ஊருக்கு வந்தபோதெல்லாம் அவன் இந்தச் சொற்களை உபயோகிக்க மாட்டான். ஆனால் சென்னையில் தன்னோடு பழகும் மக்களோடு இப்படித்தான் பேசி வந்தான்.

நான் கண்விழிக்கும்போதே ‘ரூம் மேட்’ வேலைக்குச் செல்லத் தயாராக இருந்தார். தண்ணீர் வரும் நேரம், அந்தக் கட்டிடத்தில் இருக்கும் மற்றவர்கள் தயாராக வேண்டிய நேரங்கள், தனது தேவை எல்லாம் கலந்து குளிக்கப்போகும் நேரம் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டவை என்று தோன்றியது. அவர் சைக்கிளை எடுத்துக் கொண்டு வழியில் ‘நாஷ்டா’வை முடித்துக்கொண்டு அலுவலகம் போக வேண்டும்.

நான் ஒரு புதுச் சேர்க்கை. எனக்குக் குளியல் வகையறாவிற்கு ‘டைம் ஸ்லாட்’ பிடிக்கவேண்டுமாம். எப்படியோ ஏற்பாடாயிற்று. இருவரும் கிளம்பி காலை உணவை முடித்துக்கொண்டு நடந்து ரயில் நிலையம் போனோம். ரூம் மேட் சைக்கிளிலேயே ஆபீஸ் போகிறார். அண்ணனுக்கு ஸ்டேஷனுக்கு நடைதான் இன்றைய நேரக் கணக்கில் பயணச்சீட்டு (எனக்கு மட்டும்தான்) எடுக்க ஆகும் நேரத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டி இருந்தது. பள்ளியில் படித்த காலமும் தூரமும் மற்றும் காலமும் வேலையும் கணக்குகளுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

இன்னுமொரு புதுத் தகவல் ஒன்றும் சொன்னான் அண்ணன். சென்னையை விட பம்பாயில் இன்னும் ஓட்டம் அதிகமாம். இயல்பாகவே ஓட்டத்திற்கும் நடைக்கும் இடைப்பட்ட வேகத்தில் செல்வார்களாம். அவர்கள் பேசிக்கொள்ளும் எந்த விஷயத்திலும் நேரம் குறிக்கப்பட்டு இருக்குமாம். வீடு எவ்வளவு தூரம் என்றால் ஸ்டேஷன்லிருந்து எட்டு நிமிடம் என்பார்களாம். எப்படி வந்தாய் என்றால் 9.17 தாணா பாஸ்ட் என்பார்களாம். விடுமுறை நாளன்று கூட மதியம் 42  நிமிடங்கள் தூங்குவேன் என்பார்களாம்.

அண்ணன் சைக்கிள் வாங்கிக் கொண்டால் சௌகரியமாக இருக்கலாம் என்று தோன்றியது. சைக்கிள் என்று பேச்சு வந்ததும், பெரியப்பா வீட்டு பழைய கலாட்டா எங்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் நினைவிற்கு வந்தது.

பெரியப்பாவிற்கு பெரிய குடும்பம். திருச்சி அருகே நல்ல வேலையில் இருந்தார். மிகவும் கண்டிப்பும் கோபமும் நிறைந்தவர், அவர் அனுமதியின்றி வீட்டில் எதுவும் நடக்காது. அதிலும் காசு விஷயத்தில் அவர் சர்வாதிகாரி. முதல் நான்கு குழந்தைகளும் மகன்கள். பல குடும்பங்களில் இருப்பதுபோலவே முதல்வர் மிகவும் சாது. இரண்டாமர் தடாலடி. எங்கோ யாரையோ நட்பாக்கிக்கொண்டு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டுவிட்டார் அந்த இரண்டாமவர்.

வீட்டில் சைக்கிள் கிடையாது. பெரியவருக்கு சைக்கிள் கற்க ஆசை. பெரியம்மாவிடம் எப்படியோ வாடகை சைக்கிள் எடுத்துக்கொள்ள கால் ரூபாய் வாங்கிக்கொண்டு விட்டார்கள். முதல்வருக்கு இரண்டாமவர் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்க மற்ற இரு தம்பிகளும் கூடக் கூட ஓடிவந்தார்கள். இடையிடையே இரண்டாமவர் ரவுண்டு அடிப்பார்.

சைக்கிள் பழக்குவதில் இரண்டு விதம் உண்டு. எம்ஜியார் சரோஜாதேவிக்குப் பாட்டுப் பாடி சொல்லித்தருவதுபோல் எல்லாம் சினிமாவில்தான் சாத்தியம். முதலில் ஏறி அமர, ஓட்ட, பிறகு இறங்க என்றெல்லாம் முறையான வகை உண்டு. சைக்கிளில் உட்கார வைத்துத் தள்ளிவிட்டுப் பிடித்துக்கொண்டே கூட ஓடிவந்து நடுவில் பிடியைவிட்டு என்று இன்னொரு வகை

பெரியண்ணனை உட்காரவைத்துத் தள்ளிவிட்டு, பிடித்துக்கொண்டே ஓடி வந்த தம்பி பிடியை விட்டுவிட்டார். பெரியவரும் சைக்கிளை வேகமாக ஒட்டிக்கொண்டு போக, ஒரு கட்டத்தில் திரும்பினால் அதிர்ச்சி. கூட யாரும் இல்லை. தடுமாறி விழ இருந்தவர் சைக்கிளை விட்டுவிட்டுகிக் குதித்துவிட்டார். சைக்கிள் போன வேகத்தில் ஒரு பள்ளத்தில் விழுந்து பலத்த சேதம். பயிற்சி இந்த விபத்தோடு முடிந்தது. சைக்கிள் ஓட்டும் நிலையில் என்ன, தள்ளிக்கொண்டு போகும் நிலையிலும் இல்லை. நான்கு பேரும் ஒருவழியாகத் தூக்கிக்கொண்டுபோய் வாடகை சைக்கிள் கடையில் வைத்தார்கள்.

Related image


கடைக்காரர் கண்டபடி திட்டிவிட்டு ரிப்பேருக்காக ஆறு ரூபாய் கொடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார். நாலணா வாங்கி வந்ததே பெரும்பாடு. ஆறு ரூபாய்க்கு என்ன வழி? வீட்டிலிருந்து கொண்டு வருகிறோம் என்று சொல்லி நால்வரும் கிளம்பினார்கள். ஆனால், காசு கைக்கு வரும்வரை நால்வரில் ஒருவர் கடையிலேயே இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார் கடைக்காரர். பிணையாக உட்கார நால்வருக்கும் வெட்கம். நான் மாட்டேன் … நீ உட்கார் என்று நால்வருக்குள் தகராறு. கடைசிப் பையனை மண்டையில் தட்டி உட்கார வைத்துவிட்டு வீட்டுக்குப் போனார்கள் மூவரும்.
பெரியம்மா மூலமாக பெரியப்பாவிடம் நைஸாக விஷயத்தைச் சொல்ல, மூவரையும் ஆளுக்கு ஒரு தூணில் கட்டி அடி வெளுத்துவிட்டார். கோபம் அடங்கி காசைக் கொடுக்க, அண்ணன்கள் மூவரும் தம்பியை விடுவிக்க திரும்பவும் கடைக்குப் போனார்கள்.. தேம்பிக்கொண்டே “அப்பா இப்படி சாத்துவார்னு தெரிஞ்சிருந்தா நானே கடையில உட்கார்ந்துருப்பேனே…” என்று மூன்றாமவர் சொன்னதுதான் நிகழ்வின் உச்சம்.

எப்போது குடும்பங்கள் கூடினாலும், இந்தக் கதையைச் சொல்லிச் சிரித்துக்கொள்வோம்.

பயணச் சீட்டு வாங்கியாகி விட்டது. அண்ணனுக்கு சீசன் டிக்கட். ரயிலேறி வேறு ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து பயிற்சி மையத்திற்குத் திரும்பவும் நடை. நேரமும் அலுவலக நேரம். ரயில் தள்ளுமுள்ளுகள் பயங்கர சோதனை. அண்ணனுக்கு பழக்கமாயிருந்தது. எனக்கு ஒத்துவரவே இல்லை.

ஒருவழியாகப் பயிற்சி மையம் சென்றோம். கொடுத்த கடிதத்தை வாங்கிக்கொண்ட அலுவலர் தங்க இடம் வேண்டுமா என்று கேட்டார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். பாத் ரூம் மற்றும் ரயில் பயண அனுபவங்கள் என்னை ஆம் என்று தலையாட்ட வைத்தது. மையத்தின் அருகிலேயே அதிக வாடகையில்லாத நல்ல ஏற்பாடு என்று புரிந்தது.

மாலையில் அண்ணன் திரும்பிவந்து என்னைக் கூட்டிக்கொண்டு போகலாம் என்று தீர்மானித்தோம். பெட்டி படுக்கையோடு இரவே  புதிய அறைக்கு வந்துவிட முடிவு செய்தோம்.

இப்போது பயிற்சி மையத்தில் புதிய மனிதர்கள், புதிய சூழ்நிலை , புதிய அனுபவம் ஆகியவற்றை எதிர்கொள்ளத் தயாரானேன்.

             இன்னும் வரும் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.