முதல் பகுதி:

ஸந்த்யாவின் தாய் விஷ்வகர்மா கொடுத்த அந்த மருந்தின் தன்மை புரியாமல் அதை ஸந்த்யாவிற்குப் புகட்டப் போகும் அந்தத் தருணத்தில் ராகு தேவன் சுய உரு எடுத்து அவள் கரத்தைத் தடுத்து நிறுத்தினான்.
காவலர் யாருமில்லாத அந்தத் தனி அறையில் திடீரென்று ஒரு மூன்றாவது மனிதன் வந்ததுமில்லாமல் தன் கையைத் தடுக்கிறானே என்ற பயமும் கோபமும் எழுந்தது விஷ்வகர்மாவின் தர்மபத்னிக்கு. படுத்துக் கொண்டிருந்த ஸந்த்யாவும் எழுந்து உட்கார்ந்தாள். ஆனால் அவளுக்குப் பயம் ஏதும் இல்லை. பாம்பைப்போல் நீல நிறத்தில் இருக்கும் இவனுக்கு இங்கு வருவதற்கு என்ன துணிச்சல் என்ற கோபம் மட்டும் எழுந்தது. ஆனால் அவன் மண்டியிட்டு முகத்தைக் கீழே சாய்த்துக் கொண்டு கையைக் கூப்பிக்கொண்டு அமைதியாக இருக்கும் தோரணையைப் பார்த்தால் அவன் தீங்கு எதுவம் செய்ய வந்தவன்போல் தோன்றவில்லை; மாறாக அவர்களிடம் ஏதோ சொல்ல வந்தவனைப்போலத் தெரிந்தது.
ஸந்த்யா குரலில் கடுமையை வரவழைத்துக் கொண்டு “யார் நீ? இந்த அறைக்கு வந்தவன் யாராக இருந்தாலும் அவன் சிரம் கொய்யப்படும் என்பது உனக்குத் தெரியுமா?” என்று சீறினாள்.
” முதலில் நீங்கள் இருவரும் என்னை மன்னிக்கவேண்டும் . ஏற்கனவே சிரம் கொய்யப்பட்டுத் தவிக்கும் என்னை சிவபெருமான் தான் வரம் அளித்து வாழவைத்தார். நான் உங்கள் இருவருக்கும் நன்மையைச் செய்யவே வந்துள்ளேன். என்னை நம்புங்கள்”
“முதலில் நீ யார், எதற்கு இங்கு வந்தாய் என்பதைச் சொல்! அதற்குப் பின் நாங்கள் முடிவு செய்கிறோம் உன்னை எப்படித் தண்டிப்பது என்று” . அழுத்தம் திருத்தமாகக் கூறினாள் ஸந்த்யா.
“தேவி! தாயே! நான் ராகுதேவன், சூரியதேவனின் எதிரி, இப்போது வந்திருப்பது விஷ்வகர்மாவின் பேராசையைத் தடுக்க”
“என்ன துணிச்சல் எங்கள் முன் இதைச் சொல்ல?” என்று கூறி அறையின் சுவற்றில் மாட்டியிருந்த வாட்களை உருவிக் கொண்டு மண்டியிருக்கும் அவன் தலையைச் சீவ இருவரும் பாய்ந்து வந்தனர்.
ராகுதேவன் இம்மியும் அசையவில்லை. தலையைத் தூக்கவும் முற்படவில்லை.
தேவிமார்களே! நான் உங்கள் மணாளர்களுக்கு எதிரியாக இருக்கலாம். ஆனால் உங்களுக்கு எதிரி இல்லை. அதை என்னால் நிரூபிக்க முடியும்”
” என்ன உளறுகிறாய்?”
“ஆம், தேவி! விஷ்வகர்மா சூரியதேவனின் அனுமதியைப் பெற்று உங்கள் வம்சத்தை அழிக்கத் திட்டம் தீட்டியிருக்கிறார். நான் உங்கள் வம்சத்தைக் காக்க வந்துள்ளேன். இப்போது சொல்லுங்கள் நான் உங்கள் சேவகனா இல்லையா?”
” நீ பொய் சொல்லுகிறாய்!”
” தாயே! இப்போதே நான் சொன்னதை நிருபிக்கிறேன். தங்கள் கையிலிருக்கும் மருந்துக் கிண்ணத்தைப்பற்றிதித் தங்கள் கணவர் என்ன சொன்னார்? அது ஸந்த்யா தேவியின் உடலுக்கு நல்லது என்றுதானே! அந்த மருந்தின் ஒரு சில துளிகளை அதோ அந்த மாடத்தில் அடைகாக்கும் புறாவின் கீழே இருக்கும் முட்டைகள் மீது விடுங்கள்! உங்களுக்கே உண்மை புரியும்” என்றான் ராகு.
ஸந்த்யா தயங்காமல் தாயிடமிருந்து மருந்தை வாங்கிக் கொண்டு சாளரத்திற்கு அருகில் சென்று புறாவைஃப் பறக்கவிட்டு அங்கிருக்கும் மூன்று முட்டைகளின் மீது ஒவ்வொரு துளி மருந்தைத் தெளித்தாள். தாய்ப்புறா அவள் தலைக்கு மேல் படபடவென்று சிறகால் அடித்துக் கொள்வதைத்தவிர வெறொன்றும் புலப்படவில்லை.
“ஒன்றும் ஆகவில்லை. நீ எங்களை ஏமாற்றப் பார்க்கிறாய்!” என்று சந்த்யா சொல்லும்போதே அந்த மூன்று முட்டைகளும் மெல்ல அசையத் தொடங்கின. அவை மெதுவாகச் சுற்றத் தொடங்கின. இரண்டே வினாடிகளில் அவை வெடித்தன. அதுமட்டுமல்லாமல் அவத்றின் கரு பற்றி எரியத் தொடங்கின. திக்பிரமை அடைந்த சந்த்யா தீயை அணைக்க என்ன செய்வது என்று நினைப்பதற்குள் துடித்துக்கொண்டிருந்த தாய்ப்புறா அந்தத் தீயில் விழுந்து தன் உயிரைக் கொடுத்துத் தீயை அணைத்தது.
ஸந்த்யாவும் அவள் அன்னையும் துடிதுடித்துப் போய் விட்டார்கள்.
“தேவி! உங்களுக்கு இப்படிப்பட்ட அதிர்ச்சியைக் கொடுத்ததற்காக என்னை மன்னிக்கவேண்டும். உண்மையை உங்களுக்கு உணர்த்திய அந்தத் தாய்ப் புறாவைப்பற்றியும் எரிந்து போன முட்டைகளைப்பற்றியும் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அவை அழியவேண்டும் என்பது பிரும்மா படைத்த விதி. அதைப்போல உங்கள் வயிற்றில் வளரும் மூன்று சிசுக்களும் வாழவேண்டும் என்பதும் விதி. விதியை தன் மதியால் மாற்ற விஷ்வகர்மா முயன்றார்.”
” என் தந்தைக்கு ஏன் இந்த விபரீத எண்ணம்? “
“அதற்குக் காரணம் மகாபிரும்மருத்ரன் என்ற மகா சக்தி வாய்ந்த குழந்தை உங்களுக்குப் பிறக்கவேண்டும் என்ற அவரது பேராசை.”
“என் தந்தையின் இந்த கேடுகெட்ட செயலுக்காக நான் வேதனைப்படுகிறேன். என் குழந்தைகளைக் காப்பாற்றிய உங்களுக்கு என் வந்தனம். இப்பொதே போய் சூரியதேவனை ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்கப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு ஸந்த்யா அந்தத் தளத்தின் மறு கோடியில் இருக்கும் சாந்துக் குளியல் அறைக்கு ஓடினாள்.

ஆனால் சூரியதேவனோ விஷ்வகர்மாவின் திட்டப்படி விமானத்தில் ஏறி தன் மண்டலத்துக்குப் போய்க் கொண்டிருந்தான்.
சூரியதேவன் தன்னை விட்டுச் சென்றதைப் பார்த்த ஸந்த்யாவும் அருகில் இருந்த மற்ற விமானத்தில் ஏறி அவனைத் தொடர்ந்து சென்றாள்.
தன் கணவனின் எண்ணத்தைக் கெடுத்துவிட்டானே என்ற கோபத்தில், ஸந்த்யாவின் அன்னை கையிலிருந்த வாளால் ராகுவின் கழுத்தை வெட்ட அவன் மீண்டும் ஒரு முறை தலை வேறு உடல் வேறாகக் கிடந்தான்.
அறைக்கு வந்த விஷ்வகர்மா இதைப் பார்த்துத் திகைத்துப் போய் என்ன செய்வது என்று அறியாமல் திக்பிரமையில் நின்றார்.
(தொடரும்)
இரண்டாம் பகுதி

‘வாட்ஸ் அப்’ செயலியை சுவாமி தத்தாம்ஸானந்தா தேவ லோகத்திற்குத் தரப் போகிறார் என்றதும் நாரதர் பயங்கர டென்ஷன் ஆகியிருந்தார். திரிலோக சஞ்சாரியான அவர் சமீபத்தில் இந்தியா சென்றபோது அங்கே வாட்ஸ் அப்பினால் நடக்கற அலப்பரையைப் பார்த்துத்தான் இந்த முடிவுக்கு வந்தார்.
அதனால்தான் முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறோம் என்பதையும் மறந்துவிட்டு ‘வேண்டாம் வேண்டாம். வாட்ஸ் அப் மட்டும் வேண்டாம் என்று அலறிக் கொண்டிருந்தார்.
எல்லோருக்கும் சற்று எரிச்சலாக இருந்தாலும் பிரும்மாவின் பிள்ளையாயிற்றே என்று சற்று அடக்கி வாசித்தார்கள். பிரும்மாவே கடுப்பாகி ” விஷயத்தைக் கூறாமல் ஏன் அலறுகிறாய்?’ என்று கேட்டதும் அதுதான் சாக்கு என்று அனைவரும் நாரதரைக் கசா முசாவென்று பேசத் தொடங்கினார்கள்.
ஆனல் நாரதர் , நம்மூர் பாஷையில் சொல்லப்போனால் ‘பனங்காட்டு நரி’. யார் என்ன சவுண்ட் விட்டாலும் அதுக்கு மேல குரல் எழுப்பி ஆளை அப்படியே அமுக்கி விடுவார். பிராஜக்ட் மெம்பர் எல்லாருக்கும் நல்லா புரிகிறமாதிரி விளக்கமா சொல்ல ஆரம்பித்தார்.
” எல்லாரும் கவனமா கேளுங்க! வாட்ஸ் அப் ஒரு நல்ல உபயோகமான ஆப்தான் . ஆனால் நாம பாற்கடலைக் கடைஞ்சபோது அமிர்தத்தோட ஆலகால விஷமும் வந்தது இல்லையா? அன்னிக்கு நல்ல வேளையா சிவபெருமான் அதைக் காப்பி குடிப்பதுபோலக் குடித்து நம்மையெல்லாம் காப்பாத்தினார். அதனால அவருக்கு ஒரு பெரிய கண்டம் வர்ரதா இருந்தது. பார்வதி தேவி தடுத்ததினால அவருக்கு வர இருந்த கண்டம் கழுத்திலேயே தங்கிடுச்சு.
இந்த வாட்ஸ் அப் அதைவிடக் கொடுமை. பிரீயா கொடுத்தா பினாயிலும் குடிக்கும் இந்திய மக்கள் பிரீயா கிடைச்ச இதை வைத்துக்கொண்டு அடிக்கும் லூட்டி தாங்க முடியவில்லை.
தமிழ் நாட்டின் முக்கியப் பத்திரிகையான விகடனில் வாட்ஸ் அப் பற்றி ஒரு ஆர்டிகிள் எழுதியிருக்கிறார்கள். அதைப் படித்தால் உங்களுக்கு அதன் கொடுமை புரியும்” என்று சொல்லி தன் கையிலிருந்த பிட் பேப்பரைப் படிக்க ஆரம்பித்தார்.
“கோலிகுண்டு சீசன், பம்பரம் சீசன், கிட்டிப்புள் சீசன்போல முன்பு ஃபேஸ்புக்கில் கமென்ட் போட்டு அதிக லைக் வாங்க வேண்டுமென்று வெறி பிடித்து அலைந்தவர்கள் சிலர். இப்போது வாட்ஸ்அப்பிலும் கொலைக்குத்தை ஆரம்பிக்கிறார்கள்.
ஒருபக்கம் முக்கியமான தகவல்களை பரப்புவது, ஆபத்து காலங்களில் உதவுவது என்று வாட்ஸ்அப்பால் பல நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் இந்த அட்மின் அட்டகாசம் தொடர்கிறது.
கொக்கி குமாரு, பக்கி பாஸ்கரு என்று வயலன்ட் கேங்குகள் போல இவர்களும் வாட்ஸ் அப் குரூப்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். உருப்படியான தகவல்களைப் பரிமாறுகிறார்களா என்றால் இல்லை. மொக்கை ஸ்டேட்டஸ்களையும், கேட்டுப் புளித்துப்போன பொன் மொழிகள், ஜோக்குகளையும் போட்டு கொலையாய்க் கொல்லுகிறார்கள்.
”எங்க வீட்டு வாசலில் குப்பை, நகராட்சி அள்ளவில்லை” என்று போட்டோவை ஷேர் செய்து குரூப்பிலிருக்கும் அனைவரின் செல்லையும் குப்பையாக்குகிறார்கள். உண்மையில் அந்தக் குப்பையைப் போட்டதே அந்த வாட்ஸ் அப் அட்மின் ஆறுமுகமாகத்தான் இருக்கும். டாஸ்மாக் பாரில் உட்கார்ந்துகொண்டு ”கே எஃப் பீர் கிடைக்கல, பிரிட்டிஷ்தான் கிடைச்சது. உங்க ஏரியாவுல கிடைக்குதா?” என்று பாட்டிலையும் கண்றாவி சைட் டிஷ்ஷையும் போட்டோ எடுத்து ஷேர் செய்வது என்று வாட்ஸ்அப்பை, நம் ஊரிலுள்ள பார்களிலிருக்கும் வாஷ்பேசின்போல் ஆக்கி விட்டார்கள்.
இதாவது பரவாயில்லை. பண்டிகை தினத்தன்று ”மட்டன் வாங்கிவிட்டோம், இன்னும் சமைக்கலை” என்று குளோசப்பில் அந்த மட்டனைக்காட்டி செல்போனைப் பதறவிடுகிறார்கள். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….அப்பா!
இதைவிட காமெடி, சிலர் ரமேஷ் ஃப்ரெண்ட்ஸ், சுரேஷ் ஃப்ரெண்ட்ஸ், கருவைக்காட்டு நண்பர்கள், பிணந்தின்னி குரூப்ஸ் என்று ஆரம்பிப்பார்கள். இவர்கள் பின்னால் ஒரு குரூப் சேர்ந்தவுடன் அட்மினே அதிலிருந்து விலகிப்போய்விடுவார். ஏன் குரூப் துவக்கினார், ஏன் விலகினார் என்று யாருமே அறிந்து கொள்ளமுடியாது. அதனால், அவருக்கு அடுத்ததாக அதில் இணைந்தவர் ஓ.பி எஸ் மாதிரி அடுத்த அட்மினாகி விடுவார்.
‘’ஏய்…நீ, வாட்ஸ்அப் குரூப் நடத்துறியா, போலீஸ்ல மாட்டப்போறே, உங்க வாட்ஸ்அப் தகவல்களை எல்லாம் அமெரிக்க உளவுத் துறையிலேர்ந்து அண்டார்டிகா உளவுத் துறைவரை வாட்ச் பண்ணுகிறார்கள். நம் ஊர் போலீஸ் ஸ்டேஷன்ல இதை ரெக்கார்டு பண்ணவே ஒரு டீம் இருக்கு. உன் குரூப்புல உள்ளவன் எவனாவது வில்லங்கமான மேட்டரை அதுல ஏத்திவிட்டான்னா, அவனைப் பிடிக்க மாட்டாங்க. அட்மினான உன்னைத்தான் பிடிப்பாங்க. சமீபத்துல ஜம்மு காஷ்மீர்ல பல பேரைப் பிடிச்சு குண்டாஸ்ல போட்ருக்காங்க என்று விளையாட்டாக ஓட்டுவதைக் கேட்டு நம் அப்பிராணி அட்மின் கதி கலங்கிவிடுவார். அதோடு அவர் ஆரம்பிச்ச குரூப்பிலிருந்து அவரே நைசாக விலகிவிடுவார். இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது பல பேருடைய கதை.
வருகிற மெசேஜை அப்படியே காப்பி பண்ணி அடுத்த குரூப்பில் போடும் என் நண்பன், ”காபி டூ பேஸ்ட் செய்த விரலை செல்லில் மட்டுமல்ல, வேறு எந்த இடத்தில் வைத்தாலும் அந்த மெசேஜ் பதிவாகிறது” என்கிறான். எல்லாம் ஒரு மனப்பிராந்திதான்.
இன்னும் சிலபேர் 60 குரூப்களில் இருக்கிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால், அவர்களுடைய செல்போன் சத்தம் போடாமல் ஒரு நிமிடம்கூட இருந்ததில்லையாம். மாத்தி மாத்தி ஒரே மெசேஜை 60 குரூப்களும் அனுப்பி அவரை டார்ச்சர் செய்கிறார்களாம். இதனால் செல்லை அவ்வப்போது ஆஃப் பண்ணிவிடுகிறார். இன்னும் சில வாட்ஸ்அப் குரூப்களில் குட்மார்னிங் மெசேஜ் சொல்லியே கொலவெறி ஏற்றுகிறார்கள்.
என்ன டெக்னாலஜி வந்தாலும் இந்த இம்சை அரசன்கள் தொல்லை தாங்க முடியலையேப்பா”
கேட்டீர்களா? இந்த கலாசாரம் தேவ உலகத்துக்கு வேண்டுமா?
அது மட்டுமல்ல. தவறான செய்திகளை உண்மைபோல போட்டு சகட்டுமேனிக்கு அவற்றை பார்வர்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். யாரவது ஒரு வயதான பெண்ணின் படத்தைப் போட்டுவிட்டு ‘இவள் தான் ஆஸ்பத்திரியிலிருந்து குழந்தையைக் கடத்துகிறாள்’ என்று போடப்போக அது வைரலாகி எல்லோருக்கும் பார்வர்ட் ஆக கடைசியில் அந்தப்பெண்மணியை மக்கள் கொன்றுவிடுகிறார்கள். இதைப்போன்ற கொலைகள் நிறைய நடந்திருக்கின்றன.
அதனால் அரசாங்கமே வாட்ஸ் அப் நிறுவன ஆட்களை அழைத்து ‘தவறான ஆபத்தான விஷமத்தனமான வெடிக்கும் செய்திகள் வாட்ஸ் அப் மூலம் பரவுவதால் கும்பல் கொலை நிகழ்கின்றன. வாட்ஸ் அப் இதற்கு உடன் போவதால் அவர்களும் தண்டிக்கப்பட நேரிடும் என்றும், அதைத் தடுக்க அவர்கள் எதாவது உடனே செய்ய வேண்டும்’ என்று எச்சரித்திருக்கிறார்களாம்.
இப்படிப்பட்ட வாட்ச் அப் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கும் இந்த உலகத்துக்கு வந்தால் என்னாகும் என்பதை நீங்களே யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று நாரதர் ஒரு வழியாகப் பயமுறுத்திப் பேசி முடித்தார்.
தேவர்கள் அனைவரும் யோசிக்க ஆரம்பித்தார்கள்.
(தொடரும்)