
கஸ்டமர் சர்வீஸ்!!


துணி வாங்கித் தைக்கிற காலமெல்லாம் போய், இப்போது ‘ரெடி மேட்’ டிரஸ் வாங்கி அணிவது பழகிவிட்டது. இரண்டுக்கும் கிட்டத்தட்ட ஒரே செலவுதான் – உடனே அணிந்து கொள்ளும் வசதி, தையற்கடையில் ’காஜா’ பையனை முறைத்துக்கொண்டு நிற்க வேண்டாம் என்கிற நிம்மதி, அளவு சரியாக இல்லையெனில், திருப்பிக் கொடுக்கும் சுதந்திரம் – இவையே ரெடிமேட் பக்கம் சாய வைக்கிறது!
ரெடி மேட் டிரஸ்களில் வேறு வகைப் பிரச்சனைகள் – வேண்டும் கலரில் அரைக் கை சட்டை இருக்காது – பிடித்த கலரில் சைஸ் கிடைக்காது – பிராண்ட் வித்தியாசத்தில் ஒரு சைஸ் கூடவோ அல்லது குறையவோ இருக்கும் – ட்ரயல் ரூம் கண்ணாடி குடு குடுப்பைக் காரனையோ, சட்டைப் பட்டன்களுக்கிடையே மூச்சு முட்டிப் பிதுங்கும் சதையையோ காட்டி பயமுறுத்தும். பேண்ட் இன்னும் மோசம் – நம்ம இஞ்சி இடுப்புக்குச் சரியான சைஸ் கிடைக்காது – கிடைத்தாலும் உயரம் சரியாக இருக்காது. ஆல்டர் செய்தால், பேண்ட் ஷேப் மாறி, பைஜாமா ஆகிவிடும் – பிடிக்கக் கூடாத இடத்தில் பிடிக்கவும், பிடிக்க வேண்டிய இடத்தில் லூசாகவும் இருந்து, வித்தியாசமாக நடக்க வைக்கும்! சாமுத்ரிகா லட்சணங்கள் சரியாக இல்லாதது நம் குற்றம் அல்லவே?
ஆறு மாதங்களுக்கு முன் யாரோ கொடுத்தார்கள் என்று – சட்டைத் துணியா, அல்லது பேண்டுக்கா என்று சரியாகச் சொல்ல முடியாதபடி ஒரு மெடீரியல், ஜிப்பா, பைஜாமாவுக்குச் சரியாக இருக்கும் என்றான் என் டிரைவர்! – வீட்டில் இருந்த துணிகளை எடுத்துக் கொண்டு பாண்டி பசாரில் பெரிய ஷோ ரூம் சென்றேன்.
இந்தத் துணியில், ஒரு ஜிப்பாவும், ஒரு ஆஃப் ஸ்லாக்கும் தைக்கலாம் என்றார் அங்கிருந்த டெய்லர். சரி, வந்ததுதான் வந்தோம், இரண்டு பேண்ட் தைத்துக் கொள்ளலாம் என, துணி செலெக்ட் செய்து அளவும் கொடுக்கத் தயாரானேன்! சில தெளிவான இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்தேன் – சட்டைக்கு ஒரு பாக்கெட், ஏரோ கட்டிங், பேண்டுக்கு ஒரு பின் பாக்கெட், எட்டு லூப்புகள், இத்தியாதிகள். விரைவாக கழுத்து, இடுப்பு, வயிறு, தோள், கால் என்று இன்ச் டேப் தழுவ, அளவுகளைக் குறித்துக்கொண்டு, மஞ்சள் கலர் அட்டையில் ஆர்டர் எண், சார்ஜ் எல்லாம் எழுதி, துணிகளின் மூலையிலிருந்து ஒரு குட்டி முக்கோணம் கட் செய்து, அட்டையுடன் ஸ்டாப்ளர் போட்டுக் கொடுத்தார். ONLY CASH, CARDS NOT ACCEPTED என்ற வாசகத்துடன் அட்டை என்னைப் பார்த்து சிரிப்பதுபோல இருந்தது!
ட்ரையல் எல்லாம் வேண்டாம் (என்னா ஒரு நம்பிக்கை?), குறித்த தேதிக்கு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி, திரும்பி விட்டேன்!
வழக்கம்போல் குறித்த தேதிக்கு இரண்டு மூன்று நாட்கள் தள்ளிச் சென்றேன் – ஏதோ அவசரம், போட்டுப் பார்த்து ஆல்டரேஷன் சொல்ல நேரமில்லை. வாங்கி வந்து விட்டேன் – அந்தப் பிரபல ஷோ ரூமின் மேல் இருந்த நம்பிக்கையால் கூட இருக்கலாம்!
மறுநாள் நிதானமாகப் போட்டுப் பார்த்தபோது வெறுத்துப் போனேன் – இடுப்பில் நிற்காமல் நழுவியது பேண்ட் – உயரம் அதிகமாக, அந்தக் காலத்து ரஞ்சன் குதிரையேற்றப் பேண்ட் போல், மேலே பேகியாகவும், கணுக்காலருகே சுருக்கங்களுடன் சூடி போலவும் வினோதமாக இருந்தது! நல்லவேளை, ஜிப் வேலை செய்தது!
சட்டையின் கை, முழங்கை தாண்டி, கர்மவீரரை நினைவு படுத்தியது! காலர் நாய்க்குட்டியின் காதுகளைப் போல் இரண்டு பக்கமும் தொங்கியது. ”கொஞ்சம் லூசா (சட்டைதான்) தைத்துக் கொள், வளர்ர பிள்ளை” (நீ வளராவிட்டாலும், துணி சுருங்கும் என்பது அவள் சொல்லாதது!) என்பாள் அம்மா! அது இந்த டெய்லருக்கு எப்படித் தெரியும்? அறுபது வயதுக்கு மேல வளர்வேனா? குழம்பினேன்!!
இது சரியில்லை – கொள்ளைப் பணம் கொடுத்து துணி வாங்கி, அதற்கு மேலும் தையல் சார்ஜ் கொடுத்து …. சிவப்புத் துணியைப் பார்த்து மிரண்டு முட்ட வரும் காளை போல, கோபத்துடன் மறுநாள் சென்றேன்.
அன்று அந்தப் பழைய டெய்லர் லீவு – அவர் ’பாஸ்’, வாரம் இரண்டு முறை வருவாராம் – மற்ற நாட்களில் ஃபேக்டரியை – துணி தைக்கும் இடம் – பார்த்துக் கொள்ளுவாராம். ஐந்தரை அடி உயரத்தில், முன் தலை வழுக்கையுடன், சரியான அளவில் பேண்டும், சர்டும் போட்டு, (இவருக்கு மட்டும் பார்த்து, பார்த்துத் தைப்பார் போல – மைண்ட் வாய்ஸ்!) முக மலர்ச்சியுடன் வர வேற்றார். அதற்குள் ட்ரயல் ரூமிலிருந்து வெளியே வந்த மற்றொரு பெரிசு, ‘பர்ஃபெக்ட் ஃபிட்டிங்” என்று கூறி என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டது!
விபரம் கேட்டு,” சாரி சார். தப்பாகத்தான் தைத்திருக்கிறார்கள் – மீண்டும் அளவு எடுத்து, சரி செய்து தருகிறேன்” என்றார். ”இடுப்பில் ஒரு இன்ச் (பேண்ட் இடுப்புக்குத்தான்!) குறைத்து, உயரம் சரி செய்து விட்டால் போதும் – சட்டையின் கை நீளம் குறைத்து, உடம்பைப் (சட்டைக்குத்தான்!) பிடித்து விட்டால் சரியாயிருக்கும்” என்றார். அவரது நிதானம், தவறுக்குப் பொறுப்பேற்று, அதைச் சரி செய்ய எடுத்துக்கொண்ட முயற்சி எல்லாம் என் கோபத்தை வீழ்த்தின.
வேறு ஒரு மஞ்சள் அட்டையில், அதே நம்பருடன் ‘ஆல்ட்ரேஷன்’ என்று எழுதி என்னிடம் கொடுத்தார்.
இரண்டு நாளில் சொன்னதைப்போல, சரி செய்தும் கொடுத்தார்!
அன்று என்னால் தாமதமாகி விட்டதால், அவருக்கு மதியம் ப்ரேயருக்குச் செல்ல முடியவில்லை – வருத்தமாக இருந்தாலும், “நம்ம சர்வீஸ், கஸ்டமர் எல்லாம் முக்கியம்தானே” – அவர் அருகிலிருந்த மற்றொரு சிப்பந்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.
வெளியே வானத்தில் கருமேகம் மூட்டமாய் இருந்தது – சின்னச் சின்னதாய்த் தூறத் துவங்கியது.
.