
கௌரி, தனக்குச் செவ்வாய்க்கிழமைதான் ராசியான நாள் என்று முன்பே தெரிவித்து, அன்று என்னை ஆலோசிக்க வந்தாள்.
அவள் மகன் வேலுமணி, பத்து வயது சிறுவன். தலைவலி என்றும், பள்ளிக்கூடம் செல்ல அடம் பிடிப்பதாகவும் தெரிவித்தாள். மதிப்பெண்கள் குறைந்ததாகச் சொன்னாள்.
வேலுமணியை எங்கே கூட்டி சென்றாலும் அவனுக்கு சாக்லேட், ஐஸ்கிரீம் வாங்கித் தருவேன் எனக் கடவுளின் முன்னே சத்தியம் செய்து அழைத்துச் செல்வாளாம். வேலுமணி, தனக்குச் செய்த சத்தியத்தை ஞாபகத்தில் வைத்திருப்பானாம். அவனை ஒத்துழைக்கச் செய்ய, இன்னும் சத்தியங்கள் செய்து வேலையை முடித்துக் கொள்வாளாம். இப்படிச் செய்வதுதான் தனக்குச் சரியாகத் தோன்றியது என்று கெளரி சொன்னாள்.
வேலுமணியின் ஆசிரியர் அவனிடம் கேள்விகள் கேட்டால் ஒன்றும் சொல்ல மாட்டான். கேட்டு சில நொடிகளில் தனக்குத் தலை சுற்றுவதுபோல் இருப்பதாகச் சொல்வான். வகுப்பு நேரத்தில் அவனிடம் எந்தக் கேள்வியையும் கேட்காவிட்டால் நன்றாக இருப்பான். இதற்கு விடை காண்பதற்கு என்னைப் பார்க்க கௌரியிடம் ஆசிரியர் பரிந்துரைத்திருந்தார்.
தன்னுடைய தவிப்புகளை வேலுமணி தெளிவாக விவரித்தான். குறிப்பாகக் கணக்கு போடும்பொழுதும் மற்றும் ஆங்கிலம் படிக்கச் சொன்னால் மட்டுமே வேலுமணிக்குத் தலை சுற்றுவது போல் தோன்றுகிறதாம். வகுப்பு தோழர்கள் முன் பதில் சொல்லச் சொன்னால், பதில் தெரிந்தாலும் சொல்ல வரவில்லை என்றான். ஒவ்வொரு ஆசிரியர் கேள்வி கேட்பதும், அதற்குப் பதில் சொல்ல கஷ்டப்படுவதும், வகுப்பில் பிற மாணவர்கள் அவனைப் பார்த்து நகைப்பதும் அவமானமாக இருக்கிறது என்றான்.
அவன் அம்மா அவனை “என் மக்குச் செல்ல வெல்லம்” என்பாளாம். அவன் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்வதில் குழம்பிப் போய் இருந்தான். கெளரி, மற்றவர்கள் முன்னால், வேலுமணி என்று அழைக்க மாட்டாளாம். “என் மக்குச் செல்ல வெல்லம்” என்றே அழைப்பாளாம். இதனால், பல வருடங்களாக வேலுமணியும் எல்லோரிடமும் அப்படியே தன்னை அறிமுகம் செய்து வந்தான். யாராவது பெயரைக் கேட்டால், “வெல்லம்” என்றும், முழுப் பெயர் கேட்டால் “மக்குச் செல்ல வெல்லம்” என்று சொல்லிக்கொண்டே இருந்தான். ஒவ்வொரு முறையும் இதுபோல் சொல்லும் போது, கெளரி நகைப்பாளாம். அதனால், தான் சொல்வது சரி என்றே வேலுமணி நினைத்து, அப்படியே தொடர்ந்து செய்தான்.
அன்று என்னை ஆலோசிக்க வந்து இப்படி தகவலைச் சொன்னதும் அதன் விளைவுகளைப்பற்றி உரையாடினோம். உடனே புரிந்துகொண்டான். ஆனால் அம்மாவிடம் சொல்ல அவனுக்குத் தயக்கம் இருந்தது. அவள் இங்கு சரியாக பதில் சொல்லப் பல இனிப்புகள் வாங்கித் தந்திருந்தாள். அவள் சொல்வதை செய்யாமல் விட்டு விட்டால் வாங்கியதைப் பிடுங்கி விடுவாள் என்று அஞ்சினான். கூடவே இன்னும் இரண்டு நாள் தன்னிடம் பேசமாட்டாள் என்று பயந்தான்.
எங்களை ஆலோசிக்க வருவோரின் நிலையை, நிலைமையைப் புரிந்துகொள்ள அவர்களைப் பற்றிய தகவல்களைக் கேட்டுக்கொள்வது எங்களின் தொழில்முறை. இந்த முறையைப் போல், சில சமயங்களில் இப்படி மதிப்பிடும்போதே செய்ய வேண்டிய சிகிச்சை ஆரம்பிக்க வேண்டியதாக நேரும். வேலுமணியை சற்று வெளியே அமரச் சொல்லி கெளரியை உள்ளே அழைத்தேன்.
அவள், தான் மக்கு என்று அழைப்பதற்குக் காரணம் இருப்பதாகக் கூறினாள். ஒன்று, அவர்கள் வீட்டில் இப்படிப்பட்ட பெயர்கள் சூட்டி அழைப்பது அவர்களின் பொழுதுபோக்கு என்றாள். இத்துடன், அவளுக்குத் தன் குழந்தை மற்றவர்கள் போல் புத்திசாலியாக ஆக இப்படி ஒரு கருவியை பயன்படுத்திச் செய்வதாகக் கூறினாள். அதை கேட்கக் கேட்க வேலுமணி மாறிவிடுவான் என நம்பினாள். இதனால் அவனுடைய மனதிடம் வலுவிழந்து போவதை கவனிக்கவில்லை.
அவளிடம் அவள் தன் பிள்ளையை “என் மக்குச் செல்ல வெல்லம்” என்பதால் குழந்தை மனதில் குழப்பம் ஏற்படுவதைப் பற்றிக் கலந்துரையாடினோம். “செல்லம்” என்ற அழைப்பு அன்பைக் காட்டுகிறது. அதே நேரத்தில் “மக்கு” அவனின் காக்நிடிவ் (cognitive) திறனான ஒன்றை மட்டும் எடை போட்டுக் காட்டுகிறது. அதிலும் அவன் திறன் மட்டம் என்று வெளிப்படுத்துகிறது. அதன் விளைவை மேலும் ஆராய்ந்ததில் கெளரிக்கு ஓரளவு புரிய ஆரம்பித்தது, வேலுமணி இதனால் குழம்பி போய், தன்னைப்பற்றித் தாழ்வான அபிப்பிராயம் கொண்டிருக்கிறான் என்று.
இதைச் சார்ந்து கெளரிக்கு ஒன்று செய்யச் சொல்லிப் பரிந்துரைத்தேன். அதாவது அவர்கள் அடுத்த முறை வரும் வரையில் வேலுமணியை இரு விதமாகவும் அழைப்பதென்று, அவனுடைய பெயரிட்டு “வேலுமணி” என்றும், “என் மக்குச் செல்ல வெல்லம்” என்றும். அழைத்தபின் அவனிடம் தோன்றும் மாற்றங்களைக் கவனித்து, குறித்து வரச் சொன்னேன்.
இரண்டே நாளில் அவள் மட்டும் வந்தாள். குறிப்பாக, அவனை “என் மக்குச் செல்ல வெல்லம்” சொல்லும்போது, தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோருமே அவனை “மக்கு” என்றே அழைக்கிறார்கள் என்றாள். தான் ஆசைப் பட்டதற்கு மாறாக, மக்கு என்ற கவசத்தைச் சூட்டினார்கள். இது அவளுடைய மனதைச் சங்கடப்படுத்தியதாகச் சொன்னாள். மாறாக அவனைப் பெயரிட்டுக் கூப்பிடுகையில் அவன் முகம் மலர்வதைக் கவனித்தாள். மேலும் அப்பொழுது செய்ய வேண்டிய வேலையை நன்றாக முடித்தான் என்றாள். தானே குறையைச் சுட்டிக் காட்டினால் மற்றவர்கள் அதைச் சொல்ல மாட்டார்கள் என்று தப்பாக நினைத்திருந்தாள். அம்மாவே சொல்கின்றாள் என்பதால் குழந்தைகள் அதை அப்படியே நம்பிவிட்டு, அதேபோலச் செயல்படுவார்கள்.
வேலுமணி “மக்கு” என்பதால் தனக்கு எதுவும் புரிவதில்லை என்று எடுத்துக் கொண்டான். அதற்கு ஏற்றவாறு பதில் சொல்லக் குழம்பி அமைதியாக நின்றான். சில ஆசிரியர்கள் “ஏன் மக்கு போல நிக்கிற” என்றதும், தான் மக்கு என்றே ஊர்ஜிதம் செய்து கொண்டான்.
சிறுவனாக இருப்பதால் இதைச் சமாளிக்கத் தெரியவில்லை. அதனால் எழுதப் படிக்க வேண்டும் என்றதும் தனக்குத் தலைவலி எனச் சொன்னான். இது நிகழும்போதெல்லாம் அவன் பாட்டி அடிக்கடி “அப்படியே தாத்தாவை உரித்து வெச்சிருக்க” என்பாள். இந்த வார்த்தைகள் தான் செய்வது சரி என்பதுபோல் லேலுமணிக்குத் தோன்றியது.
அவன் தாத்தாவிற்கு ஒரு வேலை செய்யக் கடினமாக இருந்தால் அவர் தலைவலி என்பாராம். எல்லோரும் அவரைச் சூழ்ந்து நிற்பதைப் பார்த்து வியந்திருக்கிறான். யாரோ ஒருவர் உதவி செய்து வேலையை முடித்து விடுவதைப் பார்த்திருக்கிறான். வேலுமணியைப் பொறுத்தவரை செய்ய முடியவில்லை என்றால் தலைவலி தோன்றும்.
தாத்தா-பாட்டி கெளரியுடன் வந்தார்கள், இதைப்பற்றி உரையாடினேன். முக்கியமாக, பெரியவர்கள் என்ன பேசுகிறோம், யாரை எதற்காக ஒப்பிட்டுப் பேசுகிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என வலியுறுத்தினேன். பெரியவர்கள் சமாளிப்பு, வார்த்தை உபயோகிப்பது இரண்டையும் வளரும் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு இதை உணர்ந்து செய்கிறோமோ, சொல்கிறோமோ அவ்வளவு நன்மை உண்டு. இயற்கையாக இருப்பது முக்கியம். செயற்கையாக இருந்தால் அதன் போலித்தனத்தை அறிந்து கொண்டுவிடுவார்கள்.
மூவரையும் தாங்கள் என்ன சொல்கிறோம், எப்படிச் செய்கிறோம் என்பதைக் கவனிக்கப் பரிந்துரைத்தேன். மேலும் ஒருவருக்கு ஒருவர் ஏதாவது மாற்றிச் செய்யவேண்டும் என்று தோன்றினால் அதைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னேன். இரண்டு வாரத்திற்குப் பிறகு என்ன செய்தார்கள் என்றும், எதை மாற்றி அமைத்தார்கள் என்பதையும் வந்து விவரிக்கச் சொன்னேன்.
மூவரும் தாங்கள் சொல்வதை விவரித்தார்கள். அவற்றை மாற்றி அமைக்கையில் வாக்குவாதம் வந்ததால் செய்யவில்லை என்றார்கள்.
அவர்களுக்குப் பரஸ்பர உதவி செய்ய ரோல்ப்ளே செய்தோம். மூவரும் மாறிமாறி பாத்திரங்களைச் செய்ய மெதுவாகப் புரிய வந்தது. அவர்களை வீட்டிலும் ஒருவருக்கு ஒருவர் நடத்தையை மாற்றிக் கொள்ள எப்படி உதவுவது என்பதையும் இதில் செய்து பழகினோம். கூட்டுக் குடும்பமாக வாழ்வதில், உறவுகளை மேம்படுத்தும் வகையில் ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை, ஒத்துழைப்புச் செய்தால் பல நலன்கள்.
இதைத் தொடர்ந்து, வேலுமணி தான் வீட்டுப்பாடம் செய்ய அம்மா பல தின்பண்டங்கள் கொடுத்து செய்ய வைப்பாள் என்றான். அவனுடைய பல் மருத்துவர் இனிப்பைக் குறைக்கச் சொல்லியும் இது நடந்தது. கெளரி-வேலுமணி இருவரையும் இதற்குப் பதிலாக என்ன செய்யலாம் என யோசிக்கச் சொல்லிக் குறித்துக்கொண்டோம். வெளியில் விளையாடுவது, கதை சொல்வது, பாட்டுக்கு நடனம் என்று வேறு விதமான பரிசுகள் பெறலாம், சில சமயங்களில் எதுவும் இல்லாமலும் செய்யலாம் என நாளடைவில் வேலுமணி புரிந்துகொண்டான்.
கெளரி, தான் வளரும் வயதில் கண்டிப்பான பெற்றோர் இருந்ததால் தன் பிள்ளையை முழுக்க ஃப்ரீயாக விட முடிவெடுத்திருந்தாள். மேலும் பாசம் காட்டுவதில் தன்னை மிஞ்சி எந்த அம்மாவும் இருக்கக் கூடாது என்பதற்காக இவ்வளவு வாங்கித் தந்தாள். தன் செயலில் உள்ள தவறான எடுத்துக்காட்டை அவள் காணவில்லை.
இதைப்பற்றி எடுத்துக்கொண்டு பேசினோம். முதலில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆனால் அன்றாட செயல்களை எடுத்துக்கொண்டு பரிசோதனை செய்ய மெதுவாகப் புரிதல் வந்தது. பாசம் காட்ட வேண்டும், பாசத்தால் அடிமையாக்கக் கூடாது.
கெளரி இப்படிச் செய்வதற்குக் காரணம் அவளுடைய கல்யாணம். தானாக தேர்ந்தெடுத்துச் செய்துகொண்டாள். அவள் கணவர் அவளைவிட பதினைந்து வயது மூத்தவர். வெளிநாட்டில் வசித்திருந்தார். அவர் பெற்றோர் கெளரி, வேலுமணியுடன் இருந்தார்கள். தான் தேர்ந்தெடுத்துச் செய்த கல்யாணம், பிள்ளையை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதற்கு இப்படிப் பார்த்து பார்த்துச் செய்து வந்தாள். வேலுமணியின் ஒன்பதாவது வயதுவரை அவனுக்குச் சோறு ஊட்டி, குளிப்பாட்டி, உடை அணிவிப்பது எனச் சகலமும் செய்தாள். “என் குழந்தை, அவன் மேல் அவ்வளவு பாசம். நான் செய்வேன்” என நினைத்ததினால்.
வேலுமணி தானாக செய்ய வேண்டிய கட்டம் வந்தது. அவன் வகுப்பில் பதில் சொல்லாதது, தோழர்களுடன் பழகாதது இதுவெல்லாம் அவன் இதுவரை தன்னால் முயற்சி எடுத்துப் பழகாததின் விளைவு. கழிப்பறை சென்று வருகையில்கூட அவன் பள்ளிக்கூடத்து ஆயாக்கள் அவனுக்கு எல்லாம் சரி செய்யவேண்டியதாயிற்று. வேலுமணி வளர்ந்து வரும் பிள்ளை என்பதால் அவன் தானாக செய்து கொள்ளவேண்டும் என்று பள்ளியில் சொன்னார்கள். அந்தப் பயிற்சியை விடுமுறை நாட்டுகளில் அவன் தானாக செய்யத்தொடங்கினான்.
தேவைகளைத் தன்னால் பார்த்துக்கொள்ள முடியும் என்ற புரிதல் வந்தது. அவனுடைய தன்னம்பிக்கை வளர்வதை அவனே உணர்ந்தான். மேலும், அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் அரைமணி நேரம் விளையாடத் துவங்கினான்.
அவளுடைய மாமனார்-மாமியார் கெளரியை கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள அனுப்பி வைத்தனர். அவளும் தன் பாடங்களைப் படிக்க, வேலுமணி தன் பாடங்களைப் படிக்க, தாத்தாவும் பாட்டியும் அவனுக்கு உதவினார்கள். அவர்களுடன் கடைக்குப் போவது, அம்மாவுக்கு ஒத்தாசை செய்வது சேர்ந்தது. மெதுவாக அவனுடைய பல திறமைகள் வெளி வந்ததன , கூடவே அந்தத் தலை சுற்றல், பதில் பேசாதது மறைந்தன .