அம்மானை என்பது மூன்று பெண்கள் ஆடும் கல் விளையாட்டு. இன்றும் கிராமங்களில் மூன்று கல் , ஐந்து கல் என்று கற்களைத் தூக்கிப் போட்டுப் பிடித்து , பெண்கள் ஆடும் ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் பழங்காலத்தில் இந்த விளையாட்டு ஆடும்போது இலக்கிய நயம் ததும்பும் பாடல்களைப் பாடி விளையாடியதால் அந்தப் பாடல் முறைக்கே அம்மானை என்று பெயர் வந்தது.
முதல் பெண் ஒரு செய்தியைப் பாட்டாகக் கூறிவிட்டு, கற்களை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்து ‘அம்மானை’ என்று கூறுவாள். அது அரசனைப்பற்றியோ , இறைவனைப்பற்றியோ இருக்கும். அவர்கள் புகழைக் கூறி அவர்கள் அருளை அடையவேண்டும் என்ற எண்ணமே இந்த அம்மானைப் பாட்டின் நோக்கமாகும்.
இரண்டாவது பெண் , முதல் பெண் சொன்ன செய்திக்குப் பொருத்தமாக ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு ‘அம்மானை’ என்று சொல்லிவிட்டு கற்களை மேலே தூக்கிப் போட்டுப் பிடிப்பாள்.
மூன்றாவது பெண் அந்த வினாவிற்கு விடை அளித்து ‘அம்மானை’ என்று சொல்லி கற்களை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்துப் பாட்டை முடிப்பாள்.
இதுவே ‘அம்மானை’ விளையாடும் முறையாகும்.
உதாரணமாக , திருவெங்கைக் கலம்பகத்து அம்மானைப் பாடலை எடுத்துக் கொள்வோம். இப்பாடலை பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் பாடியுள்ளார். அப்பாடலாவது,
முதற்பெண் (பொதுச்செய்தி)
“தேனமருஞ் சோலைத் திருவரங்கர் எப்பொருளுமானவர் தாம் ஆண்பெண் அலியலர் காணம்மானை”
வண்டுகள் விரும்பும் சோலைகள் சூழ்ந்த திருவரங்கநாதர் எல்லாப் பொருளாகவும் திகழ்வாராயினும் ஆணும் பெண்ணும் அலியும் அல்லர் அம்மானை.
இரண்டாவது பெண் (வினா)
“ஆனவர் தாம் ஆண் பெண் அலியலரே யாமாகில் சானகியை கொள்வரோ தாரமாய் அம்மானை?”
அவ்வாறு திருவரங்கர் ஆணும் பெண்ணும் அலியும் அல்லாதவரானால் சீதையை மணந்தது ஏன்.?
மூன்றாவது பெண் (விடை)
“ “தாரமாய் கொண்டது மோர் சாபத்தாலம்மானை” ”
சீதையை மணந்ததும் ஒரு சாபத்தால் அம்மானை. சாபம் -பிருகு முனிவர் சாபத்தால், சிவபிரானது வில்லால் (சாபம் என்றால் வில் என்று பொருள் )என்னும் இருபொருள்பட விடைகூறி அம்மானைக் காயை வீசிப் பிடித்தாள்.
இந்த அம்மானை வடிவில் சிலப்பதிகாரத்திலும் இளங்கோ அடிகள் பாடியிருக்கிறார்.
மாணிக்கவாசகர் திருவாம்மானை என்று பத்துப் பாடல்கள் சிவபெருமானைப்பற்றிப் பாடியுள்ளார். இதில் மூன்று பெண்கள் பாடுவதுபோல் இல்லாமல் , வினா-விடையும் இல்லாமல் ஒரு பெண்ணே சொல்லவேண்டியதைக் கூறி அம்மானை என்று முடிப்பதுபோல் அமைத்திருப்பார்.
இராமப்பையன் என்பவர் எழுதிய அம்மானைப் பாடல்களால் நாயக்கர் வம்சத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது.
கிறித்துவத் தமிழ்த் தொண்டரான வீரமாமுனிவர் ‘கித்தேரி கேத்ரின் அம்மாள் அம்மானை’ என்ற நூலை எழுதியுள்ளார்.
இசுலாமியத் தமிழ்த் தொண்டரான உமறுப்புலவர் மகன் கவிக்களஞ்சியப் புலவர் சையத் மீராப் புலவர் காலிப் அலியைத் தலைவனாகக்கொண்டு ‘பரத்தியர் அம்மானை’ என்ற நூலையும் எழுதியுள்ளார்.
‘லாவணி’ என்றழைக்கப்படும் சமீபத்திய கதைப்பாட்டும் அம்மானைக் கதைப் பாட்டுப்போலவே அமைந்திருக்கும். குதிரை லாவணி போன்றவை அன்றாடப் பேச்சு வழக்குத் தமிழில் குறிப்பிட்ட இலக்கணம் ஏதுமின்றி அமைவதைப் பார்க்கலாம்.
“அம்மானை என்னும் செய்யுள் வகை சிலப்பதிகாரத்தில் பிறந்து, மணிவாசகரின் திருவம்மானையில் தவழ்ந்து, சிற்றிலக்கியம் பிரபந்தங்களில் முழு வளர்ச்சியுற்று, அண்மைக்கால அம்மானைக் கதைப் பாட்டுக்களைத் தன் குழந்தைகளாகப் பெற்று நம்மிடையே இன்னும் இளமை குன்றாத் தமிழ் இலக்கியமாகத் திகழ்கிறது ” என்று கனடாவில் இருக்கும் அறிஞர் அனந்த் எழுதுகிறார்.