இன்ப இலக்கியங்கள்பற்றி ஒரு கூட்டம் அல்லது அளவளாவல் நடத்த வேண்டும் என்பது ஒரு யோசனை.
நண்பர்கள் சிலர் , ‘வேண்டாமே இந்த விஷப் பரீட்சை’ என்று பயமுறுத்துகிறார்கள்.
சங்க இலக்கியத்திலிருந்து இன்றைய படிமக் கவிதைகள்வரை ஆராய்ந்து படித்த பெருந்தகையினர் இதுபற்றிப் பேசலாம்.
வள்ளுவர் காமத்துப் பால் எழுதவில்லையா? அதனால் திருக்குறளின் தரம் தாழ்ந்துவிட்டதா என்ன?
காமத்துப் பால் சொல், பொருள், உவமை நயம் கொண்டு, மகிழ்ச்சி, இரங்கல், சோகம், காமம், உளவியல் இவற்றை அடக்கி இலக்கியச்சுவை ததும்பப் பாடப்பட்டது. காதலர் கூடியிருந்து மகிழ்தல், பிரிந்து வருந்துதல், பிரிந்த பிறகு மீண்டும் கூடுவோம் என்று நம்பிக்கையோடு இருத்தல், பிரிந்த பிறகு மீண்டும் காணும் நம்பிக்கை இழந்து சோர்ந்து துயருறுதல், பிரிந்தவர் மீண்டும் வந்தபோது உரிமையோடு ஊடுதல் என்ற இந்த ஐந்து வகை உணர்வுகளை வள்ளுவர் படம் பிடித்துக் காட்டுகிறார்.
எல்லா எழுத்தாளர்களும் இந்த பாலுணர்வைத் தங்கள் கதைகளில் இலைமறை காயாகவோ விரிவாகவோ எழுதுவதுண்டு.
தி.ஜானகிராமன், சாண்டில்யன், ஜெயகாந்தன், சுஜாதா போன்றவர்களின் கதைகளில் இது அழகாகச் சொல்லப்பட்டிருக்கும்.
ஹெரால்ட் ராபின்ஸ், இர்விங் வாலஸ் போன்றவர்கள் தங்கள் கதைகளில் சாமர்த்தியமாக இதைப் புகுத்திவிடுவார்கள்.
இர்விங்க் வாலஸின் ‘செவன் மினட்ஸ்’ என்ற நாவல் ‘ஆபாச இலக்கியம்’ என்றால் என்ன என்பதை ஆராயும் களமாக இருக்கும்.
தற்சமயம் இளைஞர்கள் தங்கள் கதைகளில் – கவிதைகளில் பாலுணர்வு உணர்ச்சிகளை அப்படியே வார்த்தைகளில் வடிக்கின்றனர்.
முகனூல், வலைப்பதிவுகளில் இதுவரை எழுதத் தயங்கிய வரிகளைத் தயக்கமின்றி எழுதுகிறார்கள். ஆண்களுக்குப் போட்டியாகப் பெண்களும் எழுதத் தொடங்கிவிட்டார்கள்.
சில சிற்றிதழ்களும் இவற்றை விலாவரியாக எழுதிவருகின்றன.
எந்த அளவிற்குப் போகலாம் என்பதற்காகவாவது ‘இன்ப இலக்கியம்’ பற்றி ஒரு கருத்தரங்கம் வைக்கவேண்டும்.
காலம் கூடி வரும்போது இதுபற்றி யோசிப்போம்.
மேலும் சில செய்திகள்:
தமிழில் ஜெயமோகன் பாலுணர்வெழுத்து பற்றி எழுதியிருக்கிறார். அவரது வலைப் பதிவிலிருந்து சில வரிகள்.
( திரு ஜெயமோகன் அவர்களுக்கோ மற்ற யாருக்காவது இதில் ஆட்சேபம் இருந்தால் நீக்கி விடுகிறேன்.)
தொ.மு.சி ரகுநாதன் இந்தக் கருத்தைப் பற்றிக் கூறும்போது , புதுமைப்பித்தன்,சி சு செல்லப்பா, பிரமிள், வல்லிக்கண்ணன், எஸ். பொன்னுத்துரை போன்றவர்கள் பாலுணர்வு புத்தகங்களைப் படித்தவர்கள் என்றும் கூறியிருக்கிறார்.
புதுமைப்பித்தன் ஆங்கிலப் பாலுணர்வு எழுத்துக்களை விரும்பிப் படிப்பார் என்றும் தனக்கும் அதில் ஆர்வம் உண்டு என்றும் ரகுநாதன் சொல்லியிருக்கிறார். சி.சு.செல்லப்பா பாலுணர்வு நூல்களைப் படிப்பதில் மோகம் உடையவர் என்று அவ்வப்போது பேச்சு உண்டு — பிரமிள் அதை வெளிப்படையாக எழுதியிருக்கிறார். பிரமிளும் அந்த மோகம் உடையவரே. வல்லிக்கண்ணனிடம் ஒரு தகரப்பெட்டி நிறைய பாலுணர்வுப் புத்தகங்கள் இருந்தன என்று சொல்வார்கள்.
தமிழில் எந்த ஒரு இலக்கிய வகைமைக்கும் முதல்தொடக்கம் புதுமைப்பித்தனின் ஆக்கங்களிலேயே இருக்கும். அவரது ‘விபரீத ஆசை’ யே தமிழ் பாலுணர்வு எழுத்தின் முதல் முன்னுதாரணமாக கொள்ளத்தக்கது. நண்பனின் பிணம் கிடக்க அவன் மனைவியுடன் கூடுபவனின் தடுமாற்றமும் பதற்றமும் பிறழ்வுநிலையும் சொல்லப்பட்ட கதை அது. அதன் பின் நேராக எஸ்.பொன்னுத்துரையின் ‘சடங்கு’ ‘தீ’ என்ற இரு ஆக்கங்கள். பாலுணர்வெழுத்தில் தமிழில் இன்றுவரை சிறப்பாகச் சொல்லப்படவேண்டிய ஆக்கம் சடங்குதான்.
எழுபதுகளில் தமிழ்நாடனின்’காமரூபம்’ போன்ற நூல்கள் பாலுணர்வுஇலக்கியங்கள் என்று கொண்டாடப்பட்டன. ஆயினும் அவை சொல் அலங்காரங்களில் மறைந்து நின்று சொல்ல முயன்றவையே. பாலுணர்வெழுத்தில் தமிழின் அடுத்த முக்கியமான ஆக்கம் தஞ்சை பிரகாஷின் ‘மீனின் சிறகுகள்’ அவரது கரமுண்டார் வீடு, கள்ளம் போன்ற நாவல்களிலும் பாலுணர்வு அம்சம் இருக்கிறது.
சமீபத்தில் ஜெ.பி.சாணக்யா பாலுணர்வுக் கதைகளை எழுதியிருக்கிறார். ‘அமராவதியின் பூனை’ என்ற அவரது கதை குறிப்பிடத்தக்கது. ஆனால் பெரும்பாலான கதைகளில் சொற்களின் புதருக்குள் கதையைச் சிக்கவைக்கும் உத்தியையே அவரும் மேற்கொண்டிருக்கிறார். எஸ்.பொன்னுதுரை உட்பட பலரும் செய்துவந்த விஷயம் அது.
இன்றைய எந்த எழுத்தாளனும் மகாபாரதத்தைவிட பாலுணர்வை, பாலியல் திரிபை எழுதிவிடவில்லை.
பாலுணர்வு பலவகையில் இலக்கியத்துக்கு இன்றியமையாது.
பாலுணர்வு இலக்கியத்தின் அடிப்படைகளில் ஒன்று.
பாலுணர்வு என்பது அழகியலுடன் தொடர்புடையது. அழகும் பாலுணர்வும் பிரிக்கமுடியாதவை. அழகை உருவாக்க பாலுணர்வை எழுதியே ஆகவேண்டும்
தமிழிலக்கியத்தில் புதுமைப்பித்தன் பாலுறவை எப்படி எழுதியிருக்கிறார் [விபரீத ஆசை] தி.ஜானகிராமன் எப்படி எழுதியிருக்கிறார் [அம்மா வந்தாள், தண்டபாணி- அலங்காரம் உறவு] ஜி.நாகராஜன் எப்படி எழுதியிருக்கிறார் [நாளை மற்றுமொருநாளே கந்தன்- வள்ளி உறவு] என்று கூர்ந்து வாசிப்பவர்களால் அந்த எல்லை தள்ளித்தள்ளி வைக்கப்படுவதைக் காணமுடியும்.
மலையாளத்தில் இ.எம்.கோவூரின் உரைகள் வழியாக பாலுறவியல் [sexology] வாசகர்களிடையே புகழ்பெற்றிருந்தது. அவர் வழியாகவே ஹாவ்லக் எல்லிஸ், ஆல்ஃப்ரட் சார்ல்ஸ் கின்ஸி இருவரைப்பற்றியும் அறிந்தேன். என் உலகப்புரிதலில் மிகப்பெரிய திறப்பை அளித்தன. அவர்கள் இருவரையும், அறியாதபோதுதான் நமக்கு தஞ்சைப் பிரகாஷ் பரபரப்பை அளிக்கிறார்.
எஸ்.பொன்னுத்துரை அவர்கள் எழுதிய தீ என்ற நாவலின் ( காலச்சுவடு பதிப்பகம்) முன்னுரையில் ஆஸ்திரேலியா ரஞ்சகுமார் இலக்கியத்தில் பாலுணர்வு என்பது பற்றி இப்படிக் கோடிட்டுக் காட்டுகிறார்
- கன்னட இலக்கியம் பாலுணர்வு தொட்டு பல அரிய பொக்கிஷங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது – குறிப்பாக யு ஆர் அனந்தமூர்த்தி
- தமிழில் பாலுணர்வு பற்றி வந்த புனைகதைகள் ஒப்பிட்டளவில் குறைவானவை. வீரியம் குன்றியவை. பாலுணர்வையும் மையமாகக் கொண்டு இலக்கியம் படைத்தவர்களான தி. ஜானகிராமன், லா ச ரா, சிதம்பர ரகுநாதன், கரிச்சான்குஞ்சு , அ.மாதவன், நீல பத்மனாபன், சாரு நிவேதிதா, எஸ் .பொ.மு, உமா வரதராஜன், தளையசிங்கம், தமிழ்நதி, உமா மஹேஸ்வரி, சல்மா என்ற சிறு வரிசை உண்டு.
- தீயில் அடிவயிற்றுப்பசியைப் பற்றி எஸ்.பொ அவர்கள் எழுதியுள்ளார்.
இன்னொரு வலை நண்பர் இப்படிக் குறிப்பிடுகிறார்:
அதிகமாக விற்பனை ஆகும் புத்தகங்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் ஆபாச புத்தகங்களும்,சோதிட புத்தகங்களும் இருக்கும்.நம் நாட்டில் இதுதான் நிலை.வெளியே தெரியாமல் அதிகம் பரபரப்பாக விற்றுத் தீர்ந்துவிடும்.டீனேஜ் ஆண்மகன்கள் இதன் வாசகர்கள்.