அத்தியாயம் பதினாறு
மனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்னாளாம்.
மறு நாளை எண்ணாதே இந்நாளே பொன்னாளாம்
அப்பாவி யென்பார்கள் தப்பாக யெண்ணாதே…
அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் சென்றார்கள்
பல்லாக்கை தூக்காதே…பல்லாக்கில் நீயேறு… சிவ சம்போ
வகுப்பறைப் பழக்கம் விட்டு வெகுநாட்கள ஆகிவிடவில்லை. ஆனாலும் இந்த அனுபவம் புதியதாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.
தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்தேன். சுமார் முப்பது இருக்கைகள். பள்ளிகளில் அமர ‘பெஞ்ச்’ அல்லது ‘டெஸ்க்’ தான் இருக்கும். இங்கே அமர நாற்காலிகளும் வலது கைப்பிடி முனை ஒரு பெரிய புத்தகம் வைக்கும் அளவில் பெரியதாக இருந்தது. இரண்டு இருக்கையில் அந்த பெரிய கை இடது பக்கம் இருந்தது. பயிற்சி பெறுவோர் எழுதுவதற்கான ஏற்பாடு அது என்று ஊகிக்க முடிந்தது.
கரும்பலகைக்குப் பதிலாக வெண்ணிறப் பலகை. அதில் பங்கேற்பவரை ‘வரவேற்கிறோம்’ என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்தது. எழுத்துக்கள் கருநீல நிறத்தில் இருந்தன. நான் உள்ளே நுழையும்போதே சுமார் பத்துபேர் இருக்கைகளில் இருந்தார்கள். உள்ளே நுழைந்ததும் ‘சிலீர்’ என்று இருந்தது. வாழ்க்கையில் முதல்முறையாக குளிரூட்டப்பட்ட அறைக்குள் நுழைந்தேன். சினிமாக்களில் பார்த்திருந்தபடியால் அது என்ன என்று தெரிந்தது. எங்கள் ஊர் தியேட்டர்கள் எதுவும் ஏர்கண்டிஷண்ட் கிடையாது.
எங்கேயோ பார்த்துக்கொண்டு உள்ளே நகர்ந்ததில் ஒரு இருக்கையில் மோதிக்கொண்டேன். அனைவரும் திரும்பி என்னைப் பார்த்தார்கள். ஆரம்பமே குளறுபடிதான். நான் தலையைக் குனிந்துகொண்டே ஏதோ ஒரு இருக்கையில், (முதல் வரிசையோ கடைசி வரிசையோ இல்லாமல் தவிர்த்து) அமர்ந்தேன். நல்லகாலம், இடதுகைக்காரர்களுக்கான இருக்கை அல்ல அது.
நான்கு நான்காக நான்கு வரிசைகள். நடுவில் பாதை மீண்டும் நான்கு நான்காக நான்கு வரிசைகள். வந்திருந்தவர்கள் பரவலாக அமர்ந்திருந்தார்கள் என் வரிசையில் இன்னும் ஒருவர்தான் இருந்தார்.. வகுப்பு ஆரம்பிக்க.ப் பதினைந்து நிமிடங்கள் இருந்தன.
ஒரு மெல்லிய அட்டையில் ஒரே ஒரு காகிதத்தைக் ‘கிளிப்’ போட்டு வைத்திருந்தார்கள். ஒரு பேனாவும் வைத்திருந்தார்கள், அந்தக் காகிதம் ஒரு படிவம். பயிற்சிபெறுவோரின் சுய விவரக்குறிப்பு. எனக்குப் படிவம் என்றாலே ஒரு நடுக்கம். கட்டாயம் தவறு செய்துவிடுவோம் என்று அதீத அவநம்பிக்கை. குறைந்தது எழுத்து சரியில்லை என்று திருத்த வேண்டியிருக்கும் . அது என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்று புரியாமல் செய்துவிடும்.
இந்தமுறை அடித்தல் திருத்தல் இல்லாமல் ஓரளவிற்குத் தெளிவாக எழுதிவிட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன். மின்சார ரயிலில் வரும்போது ஒரு நோட்டீஸ் கொடுத்தான் ஒரு சிறுவன். அதிலிருந்த விஷயம் எனக்குத் தேவை இல்லாதது. ஏதேதோ வியாதிகளுக்குக் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவரின் அறிவிப்பு. ஏதோ நினைவில் அதனைப் பையில் போட்டுக்கொண்டு விட்டேன் போலிருக்கிறது. ஒரு பக்கம்தான் விளம்பரம். மற்றொரு பக்கத்தில் ஒவ்வொரு கேள்விக்கும் நிதானமாக எழுத்து எழுத்தாக எழுதிக்கொண்டேன். ஏதோ காப்பியடித்து அந்தச் சிறு படிவத்தைப் பூர்த்தி செய்தேன். ஒரே ஒரு அடித்தலும் ஒரு திருத்தலும் தான். மானசீகமாக என் முதுகில் நானே தட்டிக் கொண்டேன். அந்த அடித்தலும் என்னாலல்ல. எனக்கு பக்கத்தில் காலியாய் இருந்த இருக்கையில் அமர வந்தவர் என்னை நகரச் சொன்னபோது ஏற்பட்ட கவனக் குறைவுதான். ஓரிடத்தில் ஐந்து என்ற எண் ஆங்கில ‘S’ போலிருந்ததைத் தவிர மிகவும் சரியாக நிரப்பியிருந்தேன். முடித்துவிட்டு நிமிர்ந்து பார்க்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக் அறை நிரம்பத் தொடங்கியது. ஆரம்பிக்கும் நேரத்திற்கு ஓரிரு நிமிடங்கள் இருக்கும்போது, பார்த்தாலே அதிகாரிகள் என்று விளங்கும் வகையில் தோற்றமளித்த மூன்று பேர் சரசரவென்று உள்ளே நுழைந்தார்கள். பயிற்சி மைய அதிகாரிகள் என்று புரிந்தது. எல்லோரும் தன்னிச்சையாக எழுந்து கொண்டோம். பள்ளியில் ஆசிரியர் வரும்போது எழுந்து நின்ற நினைவு வந்தது.
அதில் ஒருவர் ” ப்ளீஸ். சிட் டவுன்” என்றார்.
அவர் தொடர்ந்து பேசினார். குட் மார்னிங்க், வெல்கம், ப்ரண்ட்ஸ் போன்ற சில வார்த்தைகள் தவிர எந்த சொல்லும் எனக்குப் புரியவில்லை. பள்ளியில் ஆங்கிலப் பாடத்தைக்கூட தமிழில்தான் நடத்துவார்கள்.
புரிந்துகொள்ள முயற்சி செய்வதைக்கூட விட்டு விட்டு கவனிப்பது போல பாவனை செய்து கொண்டு இருந்தேன். இடையிடையே எல்லோரும் சிரிப்பார்கள். நானும் சிரிப்பது போல் நடிப்பேன்.
இரண்டாவது ஆள் பேச ஆரம்பித்தார். மீண்டும் அதே கதை.
முதல் வரிசையில் முதலில் அமர்ந்து இருந்தவன் எழுத்து தன் பெயரையும் ஊரையும் சொன்னான். அறிமுகப் படலம் தொடங்கியுள்ளது என்று புரிந்துகொண்டேன். வரிசையாக ஒவ்வொருவரும் எழுந்து ஊரையும் பெயரையும் சொன்னார்கள். என் முறை வருவதற்கு ஆறு ஏழு பேர் இருந்தார்கள். நான் ஊரையும் பெயரையும் எனக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டேன். ஆனால் எழுந்து முப்பது பேர் நடுவில் என் பெயரைச் சொல்லக்கூட தைரியம் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.
நான் அமர்ந்திருந்தது இரண்டாம் வரிசையில் ஒரு கோடி இருக்கை. முதல் வரிசை முடிந்ததும் இரண்டாம் வரிசைக்காரர்களில் யார் முதலில் என்று தெரியாததால் நானும் மற்றொரு கோடி இருக்கை ஆசாமியும் ஒரே நேரத்தில் எழுந்து பெயரைச் சொன்னோம். எல்லோரும் சிரித்தார்கள். இருவரும் மௌனமானோம். சில நொடிகளில் இருவரும் சேர்ந்து ஆரம்பித்தோம். மீண்டும் மௌனமானோம். நிகழ்ச்சி நடத்துபவர் பிரச்சினையைத் தீர்த்தார். என்னை நோக்கி கையைக் காட்டி “ யூ” என்றார்.
நானும் பெயரைச் சொல்லிவிட்டு ஊரையும் சொன்னேன். இதற்குள் கால்கள் கிடுகிடுத்துக்கொண்டு இருந்தன. மூன்றாவது அதிகாரி குறுக்கிட்டார். அவர் சொன்னவற்றில்
‘டெக்ஸ்டைல்’ ‘ஃபேமஸ்’ என்ற இருவார்த்தைகள் புரிந்தன. நான் தன்னிச்சையாக “நோ சார்!” என்றேன்.
இரண்டாமவர் அதற்குப் பதில் சொன்னார்.. எனது ஊரின் பெயரையே உடைய இன்னொரு நகரம் நெசவிற்குப் பெயர் போனது. அது வேறு மாவட்டத்தில் இருந்தது. இதை ஒருவர் மற்றவருக்கு விளக்கமாகச் சொன்னார் என்று அனுமானித்தேன். மீண்டும் வகுப்பறை மௌனமாயிற்று.. நான் நின்றுகொண்டே இருந்தேன்.
ஒரு அதிகாரி “நெக்ஸ்ட்” என்று சொல்ல, அடுத்தவர் எழுந்திருக்க நான் அமர, ஓரிரு நிமிடங்களில் படபடப்பு அடங்கியது. பலபேர் முன்னிலையில் ஆங்கிலத்தில் நான் சொன்ன முழு வாக்கியம் “நோ சார்!”
அறிமுகப்படலம் முடிந்தது. அதிகாரிகளில் இருவர் வெளியேற, ஒருவர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். படிவத்தைப் பூர்த்தி செய்து முடித்துவிட்டவர்கள் அதைக் கொடுத்துவிடலாம் என்று சொல்லப்பட்டது. பூர்த்தி செய்யாத மற்றவர்களுகாகச் சில நிமிடங்கள் அனுமதித்தார்கள். எல்லாப் படிவங்களையும் அடுக்கிக்கொண்ட அந்த அதிகாரி, மேலாக அந்த விவாங்களைப் பார்த்து மாற்றிமாற்றி அடுக்கிக்கொண்டார்.
என் அருகில் அமர்ந்து இருந்தவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். .எங்கே தங்கியிருக்கிறேன் என்று விசாரித்தார். சற்று தொலைவாயிற்றே என்றார். நான் மாலையில் இடம் மாற இருப்பதையும் அண்ணன் கொண்டுவந்து விடுவான் என்றும் சொன்னேன்.
வகுப்பு தொடங்கி விட்டதால் உணவு இடைவேளையின்போது பேசலாம் என்றார்.. தென்னிந்திய மாநிலங்கள் நான்கிலும் (இப்போதுதான் ஐந்தாயிற்றே) வந்திருந்த அனைவரையும் பயிற்சியாளர் மீண்டும் வரவேற்றார். சுமார் ஒரு மணி நேரம் எங்கள் நிறுவனம் ஏன் ஏற்பட்டது, அதன் நோக்கம், செயல்பாடுகள் என்ன, அந்த நிறுவனத்தில் நாங்கள் என்ன பங்கு வகிக்கிறோம் என்றெல்லாம் பேசினார் என்று நினைக்கிறேன். “an important screw in a big machine” என்ற சொற்றொடர் மட்டுமே இன்று நினைவில் இருக்கிறது.
அருகிலிருந்த நீளவட்ட அறையில் எல்லோருக்கும் உணவு அளிக்கப்பட்டது. பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து புன்னகைக்கவும் ஓரிரு வார்த்தைகள் பேசவும் அவகாசமிருந்தது.
பக்கத்து இருக்கைக்காரன் என்னிடம் வந்தான். அவன் சென்னைவாசியாம். வீட்டிற்குச் செல்கையில் என்னை அண்ணன் அறைக்குக் கொண்டுபோய் விடுவதில் தனக்கு எந்த சிரமமும் இல்லை என்றும் என் அண்ணன் அலைவதைத் தவிர்க்கலாம் என்றும் சொன்னான். அண்ணன் கொடுத்திருந்த தொடர்பு எண்ணை வாங்கிக்கொண்டான். பயிற்சி மைய அலுவலக அறைக்கு என்னையும் கூட்டிக்கொண்டு போனான். அனுமதி பெற்றுத் தொலைபேசியை உபயோகித்தான்,
என்னிடம் ஒலிவாங்கியைக் கொடுத்தான். அண்ணன், மாலையில் தான் இங்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும், அறைக்கு அந்த நண்பனுடன் வந்துவிடு என்றும் சொல்லிவிட்டான்.
மதியம் எங்களை ஐந்து ஐந்து நபர்கள் கொண்ட குழுக்களாகப் பிரித்தார்கள். வேறு வேறு மாநில/ மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு குழுவில் அமையும்படி பார்த்துக் குழு பிரித்தார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டது. இரண்டு பக்கத்தில் ஒரு வியாசம் எழுதிக் கொடுக்க வேண்டுமாம்.
சளசளவென்று பேசிக்கொண்டே அந்த வேலையினை எல்லாக் குழுக்களும் செய்தன. என் குழு அளித்த கட்டுரையில் என் பங்கு என்னவென்று அனுமானிப்பவருக்கு எந்தப் பரிசும் அறிவிக்கப் போவதில்லை. கட்டுரைகள் கொடுக்கப்பட்டது. முதல் நாள் பயிற்சி முடிந்தது
ஓரிரு நொடிகளில் முடிவெடுத்த அந்த அடுத்த இருக்கைக்காரன் என் வயதுக்காரன்தான். . ஒரு காரியத்தை இலகுவாக செய்வது எப்படி என்று தெரிந்தவனாகவும் இருந்தான். அவன் சொன்னபடியே செய்தோம்..
அந்த அடுத்த இருக்கை சென்னைவாசியின் பெயர் சற்று நீளம் – கோபதிசங்கர நாராயணமூர்த்தி. (கோமதி என்று யார் சொன்னாலும் கோபதி என்று திருத்துவான்). ஐந்து நாட்கள் கூடப் பழகியதில் அவர்.. அவனானது. தெளிவாக யோசித்து முறையாக முடிவெடுக்கும் திறன் உள்ள அவன் முன்னுக்கு வந்துவிடுவான் என்று சந்தேகமில்லாமல் தோன்றியது.
பகுதி நேரத்தில் மேற்படிப்பும் படித்துவந்த கோபதி, எங்கள் நிறுவனத்திலிருந்து விலகியதும், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் முதல் ஐந்து இந்திய மேலதிகாரியாக ஓய்வு பெற்று பல சமூகசேவை நிறுவனங்களில் தொண்டாற்றி வருவதும் பின்னால் செய்திகள். மேலே சொன்ன பாடல் நிச்சயம் கோபதிக்குத்தான் என்று தோன்றுகிறது
பயிற்சியில் மேலும் சில மனிதர்கள்! அனுபவங்கள்….
….. இன்னும்