
படம்: By សុខគឹមហេង – Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=58228026
ஸந்த்யாவின் சாந்துக் குளியல் அறையில் அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் விஷ்வகர்மாவின் குடும்பத்தை முற்றிலும் உலுக்கிவிட்டது என்றால் அது தவறில்லை.
இதில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர் விஷ்வகர்மாதான். அந்த அறையில் இருக்கவேண்டிய ஸந்த்யா அங்கு இல்லை . அவளுக்குக் கொடுக்கும்படி தான் அளித்த மருந்து கிண்ணத்தில் அப்படியே இருக்கிறது. சாளரத்தில் புறாவும் முட்டைகளும் எரிந்து கிடக்கின்றன. தரையில் ராகு தலை துண்டிக்கப்பட்டு விழுந்து கிடக்கிறான். மனைவியோ கையில் வாளுடன் நிற்கிறாள்.
வேறு சாதாரணமானவர் யாராக இருந்தாலும் இந்த சூழ்நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் நிலைகுலைந்து போயிருப்பார்கள். ஆனால் விஷ்வகர்மா தேவ சிற்பி மட்டுமல்ல. எந்த இக்கட்டையும் சமாளிக்கும் வல்லமை படைத்தவர். பிரும்மாவிற்கே தெரியாமல் காரியம் செய்யத் துணிந்தவர் அல்லவா?
முதலில் தலைவேறு முண்டம்வேறு என்று கிடக்கும் ராகுவை சரிசெய்து அவனை அங்கிருந்து அப்புறப்படுத்தவேண்டும். ராகுவின் தலை எந்தவித உணர்ச்சிகளையும் காட்டாமல் கண்கள் சுழன்றுகொண்டேயிருந்தன. உடல் துடிப்பு எதுவும் இல்லாமல் அமைதியாக உறங்குவதுபோல் இருந்தது. இப்படி இருப்பது ராகுவிற்கு எந்தவித வேதனையும் தரவில்லை என்பதை அவனுடைய முகக்குறிப்பே உணர்த்தியது.
விஷ்வகர்மா அவன் தலையை எடுத்து அவன் உடலருகே மெள்ளக் கொண்டுபோனார். காந்தத்தைக் கண்ட இரும்புபோல ஒன்றை ஒன்று ஆகர்ஷித்து ஒட்டிக்கொண்டன. ராகுதேவன் எழுந்து நின்று விஷ்வகர்மாவிற்குத் தலை வணங்கினான். தன் திட்டத்தை எல்லாம் அழித்தவன் அவன் என்றும் அவனை எப்படித் தண்டிக்கலாம் என்றும் யோசித்தார்.
“ஸ்வர்னபானு!” அவனைப் பழைய அசுரப் பெயர்கொண்டு அழைத்தார்.
“வேண்டாம் ஐயா! என்னை ராகு என்றே அழையுங்கள்! நான் தற்போது அசுரன் அல்லன். தேவர்களுடன் சேர்ந்து ராகுதேவன் ஆகிவிட்டேன். உங்கள் கோபம் எனக்குப் புரிகிறது. உங்கள் திட்டத்தை முற்றும் தொலைத்தவன் நான். அதற்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன். ஆனால் மகாருத்ரபிரும்மன் வரவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பது எனக்கு இட்ட கட்டளை!”
“சுக்கராச்சாரியாரின் கட்டளைதானே! ,அசுர குலத்தைக் காக்க அவர் செய்யும் முயற்சி!”
” அவர் மட்டுமல்ல. பிரும்மா, சிவன், விஷ்ணு மும்மூர்த்திகளின் கட்டளையும் அதுவே”
விஷ்வகர்மா திடுக்கிட்டார். ” நான் அதற்காக முயலுவது மும்மூர்த்திகளுக்குத் தெரியுமா?” பயத்துடன் கேட்டார் விஷ்வகர்மா.
” யார் அதை முயன்றாலும் அவர்களைத் தடுக்கவேண்டும் என்பது எனக்கு இட்ட கட்டளை. நீங்கள் முயல்வீர்கள் என்று சொல்லவில்லை. ஆனால் சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கிறார்கள்; உனக்கு சூரியனை விழுங்க சரியான சந்தர்ப்பம் என்று அனுப்பி வைத்தவரே பிரும்மன்தான்” என்றான் ராகுதேவன்.
“ஆஹா! பிரும்மருக்கு எப்போதும் என் மீது ஒரு சந்தேகம். எப்படி இருந்தாலும் இன்று உன்னைத் தண்டிக்காமல் விடப்போவதில்லை. என் மனைவி பாவம், கத்தியால் வெட்டினால் நீ இறந்து விடுவாய் என்று நம்பியவள். இப்போது செய்வது அறியாமல் நிற்கிறாள். இதோ பாரம்மா! நான் ஆரம்பித்த இந்தப் பிரச்சினையை நானே தீர்த்து வைக்கிறேன். நீ போய் ஸந்த்யா என்ன ஆனாள் என்று கவனி. முடிந்தால் அவளை ஏதாவது அறையில் கட்டிப்போடு.” என்று கூறினார் விஷ்வகர்மா.
அவள் சென்றதும், அங்கே அமைதியாக நின்றுகொண்டிருந்த ராகுவிடம் ” எனக்கு உன்னிடம் பிடித்ததே இந்த நிதானம் தவறாத செய்கைதான். உன்னை நான் எப்படித் தண்டிக்கவேண்டும் என்பதையும் நீயே சொல்” என்று கூறினார்.
ராகுதேவன் மெல்ல சிரித்துக்கொண்டு , ” என்னைத் தண்டிக்க மும்மூர்த்திகளைத் தவிர வேறு யாராலும் முடியாது என்பதை அறிந்து கொண்டதால் என்னிடமே வழி கேட்கிறீர்கள் அல்லவா? நான் ஒரு வழி சொல்லுகிறேன். அது உங்களுக்குச் சம்மதமா என்று சொல்லுங்கள்”
தன் அறிவை மயக்க ராகு ஏதோ திட்டம் தீட்டுகிறான் என்பதைப் புரிந்துகொண்ட விஷ்வகர்மா அவன் சொல்வதைக் கேட்டுவிட்டு முடிவு செய்யலாம் என்று தீர்மானித்தார். அது மட்டுமல்லாமல் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அவன் தன்னை மீறி எதுவும் செய்யமுடியாது என்று அசைக்க முடியாத நம்பிக்கை வத்திருந்தார்.
ராகு மெல்ல தன் வலையை விரிக்க ஆரம்பித்தான்.
” விஷ்வகர்மா அவர்களே! மகாபிரும்மருத்ரனைத் தோற்றுவிக்கவேண்டும் என்பது உங்களின் ஆசை. அதற்காக உங்கள் மகளையே பலி கொடுக்கத்துணிந்தீர்கள்!”
” என்னது, என் மகள் பலியாவாளா?”
” ஆம், உங்கள் அருமை மகள் சந்த்யாவிற்கு நீங்கள் கொடுத்த மருந்து வேலைசெய்து அதனால் அவள் வயிற்றில் ஜனித்த கருக்கள் கலைந்தால் அவள் சர்ப்பம் தீண்டி மரணமடையவேண்டும் என்பது விதியாகும். அவளுக்கு கர்ப்பம் ஏற்படக் காரணமே என்னுடைய ராகு தோஷம்தான். மற்றவர்களுக்கு அது தோஷம், எனக்கு அது யோகம். என் பார்வைபட்டால் அது யாராக இருந்தாலும் காமம் அதிகமாகிவிடும். அதுவும் அதீத காமம் ஏற்படும். அந்தக் காம நோயிலிருந்து அவர்கள் மீளவேமுடியாது. என் பார்வை சூரியதேவன்மீது பட்டதால்தான் அவனுக்குத் தங்கள் மகள் மீது அளவில்லா காமம் பிறந்தது. இருவரும் தங்களை மறந்து உறவு கொண்டதற்குக் காரணம் என் திருஷ்டிதான். அப்படி ஒரு சாபம் எனக்கு. யார் கொடுத்தது தெரியுமா? என் மனைவிகள் நாகவல்லி நாககன்னி இருவரும் சேர்ந்து கொடுத்தது. அது ஒரு தனி காமக்கதை.
அந்தக் கதையைச் சொல்லட்டுமா? “
விஷ்வகர்மா கதையைக் கேட்கும் சுவாரசியத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ராகுவின் வலையில் விழுகிறோம் என்பதை உணரவில்லை.
(தொடரும்)
இரண்டாம் பகுதி
நாரதர் நினைத்ததை சாதித்தார்.
தேவ உலகுக்கு வாட்ஸ்அப் கிடைக்காமல் இருக்க என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனையையும் ஒன்றுவிடாமல் செய்தார்.
முடிவில் பரமசிவன் மிகவும் கோபத்துடன் எழுந்து நின்று ” நாரதா இது என்ன இந்த வாட்ஸ் அப்பைக் கொண்டுவந்து உன் நாடகத்தைத் துவக்குகிறாயா?” என்று கேட்டதும் நாரதர் சற்று ஆடிப்போய்விட்டார்.
“மகாதேவா! ” என்று அவர் ஏதோ சால்ஜாப் சொல்ல முயற்சி செய்யும்போது , மகாவிஷ்ணு அவருக்கு வக்காலத்து வாங்கினார்.
“நாரதன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நானும் கூகிளில் தேடிப்பார்த்தேன். நாரதன் சொன்னது முழுதும் சரி. பூமியில் மனிதர்கள் எது சரியான செய்தி, எது தவறான செய்தி என்று தெரியாமல் தடுமாறுகிறார்களாம். உதாரணாமாக, சமீபத்தில் ஒரு பெரிய சிலை இந்தியாவில் திறக்கப்பட்டதாம். அதில் ஒரு கல்வெட்டில் ஏதோ சொற்பிழை ஏற்பட்டுவிட்டதாக ஒரு இலட்சம் வாட்ஸ்அப் குரூப் மெம்பர்கள் சாடியிருந்தார்கள். இன்னும் லட்சம் பேர் அப்படி தவறே நடக்கவில்லை என்று வாதிடுகிறார்கள். அதுதவிர, பொய்யான தகவல்களால் தவறே செய்யாதவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். ஒரு கிழவியின் படத்தைப் போட்டு – இவள் குழந்தைகளைக் கடத்துகிறவள் என்று வாட்ஸ்அப்பில் போட்டதும் அவளை , கும்பலாக சேர்ந்து கொலை செய்துவிடுகிறார்கள். அப்படிப்பட்ட வாட்ஸ்அப் நம்ம பட்டணத்துக்கு வந்தால் ‘அப்புறம் இந்திரன் அகலிகை வீட்டுக்குப் போனதையும் முனிவர் சாபம் கொடுத்ததையும் போட்டோ எடுத்து எல்லோருக்கும் ஷேர் பண்ணிவிடுவார்கள். அப்புறம் இந்திரன் பாடு ஆபத்துதான்.” என்றார்.
சபை ஏக மனதாக வாட்ஸ்அப்பை நிராகரித்தது.
அதற்குள் மகாவிஷ்ணுவிற்கு வைகுண்டத்திலிருந்து போன் வந்தது. பன்னிரண்டு ஆழ்வார்களும் அவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்களாம்.
” நீஙகள் இந்த மீட்டிங்கைத் தொடர்ந்து நடத்துங்கள்! எனக்கு முக்கியமான வேலையிருக்கிறது.”
மகாவிஷ்ணு அந்த அறையைவிட்டு வெளியே வந்தார். கூடவே லக்ஷ்மியும் வந்தாள்.
“அப்படி என்ன எனக்குத் தெரியாத வேலை வைகுந்தத்தில் ?” என்று லக்ஷ்மி கேட்டதும் மஹாவிஷ்ணுக்குக் கோபம் வந்தது.
” நான் எத்தனைதடவை சொல்லியிருக்கேன் லக்ஷ்மி! இன்னிக்கு ஆழ்வார்களுடன் திவ்வியப்பிரபந்தம்பற்றி ஒரு கலந்துரையாடல் இருக்குன்னு”
” ஒஹோ! ஆழ்வார்கள் மீட்டிங்கா? பொதுவா உப்புமா மீட்டிங்குன்னுதானே சொன்னீங்க! அப்போ அந்த ஆண்டாளும் வருவா இல்லே? அதை எங்கிட்டே சொல்லவே இல்லையே!”
” இங்கே பார் லக்ஷ்மி ! ஆண்டாள் சமாசாரத்தைப்பற்றி நாம ஏற்கனவே பேசி முடிச்சுட்டோம் ,அவ பன்னிரண்டு பேர்ல ஒருத்தி. அவ்வளவுதான். ”
” இன்னும் பதினோரு பேர் இருக்காளா?”
” இந்த பாரு!, நம்ம ரெண்டு பேரும் நீ பாக்கற சீரியல்ல வர்ரவங்க மாதிரி பேசிக்கிட்டிருக்கோம். இது கொஞ்சம்கூட சரியில்ல. நாம எல்லாம் ஸ்வாமி- தாயார் . அந்த மாதிரி நடந்துக்கணும்.
” நான் தாயார், அவள் சின்னம்மாவாக்கும்.! நான் எல்லாம் தாயார் மாதிரி நடந்துக்கறேன். எல்லாத்தையும் கண்டும் காணாததுமாதிரி இருக்கேன் . நீங்க ஸ்வாமியா லட்சணமா நடந்துக்கோங்க!. ஒவ்வொரு தடவையும் நீங்க பூலோகம் போனீங்கன்னா எனக்கு திக்குன்னு இருக்கு”
” சரி, சரி, நீயும் வாயேன். நல்ல தமிழ்ப்பாட்டு கேட்டுட்டு வரலாம்.”
” நான்பாட்டுக்கு, சும்மா இருக்கேன். நீங்க போய்ட்டு வாங்கோ! நானும் சரஸ்வதியும் பார்வதியும் எமபுரிப்பட்டணத்தை சுத்திப் பாத்துட்டு அப்படியே அந்த எமி வந்திருக்காளாம். அவ கிட்டே கொஞ்சம் பேசிட்டு வர்ரோம். ”
” அடேடே ! நான் எமியை மறந்தே போயிட்டேன். நல்ல உசரமா வளர்ந்திட்டாளாமே? எமன் சொன்னான். அவ சின்னவளா இருந்தபோது பார்த்தது. நானும் வேணும்னா உங்ககூட வர்றேன்”
” அப்போ அந்த ஆழ்வார் மீட்டிங்?”
“அதை நாளைக்கு தள்ளிப்போடலாம். . இப்பவே கருடாழ்வார்கிட்டே சொல்லி அவங்களுக்குத் தகவல் குடுக்கச் சொல்லிடறேன்.”
” ஐயே! ஒண்ணும் வேண்டாம். நீங்கபாட்டுக்கு போயிட்டு வாங்க. நாங்க பெண்கள் எல்லாம் கொஞ்சம் பேசிட்டு அப்படியே நரகாபுரிக்குப் போய் கொஞ்சம் புது டிசைன்ல துணி வாங்கிட்டு மெதுவா வர்ரோம். நம்ம வைகுந்தத்தில எல்லாம் பழைய ஸ்டாக் ” என்று சொல்லி லக்ஷ்மி கிளம்பிப்போனாள்.
லக்ஷ்மி சொன்னதைக் கேட்டுக்கொண்டே வந்த நாரதர், மெதுவாக ” நாராயணா.. நாராயணா.. ” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டார்.
” என்னாச்சு நாரதா! மீட்டிங் முடிஞ்சுடுச்சா? “
” எந்த மீட்டிங்பற்றி கேட்கிறீங்க? பிராஜக்ட் மீட்டிங்கா? ஆண்டாள் மீட்டிங்கா? இல்லே எமி மீட்டிங்கா? “
” உனக்கு எப்பப் பார்த்தாலும் வம்புதான். அங்கே என்ன சத்தம் கேட்குது?”
” அப்பாதான் அம்மாகிட்டே ஏதோ சத்தம் போட்டுகிட்டிருக்கார்”
” என்னாச்சு பிரும்மருக்கும் சரஸ்வதிக்கும்?”
” ஒண்ணுமில்லே ! அம்மாவை மீட்டிங்க்கோட மினட்ஸ் எழுதச் சொன்னாராம். அம்மா கம்ப்யூட்டரில அடிச்சுட்டு அதை சேவ் பண்ணலையாம்.”
‘” இதுக்குத்தான் நான் கணபதியையே மினட்ஸ் எழுதச் சொல்லலாம்னு சொன்னேன். அவன் ஷார்ட் ஹேன்ட்ல எல்லாம் எழுதிடுவான். இந்த பரமசிவன்தான் சரஸ்வதியே எழுதட்டும் என்றார்.”
” அது ஒண்ணும் பிரச்சனை இல்லே. ஸ்வாமி தத்தாம்ஸானந்தா ரிக்கவர் பண்ணித் தர்ரேன்னு சொல்லியிருக்கார்.”
” ரொம்ப நல்லதாப் போச்சு. நான் போயிட்டு வர்றேன். கொஞ்சம் கருடனை வரச்சொல்லு.”
” இதோ சொல்றேன். ஒரு சின்ன உதவி செய்யணும். போகும்போது மகாதேவரை கைலாசத்தில டிராப் பண்ண முடியுமா?”
” ஏன் , அவரோட நந்தி என்னாச்சு?”
” அது பார்வதிகூட எமபுரிப்பட்டணம் போகுது. கலைமகளும், மலைமகளும், அலைமகளும் அதிலதான் எமியைப் பார்க்கப் போறாங்க! நானும் அங்கதான் போயிட்டிருக்கேன்.”
” ஜாக்கிரதையாய் போயிட்டு வா! மறுபடியும் சரஸ்வதி சபதம் அப்படீன்னு ஆரம்பிச்சுடப் போறீங்க!”
” அதைவிட ஆபத்தான விஷயம் நடக்கப்போகுதுன்னு பரமசிவன் மாமா அப்பாகிட்டே சொல்லிக்கிட்டிருந்தார்.”
“அவர் சொன்னா நிச்சயம் நடக்கும். நீலநாக்கு ஆச்சே! ”
பிரும்மா விஷ்ணு சிவன் பயந்தமாதிரியே நடந்தது.
(தொடரும்)