களப்பிரர்கள்
குப்த சாம்ராஜ்யம் அழிந்தது.
ஹூணர்களும் அழிந்தனர்.
புயலாகத் தோன்றி மின்னலாக மறைந்தான் யசோதர்மன்!
பேரரசுகள் மறைந்தன… சிற்றரசுகள் துளிர்த்தன…
இந்திய சரித்திரம் – வழி தெரியாமல் … தலைவனில்லாது… நத்தை போல் ஊர்ந்தது…
நாமும் தவிக்கிறோம் … யாரைப் பற்றி எழுதுவது?
சரி … வட இந்தியாவிற்கு இந்த நிலை வந்தது…
என்று… தெற்கு நோக்கிச் சென்று பார்க்கலாம் என்று பார்த்தால்..
அங்கும் இருண்ட காலமாக இருந்தது.
காதல், மானம் , வீரம் என்று சங்கம் சிறப்பித்துப் பாடிய சேர, சோழ , பாண்டியர் எங்கே?
பெட்டிப்பாம்பு?
தென்னகத்தை ஆளும் மன்னர்கள் யார்?
கி பி 300- 700:
இருண்ட காலம்?
அது இருட்டடிக்கப்பட்ட காலம் என்று சிலர் கூறுகின்றனர்.
களப்பிரர் தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 250 – கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டார்கள். இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பதுபற்றித் தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் ஜைன சமயம், பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாலி மொழியை ஆதரித்தனர். எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆனால்..ஒரு முன்னூறு வருட சரித்திரத்தை ஒரு சிலர் அழித்து விட முடியுமா?
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?
ஆனால் என்ன செய்வது – பூசணிக்காயைக் காணவில்லையே!
எதை நம்புவது?
ஒரு வேளை – எதிர்காலம் இதற்கு சான்றுகள் அளிக்கக் கூடும்.
நாம் அறிந்ததை வைத்து நமது கதையைப் பார்ப்போம்.
சங்ககால இறுதியில், மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய அரசுகளை, ‘களப்பிரர்’ என்ற பெயர்கொண்ட ஒரு இனக்குழு படையெடுத்து, மூவேந்தர்கள் ஆண்ட தமிழகத்தை, தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்தனர். அந்த இனக்குழுவினர் எங்கிருந்து வந்தனர், அவர்களின் மதம், மொழி இவை எதையும், சரியாக அறியமுடியவில்லை. அதற்கு முக்கியக் காரணம், அவர்களைப்பற்றிய கல்வெட்டு மற்றும் இலக்கிய ஆதாரங்களோ, நாணயவியல் ஆதாரங்களோ கிடைக்கவில்லை. 8ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ‘வேள்விக்குடி’ செப்பேட்டில், களப்பிரர்களைப்பற்றிய செய்தி உள்ளது. ஜடாவர்மன் பராந்தக பாண்டிய அரசனால் வெளியிடப்பட்டது.
சாதவாகனப் பேரரசர் வீழ்ச்சியுற்றபின், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த சிறிய பழங்குடி அரசுகள் விடுதலைபெற்று, தனி அரசுகளாகச் செயல்பட்டன.தமிழ்நாட்டின் வட எல்லையை ஒட்டியுள்ள கர்நாடக, ஆந்திரா மாநில எல்லையில் இருந்த ஒரு மலை வாழ் மக்களின் தலைவன், தன் படையுடன் தமிழகத்தைத் தாக்கியிருக்கக்கூடும்.
ஒன்று மட்டும் தெரிகிறது.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
யசோதர்மன்- குப்தருடன் கூட்டு சேர்ந்ததால் சக்தி வாய்ந்த ஹூணர்களையே அழிக்க முடிந்தது.
ஆனால்.. கரிகாலன், செங்குட்டுவன், நெடுஞ்செழியன் காலத்திற்குப்பிறகு பல மன்னர்கள் தங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு அழிந்தனர். ஒரு சோழன் மற்றொரு சோழனைக் கொன்றான்.
மேலும் சங்க இலக்கியங்கள் வீரத்தை மிகவும் உயர்த்தி…’சண்டையிட்டால் தான் நீ வீரன்’ என்று பாடி … மன்னர்களை உசுப்பேத்தி அவர்களை அழித்தது!!
களப்பிரர் ஆட்சியில் தமிழகம் புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி கூறுவது:
இது இருண்ட காலம் அல்ல…
இது ஒரு விடியல் காலம்..
களப்பிரர்களின் ஆட்சிக் காலத்தில் தாழிசை, துறை, விருத்தம் போன்ற புதிய பாவினங்களும் அவிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காப்பியப் புறனடை, பல்கயாம், போன்ற இலக்கண நூல்களும், நரிவிருத்தம், சீவக சிந்தாமணி, எலிவிருத்தம், கிளிவிருத்தம், விளக்கத்தார் கூத்து, பெருங்கதை போன்ற சமண சமய இலக்கியங்களும், மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மணிமாலை, அற்புதத்திருவந்தாதி, கயிலை பாதி காளத்திபாதி திருவந்தாதி, திருஈங்கோய் மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக் கோவை, திருவெழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப் பிரசாதம், காரெட்டு, போற்றிக் கலிவெண்பா, திருக்கண்ணப்பதேவர் திருமறம், மூத்த நாயனார் இரட்டைமணி மாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி ஆகிய சைவ சமய நூல்களும் தோன்றின. மேலும், இவற்றோடு ‘நீதி இலக்கியங்கள் எனப்படும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பான்மை நூல்கள் இக்களப்பிரர் காலத்தில் தோன்றியவைகளே ஆகும்.
ஒரு கதை புனைவோம்…கற்பனை சிறிதுதான் … ஆனால் சரித்திரம் பெரிது..
களப்பிர மன்னன் அச்சுத விக்ராந்தன் !
எல்லா மன்னர்களும் விக்ரமாதித்யன் என்று பட்டம் சூட்டிக்கொண்டதுபோல் – எல்லா களப்பிர மன்னர்களும் அச்சுதன்தான்!
சேர சோழ பாண்டியர் மூவரையும் போரில் வென்றான்.
மூவேந்தர்கள் தங்கள் வீரத்தை விட்டாலும்…புலமையை மட்டும் விடவில்லை…
அச்சுதன் கூறினான்:
“தமிழ் நாட்டின் மூவேந்தர்களே! கரிகாலன்,செங்குட்டுவன், நெடுஞ்செழியன் பரம்பரையில் வந்தவர்கள் நீங்கள்… வீரம் … வீரம் என்று ஆர்ப்பாட்டம்போட்டு உங்களுக்குள்ளே சண்டைபோட்டீர்கள். இன்று உங்கள் வீரம் எங்கே?…உங்கள் புலமை மட்டும் ஒடுங்கவில்லை. நாட்டின் தலை சிறந்த கவிகள் நீங்கள்தான். உங்கள் கவிகளை நீங்கள் பாடவேண்டும்… எனக்கு மகிழ்ச்சி தந்தால் உங்கள் உயிர் உங்கள் உடலில் தங்கும் …ஆனால் உங்கள் உடல் மட்டும் எனது சிறையில்தான் தங்கும்”.
அட்டகாசமாகச் சிரித்தான்.
அவர்களைத் தளையிட்டு – சிறையிட்டான் – தில்லை நகரில்.
இடம்: தில்லை நகர் – அச்சுதன் அரண்மனை…
அச்சுதன் அரியாசனத்தில் வீற்றிருந்தான்.
சிறைத்தலைவன் அரண்மனைக்கு வந்தான்:
“மன்னர் மன்னா! சிறையிலிருந்து செய்திகள்!” – மன்னனிடம் மூன்று ஓலைச்சுவடிகளைக் கொடுத்தான்.
“என்ன சிறைத்தலைவரே இது?”
“மூவரும் … தங்களது விடுதலைக்காக விண்ணப்பித்து எழுதிய கவிகள் இவை”.
அச்சுதன் அதை வாங்கிப் படித்தான்:
சேரன் பாடிய வெண்பா:
தினை விதைத்தார் முற்றம் தினையுணங்கும் செந்நெல்
தனை விதைத்தார் முற்றமது தானாம் – கனைசீர்
முரசுணங்கும் சங்குணங்கும் மூரித்தேர்த்தானை
அரசுணங்கும் அச்சுதன் தன் முற்றத்து.
அச்சுதன் மகிழ்ந்தான்:
“ஆஹா! அற்புதம்!சேரனை விடுதலை செய்க”
மேலும் படித்தான்.
சோழன் பாடிய வெண்பா:
அரசர் குல திலகன் அச்சுதன் முற்றத்தில்
அரசரவதரித்த அந்நாள் – முரசதிரக்
கொட்டிவிடும் ஓசையினும் கோவேந்தர் காற்றளையை
வெட்டி விடும் ஓசைமிகும்.
அச்சுதன் மகிழ்ந்தான்:
“மகிழ்ச்சி! சோழனையும் விடுதலை செய்க”
சேரனும் சோழனும் தம்மைத் தாழ்த்திக் கொண்டு இறைஞ்சி வேண்டியது அச்சுதனை மகிழ்வித்தது. சோழன், களப்பிரனை “அரசர் குல திலகன்” என்றே பாடியது கண்டு – மனம் மகிழ்ந்த அச்சுதக் களப்பாளன் அவ்விருவரையும் உடனே விடுதலை செய்தான்.
பாண்டியன் பாடிய வெண்பா:
குறையுளார் எங்கிரார் கூர்வேலி ராமன்
நிறையறு திங்களிருந்தார் – முறைமையால்
ஆலிக்குந்தானை அலங்குதார் அச்சுத முன்
வாலிக் கிளையான் வரை
அச்சுதன் மகிழ்ச்சி திடீரென தடைப்பட்டது.
குருவிகளை வேட்டையாடும் கழுகு போல் … முகம் பயங்கரமாக மாறியது.
“எனக்குப் பிடிக்கவில்லை … பாண்டியனின் தளை இன்னொன்று ஏற்றப்படட்டும்”.
சிறைக்காவலருக்கும், மந்திரிமார்களுக்கும் ஒன்றும் விளங்கவில்லை.
“பாண்டியன் பாட்டில் என்ன குறை கண்டீர்கள் மன்னா?” – மந்திரியார் வினவினார்.
அச்சுதன் :
“பாண்டியன் சிறைப்பட்டிருந்த நிலையிலும் பெருமிதம் குறையாமல் தன்னை இராமனுடன் ஒப்பிட்டுக் கொண்டு பாடியிருக்கிறான். அதனாலே அவனுக்கு கூடுதல் விலங்கு”!
சிறையில் பாண்டியன் “நமது பெருமிதம் நமது எதிரியாயிற்றே!.. “ – என்று நொந்தான்.
மிகவும் பணிந்து வேறொரு வெண்பா பாடினான் .
“காவலரே! மாமன்னர் அச்சுதனிடம் இந்த வெண்பாவைச் சேர்த்து எனது பணிவைக் கூறுங்கள்”
பாண்டியன் பாடிய வெண்பா:
குடகர் குணகடலென்றார்த்தார் குடகர்க்
கிடகர் வடகடலென்றார்த்தார் – வடகடலர்
தென்கடலென்றார்த்தார் தில்லையச்சுதானந்தன்
முன்கடை நின்றார்க்கும் முரசு
அச்சுதன் முகமலர்ந்தான்: “இது.. இது…சரியான பாட்டு… பலே பாண்டியா! உனக்குத் தந்தேன் விடுதலை”
பாண்டியனும் விடுதலை பெற்று ஓடினான்.
இந்த பாண்டியன் வம்சத்தில் 300 ஆண்டு காலம் கழிந்து ‘கடுங்கோன்’ என்ற மன்னன் இந்த களப்பிர மன்னனைத் தோற்கடித்து மீண்டும் பாண்டிய ஆட்சியைத் தொடங்குவான். அது போல விஜயாலய சோழனும் களப்பிர முத்தரையனை தஞ்சையில் வென்று சோழநாட்டை ஸ்தாபிப்பான்.
அதுவரை அவர்களுக்கு இருண்ட காலமே!
சரித்திரம் இந்தியாவில் அலைகிறது…வேறு என்ன சுவாரஸ்யமான கதைகள் உள்ளன? தேடுவோம்..