முதலில் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் !

இந்த வருடம் தீபாவளி சற்று வித்தியாசமான தீபாவளி.
வெடிகள் வெடிக்கும் நேரத்தை அப்பாவோ, அம்மாவோ, குழந்தைகளோ தீர்மானிக்கவில்லை. உச்ச நீதி மன்றமும் மாநில அரசும் சேர்ந்து எப்போது, எவ்வளவு நேரம் வெடிக்கலாம் என்று தீர்மானிக்கின்றன. காற்றில் கலக்கும் மாசினைக் குறைப்பதற்காக வழங்கிய தீர்ப்பு இது.
‘எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருளை, தீவிரமாக ஆதரித்தோ எதிர்த்தோ பேசுவது அறிவு’ என்ற கொள்கையில் ஊறிப்போனவர்கள் நாம். உடனே கம்ப்யூட்டரையும் மொபைலையும் தட்டி வாட்ஸ் அப் , பேஸ்புக், டுவிட்டர் என்று சகட்டுமேனிக்கு எழுதத் தொடங்கிவிடுவோம்.
அந்தக் காலத்தில் எரிந்த கட்சி எரியாத கட்சி என்று லாவணிக் கச்சேரியில் வருமாம்.
அதுபோல, இன்று மோடிக்கு ஆதரவு, இந்துத்வா, இவை ஒரு கட்சி ; மோடிக்கு எதிர்ப்பு மதச்சார்பின்மை சேர்ந்தது இன்னொரு கட்சி. இந்த இரண்டு கட்சிகளும் தாக்கிக்கொள்ளும் விதம் இருக்கிறதே, குழாயடி சண்டை – பேட்டை ரவுடிகள் பேசும் பேச்சு எல்லாம் பிச்சை வாங்கணும்!
‘அப்பா’ வெடி வெடிக்கலாம் வாங்கப்பா சீக்கிரம், என்று கெஞ்சும் மகனைத் தவிக்கவிட்டு மீம்ஸ்க்கு பதிலடி கொடுக்க அப்பா மொபைலில் தீவீரமாயிருப்பார்.
‘அம்மா கொஞ்சம் சட்னி போடேன்’ என்று கெஞ்சும் மகளைத் தவிக்கவிட்டுட்டு, வாட்ஸப் வீடியூவை பார்வேர்ட் செய்யும் அம்மாக்களைப் பார்க்கலாம்.
இதே தீவிர-வாதம்தான் பெண்களை சபரிமலைத் தீர்ப்புக்கு எதிராக எழ வைத்தது.
இத்தனை பேர்கள் மதக் கோட்பாட்டில் ஒருமையாக இருக்கிறார்கள் என்றால் ஜனநாயக முறைப்படி அதற்குத் தலை வணங்க வேண்டியது நமது கடமையாகிறது.
அதனால்தான் சென்ற மாதம் எழுதிய சபரிமலை தீர்ப்புபற்றிய தலையங்கத்தை மாற்றிக்கொள்கிறோம்.
( உச்சநீதி மன்றம் தன் தீர்ப்பை மறுசீராய்வு செய்யப்போகிறது என்று சொல்வதற்கு முன்னரே நம் தீர்மானம் முடிவாகிவிட்டது.)
சில சம்பிரதாயங்களுக்கு மரியாதை கொடுப்பது நமது கடமை.
ஜல்லிக்கட்டும் சரி, சபரிமலைப் போராட்டமானாலும் சரி. நமது கருத்து மாறுபட்டதாக இருந்தாலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று கொள்கிறோம்.
‘ நான் எப்படியும் போயே தீருவேன் அரசாங்கமும் நீதியும் என் பக்கம் ‘ என்று தீர்மானமாக இருக்கும் சில பெண்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும்.
” உங்கள் குரல் பெரிதாகும்வரை சற்றுப் பொறுத்திருங்கள்.
‘கத்தினால்தானே எங்கள் குரல் உலகுக்குக் கேட்கும் ‘ என்று நீங்கள் சொல்லலாம்.
தேவையேயில்லை. உங்கள் குரலில் உள்ள நியாயம் பெரிதாகும்போது பாதை தானே பிறக்கும்.
அதுவரை, காத்திருப்போம்.