“தலைவலியால் வெளியானது”! – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

 

Image result for சிறுகதை

எட்வின் தலை வலித்ததால் சிகிச்சைக்கு வந்தார். எங்கள் துறையின் வழக்கம், எப்பொழுதும் முழு நலனை மனதில்கொண்டு, எங்களை அணுகுபவரின் எல்லாத் தகவல்களையும் சேகரிப்பதாகும். அதனால்தான், டாக்டர் தலைவலி பற்றிய தகவல்களை சேகரிக்கும்போது கூர்ந்து கவனித்துக் கேட்டார். இது தலைவலி மட்டும் அல்ல, வேறு மனநல சிக்கல்கள் ஒட்டி இருப்பதாக அவருக்குத் தோன்றியது.

நான் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் என்பதால் என்னிடம் அனுப்பி வைத்தார். எங்கள் படிப்பு, ட்ரைனிங் இரண்டிலும் உடல்-மனம்பற்றிய புரிதல் எங்களுக்கு உண்டு  என்பதால்.

என்னிடமும் தலைவலிக்கான தகவல்களை விலாவரியாக எட்வின் விவரித்தார். தனக்கு நெற்றி அப்படியே டைட்டாக இருப்பதாக, குறிப்பாக நெற்றியின் இடது-வலது புறம் இரண்டிலும் இருப்பதாகக் கூறினார். ஏதோ வேலையினால் தலைவலியைக் கண்டு கொள்ளாவிட்டால் அது போய்விடுமாம். வலி வருகையில் தனக்குள் ஒரு பதட்ட நிலை நிலவுவதாக இந்த 28 வயதுள்ளவர் சொன்னார்.

வேலையில் பளு அதிகமானால், அல்லது  தன் இரு குழந்தைகள் பற்றிய சிந்தனையோ, அல்லது  மனைவியை ஞாபகப்படுத்திக்கொண்டாலோ உடனே விறுவிறுப்பாக வேர்த்து ஊற்றி, கை ஜில்லிட்டு, வாய் உலர்ந்துபோய், தலை கனக்கிறது என்றார். சாப்பாடு நேரத்தில் பசி எடுப்பது இல்லையாம். தூக்கம் சரியாக இல்லை என்றார். இருதயப் பகுதியைத் தொட்டு, அங்கே பாரமாக இருப்பதையும் சொன்னார்.

எட்வினுக்கு அரசுப் பேருந்தில் வேலை. பிறந்தது கேரளா, வேலை வேறு மாநிலத்தில். சிறுவயதிலிருந்தே இந்த வேலையைத்தான் செய்யவேண்டும் என்று இருந்தார். வேலை பிடித்திருந்தது, விரும்பிச் செய்தார்.

மிகவும் ஆசைப்பட்டுப் பெற்றோரின் ஆசியுடன் ஷீலாவை மணம் செய்துகொண்டார். ஒரு வருடத்திற்கு முன்னால் அவளுக்கு ஜுரம் வந்தது, அவளைக் காப்பாற்ற முடியவில்லை. ஆறு வயதான ஜீவன், நான்கு வயதில் ரூபா என இரண்டு குழந்தைகள்.

தான் ஷீலாவை மிகவும் காதலித்ததாகக் கூறி, அவள் மறைவைத் தாளமுடியவில்லை என்றார். அலசஅலச, மெதுவாகத் தனக்குத் தற்கொலை செய்துகொள்ளத் தோன்றிய எண்ணங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

எட்வின், தங்கள் மகள் ரூபா அப்படியே அச்சு அசலாக ஷீலாவைப்போலவே இருப்பதும், ஷீலாவுடைய பல சுபாவங்களை அவளிடம் பார்ப்பதும் தன்னை வாட்டுவதாகச் சொன்னார். அத்துடன் இந்த இரண்டு பிள்ளைச் செல்வங்களை எப்படி உருவாக்குவது என்பது கேள்விக்குறியாக இருப்பதாகக் கூறினார்.

தற்காலிகமாக எட்வினின் மூத்த அக்கா ஊரிலிருந்து வந்து பார்த்துக்கொண்டு இருக்கிறாளாம். ஆனால் அவள் விவசாயிக்கு வாழ்க்கைப்பட்டவள். நிலத்தைக் கவனிக்க ஆள் தேவைப்படுவதால் திரும்பிப் போகவேண்டிய சூழ்நிலை. அவருடைய தந்தை சர்ச் பாதிரியார். ஆகையால் இங்கே வருவது இயலவில்லை. பிள்ளைகளைத் தங்களிடம் விடப் பெற்றோர்கள் சொன்னாலும் அவர்களைப் பிரிந்திருப்பது எட்வினால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை.

எல்லாம் சேர்ந்து, எட்வினுக்கு மன அழுத்தமானது. நமக்கு உடல் வலி என்பது எப்போதும் வரும். ஏற்றுக்கொள்வோம். உணர்வுகள் தாங்கும் எல்லையை மீறிவிட்டால், அதை நாம் அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்றால், மனது அதை எப்படி நமக்குத் தெரிவிக்கும்?  சில சூழ்நிலைகளில் அது நமக்குப் பரிச்சயமான உடல் வலியாய்த் தோன்றுகிறது. இந்த உடல் பாஷையில் எட்வினுக்குத் தலையில் வலியாகத் தோன்றியது. பிரச்சினைக்கு விடை தெரியாததால் தலை வலித்தது. தன்னை மாய்த்துக்கொள்ள யோசித்தார்.

இவர்கள் ஏன் இப்படி நினைக்க வேண்டும்?  தன் துன்பங்களைப்பற்றி புரிந்து கொள்ளும் நபரிடம் சொல்ல விருப்பமே. அப்படிப்பட்ட ஒருவர் கிடைக்கவில்லை என்பது வருத்தமாகிறது. சோக நிலையில் இருப்பதால், தனக்கென்று யாரும் இல்லையோ என்று சட்டென்று முடிவெடுப்பதாலும், மன அழுத்தத்தில் ஹோப்லெஸ், ஹெல்ப்லெஸ் என்பதை அதிகமாக உணர்வதாலும்,  தற்கொலைபற்றிய யோசனை வந்துவிடுகிறது.  இவர்கள் நிலை இப்படி இருக்கிறதோ என்று ஒரு இழை சந்தேகம் யாருக்கேனும் எழுந்தால்கூட, அதைத் தீவிரமாக விசாரிப்பது மிகவும் அவசியம்.

நான் எட்வினிடம், தனக்கு நேர்வதைப்போல மற்றவருக்கு வராமல் இருக்க, தன்னைப்போல் யாராவது சஞ்சலத்தில், துக்கத்தில் இருந்தால், அவர்களுடன் இருங்கள் என்று பரிந்துரைத்தேன். அவர்கள் துக்கம் எட்வினை பாதிக்காது. மாறாக ஒன்றும் பேசாமல் அருகில் இருந்தாலே, ஒரு துணையாகும்.  நம்மால் ஒருவருக்கு ஆதரவு என்பது எட்வினுக்கும் தெம்பைக் கூட்டும்.  நம் சம்ப்ரதாயங்களிலும் சோகத்தின்போது இப்படித்தானே செய்வது வழக்கம்!

எட்வினுக்குத் தற்கொலை சிந்தனை இன்னும் இருந்திருந்தால் அதற்கு வேண்டிய சிகிச்சைக்கு அவரை ஸைக்காட்ரிஸ்டிடம் அனுப்பவேண்டி வந்திருக்கும். இப்போதைக்கு எட்வினுக்கு தேவைப்படவில்லை. தன்னுடைய நிலையில் குழம்பியிருந்தார்.

இவரும், ஷீலாவும் தங்கள் குழந்தை செல்வங்கள் என்ன படிக்கவேண்டும் என்பதைக் கனவுகண்டு முடிவெடுத்து வைத்திருந்தார்கள். ஜீவன் ஆர்க்கிடெக்சர் என்றும், ரூபா பத்திரிகையாளர் என்றும். தாங்கள் யோசிப்பது பொருத்தம்தானா என்று அறிந்துகொள்ள அவர்களின் பத்தாவது வயதில் உளவியல் பரிசோதனையும், ஆப்ட்டிட்யூட் பரிசோதனையும் செய்வதாக இருந்தார்கள்.  ஜீவன் கட்டிடங்களைப் பார்த்ததுமே “இதை இப்படிச் செய்ய வேண்டும்”, “தோட்டத்தின் அந்தப் பாகம் மரங்களுக்கே” என்று சொல்வதைக் கேட்டுக்கேட்டு இந்த முடிவெடுத்தார்கள். அதேபோல், ரூபா தன் நண்பர்களைச் சேகரித்து, “என்ன பார்த்த? அதை எழுது” ,”நீ போய் பக்கத்துத் தெரு நிலவரத்தைப் பார்த்து வந்து விவரி” என்பதாலும். அவர்கள் தெருவில் இருப்பவர்கள் ரூபாவை ஆச்சர்யமாகப் பார்ப்பார்களாம். ஆகையால், அவளைப் பிற்காலத்தில் பத்திரிகை ஆசிரியராகப் பார்த்தார்கள்.

தன் பங்குக்கு வேலையிலிருந்து வந்ததும் பாடம் கற்பித்துத் தந்தார். இவர்களின் மற்ற பராமரிப்பை அக்கம்பக்கத்தினர் பார்த்துச் செய்தனர். எட்வினுக்கு ஞாயிற்றுக்கிழமை ட்யூடீ என்றால் யாரேனும் ஒருவர் (கிருத்துவராக இல்லாவிட்டாலும்) அவர்களை சர்ச் கூட்டிச் செல்வார்கள். அப்படிப் பாசமாகப் பார்த்துக்கொண்டார்கள்.

என்னுடன் கவுன்சலிங் ஸெஷனுக்கு வெகு சீக்கிரம் வந்து முடித்துக்கொண்டு பணிக்குச் செல்வார். நன்றாக ஓவியம் வரைவதால் எப்பொழுது நேரம் இருக்கிறதோ அதைக் கற்றுத்தர யோசனை அளித்தேன். பிள்ளைகளின் நண்பர்களுடன் இது ஆரம்பமானது. அவருடைய மனைவி ஷீலாவின் பிறந்த நாளிற்கு ஒரு அழகான ஓவியம் தீட்டினார். அதை ஒரு விடுதிக்குத் தருவதாக முடிவானது.

நான் தொண்டுசெய்யும் ஒரு விடுதியை இதற்குத் தேர்ந்தெடுத்தோம். அதை விடுதியில் வந்து கொடுத்தார். விடுதி குழந்தைகள் அவரை வரவேற்றுப் பின்பு நன்றி கூறினார்கள். இவர்களுடன் ஏன்  எட்வின் தன் குழந்தையை விடக்கூடாது என்று எனக்குத் தோன்றியது.

கரஸ்பான்டன்ட் மேடம் வந்தவுடன், அறிமுகம் செய்தேன்.  எட்வின்  ஓவியம் தீட்டிய காரணம் கேட்டதும், அவர்  கண்கலங்கி விட்டார்.  ஜீவன், ரூபா இருவரையும் அணைத்துக் கொண்டார். அவர் பல பிள்ளைகளுடன் பேசி விளையாடுவதை எட்வின் கவனித்தார். விளையாடினாலும் பாசம் கலந்த கண்டிப்பு இருந்தது.

எட்வினின் அடுத்த சில ஸெஷனில் இதை மையமாக வைத்துப் பேசினோம். எட்வினுக்கு பிள்ளைகளின் அன்றாட பராமரிப்புபற்றிய சிந்தனை, ரூபா பெண் குழந்தை என்பதையும் யோசித்தார். விடுதியில் இருவரும் ஒருவருக்கொருவர் உதவி, பாசமாக இருப்பார்கள் என்பதைப்பற்றியும் பேசினோம். உள்ளூரில் இருப்பதால் எட்வினால் பிள்ளைகளை  சந்திக்க முடியும் என்பது ஊக்கவைத்தது.

தன் பெற்றோருடன் கலந்து, யோசித்தபின் அவர் அப்பா என்னைச் சந்தித்தார். அவர் விடுதியைப் பார்க்க ஆசைப்படுவதாகச் சொன்னார். தன் ஊரில் இருக்கும் விடுதியைப்பற்றி விவரித்தார். சிறு வயதிலிருந்தே தான் அங்கு தொண்டு செய்ததும் அதிலிருந்து தான் பாதிரியார் ஆக விரும்பியதையும் சொன்னார். அவர் மனைவி ஒரு நர்ஸாக இருப்பது தனக்குப் பெரிய உதவி என்பதையும் கூறினார். விடுதி பார்த்து சந்தோஷம் அடைந்தார் “எல்லாம் நன்றாக அமையும்” என சொல்லிக்கொண்டே இருந்தார்.

பக்கத்துப் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளுக்கு இடம் கிடைத்தது.  தானும் ஷீலாவும் கண்ட கனவுகளை எழுதியதை, ஒவ்வொரு பிரதியை எட்வின் பள்ளியிலும், விடுதியிலும் கொடுத்தார். உடைகள், புத்தகம் வாங்கியானது.

ஜீவன், ரூபாவை  விடுதியில் தங்குவதற்கு மெதுவாகத் தயார் செய்யஆரம்பித்தேன். எட்வினும் தன் பங்களிப்புத் தந்துவந்தார். முதல் இரண்டு மாதத்திற்கு அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அக்கம்பக்கத்தினரிடம் அவ்வளவு பாசம் என்பதாலும். அப்பாவைப் பிரிவது எப்படி என்ற காரணத்தினாலும்.  முதல் கட்டமாக, அந்த வாரத்தில் நான் அங்கு தொண்டு செய்யப் போகும்போது ஜீவன், ரூபா இருவரையும் அழைத்துச்சென்றேன். கூடவே அவர்கள் பக்கத்து வீட்டிலிருந்து ஒருவரும் வந்தார். அன்றைக்கு ஒரு மணி நேரம் என்னுடன் நான் செய்வதில் உதவினார்கள்.  இது, இப்படி அப்படி என்று எதையும் நான் கூறவில்லை. அவர்களும் அந்த அம்மாவும் தானாகப் பார்த்துப் புரிந்துகொள்ள விட்டுவிட்டேன்.

ஐந்து நாளைக்குப் பிறகு இருவரும் எட்வினுடன் வந்தார்கள். விடுதிபற்றிப் பல கேள்விகளை ஜீவனும், ரூபாவும் கேட்டார்கள். திரும்பப் பார்க்க விருப்பப்பட்டார்கள். இந்த முறை அவர்களை, எட்வினுடன் போய் பார்க்கப் பரிந்துரைத்தேன். நான் இருந்தேன், ஆனால் என் வேலையைச் செய்தேன். அதே ஒரு மணி நேரம்.

கரஸ்பான்டன்ட் மேடமிடம் சொல்லி இருந்ததால் ஒப்புக்கொண்டார். இந்த முறை தாங்கள் தங்கும் இடத்தைப் பார்வை இட்டார்கள். ரூபாவிற்குத் தலை பின்னுவதற்கு யார் உதவுவார்கள் என்று கேட்டதற்கு, அவளுடைய சீனியர் அக்காவின் பொறுப்பாகும் என்று விளக்கினார்கள்.

ரூபா, ஜீவன் மெதுவாக சுதாரித்துக்கொண்டார்கள். நடுப்பரீட்சை முடிந்ததும் சேர்ந்தார்கள். வார இறுதியில் எட்வின் பார்க்க வரலாம் என்று சொன்னார்கள். இவர்கள் இருவருமே கல்யாணி அக்கா அரவணைப்பில் இருப்பதாகத் தெரிவித்தவுடன் எட்வின் தானும் ஷீலாவும் இவர்களைப்பற்றிக் கண்ட கனவை அவளிடம் சொன்னார். கரஸ்பான்டன்ட் மேடம் இவர் தந்த பிரதியைப்பற்றிச் சந்தோஷமாகக் கூறினார். எட்வினுக்குத் தெம்பு கூடியது.

வாழ்க்கையில் ஒரு பொறுப்பு, அர்த்தம் இருந்துவிட்டாலே நாம் வாழ்வதற்குத்தான் யோசிப்போம். அந்த வகையில் எட்வின் தன் பாதையைக் காண ஆரம்பித்தார். அப்படி என்றால் மன அழுத்தத்திற்கு இனி வேலை இருக்காது!

எட்வினுக்கு இருக்கும் நேரத்தைப்பற்றி யோசித்தோம். தான் பல்கலைக்கழகத்தில் படிக்கும்வரையில் கால் பந்து விளையாட்டில் கலந்துகொண்டதாகச் சொன்னார். இப்போதைய சூழ்நிலையில் அவர் குழந்தைகள் தங்கியிருக்கும் விடுதியில் உள்ள பிள்ளைகளுக்கு இதைப் பயிற்றுவிக்க யோசித்தோம். மற்றவர்கள் நமக்கு ஆதரவு தர, இது திருப்பித் தரும் ஒன்றாக அமையும். ஓரளவு சுயநலத்தின் சுவடு இருந்தது. அங்கு இருக்கும்போது, பிள்ளைகளைப் பார்க்கலாம்.

Image result for an orphanage in kerala with a football coach

இதில் இன்னும் ஒரு நல்லது உண்டு. எட்வினின் வாழ்க்கையில் இந்தத் தருணம் மிக முக்கியமானதாகும். விடுதியில் பிள்ளைகள் இருப்பதால் பொறுப்பு இல்லை, இனி மாய்ந்து விடலாம் என்று மனம் நினைக்கலாம். மறுமணம் இல்லை என்பதால் வாழ்விற்கு அர்த்தம் தேவைப்படுகிறது. அந்த நிலையில் இந்தக் கால் பந்து கற்றுத் தருவது உதவியது. ஏற்கனவே ஓவியம் சொல்லித் தருவதுடன் இதுவும் சேர்ந்தது.

எட்வினின் பேருந்து நிலையத்தில் அவரைப்பற்றிப் பல பயணிகள் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள். அதை அவர் தொழிற்சங்கத்திடமும் பகிர்ந்துகொண்டார்கள். பெரும்பாலும், இவை எட்வினின் பொறுப்புணர்ச்சியைக் குறித்தே இருந்தன. இவர் பயணிகளிடம் காட்டும் மரியாதை, எந்த இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக் கொள்வது, வயதானவர், பார்வை இல்லாதவர்களைப் பத்திரமாக ஏற்றிக்கொள்வது, என்பதெல்லாம் பயணிகளின் ஃபீட்பேக் மூலம் சங்கத்திற்குத் தெரியவர, அவர்களின் இளைஞர் அணியின் பொறுப்பாளராக அவரை நியமித்தார்கள்.

இந்த வாய்ப்பைத் தன் முன்னேற்றம் என்பதை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு அணியின் பல பணிகளைச் செய்யஆரம்பித்தார். தன்னுடைய  கௌன்சலிங் ஸெஷன்கள், ஓவியம் மற்றும் கால்பந்து கற்றுத் தருவது எதற்கும் பங்கம் வராமல், எல்லாம் செய்து வந்தார். மன அழுத்தம், தற்கொலை போன இடமே தெரியவில்லை!

 

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.