
பெண்ணெனும் தெய்வத்தின் இலக்கணமே யவள்தானோ
இலக்கணமே பெண்மையினை யவளிடத்துக் கற்றதுவோ
காண்போரை மருட்டுகின்ற கண்ணுடையாள் செந்நுதலாள்
கற்பனைக்கு மெட்டாத பேரழகுக் கன்னியவள்
வெண்ணிலவோ நங்கைமுகம் கொடியன்ன துடியிடையாள்
பெண்மையி னெழிலோங்க வாழ்த்துக்கள் கூறிடவே
கண்ணனவன் ஒன்னலரை வென்றிட்ட இந்நாளில்
தீபாவளித் திருநாளில் தீபமேந்தி வருகின்றாள்!

அறக்கொடி யுயர்ந்திடவே மறக்கொடி வீழ்ந்திடவே
நல்லவரும் வாழ்ந்திடவே தீயவரும் மாய்ந்திடவே
இறைவனாம் கண்ணனவன் கடைக்கண்ணும் நோக்கிடவே
அன்னநடை மங்கையவள் தீபமேந்தி வருகின்றாள்!
முறையற்ற வழுக்காறு அவாவெகுளி யின்னாச்சொல்
வெடிக்கின்ற வெடியேபோல் வெடித்துச் சிதறட்டும்
இறையருள் பெருகட்டும் இசைப்பண் பாடட்டும்
இல்லமது பேரின்ப வெள்ளத்தில் மூழ்கட்டும்!