எனக்கு பிடித்த கவிதைகள் – வைதீஸ்வரன்


இங்கே தரப்படும் மொழிபெயர்ப்புக் கவிதைகள் தெலுங்கு மொழியிலிருந்து பெறப்பட்டவை. எழுதிய கவிஞர் கோபியை நான் பிரபலமாக அறிந்தவனில்லை. அவர் கவிதைகள் அருமையாக உள்ளன. பகிர்ந்து கொள்ள மிகவும் விரும்புகிறேன்.
துன்பங்களின் போது
தாயாரின் முந்தானைக்குள் பதுங்கியது போல்
நான் கவிதைகளுக்குள் புதைந்து கொள்கிறேன்
**
வியர்வை எறும்புகள்
எத்தனை தட்டினாலும் விலகுவதில்லை
**
அவள் மரணம் நொடியில் நிகழ்ந்தது
எங்கள்மரணம்
நொடிக்கு நொடி நிகழ்கிறது.
**
காலண்டர்களை தின்று கொழுத்த
காலத்துக்கு
இயக்கம் மட்டும் உண்டு
இலக்குகள் இல்லை
**
கண்களிலிருந்து
உதிர்வதால் அவை
கண்ணீர் போலாகுமா?
**
அதோ
அந்தப்பையன்
மீண்டும் நம் குழந்தைப் பருவத்துக்குள்
பந்தெறிகிறான்!!
டாக்டர் என் கோபிபற்றி மேலும் பல தகவல்கள் ( இணைய தளத்திலிருந்து)
தெலுங்கு கவிதைத் தளத்தின் அதி நவீன கவிதை வடிவம் “நானிலு”. “தெலுங்கு பல்கலைக்கழகத்தின்” முன்னாள் துணை வேந்தரும் மத்திய சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான முனைவர். என். கோபி அவர்களால முதன் முதலாய் வடிவமைக்கப்பட்ட “நானிலு” வெகு எளிதாய் புரிந்துகொள்ளப்படும் தன்மையிலேயே தெலுங்கு இலக்கிய உலகின் இன்னொரு பரிமாணமாய் தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த நாலடிக் கவிதைகள் இலக்கிய இலக்கண வரையறைகளுக்கப்பாற்பட்டவை.
ஹைகூக் கவிதைகள்போல இறக்குமதி செய்யப்பட்டதல்ல இது.
நானிலு கவிதைகளின் சில அடையாளங்கள்… நான்கு வரிகள். சுமார் பத்து முதல் இருபது வார்த்தைகள். முதல் இரு வரிகளில் ஒரு செய்தி….தகவல் அல்லது குறீயிடாக அமைத்து அடுத்த இருவரிகள் அதைச் சார்ந்தோ எதிர்த்தோ தொடர்புபடுத்தியோ அமைவது இதன் பிரதான அடையாளம். மரபு, புது, ஹைகூ என எல்லாவகைக் கவிதை வடிவங்களுமே மேற்சொன்ன அடையாளம் கொண்டதாகவே அமைகிறதென்றாலும் “நானிலு” கவிதைகளில் பொருள் சார்பு சற்று அழுத்தமாய் விழுகிறது. அணுகுமுறை அதாவது வெளிப்பாடு அதி எளிமையாயினும் பொருட்செறிவு வீரியமானது.
தெலுங்கு கவிதைக்களத்தில் ஒரு நவீன கவிதை முயற்சியை துணிவுடன் மேற்கொண்டு ஒரு “ட்ரெண்ட் செட்டர்” ஆன திரு. கோபி அவர்களின் முதல் சீடர் திரு. எஸ்.ஆர்.பல்லம். கவிஞர் பல்லத்தின் தொகுப்பிலிருந்து தன் குருவுக்குக் காணிக்கையாய் படைத்த நானிலுக்களில் சில
விளக்குடன்
ஒப்பிடத்தேவையில்லை
மண்ணெண்ணெய்க்கு
தாரைவார்க்காமாலிருந்தால் போதும்
சொல்வது
புரியாததற்கு
மொழி மட்டுமல்ல
மனமும் காரணம்தான்
யாத்திரை என்றால்
பயணமல்ல
உன்னுள்ளேயே
நீ செல்லும் பிரவாகம்
அரிசிமணி மீது
சித்திரம் அழகுதான்
அது சோற்றுப்பருக்கையாகும்போது
இன்னும் அழகு
நன்றி: திசைஎட்டும் அக்-டிசம்பர் 2005 இதழ்
இதைப்போன்று தமிழில் அந்தக்காலத்தில் அம்மானை என்று ஒரு வகை பிரபலம். அதைப்பற்றி அடுத்த பக்கத்தில் பார்க்கலாம்.