நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.
- கொழுக்கட்டை மஹாத்மியம் மார்ச் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- இட்லி மகிமை ஏப்ரல் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- தோசை ஒரு தொடர்கதை மே மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- அடைந்திடு சீசேம் ஜூன் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- ரசமாயம் ஜூலை மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- போளி புராணம் ஆகஸ்ட் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- அன்னை கைமணக் குறள்கள் செப்டம்பர் மாதம் 2௦18 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- கலந்த சாதக் கவிதை அக்டோபர் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- கூட்டுக்களி கொண்டாட்டம் நவம்பர் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
10.சேவை செய்வோம் !
பக்தி செய்தல் இறைக்கு சேவை ;
அன்பு செய்தல் மனிதர்க்கு சேவை ;
நாளையை நினைத்தால் இயற்கைக்கு சேவை ;
நற்செயல் அனைத்தும் நமக்கே சேவை ;
இறங்கி வருவோம் இல்லறத்திற்கே –
இதைவிட சுவையாய் உணவொன்றுண்டோ ?
எதைச் சொல்கிறேன் என்றறியீரோ ?
நமக்கெல்லாம் பிடித்த நல்லதொரு சேவை !
பார்வைக்கு எளிமை ; பகட்டுகள் இல்லை –
உதட்டிலே ஒட்டா நூல் போல் சேவை !
எவர்க்கும் இனியனாய் இருக்கும் நண்பன் –
பல உருக்கொள்ளும் இனியதொரு சேவை !
தேங்காய் சேவை திகட்டாதிருக்கும் !
தின்னத் தின்ன தொடர்கதையாகும் !
எலுமிச்சை சேவை சுறுசுறுப்பாக்கும் !
உப்பும் காரமும் சுரணையைத் தூண்டும் !
தேனாய்த் தித்திக்கும் சர்க்கரைச் சேவை !
மாற்றாய் வாய்க்கு மிளகுச் சேவை !
எவ்விதச் சுவையும் ஏற்றுக்கொள்ளும் –
எங்கள் வீட்டுச் செல்லச் சேவை !
திருநெல்வேலித் தமிழரா நீங்கள் ?
வெறும் சேவை உங்கள் தேவைக்குண்டு.
காரசாரமாய் மோர்க்குழம்புண்டு !
குழைத்து அடித்தால் சொர்க்கமுண்டு !
சேவை செய்வோம் அனைவரும் வாரீர் !
செய்த சேவையை சுவைத்தே வாழ்வோம் !
புதிய உணவுகள் ஆயிரம் உண்டு –
பழைய சேவைக்கு இணைதான் ஏது ?