விஸ்வகர்மா அவர்களே!
என் மனைவியர் எனக்குக் கொடுத்த சாபத்தைப்பற்றிச் சொல்வதற்கு முன்னால் இந்தப் புவி உலகில் உயிரினம் தோன்ற எப்படி கிரகங்களாகிய நாங்கள் உதவுகிறோம் என்பதை உங்களுக்குக் கோடிட்டுக் காட்டவேண்டும். இதன் தத்துவார்த்தம் நீங்கள் அறியாததல்ல, இருந்தாலும் முதலில் பொதுப்பயனைக் கூறிவிட்டுப் பிறகு சிறப்புப் பயனைக் கூறுவதுதானே முறை ?
பூலோகத்தில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் கிரகங்களாகிய எங்களுடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பது சிறு குழந்தைகளுக்கும் தெரியும். ஆனால் பிறப்புக்கு முன்னும், இறப்புக்குப் பின்னும் மனித ஜாதிகளுக்கு நாங்கள்தான் காரணகர்த்தாவாக இருந்து வருகிறோம் என்பது சிலருக்குமட்டுமே தெரியும்.
இந்த பூமிக்கு மட்டுமல்ல, அனைத்து உலகிற்கும் நாங்களே அதிபதிகள். நவகிரகங்களான நாங்கள்தான் உண்மையில் அனைத்து உயிர்களையும் நிர்ணயிக்கிறோம்.
விஸ்வகர்மா அவர்களே!
நீங்களே சொல்லுங்கள்! உலகில் ஒவ்வொரு உயிரும் ஜனிக்க யார் காரணம்? பிரும்மர் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். அது ஒரளவுக்கு உண்மை. பிரும்மர்தான் பிறக்கும் எல்லா உயிர்களுக்கும் பொறுப்பு என்பதில் சந்தேகமில்லை. அதாவது அவர் படைக்கிறார், அதன்மூலம் ஒரு உயிருக்குப் பிறக்கும் உரிமையைத் தருகிறார். அதாவது உயிரைத் தருகிறார். அந்த உயிர் எப்படி எங்கு யார்யாரிடம் எப்போது பிறக்கவேண்டும் என்று தீர்மானிப்பது அவரல்ல, கிரகங்களான நாங்கள்தான்.
அவற்றுள்ளும், நானும் கேதுவும் மிகமிக முக்கியப் பங்கு வகிக்கிறோம் என்று சொன்னால் அது மிகை இல்லை. கேதுவிற்கும் எனக்கும் ஓருயிர் ஈருடல். அவன்வேறு நான்வேறு இல்லை. காலத்தின் கோலத்தால் நாங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுப் பாம்பால் இணைக்கப்பட்டுள்ளோம். எனக்கோ மனிதத்தலை பாம்பின் உடல். கேதுவிற்கோ பாம்புத்தலை மனித உடல். நான் வடக்கே என்றால் அவன் தெற்கே இருப்பான். நான் முடிந்தால் அவன் தொடங்குவான். அதனாலேயே நாங்கள் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறோம். நாங்கள்தான் உயிர்கள் உலகில் தோன்றுவதற்குக் காராணமாயிருக்கிறோம்.
அதெப்படி, மற்ற முழு கிரகங்களைவிடச் சாயா கிரகமான எனக்கு அவ்வளவு முக்கியம் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? விளக்கமாகவே சொல்கிறேன் கேளுங்கள்.
முதலில் சூரியனை எடுத்துக் கொள்ளுங்கள்! உங்கள் மருகன், என்னுடைய முதல் எதிரி. அவர் உயிரினங்களுக்கு ஆன்மா என்னும் உயிர்ப்புள்ளி. பிறப்பிற்கு அது போதுமா? நிச்சயம் போதாது.
அடுத்தது சந்திரன், எனது இரண்டாம் எதிரி, அவன் மனம் மற்றும் உடல் சார்ந்தவன்.
அடுத்தது செவ்வாய், அவன் மனித உடலில் ஓடும் ரத்தம்.
புதன், உயிர்களின் அறிவுமற்றும் தோல்.
வியாழன், மனிதர்களின் மூளை.
சும்மா சொல்லக்கூடாது, புத்திர பாக்கியத்துக்குச் சுக்கிரனின் பங்கு மற்ற கிரகங்களைவிடச் சற்று அதிகமாயிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆணின் சுக்கிலமும் பெண்ணின் சுரோணிதமும் உண்டாவதற்குக் காரணமானவர் சுக்கிரன்.
சனி கிரகத்திற்குப் புதிய அதிபதி வரவேண்டும் . இருந்தாலும் அந்த கிரகத்தின் பலன் முன் ஜென்ம வினைகளின் அடிப்படையில் மனிதர்களை இயக்குவதுதான்.
ஆக இந்த கிரகங்களும், சூரியனும், பிரும்மரும் தர இயலாத இரண்டு அம்சங்கள் – பிறப்பிற்கு மிக முக்கியமானதை நானும் கேதுவும் தருகிறோம்.
பிறவி உருவாகக் காதல்மட்டும் போதாது. காமமும் வேண்டும், அந்தக் காமத்தின் அடிப்படை ஆண் மற்றும் பெண் இருவரது ஜனன உறுப்புகள்.
இந்த உறுப்புகளில் பெண்ணின் ஜனன உறுப்பு ராகுவாகிய நான். ஆணின் ஜனன உறுப்பு கேது.
இந்த இரண்டும் இணையும்போது, உயிர் என்கிற பிறப்பு எடுக்கிறது.
இந்த இணைவுக்குப் பின்தான் மற்ற கிரகங்களின் மூலம் உடல் வடிவம் உண்டாகிறது.
இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்… பிறப்பு என்பது யாரால் ஏற்படுகிறது என்று!
இந்த உலகின் அத்தனை ஆசைக்கும், இன்பத்திற்கும் , இச்சைக்கும் அதிபதி நானும் கேதுவும்.
இதனால் உண்டாகும் துன்பம், துயரம், விரக்தி என அனைத்தும் என்னால் உருவாகின்றன.
இப்படிப்பட்ட காதலுக்கும் அதனுடன் இழைந்த காமத்திற்கும் முக்கியக் காரணி நான். என் தீட்சண்யப் பார்வைபட்டால் சாதாரனண மனிதன் காமுகனாகி விடுவான். முனிவருக்கும் காதல் அரும்பும். அப்படிப்பட்ட என் பார்வை சில காமுகர்மீது பட்டால் அவர்கள் வெறியர்கள் ஆகிவிடுகிறார்கள். சூரியனுக்கும் ஸந்த்யாவிற்கும் ஆழமான காதல் வந்தது என் பார்வைபட்ட பலந்தான் என்பது எனக்கு மட்டும் தெரியும்.
இப்படி என் பார்வைக்குக் காமம் வந்ததற்கு என் மனைவிகள் நாகவல்லியும் நாக கன்னியும் சேர்ந்து கொடுத்த சாபம்தான் காரணம்.
நான் கிரகபதவியை வேண்டி, சிவபிரானுக்காகத் தவம் செய்துகொண்டிருக்கும்போது அவ்வழியே நாகலோக இளவரசிகளான நாகவல்லியும் நாககன்னியும் வந்தார்கள். மனித முகமும் பாம்பு உடலும் கொண்ட என்மீது ஏனோஅந்த நாகலோகப் பெண்களுக்கு அளவில்லாத ஆசைவந்தது. நானோ அவர்களை என் தவத்தைக் குலைக்க வந்தவர்கள் என்றே எண்ணினேன். அதனால் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. என் பார்வை அவர்கள்மீது பட்டாலும் எனக்கு என்னவோ காதல் என்ற உணர்வு வரவேயில்லை.
அதனால் கோபம்கொண்ட அவர்கள் ‘என் பார்வை நேராக யார்மீது பட்டாலும் அவர்களுக்கு அதீத காதல் வரக்கடவது’ என்று சபித்தார்கள். அந்த சாபம் பலிக்கிறதா என்று பார்க்க என் முகத்தின் அருகேவந்து என் இரு கன்னத்திலும் அந்த இரு இளவரசிகள் முத்தமிட்டுக்கொண்டே தங்கள் அழகான கண்களினால் என் கண்ணைப் பார்த்துக்கொண்டேயிருந்தார்கள். அவர்களின் நான்கு விழிகளிலும் என் கண்ணின் பிம்பம் எனக்குத் தெரிந்தது. என் கண்களை நானே நான்கு கோணத்தில் பார்த்ததும் எனக்கு அவர்கள்மீது அளவில்லாத காதல் வந்தது. என் காமம் நான்கு மடங்கு அளவிற்கு வெறியாக மாறியது. அவர்கள் இருவரும் என் பிடியில் தவித்தார்கள். என்னிடமிருந்து தப்பிக்கப் பாம்பு வடிவம் எடுத்து ஓடஆரம்பித்தார்கள். நான் வெறியில் நிலைகுலைந்து இருந்தேன். நானும் பாம்பு வடிவம் எடுத்து அவர்கள் இருவ்ரையும் என்னுடைய உடலால் முறுக்கி இன்பம் அனுபவித்தேன். நானே நான்கு உருவில் நின்று என்னையே பார்ப்பதாக ஒரு பிரமை. இன்பம் அனுபவிப்பதில் தீவிரமாக இருந்ததில் அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட இறக்கும் அளவிற்கு வந்துவிட்டார்கள் என்பது முதலில் புரியவில்லை. உயிர் வேதனையில் நாகவல்லி தன் வாலைச் சுழற்றி அடிக்க அருகில் பூஜைக்காகக் கலயத்தில் வைத்திருந்த பால் அப்படியே என் முகத்தில் கொட்டியது. பால் அப்படியே நீல நிறமாக மாறி என் கண்னை மறைத்தது. என் பிரமையும் மறைந்தது. வெறியும், காமமும் கலைந்தது. காதல் மட்டும் மாறாமல் அப்படியே இருந்தது. என் நடத்தைக்காக வெட்கப்பட்டு அவர்களின் மன்னிப்பைக் கோரினேன். அவர்களும் தங்களுடைய சாபத்தினால் விளைந்ததுதான் இந்த விபரீதம் என்று கூறி என் மன்னிப்பை வேண்டினர். தங்களை மணம் புரிந்துகொள்ளும்படியும் வேண்டினர். அது மட்டுமல்லாமல் எனக்கு எந்த ஆபத்து வந்தாலும் உதவிபுரிய வருவதாகவும் சொன்னார்கள்.
இங்கு உங்கள் அறையில் தங்கள் துனைவியரால் எனக்கு வந்த ஆபத்து அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. என் உதவிக்கு அவர்கள் வருகிறார்கள் பாருங்கள்” என்று ராகு சொன்னதும் விஷ்வகர்மா திடுக்கிட்டார்.
கதை சொல்லி நேரத்தைக் கடத்தி ராகு ஏதோ செய்யப்போகிறான் என்று அவர் உணர்வதற்கு முன்னாலேயே விபரீதங்களின் அறிகுறி தோன்றியது.
ஆயிரக்கணக்கான பாம்புகள் அந்த அறைக்குள் வந்துகொண்டிருந்தன.
(தொடரும்)
இரண்டாம் பகுதி
நந்தி ஒரு ரதத்தை இழுத்துக்கொண்டு வந்தது. பார்வதி, லக்ஷ்மி, சரஸ்வதி மூவரும் அதில் ஏறிக்கொள்ள நந்தி அவர்களை அழைத்துக்கொண்டு எமனின் இல்லம் நோக்கிப் புறப்பட்டது. நாரதன் கண்டிப்பாக அவர்களுடன் வரவேண்டும் என்று அம்மா சரஸ்வதி திட்டவட்டமாகக் கூறிவிட்டாள். நாரதரால் மறுக்கமுடியவில்லை.
“சரி சரி, நான் கண்டிப்பாக வருகிறேன். நீங்கள் வண்டியில் செல்லுங்கள். நான் குறுக்காக வானவில்லில் நடந்து சீக்கிரம் வந்து சேர்ந்துகொள்கிறேன்” என்றார்.
” என்ன பிள்ளையோ?” என்று சரஸ்வதி தலையில் அடித்துக்கொண்டாள்.
” நாரதனுக்கு என்ன குறைச்சல்? இந்தச் சின்ன வயசில தேவரிஷின்னு பட்டமெல்லாம் வாங்கியிருக்கான். அப்படியே தம்பூராவை வைச்சுப் பாடினான்னா கேட்டுக்கிட்டே இருக்கலாம்” என்று லக்ஷ்மி வக்காலத்து வாங்கினாள்.
” என்ன பிரயோஜனம்? கல்யாணம் ஆகிக் குடியும் குடித்தனமுமா இருன்னா கேட்கவே மாட்டேங்கிறான். எப்பவும் பிரம்மச்சாரியாதான் இருக்கப்போறேன்னு சவால் விட்டுக்கிட்டுத் திரியறான். போறாக்குறைக்கு ‘வருத்தப்படாத பிரம்மச்சாரிகள் சங்கம்’ அப்படின்னு ஆரம்பிச்சிருக்கானாம்.” சரஸ்வதி அங்கலாய்த்தாள்.
” அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டபோது விளையாட்டா நீங்க எல்லாரும் சேர்ந்து அவன் மூஞ்சியைக் குரங்குமாதிரி மாத்திட்டீங்க ! அதைவிடக் கொடுமை எங்கண்ணா விஷ்ணு ஒருதடவை மாயையைக் காட்டுகிறேன்னு அவனை பொம்பளையா வேற மாத்தினார். அந்த மாயையிலே அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டுக் குழந்தை வேறு பெத்துக்கிட்டானாம். பின்னாடி எல்லாம் மாயைன்னு விஷ்ணு சிரிச்சுக்கிட்டே சொன்னார். அன்னிக்கே முடிவு செஞ்சுட்டானாம், இனிமே தீவிர பிரம்மச்சாரியா இருக்கறதுன்னு” பார்வதியும் அவன் சார்பில் உச்சுக்கொட்டினாள்.
” நீங்க வேற! நான் என்ன சொன்னாலும் கேட்கமாட்டேங்கிறான், எப்பப் பார்த்தாலும் ஊர் சுத்திக்கிட்டே இருக்கான். கேட்டா திரிலோக சஞ்சாரி நான் என்கிறான். சின்ன வயசில ஆரம்பிச்ச விஷமம் இன்னும் குறையவேயில்லை. கேட்டா என் விஷமம் கடைசியில நல்லதாய்தான் முடியும் என்கிறான். “
” பேசாம வலுக்கட்டாயமா அவனுக்கு ஒரு கால்கட்டைப் போட்டுடு. அப்பத்தான் ஒருவழிக்கு வருவான்.”
” நானும் அதைத்தான் தீவிரமா யோசிச்சுக்கிட்டிருக்கேன். நம்ம பிரும்மலோகத்தில ஒரு பொண்ணும் அவனுக்குச் சரியில்ல. யாரைப் பார்த்தாலும், ‘நாரதரா, அவர் எங்க அண்ணாமாதிரி’ என்று நழுவிவிடுகிறார்கள். கைலாசத்தில எல்லாம் பூதகணங்களா இருக்கு. எப்படிப் பெண் எடுக்கிறது? வைகுந்தத்தில விஷ்ணுவைத்தவிர வேறு யாரையும் பார்க்கவே மாட்டேன் என்கிறான். அவர் மோகினிமாதிரி ஏதாவது அவதாரம் எடுத்தா நல்லது.”
“ஏண்டியம்மா என் மடியில கையை வைக்கிறே? நான் ஏற்கனவே அந்த ஆண்டாளை நினைச்சுக் கவலைப்பட்டுக்கிட்டிருக்கேன்.”
” நாரதனை விடு! அந்த ஆண்டாள் அடிக்கடி வைகுந்தம் வந்துபோறாளாமே? அது உண்மையா?” சரஸ்வதியின் குரலில் சீரியல் பார்க்கும் ஆர்வம் தெரிந்தது.
” அந்தக் கூத்தை ஏன் கேட்கிறே! திவ்வியப் பிரபந்தம் படிக்கிறோம் என்கிற சாக்கில் அடிக்கடி வந்துபோறா! இவரும் தினமும் திருப்பாவையைத் தலைக்குமேலே வைச்சு ஆடிக்கிட்டிருக்கார்.”
” லக்ஷ்மி! தலைக்கு மேலேயா? அப்படின்னா கங்கைமாதிரின்னு சொல்லு.” சரஸ்வதிக்கு வாக்கு சாதுர்யம் ஜாஸ்தி.
” ஏண்டியம்மா சரஸ்வதி, என்னைக் குத்திக்காட்டுறே?” – பார்வதி படபடத்தாள்.
” அட, சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா கோவிச்சுக்கிறியே? இதெல்லாம் நமக்கு நல்லாத் தெரிஞ்ச சமாசாரம்தானே? என்ன இருந்தாலும் இன்னிக்குத் தேதிக்குக் கங்கையைப்பத்தியும், ஆண்டாளைப்பத்தியும் பேசாமலிருக்கிறதுதான் புத்திசாலித்தனம்.” – சரஸ்வதி சமாளித்தாள்.
அதற்குள் அவர்கள் வந்த வண்டி எமன் இல்லத்தின் வாசலில் நின்றது.
நாரதரும் அதேசமயத்தில் அங்கு வந்துசேர்ந்தார்.
கதவைத் திறந்துகொண்டு அகில உலக அழகிகளையும் தோற்கடிக்கும் வடிவில் எமி வந்தாள்.
நாரதர் எமியின் அழகைப் பார்த்துத் திகைத்து அப்படியே நின்றார்.
முப்பெரும் தேவியர்களின் இதழ்களிலும் புன்னகை அரும்பியது.
(தொடரும்)
”
”