அனுபவம் !
விருட்சம் அழகியசிங்கர், ‘மனதுக்குப் பிடித்த கவிதைகள்’ – தொகுதி 1 ஐ பாரதி பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தார்! அதில் தனக்குப் பிடித்த கவிதைகளில் ஒரு நூற்றினைத் தொகுத்திருந்தார். நூறு கவிஞர்களின் கவிதைகளை ஒரு சேரப் படிக்கும்போது வித்தியாசமாக இருந்தது. எனக்குக் கவிதை எழுத வருமோ வராதோ, தெரியாது, ஆனால் ரசிப்பேன்! நூறாம் பக்கத்தில் உள்ள ஒரு கவிதை ‘அனுபவம்’ பற்றியது – ‘நீ மணி; நான் ஒலி!’ – படித்தபோது மனதில் தோன்றியவைகளை எழுதலாம் என்று தோன்றுகிறது! (கவிதையும் கவிஞரும் வியாசத்தின் கடைசியில்!).
அனுபவம் என்பது ‘பட்டறிவு’ – வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள், இடங்கள், நிகழ்வுகள், உணர்வுகள் இவை புதிதாய்த் தோற்றுவிக்கும் ‘அக அறிவு’ அல்லது ‘முன்னமேயே உணர்ந்திருத்தல்’ என்பதாய்க் கொள்ளலாம். இந்த வார்த்தையின் மூல வேர் சமஸ்கிருதத்திலிருந்து வருகிறது. “பவ” என்றால் ‘நிகழ்வது’, ‘ஆவது’ என இருபொருள் – நிகழ்வதை அறிவதும் ஆவதை உணர்வதுமே ‘அனுபவம்’ என்கிறது விக்கிபீடியா!
புரியும்படியாகச் சொல்லவேண்டுமானால், எக்ஸ்பீரியென்ஸ் (EXPERIENCE) தான் அனுபவம்!
ஐம்புலன்களுக்கும் அனுபவம் பெறும் அல்லது தரும் திறமை உண்டு – கேட்பது, பார்ப்பது, சுவைப்பது, உணர்வது என அனுபவம் நம்மை ஆக்ரமிக்கவல்லது.
படிப்பறிவைவிட, பட்டறிவு எப்போதுமே உயர்ந்ததாகப் படுகிறது. தனது அனுபவத்தினால் ஒன்றைச் செய்து முடிப்பவர், புதிதாய்ப் படித்து வரும் இளைஞரை விடச் சிறிது நன்றாகவும், நேர்த்தியாகவும் அந்த வேலையைச் செய்யக்கூடும். இதற்கு அவரது வயது மற்றும் அனுபவத்தினால் கிடைத்த திறமை காரணமாக இருக்கும். ஆனாலும், இன்றைய இளைஞர்களில் சிலர் இதற்கு விதிவிலக்காக இருக்கக்கூடும். ‘அனுபவம்’ ஒரு மனிதனை எப்படிப் புடம் போட்டு, முழுமையாக்குகிறது என்பதற்காக இதைச் சொன்னேன். (‘பெரிசுங்க எல்லாம் எப்பொவும் இப்படித்தான் பேசும்’ என்ற இளசுகளின் முணுமுணுப்பு காதில் விழுகிறது!)
குலம், தவம், கல்வி, குடிமை, மூப்பு எல்லாம் இருந்தாலும், உலகம் அறியாமை – அனுபவ ஞானம் இல்லாமை – என்பது நெய்யில்லாத வெண்சோற்றைப் போன்றதாகும் என்கிறது ‘பேதமை’ அதிகாரத்தின் பாடல் ஒன்று (நாலடியார் – 333 ஆம் பாடல்)!
அனுபவம் நம்மையறியாமலே நம்முடன் சேர்ந்துவிடுகிறது – நல்ல அனுபவங்கள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. கெட்ட அல்லது தீய அனுபவங்கள் மனதுக்கு வருத்தத்தை அளிக்கின்றன. எந்த அனுபவமானாலும், அது ஏதோ ஒன்றை மனிதனுக்குக் கற்றுக்கொடுக்கத் தவறுவதில்லை! கற்றுக்கொள்ள மறுப்பவன் முன்னேற்றம் காண்பதில்லை! கற்றுக்கொண்டு அனுபவசாலியானவன் ஞானத்தை அடைகின்றான்!
நம் அனுபவம் மட்டும் அல்ல – நம்மைச் சுற்றியுள்ள அனைவரின் அனுபவங்களும் நம்மை செம்மைப்படுத்துகின்றன. பிறருக்கு ஒரு நன்மையோ அல்லது தீமையோ நிகழும்போது, அந்த அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். நெருப்பு சுடும் என்பதை நாம் சுட்டுக்கொண்டுதான் அறிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை – பிறர் அனுபவத்திலிருந்தும் அறிந்துகொள்ளலாம். வாழ்க்கையில் அனுபவங்களைவிட வேறு சிறந்த ஆசான் இல்லை!
கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் முழுவதும் அனுபவங்களின் படிப்பினைகள்தான் – வாழ்வின் அனைத்து அனுபவங்களையும், இந்து மத சித்தாந்தங்களுடன் இணைத்து அவர் சொல்லியிருக்கும் கருத்துக்கள் என்றென்றும், எல்லோருக்கும் பொருந்தி வருபவை!
‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
‘கருடா செளக்கியமா?’
‘யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் செளக்கியமே’ கருடன் சொன்னது,
அதில் அர்த்தம் உள்ளது!
அவரது இந்தப் பாடல் அனுபவத்தின் வெளிப்பாடுதானே!
அனுபவங்கள் வாழ்க்கையைச் செப்பனிடுகின்றன – அனுபவங்களால் ஞானம் பெற்றவர்கள்தானே பட்டினத்தாரும், பத்ரகிரியாரும்?
எல்லாவற்றுக்கும் அனுபவம் தேவை என்கின்றன ‘வேலை வாய்ப்பு’ விளம்பரங்கள்!
அனுபவம் நிராகரிக்கப்படும் ஒரே விளம்பரம் “மணமக்கள்” தேவை என்னும் மேட்ரிமோனியல் விளம்பரம் மட்டுமே!
இப்போது அந்தக் கவிதையும் கவிஞரும்!
கவிதை:
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்;
……………….
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்;
‘அனுபவித் தேதான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!
-கவிஞர் – கண்ணதசன்.
அனுபவமே ஆசான். அனுபவமே கடவுள்! அனுபவமே நீயும். அனுபவமே நானும்!!
டாக்டர் ஜெ.பாஸ்கரன்.