தீபாவளிக்குப் பிறகு நாம் சிறப்பாகக் கொண்டாடுவது கார்த்திகை!
நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட…’, `கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்கைப் போன்றனவே….’ ஆகிய வரிகளின் மூலம் வீடுகளும் தெருக்களும் விளக்குகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ளன என்பதை சங்க இலக்கியங்களின்வழி அறியமுடிகிறது.
பன்னிரு தமிழ் மாதங்களுள் ஒன்று கார்த்திகை. இந்த மாதத்தில் பெளர்ணமி, கார்த்திகை நட்சத்திரத்துடன் வருகின்ற நாளைத்தான் நாம் கார்த்திகை தீபமாகக் கொண்டாடுகின்றோம்.
கார்த்திகை என்பதற்கு `அழல்’, `எரி’, `ஆரல்’ போன்றவற்றைப் பொருளாகக் கொள்ளலாம். கார்த்திகை தீபம் என்றவுடன், நம் அனைவரின் கண்முன்னே வலம்வரும் காட்சி, திருவண்ணாமலை தீபம் என்றால் அது மிகையில்லை.
இந்த கார்த்திகை விளக்கீடு எங்கெல்லாம் சொல்லப்பட்டிருக்கு நம் இலக்கியங்களில்?
கார் நாற்பது:
நலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட
தலை நாள் விளக்கின் தகை உடையவாகி,
புலம் எலாம் பூத்தன தோன்றி;-சிலமொழி!-
தூதொடு வந்த, மழை.
சீவக சிந்தாமணி:
தார்ப் பொலி தரும தத்தன்
தக்கவாறு உரப்பக் குன்றில்
கார்த்திக விளக்கு இட்டு அன்ன வியர்த்துப் பொங்கி
கடி கமழ் குவளப் பந்தா
நற்றிணை: பாடல் 58
“வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண் கோடு இயம்ப, நுண் பனி அரும்ப,
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்த
வீரை என்னும் ஊரிலிருந்துகொண்டு ஆண்ட வேளிர்குடி அரசன் வெளியன். அவன் மகள் தித்தன். அவன் முரசில் திரி போட்டு விளக்கேற்றி வைத்தான். மாலையில் அந்த விளக்கை ஏற்றியபோது வெண்சங்கு ஊதப்பட்டது. பனி பொழிந்தது. (இந்தக் காலத்தில் போருக்குச் சென்ற தன் தலைவன் மீள்வான் எனத் தலைவி நம்புகிறாள்.)
கார்த்திகைக்கு இன்னொரு பெயர் ஆரல்(ஆஅல்).
மலைபடுகடாம் – பாடல் 99-101
பெயலொடு வைகிய வியன்கண் இரும்புனத்து
அகலிரு விசும்பின் ஆஅல் போல
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை’
தமிழ் நூல்கள் குறிப்பிடுவது மட்டுமன்றி கல்வெட்டுகளும், கார்த்திகைப் பெருவிழா கொண்டாடியதை எடுத்துக்காட்டுகிறது. முதலாம் ராசேந்திர சோழனின் ஒன்பதாம் ஆட்சியாண்டில் (கி.பி.1021) வெட்டப்பட்ட கல்வெட்டில் கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் விளக்கெரித்ததற்கு பதினாறு நாழி நெய்க்காக பதினாறு ஆடுகளை திருப்பாற்றுத்துறை மக்கள் கோவிலுக்குத் தானமாகக் கொடுத்த செய்தியினைக் குறிப்பிடுகிறது.
தமிழ் மக்களின் பண்டைய விழாவான கார்த்திகை விழா, பிற்காலத்தில் புராணக் கதையோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. சமஸ்கிருத காவிய நாடகங்களில் கார்த்திகை பவுர்ணமி அன்று கவுமுதி மகோற்சவம் என்ற நிறைமதி விழா நடைபெற்றதை குறிப்பிடுகிறது. ஈராயிரம் ஆண்டுகளாக இப்பெருவிழா சிறப்புற நடைபெற்று வந்ததை இலக்கியங்களும், கல்வெட்டுகளும் துணைநின்று நமக்கு சான்று பகர்கின்றது.
கார்த்திகை என்பது கார் -அதாவது மேகம் திகையும் காலம்.
கார்காலம் (மழைக் காலம்) முடிந்து கூதிர்காலம் (குளிர் காலம்) ஆரம்பிப்பது. மழையும் நின்று, பனியும் துவங்கும் ஒரு மயக்கமான காலம்.
அந்நாளில் போர் நடக்கும்போது ஊரைவிட்டு, வீட்டைவிட்டுச் சென்ற வீரர்கள் கார் (மழைக்கு) முன்பே வீடு திரும்பிவிடுவர். மழைக் காலத்தில் போர் நடக்காது.
ஆனால் முக்கியப் பணி/களத்தலைவர் மட்டும் களம் நாட்டி இருந்து, கூதிர் காலம் வரும்போது திரும்பி வரல் மரபு!
பனி பெய்யும்முன் வரும், படைத் தலைவர்களை வரவேற்க விளக்கு ஏற்றி வைப்பது. சீக்கிரம் இருட்டிவிடும் காலமாதலால், ஒளி பழக தீபம் நிறைப்பதே விளக்கீடு!
ஆஅல் என்பது கார்த்திகை மாதத்தில் தோன்றும் கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டத்தைக் குறிக்கும். இந்த மீன் கூட்டத்தின் வெண்ணிறம் போல முசுண்டைப் பூ மலர்ந்ததாம்.
இவையெல்லாம் இயற்கை / பருவ கால மாற்றத்தைக் குறிக்கும் தீபங்களே. எதிலும் புராணக் கதைகள் இல்லை.
மெய்த் தமிழ் அறிவோம். கார்த்திகை விளக்கீடு வாழ்த்துக்கள் !
(நன்றி: மணி. மாறன், தமிழ்ப் பண்டிதர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.)