மயூரவர்மன்
வலை போட்டுத் தேடுகிறோம்.
நாயகனோ, நாயகியோ யாரும் தென்படவில்லை!
குறுநில மன்னர்கள் இந்தியாவை ஆயிரம் துண்டுகளாக்கி அரசாண்டு வந்தனர்!
சதவாஹனர், களப்பிரர்கள் என்று பலர் தென்னிந்திய ராஜ்யங்களை ஆண்ட காலம்.
இந்த இடத்தில் ‘இடைவேளை’ என்று சினிமாவில் வருவதுபோல் நாமும் போட்டிருக்கலாம்.
ஆனால் நாம் அப்படிப்போட்டுவிட்டு .. நமது கோடிக்கணக்கான வாசகர்கள் கொதித்தெழுந்து விட்டால்?
எதிர்த்து … உண்ணாவிரதமும் … வேலை நிறுத்தமும் எங்கெங்கும் நடந்தால்?
நகர்கள் பற்றியெரிந்தால்?.
தமிழகம் ஸ்தம்பித்துப் போனால்?
நமக்கெதற்கு வம்பு.
அவர்களுக்கு மரியாதைகொடுத்து நாம் தொடர்ந்து கதைப்போம்.
(சரி.. நமது கற்பனையை சரித்திரத்தோடு நிறுத்திக்கொள்வோம்) ???
நெல்மணி சிறியதுதான் – ஆனால் மணிகளைச் சேர்த்தால் அது ஒருவேளைக்கான உணவாகுகிறது.
அதுபோல் பல சிறுகதைகள் நெல்மணிபோல் சரித்திரத்தில் சிதறிக் கிடக்கின்றது.
அவற்றைச் சேகரிப்போம்.
விருந்து சமைப்போம்!
“மீல்ஸ் ரெடி”!
கி பி 350
சற்றே பின்னோக்கிச் செல்வோம்.
பல்லவர்களை முதற்காலப் பல்லவர், இடைக்காலப் பல்லவர், பிற்காலப் பல்லவர் என்று பிரிக்கலாம்.
மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் பிற்காலப் பல்லவர்கள் காலம்.
இந்த கதை முதற்காலப் பல்லவர் காலத்தில் துவங்குகிறது.
பப்புதேவன் என்பவன் பல்லவர் ஆட்சியைத் துவங்கினான்.
அவன் மகன் சிவஸ்கந்தவர்மன் மன்னனாகிக் காஞ்சியைத் தலைநகராக்கி, ‘தர்ம மகா ராசாதிராசன்’ என்று பட்டம் சூட்டிக்கொண்டான். அக்நிஷ்டோமம், வாஜபேயம், அஸ்வமேதம் என்னும் பெருவேள்விகள் செய்தான். அவன் மகன் இளவரசன் விஷ்ணுகோபன். தெற்கே களப்பிரர் … மேற்கே பல மன்னர்கள்… அவமுக்தாவின் நீலராஜன்…வேங்கியின் ஹஸ்திவர்மன். நாடுகளில் ஓரளவுக்கு அமைதி நிலவிவந்தது.
இன்றைய ஷிமோகா …அருகில் தளகுண்டா…
அங்கு மயூரசர்மா என்று ஒரு இளைஞன்!
ஏழ்மைக் குடும்பம்.
பிராமணக் குலம்.
இருபது வயது.
குழந்தைபோல் முகம்.
இரும்புக் கம்பிகளால் செய்ததுபோல் உடல்.
படித்த பாடங்களை உடனே கிரகித்துக்கொள்ளும் பெரும் அறிவு.
அவனது தாத்தா.. இந்தப் பேரனுக்கு நல்ல எதிர்காலம் உண்டென்று நம்பினார்.
காஞ்சி நகரப் புகழ் அன்று எங்கும் பரவியிருந்தது.
காஞ்சியின் பல்கலைக்கழகமும் பெரும் பிரசித்திபெற்றிருந்தது.
பாட்டனார் பேரனைக் காஞ்சிக்கு அழைத்துவந்தார்.
மயூரசர்மா வேதம், உபநிஷதம் பாடங்களைக் கற்க ஆரம்பித்தான்.
அதே பள்ளியில் மல்யுத்தம்-குத்துச்சண்டைப் பாடங்களும் பயிற்றுவிக்கப்பட்டது.
அதைக் காணும்பொழுதெல்லாம் மயூரனுக்குத் தானும் அதைக் கற்கவேண்டுமென்று பேராவல்.
இன்று இந்தியாவில் கிரிக்கெட் எப்படியோ அன்று காஞ்சியில் மல்யுத்தம்.
காஞ்சியின் மல்லர்கள் நாட்டின் புகழ்பெற்ற வீரர்கள்.
மல்லர்களது குருவிடம் அணுகித் தன் இச்சையைத் தெரிவித்தான்.
பிராமணனுக்கு மல்யுத்தம் கற்றுக்கொடுப்பதில்லை – என்றார் குரு!
மயூரன் ஆசையில் இடிவிழுந்தது.
அவன் ஏகலைவனானான்.
சக மாணவர்கள் மல்யுத்தம் மற்றும் போர்புரியும் முறைகளைக் கற்றுக்கொள்வதை – மறைந்திருந்து பார்த்தே பழகிக்கொண்டான்.
அறிவும் – பலமும் சேர்ந்ததால்…விரைவிலேயே மயூரன் சக்திகொண்ட மல்லனானான்.
காஞ்சியில் மல்லர் திருவிழா …ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடக்கும்.
கிரிக்கெட் வேர்ல்ட்கப் போல!!
அதில் மல்யுத்தப்போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.
மயூரன் பல மல்லர்களை வென்றான்.
காஞ்சி மக்கள் பெரும் ரசிகர்கள்.. இவனது அழகையும், வீரத்தையும் பாராட்டி ஆரவாரித்தனர்.
முடிவில்.. காஞ்சியின் தலைசிறந்த மல்லனுடன் ‘இறுதிச்சுற்று’ போட்டி!
மக்கள் அலைஅலையாகத் திரண்டிருந்தனர்!
இளவரசன் விஷ்ணுகோபன் அரங்கில் – அரியணையில் அமர்ந்து இருந்தான்.
மயூரன் வென்றான்…
மக்கள் கரகோஷம் வானைப் பிளந்தது.
விஷ்ணுகோபன் முகம் கறுத்தது.
‘எங்கிருந்தோ வந்த பரதேசி … எனது சிறந்த மல்லனை வெல்வதா’!
நான்கு சிறந்த குதிரை வீரர்களை அழைத்து, ‘மயூரனுக்கு ஒரு பாடம் சொல்லி வாருங்கள்’ என்றான்..
அவர்கள் புரிந்துகொண்டனர்…
(உங்களுக்குத் தெரியாதா என்ன அதன் பொருள்? எத்தனை சினிமாவில் நம்பியார் செய்திருப்பார்!)
ஆனால் மயூரன் எம் ஜி ஆர் போல்!
குதிரை வீரர்களிடமிருந்து தப்பினான்.
ஆனால் குதிரை வீரர்கள் உதிர்த்த அவமானச்சொற்கள் அவன் மனத்தைக் காயப்படுத்தின.
விஷ்ணுகோபனும் ‘பல்லவ நாட்டில் பிச்சை எடுக்க வந்தவன் பிச்சையோடு போகவேண்டியது தானே’ என்றான்!
மயூரன் தன் வாளை உயர்த்தி:
‘இளவரசே! வாளுக்குக் குலம் தெரியாது.. தொழில் தெரியாது. வீரமும் வலிமையும்தான் தெரியும். இந்த அவமானத்திற்கு என் வாள்மூலம் பதில்சொல்கிறேன்’ என்றான்.
அன்று தென்னிந்தியாவிலேயே வாட்போரில் தலை சிறந்தவன் என்று பெயரெடுத்திருந்தான் விஷ்ணுகோபன்.
பெருஞ்சிரிப்புடன் தன் வாளை உயர்த்திய இளவரசனின் சிரிப்பு வெகு விரைவில் மறைந்தது!
முகம் வேதனையில் துடித்தது.
விஷ்ணுகோபன் தோல்வியுற்றான்!
விஷ்ணுகோபன் மன்னரிடம் சென்று :
“தந்தையே… மயூரன் ஒரு ராஜத்துரோகி..அவனைத் தண்டிக்கவேண்டும்”.
மன்னன் சிவஸ்கந்தவர்மன் மகனது கூற்றை நம்பி, மயூரனுக்குத் தூக்குத் தண்டனை அறிவித்தான்.
செய்தி காட்டுத்தீப்போல காஞ்சியில் பரவியது…
நலம்விரும்பி நண்பர்களின் உதவியால் மயூரன் காஞ்சியிலிருந்து தப்பினான்.
ஸ்ரீ சைலம் காட்டில் அங்கிருந்த காட்டு மனிதர்களைக் கூட்டுசேர்த்து சிறு படைஉருவாக்கினான்.
அப்பொழுதுதான் ஒரு செய்தி வந்தடைந்தது… இடி போல வந்தது.. மன்னர்களது மடிகலங்கியது..
வடநாட்டின் பேரரசன் – குப்தர்களின் இரும்பு மனிதன்.. இந்திய நெப்போலியன்… சமுத்திரகுப்தன் தென்னிந்தியாவுக்குப் படையெடுத்துவருகிறான் என்ற சேதிதான் அது..
சமுத்திரகுப்தன் வருமுன்னர் அவனது வெற்றியும் வலிமையும் பீதியைக் (பேதியைக்) கிளப்பியது.
மன்னன் சிவஸ்கந்தவர்மன் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தான்.
ஆயினும் வீரத்தில் குறைந்தவனல்லன்.
மகன் விஷ்ணுகோபனை அழைத்தான். அவனும் பொறாமைக்காரனே ஒழிய – கோழை அல்ல.
மன்னன்:
“விஷ்ணுகோபா! நமது பல்லவ ராஜ்யத்தை இப்பொழுதுதான் ஸ்தாபித்திருக்கிறோம்.. இது பல நூறாண்டு வளர்ந்து புகழ் பெறவேண்டும்.. சமுத்திரகுப்தனின் தீரத்தையும், வீரத்தையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.. தனியாக நாம் அவனை வெல்லமுடியாது… அவமுக்தாவின் நீலராஜன், வேங்கியின் ஹஸ்திவர்மன் மற்றும் சாதவாகன ராஜ்யத்திற்குப் பின்னால் வந்த குறுநில மன்னர்கள்அனைவரையும் அழைத்து ஒரு கூட்டணி அமைப்போம்”
மயூரன் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்தான்.
சமுத்திரகுப்தன் படை வந்தது… புயலாக வந்தது…தென்னிந்திய மன்னர்கள் திறமையாகப் போராடினர்.
சமுத்திரத்தின் முன் எந்தக் கூட்டணி தாங்கும்..
குப்தன் காஞ்சியை வென்றான்.
சமுத்திரகுப்தன் தென்னிந்திய வீரத்தைக்கண்டு வியந்தான். இந்தப் பகுதியை நம் நாட்டில் சேர்த்துக்கொண்டால் பாடலிபுத்திரத்திலிருந்து இதை ஆள்வது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்தான்.
காஞ்சியில் சிவஸ்கந்தவர்மனைச் சந்தித்தான். சிவஸ்கந்தவர்மன் தெற்கே இருக்கும் களப்பிரர்களைப்பற்றிக் கூறி அவர்கள் சேர சோழ பாண்டிய அரசுகளை அடக்கிச் சக்தியோடு இருப்பதைக் கூறினான்.
சமுத்திரகுப்தன் அஞ்சாநெஞ்சன்… இருப்பினும்.. அவனும் ‘சரி… இந்த தென்னிந்தியப் பயணம் போதும்’ என்று முடிவுசெய்தான். சிவஸ்கந்தவர்மன்மீது பெரு மதிப்புக்கொண்டான்.
‘பல்லவரே! காஞ்சியை நீங்களே ஆளுங்கள்…’
பல்லவரின் செல்வங்களைமட்டும் எடுத்துக்கொண்டு சமுத்திரகுப்தன் மகதம் திரும்பினான்.
பல்லவர்கள் தோல்வியுற்றுத் தளர்ந்திருந்தனர்.
மயூரன் இதுதான் சமயம் என்று தனது படைகளைத் திரட்டி, காஞ்சிமீது படையெடுத்தான்.
சக்தி குறைந்த விஷ்ணுகோபனால் தாக்குப் பிடிக்கமுடியவில்லை.
மயூரன் காஞ்சி நகரில் தனக்குப் பெரும் அன்பு செலுத்திய மக்களைப் பார்த்தான்.
நெஞ்சு நெகிழ்ந்தது.
காஞ்சிக்கு ஓரழிவும் வாராமல்செய்து திரும்பினான்.
ஸ்ரீ சைலம் அருகில் கன்னட, ஆந்திரப் பகுதிகளைக் கைப்பற்றினான்.
பானவசியைத் தலைநகராகக்கொண்டு தனது கடம்ப அரசாட்சியைத் துவங்கினான்.
நாட்டின் பிராமண சமூகத்தின் வேண்டுகோளின்படி க்ஷத்ரியனாக மாறி…பெயரை மயூரவர்மன் என்று மாற்றிக்கொண்டான். அவன் துவங்கிய கடம்ப ராஜ்ஜியம் 200 ஆண்டுகள் ஆண்டது.
சரித்திரத்தில் மயூரவர்மன் ஒரு சிறிய நெல்மணி.
அது பொன்மணி!
அவனது கதையை சரித்திரம் பேசுகிறது..
வேறு கதைகள்? விரைவில்…