சென்னையில் பாரதிவிழா

ரஜினிகாந்த் முதற்கொண்டு பத்துப் பதினைந்து பிரபலங்கள்  ‘காணொளியில்’ மகிழ்ச்சியோடு அழைத்த  நிகழ்வு!

சென்னையில்  வானவில் பண்பாட்டுக் கழகமும் தமிழக அரசும் இணைந்து நடத்திய பாரதி விழா !

டிசம்பர் 8,9,10 தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கத்திலும் திருவல்லிக்கேணி பாரதி இல்லத்திலும்  மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 

 

நண்பர் மந்திரமூர்த்தியின் முகநூல் பக்கத்திலிருந்து: 

 

நண்பர் நானா Nana Shaam Marina அவர்களும் நானும் இணைந்து வாழும் பாரதியான ஆசுகவி இசைக்கவி ரமணன் அவர்களுக்கும், SB creations பாரதி நாடகக்கலைக் குடும்பத்துக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் .

வானவில் பண்பாட்டு மையம் வழக்கறிஞர் ரவி அவர்கள் தமிழக அரசுடன் இணைந்து டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் சென்னை திருவல்லிக்கேணி கலைவாணர் அரங்கில் நடத்திய இரண்டு நாட்கள் நிகழ்வுகளும் மேதகு ஆளுநர் தொடங்கி வைக்க மிகச் சிறப்பாக நடைபெற்றன.

பாரதிவிழாவில் கலைவாணர் அரங்கில் கடைசி நிகழ்வாக, முத்தாய்ப்பாக திருமிகு.எஸ்.பி.இராமன் இயக்கத்தில் நடைபெற்ற பாரதியார் நாடகம் நேற்று ( டிசம்பர் 9, ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணியளவில் தொடங்கி இரவு சுமார் 9.45 அளவில் நிறைவு பெற்றது. நாடகத்தின் ஒவ்வொரு காட்சியும் மிக நுணுக்கமாக சிற்பம் போல செதுக்கி அமைக்கப்பட்டு இருந்தது. நாடகத்தில் பங்கேற்ற அனைவரும் தங்கள் பங்கை மிக நிறைவாகச் செய்திருந்தார்கள். நாடகம் அரங்கில் திரளாகக் குழுமியிருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. நாடகம் முடிந்தவுடன் விழாவுக்குச் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த நடிகர் சிவகுமார் இருக்கையில் இருந்து எழுந்திருந்து கைதட்டி நாடகத்திற்குத் தனது பாராட்டை வெளிப்படுத்தினார். அரங்கில் இருந்த மக்கள் அனைவரும் எழுந்து கரவொலி எழுப்பினர்.

இசைக்கவி ரமணன் அவர்களை விட சுமார் 12 ஆண்டுகள் மூத்தவரான நடிகர் சிவகுமார் நாடகத்தைப் பாராட்ட மேடையில் ஏறியவுடன் இசைக்கவி ரமணன் அவர்களின் கால்களில் பணிந்து வணங்கினார். இது பாரதிக்குச் செலுத்தும் வணக்கமும், மரியாதையும் என்று குறிப்பிட்டார் சிவகுமார். அந்த அளவிற்கு மேடையில் முழுக்கப் பாரதியாராகவே வாழ்ந்தார் இசைக்கவி ரமணன் அவர்கள்.  இசைக்கவி ரமணன் அவர்களின் உடல் வெளிப்படுத்தும் மொழிகளையும் திரு.சிவகுமார் வெகுவாகப் பாராட்டினார்.

” பாரதியாரைச் சிறுவயதில் இருந்து ரத்தத்தில் கலந்துவிட்ட ஒருவரால்தான் பாரதியின் வேடத்தில் இவ்வளவு பொருத்தமாக நடிக்க முடியும்.  தேடிச் சோறு நிதம் தின்று என்ற பாடலுக்கு முன் சில கவிதை வரிகளைக் கூறினார் இசைக்கவி ரமணன். இசைக்கவியே கவிஞரானதால் அந்த முந்தைய வரிகள் அவருடைய சொந்தக் கவிதையா? பாரதியின் கவிதையா? என்ற சந்தேகம் வந்து விட்டது. அதுவும் பாரதியின் கவிதைதான் என்று அருகில் இருந்தவர்களிடம் உறுதிபடுத்திக் கொண்டேன். இசைக்கவி ரமணன் அவர்கள் மட்டுமே மகாகவி பாரதியாக நடிக்க இன்று இந்த உலகிலேயே மிகவும் பொருத்தமான, தகுதியான, சிறப்பான நடிகர்” என்று நடிகர் சிவகுமார் மனம் திறந்து பாராட்டினார். நாடகம் காலத்திற்கேற்ப தகவமைக்கப்பட்டுள்ள தன்மையும் சிறப்பாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

விழாவிற்கு வந்த ஒவ்வொருவரும் பாரதி, செல்லம்மாள் உள்ளிட்ட அனைவரது நடிப்பு குறித்தும் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

நாடகத்தின் இயக்குநர் எஸ்.பி. இராமன் அவர்கள் கூறியுள்ளது போல தமிழ்ச்சாதி பாரதி கண்ட வழியில் செல்லட்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.