வரப்போகிற 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன் வருகிற 5 மாநிலங்களுக்கான தேர்தல் அதன் முக்கியத்துவத்தைக் கருதி அரை இறுதித் தேர்தல் ( செமி பைனல்) என்று சொல்லப்பட்டது.
அப்படிப்பட்ட தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.
அதன் முடிவுகள்பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி மூன்று மாநிலங்களை இழந்துள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர்,மத்தியப்பிரதேசம் மூன்றும் பா ஜ க விற்கு தூண்கள் என்று சொல்லப்பட்டன. அந்தத் தூண்கள் சரிந்துள்ளன.
தெலுங்கானாவின் சந்திரசேகர் ராவ் அமோக வெற்றிபெற்று காங்கிரஸ் மற்றும் தெலுகுதேசம் கூட்டணியை மண்ணைக் கவ்வச் செய்திருக்கிறார்.பா ஜ க மருந்துக்காக ஓரிரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
காங்கிரஸ் வசம் இருந்த மிசோரம் தற்போது உள்ளூர் கட்சியின் கையில்.
அதுமட்டுமல்ல;
பா ஜ க ஆண்ட மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.
எந்த காங்கிரஸ் ? முழுதும் அழிக்கப்பட்டுவிட்டது என்று பா ஜ கா வினால் அறிவிக்கபட்ட கட்சி!
பப்பூ என்று தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்ட ராகுலின் தலைமையில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.
இதை பா ஜ கவின் தோல்வி என்று குறிப்பிடவேண்டுமேதவிர காங்கிரஸின் வெற்றி என்று எடுத்துக்கொள்ள முடியாது.
பா ஜ க பல ஆண்டுகளாக இந்த மாநிலங்களில் ஆண்டு வந்ததால் மாற்றத்தை வேண்டி மக்கள் பா ஜ க வை நிராகரித்திருக்கலாம்.
அல்லது மாநில அளவில், மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை என்ற நிராசையின் காரணமாயிருக்கலாம்.
அல்லது மதச்சார்பின்மையா இந்துஸ்தானா என்ற ஒற்றையா ரெட்டையா கேள்விக்கு மக்கள் அளிக்கும் பதிலாயிருக்கலாம்.
யாராலும் சொல்லமுடியாது.
முக்கியமான கேள்வி எல்லோர் மனதிலும் தற்சமயம் எழுவது:
இது 2019இல் வரப்போகும் பொதுத் தேர்தலை எப்படிப் பாதிக்கும்?
பாதிக்காது என்பது நம் எண்ணம்.
மாநில அரசியல் வேறு, மத்திய அரசியல் வேறு.
கூட்டணி இல்லாத ஒரே கட்சி ஆண்டால்தான் நாட்டுக்கு நல்லது.
அதற்கு பா ஜ க தான் வரமுடியும்.
அதற்காக பா ஜ க வும் தங்கள் கொள்கையில் சரியான மாற்றங்கள் கொண்டுவரவேண்டும்.
செய்வார்களா?