கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த விஷ்ணு சர்மாவால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 86 கதைகளின் தொகுப்பே இந்த பஞ்சதந்திரக் கதைகள்.
பஞ்சதந்திரக் கதைகள் பிறந்த வரலாறு: ( நன்றி: https://ta.wikipedia.org/wiki/)
தென்னிந்தியாவில் மகிலாரோப்பொயம் என்று ஒரு நகரம் இருந்தது. அந்த நகரத்தில் அமரசக்தி எனும் ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அம்மன்னனுக்கு பகுசக்தி, உக்கிரசக்தி, அனந்த சக்தி எனும் மூன்று மகன்கள் இருந்தனர். இவர்கள் மூவருமே முட்டாள்கள், குறும்புக்காரர்கள், தொல்லை தருபவர்கள். இவர்களுக்குக் கல்வி பயில்வதில் சிறிதுகூட ஆர்வமோ, ஆசையோ கிடையாது.
மன்னன் அமரசக்தி தனது மகன்களின் இந்த தீயகுணங்களைக் கண்டு மனம் வெதும்பினான். தன் மகன்கள் கல்வி கற்கவில்லையே எனக் கவலையில் ஆழ்ந்தான். இந்தக் கவலையை ஒரு நாள் அரசவையில் வெளியிட்டு மனம் வருந்தினான். அரசனின் வருத்தத்தை அறிந்து சபையினர் அனைவரும் அமைதியாக இருந்தனர்.
இந்நிலையில் விஷ்ணு சர்மா என்கிற ஒரு பண்டிதர், “அரச குமாரர்களை என்னிடம் விட்டுவிடுங்கள். ஆறே மாதங்களுக்குள் நான் அவர்களுக்கு அரசியல் குறித்த இரகசியங்களை எல்லாம் கற்பித்து விடுகிறேன்” என்றார்.
மன்னன் அமரசக்தியும் இதற்கு ஒப்புக் கொண்டான். மூன்று அரச குமாரர்களும் விஷ்ணு சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விஷ்ணு சர்மா அந்த மூன்று அரச குமாரர்களையும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்கு எளிமையாகப் புரிந்து கொள்ளும்படியான, அவர்களது மனத்தைக் கவரும் கதைகளைக் கூறினார். அந்தக் கதைகள் அனைத்தும் சுவையாக இருந்தன. அவற்றை அரச குமாரர்கள் மகிழ்ச்சியுடன் கேட்டனர். இந்தக் கதைகள் மூலமாக விஷ்ணு சர்மா அவர்களுக்கு அரசியல்பற்றிய உத்திகளையும், இரகசியங்களையும் சொல்லிக் கொடுத்தார். ஆறு மாதங்களுக்குள்ளாக முன்று அரச குமாரர்களும் அரசியலில் தேர்ச்சி பெற்றவர்களாக அரண்மனைக்குத் திரும்பிச் சென்றனர்.
விஷ்ணு சர்மா அரச குமாரர்களுக்குச் சொன்ன கதைகள் “பஞ்ச தந்திரக் கதைகள்” என அழைக்கப்படுகின்றன.
தமிழில் பஞ்சதந்திரக் கதைகள் நிறையப் பதிப்புகள் வந்துள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப் பாடப் புத்தகங்களிலும் இடம்பெற்ற கதைகள் இவை.
கிழக்குப் பதிப்பகத்தில் சரவணன் அவர்கள் எழுதிய பஞ்ச தந்திரக் கதைகள் புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையைப் படித்தாலே அந்தக் கதைகளின் மீது நமக்கு புதிய ஈர்ப்பு பிறக்கும்.
காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருபவை என்றாலும் ஒருசேர பஞ்சதந்திரக் கதைகளை வாசிக்கும்போது ஒரே சமயத்தில் குதூகலமும் மலைப்பும் ஏற்படுகிறது. ஒரு கதை, அந்தக் கதையையொட்டி இன்னொன்று, அந்த இன்னொன்றின் வாலைப் பிடித்து மற்றொன்று என்று அடுத்தடுத்து விரிந்துசெல்லும் இந்தக் கதைகளை சுவாரஸ்யத்துக்காகவே திகட்டத் திகட்டப் படித்து மகிழலாம். அல்லது, ஒவ்வொரு கதையிலும் ஒளிந்துள்ள ஆழமான அரசியல் பாடங்களையும் ராஜதந்திர நுணுக்கங்களையும் கண்டறிந்து மலைத்துப் போகலாம்.
அப்போதைய அரசர்களுக்கு உதவும்பொருட்டு மிகுந்த சாதுரியத்துடன் உருவாக்கப்பட்ட இந்தக் கதைகள் இன்றைய காலகட்டத்துக்கும் கச்சிதமாகப் பொருந்துவதைப் பார்க்கும்போது மலைப்பும் மகிழ்ச்சியும் இரட்டிப்பாகின்றன.
பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் நம்மை மகிழ்விக்கும் இந்தப் பஞ்சதந்திரக் கதைகள் மேலும் பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். காலத்தைக் கடந்து நிற்கும் இந்த அற்புத கிளாசிக்கை நமக்கு நெருக்கமான மொழியில், ஈர்க்கும் முறையில் மறு வார்ப்பு செய்திருக்கிறார் நூலாசிரியர் ப. சரவணன்.
குழந்தைகள், பெரியவர்கள் இருவரிடமும் உரையாடுவதற்கு பலவித மிருகங்களும் பறவைகளும் இந்தப் புத்தகத்தில் காத்திருக்கின்றன. மொத்தம் 81 கதைகள். படிக்க, பாதுகாக்க, பரிசளிக்க ஏற்ற அற்புதமான புத்தகம் இது.
பஞ்ச தந்திரம் என்றால் என்ன?
1.மித்திர பேதம் – நட்பை கெடுத்து பகை உண்டாக்குவது.
2.மித்ரலாபம் – தங்களுக்கு இணையானவர்களுடன்கூடி பகை இல்லாமல் வாழ்வது
3.சந்தி விக்ரகம் -பகைவரை உறவுகொண்டு வெல்லுதல்
4.லப்தகாணி (artha nasam) -கையில் கிடைத்ததை அழித்தல்
5.அசம்ரெஷிய காரியத்துவம் – எந்த காரியத்தையும் விசாரணை செய்யாமல் செய்வது.
பஞ்ச தந்திரக் கதைகளைப் படிக்கும்போது உங்களுக்கு 96 படம் பார்க்கிறமாதிரி உங்கள் இளமைக் கால நினைவுகள் பறந்துவரும்.
இந்த வீடியோவைப் பாருங்கள்: ( கமல் மூன்றாம் பிறை ஞாபகம் வருகிறதா? )
இந்தப் படங்களையாவது பாருங்கள்:
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு படம் என்பார்கள். இந்தக் கதையைப் படியுங்கள்:

நண்டு, கொக்கைக் கொன்ற கதை!
வசந்த புரம் என்றொரு ஊர் இருந்தது. அழகிய வனாந்தரமும் நீர் நிலைகளும் இருக்கும் அந்த ஊரில் ஒரு பெரிய குளம் இருந்தது.
அதில் ஒரு கொக்கு தினசரி மீன் பிடித்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. தினசரி அதிக நேரம் காத்திருந்து மீனைப் போராடிப் பிடிப்பதால் கொக்கு சலிப்புற்றிருந்தது.
ஒரு நாள் கொக்கின் மூளையில் ஒரு யோசனை தோன்றியது. இந்த மீன்களை அவைகளின் சம்மதத்தோடே நாம் விரும்பிய இடத்தில் கொண்டு போய் திண்றால் எப்படி இருக்கும் என்று யோசித்தது. அதற்கு ஒரு வஞ்சகமான திட்டமும் தயாரித்தது.
ஒரு நாள் கொக்கு வருத்தமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “கொக்கு நம்மைப் பார்த்தவுடன் கவ்விக் கொள்ளுமே. சும்மாவிடாதே, ஆனால் இது செயலற்று நிற்கின்றதே என்னவாக இருக்கும்” என்று, யோசித்தவாறே அதன் முன் வந்தது.
“என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்”? என்றது. அதற்கு கொக்கு கூறிற்று “நான் மீனைகொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரியில்லை” என்றது.
“மனசு சரியில்லையா ஏன்”? என்றது மீன்.
‘அதையேன் கேட்கிறாய்..” என்று அலட்டியது கொக்கு.
“பரவாயில்லை சொல்லுங்களேன்’ என்றது மீன். சொன்னால் உனக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்றது மீன்.
மீனுக்குப் பரபரத்தது. “சொன்னால்தான் தெரியும்” என்றது.
“வற்புறுத்திக் கேட்பதால் சொல்கிறேன். இப்போது ஒரு மீனவன் இங்கே வரப்போகிறான்”, என்று இழுத்தது கொக்கு.
“வரட்டுமே” என்றது மீன்.. “என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்” என்றது கொக்கு.
இதைக் கேட்ட மீன்கள் அனைத்தும் அதிர்ச்சியடைந்தன. அவை தங்களைக் காப்பாற்று மாறு கொக்கிடமே வேண்டின.
ஆனால் கொக்கு “நான் என்ன செய்வேன்? என்னால் மீனவனோடு சண்டை போட முடியாது. கிழவன் நான், வேண்டுமானால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகிறேன். அதனால் எனக்கும் நல்ல பெயர் வரும். நீங்களும் பிழைத்திருப்பீர்கள்”, என்றது மிகவும் இறக்கம் கசிய.
மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின.
“எங்கள் உயிரைக் காக்க நீங்களே உதவி செய்கிறேன் என்கிறீர்கள். அதன்படியே செய்யுங்கள்”, என்றன மீன்கள் எல்லாம் ஒருமித்த குரலில்.
கொக்குக்குக் கசக்குமா காரியம்?. நடைக்கு ஒவ்வொன்றாக குலத்திலிருக்கின்ற மீன்களை யெல்லாம் கௌவ்விக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்து.
குளத்திலிருந்த நண்டு ஒன்று இதைப் பார்த்துக் கொண்டே இருந்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது.
அந்த நண்டு கொக்கிடம் வந்து “வயோதிகக் கொக்கே! இந்த மீன்களையெல்லாம் எங்கே கொண்டு போகிறீர்களோ அங்கேயே என்னையும் கொண்டு போங்கள், என்னையும் மீனவனிடமிருந்து காப்பாற்றுங்கள்”, என்று கெஞ்சியது. நண்டு கெஞ்சுவதைப் பார்த்த கொக்கு அதன் மேல் இறக்கப்பட்டு நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது. பறக்கும் போது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதை கண்டது நண்டு.
அதைப் பார்த்த நண்டுக்கு ஒரே அதிர்ச்சி.
வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் சட்டென்று புரிந்துவிட்டது. தன் நிலையும் அப்படித்தானா? என்று நண்டு பயப்படத் துவங்கியது.
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பது போல் அதற்கு மூளை வேலை செய்தது. கொக்காரே! நீங்கள் என்மேல் இறக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். ஆனால் அங்கே என் உறவினர்கள் பலர் வரப்போகும் ஆபத்து தெரியாமல் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி அவர்களையும் உங்களுடன் வரத் தயார் செய்வேன்” என்றது நண்டு.
கொக்குக்கு ஒரே சந்தோஷம். இன்னும் நிறைய நண்டுகள் கிடைக்கப் போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்து.
“அப்படியா, இன்னும் இருக்கிறதா நண்டுகள்?”. என்று கேட்டுக் கொண்டே பழைய குளத்திற்கு மீண்டும் நண்டைக் கொண்டு போனது.
குளத்துக்கு நேராக வரும்போதும் அதுவரை அமைதியாக இருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டுக் குளத்து நீரில் வீழ்ந்து உயிர் பிழைத்துக் கொண்டது.
குளத்தில் மிச்சம் இருந்த மீன்கள் பிழைத்துக் கொண்டன.
பாடம்: மீனைத் தின்பது தான் கொக்கின் குணமே என்னும் போது, கொக்கு மீன்களைக் காப்பதாகச் சொன்னதை மீன்கள் நம்பியிருக்கக் கூடாது. வாஞ்சக மனத்தான் உதவி செய்தாலும் அது அபாயத்தில் முடியும் ஆபத்துண்டு. எனவே ஒருவரை நம்பும் முன்பாக அவரது இயல்பான குணத்தை நன்கறிந்தே நம்புதல் வேண்டும் என்ற கதையை மந்திரியார் இளவரசர்களுக்கு எடுத்துச் சொன்னார்.:
நமது பாரம்பரியக் கதைகளை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.
(நன்றி: இணையதளம்)