ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (18) – புலியூர் அனந்து

Image result for meivazhi salai meeting

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழைப் போல தன்னைத் தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

கடவுள் மனிதனை படைத்தானா?
கடவுளை மனிதன் படைத்தானா?

அன்று இரவு உணவு ஏழுமணிக்கெல்லாம் முடித்துக்கொண்டாகிவிட்டது. என்னைப் பத்திரமாக நிர்ணயிக்கப்பட்ட ஹோட்டல் அறையில் விட்டுவிட்டு அண்ணன் திரும்பிவிட்டான். அறையில் நாங்கள் இருவர், தமிழகத்தின் வேறொரு பகுதியைச் சேர்ந்தவர்  அறை நண்பர்.  சற்றுநேரம் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தோம். நான் தூங்குவதற்குத் தயார் செய்துகொண்டேன்.

நண்பர் தனது படுக்கையில் சம்மணமிட்டு அமர்ந்து ஒரு பிரேம்போட்ட படத்தினை எதிரில் வைத்துக்கொண்டவர், கண்களை மூடிக் கொண்டார்.  ஏதோ தியானம் செய்வதுபோல் இருந்தது.  சற்று நேரம் கழித்து உடல் பயிற்சி அல்லது ஆசனம்போன்று செய்துவிட்டு, விளக்கினை அணைத்துவிட்டு உறங்கத்தொடங்கினார்.

குளியல் அறையும் இணைக்கப்பட்டிருந்த அந்தத் தங்குமிடம் வசதியாக இருந்தது. காலையில் எல்லாம் சாதாரணமாகத்தான் இருந்தது. அவர் முதலில் குளித்துவிட்டு வந்தார். பிறகு நான் குளித்துவிட்டு வெளியேவந்தேன.

நண்பர் அதற்குள் வித்தியாசமான ஒரு போஸில் ஊதுபத்தி மணம் கமழ,  தமிழ்போலத் தோன்றினாலும் ஏதோ புரியாத மொழியில் மந்திரம்போல் சொல்லிக்கொண்டு இருந்தார்.  கொஞ்சம் பயந்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.

அவையெல்லாம் முடிந்து உடைகள் மாற்றிக்கொண்டு பயிற்சிமையம் போனோம். மாலையில் திரும்பி வரும்போது ஒரு விலாசம் எழுதிய காகிதத்தைக் காட்டி,  அங்கு  போகவிருப்பதாகவும், நானும் வந்தால் துணையாக இருக்கும் என்று சொன்னார். எனக்கும் செய்வதற்கு ஏதுமில்லா காரணத்தால் போனேன்.  அவரும் சென்னைக்குப் புதியவர்தான்.  ஆனால் போகவேண்டிய இடத்தைக் கண்டுபிடித்துவிட்டார்.

பெரிய மைதானம்.  ஓரிரு மரங்கள்மட்டுமே இருந்தன. நடந்துசெல்ல நீண்ட சிமெண்ட் பாதை இருந்தது. ஒரு கோடியில் இருந்த கட்டிடத்திற்கு நாங்கள் நடந்து போகும்போது அவ்வப்போது சிலர் எதிரே வந்தார்கள்.  முதலில் பார்த்த மனிதர் கைகளை விசித்திரமாக வளைத்துத் தலைக்கருகில் கொண்டுசென்று ஏதோ சொன்னார்.  நான் நண்பரைப் பார்த்தேன்.  அவரும் அவ்வாறே செய்தார்.  எதிரில் வந்தவர் என்னை முறைத்துப் பார்த்துவிட்டுப் போனார்.  எதிரில் யாராவது வரும்போது இது மீண்டும் நடந்தது. ஆனால், யாரும் முறைத்துப்பார்க்கவில்லை. நான் ஏதும் கேட்கவில்லை.  நண்பரும் ஏதும் சொல்லவில்லை.

 

Image result for meeting of a village swami with red turban in tamilnaduகட்டிடம் வந்தது.  காலணிகளைக் கழட்டிவிட்டு உள்ளேசென்றோம்.  ஒரு ரப்பர் குழாயில் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. கால்களைக் கழுவிக்கொண்டோம். மஞ்சள், காவி, ரோஸ் என்றெல்லாம் அனுமானிக்க இயலாத ஒரு நிறத்தில் ஒரு துணியால் எங்கள் இருவருக்கும் தலைப்பாகைபோன்று ஒருவர் கட்டிவிட்டார். உள்ளேபோனோம்.

சிம்மாசனம்போன்ற இருக்கை. அதில் வயதினை அனுமானிக்க இயலாத ஒரு நபர் விசித்திர உடை அணிந்து அமர்ந்திருந்தார். சுமார் அறுபதுபேர் தலைப்பாகை அணிந்து குரு சிஷ்ய பாவத்தில், ஒரு கையால் வாயை மறைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அதனையே நண்பரும் அவரைப் பார்த்து நானும் அமர்ந்தோம்.

பேசிக்கொண்டிருந்தவர் தமிழில்தான் பேசிக்கொண்டு இருந்தார்.  உச்சரிப்பு அவர் தமிழரல்லர் என்று கணிக்கமுடிந்தது. கிட்டத்தட்ட ஒன்றரைமணி நேரம் அவர் விடாமல் பேசினார். எனது தொடக்கப்பள்ளி ஆசிரியரோ, என் தாத்தா பாட்டியோ சொல்லாத ஏதும் அவர் சொல்லவில்லை. அந்த அறுபதுபேரும் அதனை ஞானோபதேசம்போலக் கேட்டுக்கொண்டிருந்தது எனக்கு வியப்பாக இருந்தது.

பேசி முடித்ததும் எல்லோரும்   ஒரு க்யூ ஏற்படுத்திக்கொண்டார்கள். வரிசையாகச்சென்று அவர் காலைத தொட்டு வணங்க, அவரும் எல்லோர் தலையிலும் ஆசீர்வதிப்பதுபோலக் கையை வைத்தார். பலர் அப்போது மெய்சிலிர்த்தது வெளிப்படையாகத் தெரிந்தது. அருகிலேயே வைக்கப்பட்டிருந்த அண்டாபோன்ற ஒரு பாத்திரத்தில் எல்லோரும் ரூபாய் போட்டார்கள். நான் வரிசையில் பாதியிலேயே நழுவிவிட்டேன். அன்று ஒரு கணிசமான தொகை கல்லா கட்டியிருப்பார்கள்.

வெளியே வந்தோம்.

எங்கே போகிறோம் என்று சொல்லாமல் அழைத்துப் போன நண்பர், திரும்பி வரும்போது அந்த ‘”ஞானி”யின் (அப்படித்தான் நண்பர் குறிப்பிட்டார்) மகிமையைப்பற்றி வாய் மூடாமல் பேசிக்கொண்டே வந்தார். அவர் பெருமையாகச்சொன்ன எதுவும் எனக்குப் பெரிய விஷயமாகப்படவில்லை.

உதாரணத்திற்கு ஒன்று.

ஒரு விசேஷ தினத்தில்  ஆயிரக்கணக்கில் கூடி இருந்தார்களாம்.  எல்லோருக்கும் அந்த ஞானி வாழைப்பழம் பிரசாதமாக கொடுத்துக்கொண்டிருந்தார்.  நிகழ்ச்சி அமைப்பாளர் ஒருவர் பிரசாதம் வாங்க வரிசையில் போய்க்கொண்டு இருந்தாராம். நெருங்கும் சமயங்களில் யாரேனும் அழைப்பதாலோ அல்லது வேறு  எதனாலோ தடைபட்டுக்கொண்டே இருந்ததாம். கடைசியாக இவர்சென்று கும்பிட்டபோது வாழைப்பழங்கள் எல்லாம் தீர்ந்துபோயிருந்தன. பக்தி சிரத்தையுடன் பல வேலைகளைச் செய்தும் பிரசாதம் மட்டும் கிட்டவில்லை.

பெருத்த  ஏமாற்றத்துடன் வீடு போய்ச்சேர்ந்தாராம். வீட்டைத் திறந்து விளக்கைப் போட்டபோது, வீட்டு வாசலில் ஒரு கூடை வாழைப்பழம் இருந்ததாம்.  தற்செயல் என்று ஒதுக்குவதோ அற்புதம் என்று  நம்புவதோ அவரவர் விருப்பம். கேட்டதைக் கொடுத்தால்தான் சாமி.  அற்புதம் செய்தால்தான் மகான் என்பதுதான்  உலக நடப்பு  அல்லவா?

பிற்காலத்தில் சற்றுப் பெரிய ஊர் ஒன்றில் நான் வேலைபார்த்தேன். அங்கே ஒரு கட்டிடத்தில் ஒரு சங்கம் இருந்தது. அந்தக் கட்டிடத்தில் உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி. பின்வரும் செய்திகள் நான் கேள்விப்பட்டதுதான். எவ்வளவு உண்மை என்று தெரியாது.

புதியதாக ஒருவர் உறுப்பினர் ஆகவேண்டுமென்றால் தற்போது இருக்கும் உறுப்பினர் சிபாரிசு செய்யவேண்டும்.  ஒரு குழு ஒன்று பரிசீலிக்கும். குழுவில் ஒருவர் வேண்டாம் என்று சொன்னாலும் சேர்க்க மாட்டார்களாம். குழு ஒப்புக் கொண்டால், அடுத்த கூட்டத்திற்கப்  புதிய நபர் கோட் சூட், (அல்லது குறைந்தபட்சம் ஒரு டை) அணிந்து செல்லவேண்டும். அவர்கள் நடவடிக்கை ஆரம்பிப்பதற்குமுன் பொதுஅரங்கில் மற்ற உறுப்பினர்களுடன் புதியவரும் அறிமுகம் செய்யப்பட்டோ அல்லது அறிமுகம் செய்துகொண்டோ வளைய வருவாராம். அன்றைய நிகழ்வில் இவர் பங்குகொள்ள முடியாது.  திரும்பிவிட வேண்டியதுதான்,

மற்றவர்கள் கூடியதும் புதியவர் சேரலாமா என்று முடிவெடுப்பார்களாம்.  ஒரு உறுப்பினர் ஆட்சேபனை செய்தாலும் இவரைச் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள்.  இந்தக் கட்டுப்பாட்டையும் தாண்டி ஒருவர் உறுப்பினர் ஆகிவிட்டால் முதல் கூட்டத்தில் அவருக்கு ஒரு ரகசிய சொற்றொடர்  உபதேசிக்கப்படுமாம். அந்தச் சொற்றொடரையோ சங்கத்தில் என்னென்ன நடக்கிறது என்பதையோ (தனது மனைவி /கணவன் உட்பட) யாருக்கும் சொல்லக்கூடாதாம். பலான சங்கத்தில் இவர் ஒரு அங்கத்தினர் என்பதுதவிர வேறு ஏதும் வேலையில் தெரியக்கூடாதாம். 

இந்தச் சங்கக் கிளைகள் உலகில் பல ஊர்களில் உள்ளதாம். எந்த ஊரில் ஒருவர் உறுப்பினர் ஆனாலும் எந்த ஊர் சங்கத்திலும் பங்கு கொள்ளலாமாம்.  ஒரு ரகசிய சங்கத்தில் ரகசியம் இந்த அளவிற்கு அம்பலமாகிவிட்டது ஒரு வேடிக்கைதானே? ஆனால் இதில் உண்மை எவ்வளவு பிற்சேர்க்கை எவ்வளவு என்று தெரியாது.

அந்த ‘தலை வெட்டி’ சங்கம் கிடக்கட்டும். நம் தோழரைப் பார்ப்போம்.

வாழ்க்கையில் சந்தோஷங்களை அனுபவிக்கும் வயதில் சாமியாரைத் துரத்திக்கொண்டிருந்த அவர் பெயர் ஞானப்பிரகாசம்..  திருமணத்திற்குப்பிறகும் அவரது.இந்த “பக்தி” நீடித்ததும், மணவாழ்வில் நிம்மதி கிட்டாததும், குடும்பத்தையும் வேலையையும் உதறி நாற்பது வயதிலேயே காணாமல்போனதும் பின்னாட்களில் நடந்த கதை.

ஞானப்பிரகாசத்தின் வாழ்க்கை பிரகாசமாக இருந்ததா, அவருக்கு ஞானம்கிட்டியதா என்று புரியவில்லை.

(தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.