குவிகம் புத்தகப் பரிமாற்றம்

குவிகம் புத்தகப் பரிமாற்றம்பற்றி ஒரு நிகழ்வு குவிகம் இல்லத்தில் நவம்பர் 18இல்  நடைபெற்றது.
அந்த விழாவில் நிறைய நண்பர்கள் தங்களுக்குப் பிடித்த புத்தகத்தைப்பற்றிப் பேசி அந்தப் புத்தகத்தையே பரிமாற்றம் செய்ய வழங்கினார்கள்.
அந்த நிகழ்வு பற்றி ஹிண்டு நாளிதழில் டவுன் டவுன் என்ற பகுதியில் முன்னோட்டமாக  வழங்கிய  செய்தி:
DOWN TOWN

Book exchange drive on Nov. 18

Time: At 3.30 p.m.

Also, there will be a book exchange drive in which a participant can lend a book he has read and borrow another book.

Both Tamil and English books can be exchanged.

Participants are requested to give a brief introduction and review about the books they are lending, says a press release.

The programme will be held at Kuvikam Illam, Flat No:6, Third Floor, Silver Park Apartments, Thanikachalam Road, T.Nagar.

For details, call 9791069435 / 8939604745

ஏ ஆர் ரஹ்மானின் குறும்படம்

கண்ணீல் நீர்மல்க இந்தக் குறும்படத்தைப் பார்த்து இசைக்குப் புது வடிவம் கொடுத்த நிதிலாவையும் அதை வடிவமைத்த ஏ ஆர் ரஹ்மான் அவர்களையும் எப்படிப் பாராட்டுவதேன்றே தெரியவில்லை. 

பார்த்துப் பெருமிதமடையுங்கள்!  

திரைக்கவிதை – கண்ணதாசன்

Image result for பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்யமா
யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே
கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது!

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும்கூட மிதிக்கும்!
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஒளவை சொன்னது
அது ஒளவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது! (பரம சிவன்)

வண்டி ஓடச் சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த
இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்
உனைப்போல் அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது! (பரமசிவன்)

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே
நான் நிலவு போலத் தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனைப் பார்த்து கேலி செய்யும்போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதியேது
இது கணவன் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது. (பரமசிவன்)

 

பஞ்ச தந்திரக் கதைகள்

Image result for பஞ்சதந்திரம்

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த விஷ்ணு சர்மாவால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 86 கதைகளின் தொகுப்பே இந்த பஞ்சதந்திரக் கதைகள். 

பஞ்சதந்திரக் கதைகள் பிறந்த வரலாறு: ( நன்றி:  https://ta.wikipedia.org/wiki/)

தென்னிந்தியாவில் மகிலாரோப்பொயம் என்று ஒரு நகரம் இருந்தது. அந்த நகரத்தில் அமரசக்தி எனும் ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அம்மன்னனுக்கு பகுசக்தி, உக்கிரசக்தி, அனந்த சக்தி எனும் மூன்று மகன்கள் இருந்தனர். இவர்கள் மூவருமே முட்டாள்கள், குறும்புக்காரர்கள், தொல்லை தருபவர்கள்.  இவர்களுக்குக் கல்வி பயில்வதில் சிறிதுகூட ஆர்வமோ, ஆசையோ கிடையாது.

மன்னன் அமரசக்தி தனது மகன்களின் இந்த தீயகுணங்களைக் கண்டு மனம் வெதும்பினான். தன் மகன்கள் கல்வி கற்கவில்லையே எனக் கவலையில் ஆழ்ந்தான். இந்தக் கவலையை ஒரு நாள் அரசவையில் வெளியிட்டு மனம் வருந்தினான். அரசனின் வருத்தத்தை அறிந்து சபையினர் அனைவரும் அமைதியாக இருந்தனர்.

இந்நிலையில் விஷ்ணு சர்மா என்கிற ஒரு பண்டிதர், “அரச குமாரர்களை என்னிடம் விட்டுவிடுங்கள். ஆறே மாதங்களுக்குள் நான் அவர்களுக்கு அரசியல் குறித்த இரகசியங்களை எல்லாம் கற்பித்து விடுகிறேன்” என்றார்.

மன்னன் அமரசக்தியும் இதற்கு ஒப்புக் கொண்டான். மூன்று அரச குமாரர்களும் விஷ்ணு சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விஷ்ணு சர்மா அந்த மூன்று அரச குமாரர்களையும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்கு எளிமையாகப் புரிந்து கொள்ளும்படியான, அவர்களது மனத்தைக் கவரும் கதைகளைக் கூறினார். அந்தக் கதைகள் அனைத்தும் சுவையாக இருந்தன. அவற்றை அரச குமாரர்கள் மகிழ்ச்சியுடன் கேட்டனர்.  இந்தக் கதைகள் மூலமாக விஷ்ணு சர்மா அவர்களுக்கு அரசியல்பற்றிய உத்திகளையும், இரகசியங்களையும் சொல்லிக் கொடுத்தார். ஆறு மாதங்களுக்குள்ளாக முன்று அரச குமாரர்களும் அரசியலில் தேர்ச்சி பெற்றவர்களாக அரண்மனைக்குத் திரும்பிச் சென்றனர்.

விஷ்ணு சர்மா அரச குமாரர்களுக்குச் சொன்ன கதைகள் “பஞ்ச தந்திரக் கதைகள்” என அழைக்கப்படுகின்றன.

தமிழில் பஞ்சதந்திரக் கதைகள் நிறையப் பதிப்புகள் வந்துள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப் பாடப் புத்தகங்களிலும்  இடம்பெற்ற கதைகள் இவை.

Cover art

 

கிழக்குப் பதிப்பகத்தில்  சரவணன் அவர்கள் எழுதிய பஞ்ச தந்திரக் கதைகள் புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையைப் படித்தாலே அந்தக் கதைகளின் மீது நமக்கு புதிய ஈர்ப்பு பிறக்கும்.

காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருபவை என்றாலும் ஒருசேர பஞ்சதந்திரக் கதைகளை வாசிக்கும்போது ஒரே சமயத்தில் குதூகலமும் மலைப்பும் ஏற்படுகிறது. ஒரு கதை, அந்தக் கதையையொட்டி இன்னொன்று, அந்த இன்னொன்றின் வாலைப் பிடித்து மற்றொன்று என்று அடுத்தடுத்து விரிந்துசெல்லும் இந்தக் கதைகளை சுவாரஸ்யத்துக்காகவே திகட்டத் திகட்டப் படித்து மகிழலாம்.  அல்லது, ஒவ்வொரு கதையிலும் ஒளிந்துள்ள ஆழமான அரசியல் பாடங்களையும் ராஜதந்திர நுணுக்கங்களையும் கண்டறிந்து மலைத்துப் போகலாம்.

அப்போதைய அரசர்களுக்கு உதவும்பொருட்டு மிகுந்த சாதுரியத்துடன் உருவாக்கப்பட்ட இந்தக் கதைகள் இன்றைய காலகட்டத்துக்கும் கச்சிதமாகப் பொருந்துவதைப் பார்க்கும்போது மலைப்பும் மகிழ்ச்சியும் இரட்டிப்பாகின்றன.

பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் நம்மை மகிழ்விக்கும் இந்தப் பஞ்சதந்திரக் கதைகள் மேலும் பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். காலத்தைக் கடந்து நிற்கும் இந்த அற்புத கிளாசிக்கை நமக்கு நெருக்கமான மொழியில், ஈர்க்கும் முறையில் மறு வார்ப்பு செய்திருக்கிறார் நூலாசிரியர் ப. சரவணன்.

குழந்தைகள், பெரியவர்கள் இருவரிடமும் உரையாடுவதற்கு பலவித மிருகங்களும் பறவைகளும் இந்தப் புத்தகத்தில் காத்திருக்கின்றன. மொத்தம் 81 கதைகள். படிக்க, பாதுகாக்க, பரிசளிக்க ஏற்ற அற்புதமான புத்தகம் இது.

பஞ்ச தந்திரம் என்றால் என்ன?

 

1.மித்திர பேதம் – நட்பை கெடுத்து பகை உண்டாக்குவது.

2.மித்ரலாபம் – தங்களுக்கு இணையானவர்களுடன்கூடி பகை இல்லாமல் வாழ்வது

3.சந்தி விக்ரகம் -பகைவரை உறவுகொண்டு வெல்லுதல்

4.லப்தகாணி (artha nasam) -கையில் கிடைத்ததை அழித்தல்

5.அசம்ரெஷிய காரியத்துவம் – எந்த காரியத்தையும் விசாரணை செய்யாமல் செய்வது.

பஞ்ச தந்திரக் கதைகளைப் படிக்கும்போது  உங்களுக்கு 96 படம் பார்க்கிறமாதிரி உங்கள் இளமைக் கால நினைவுகள் பறந்துவரும். 

இந்த வீடியோவைப் பாருங்கள்:  ( கமல் மூன்றாம் பிறை ஞாபகம் வருகிறதா? )

 

 இந்தப் படங்களையாவது பாருங்கள்:

 

Related imageImage result for பஞ்சதந்திரக் கதைகள்

 

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு படம் என்பார்கள். இந்தக் கதையைப் படியுங்கள்: 

 

Short Stories from Panchatantra - The Stork and The Crab Story with Moral: Excess of greed is harmful.

நண்டு, கொக்கைக் கொன்ற கதை!

வசந்த புரம் என்றொரு ஊர் இருந்தது. அழகிய வனாந்தரமும் நீர் நிலைகளும் இருக்கும் அந்த ஊரில் ஒரு பெரிய குளம் இருந்தது.

அதில் ஒரு கொக்கு தினசரி மீன் பிடித்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. தினசரி அதிக நேரம் காத்திருந்து மீனைப் போராடிப் பிடிப்பதால் கொக்கு சலிப்புற்றிருந்தது.

ஒரு நாள் கொக்கின் மூளையில் ஒரு யோசனை தோன்றியது. இந்த மீன்களை அவைகளின் சம்மதத்தோடே நாம் விரும்பிய இடத்தில் கொண்டு போய் திண்றால் எப்படி இருக்கும் என்று யோசித்தது. அதற்கு ஒரு வஞ்சகமான திட்டமும் தயாரித்தது.

ஒரு நாள் கொக்கு வருத்தமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “கொக்கு நம்மைப் பார்த்தவுடன் கவ்விக் கொள்ளுமே. சும்மாவிடாதே, ஆனால் இது செயலற்று நிற்கின்றதே என்னவாக இருக்கும்” என்று, யோசித்தவாறே அதன் முன் வந்தது.

“என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்”? என்றது. அதற்கு கொக்கு கூறிற்று “நான் மீனைகொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரியில்லை” என்றது.

“மனசு சரியில்லையா ஏன்”? என்றது மீன்.

‘அதையேன் கேட்கிறாய்..” என்று அலட்டியது கொக்கு.

“பரவாயில்லை சொல்லுங்களேன்’ என்றது மீன். சொன்னால் உனக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்றது மீன்.

மீனுக்குப் பரபரத்தது. “சொன்னால்தான் தெரியும்” என்றது.

“வற்புறுத்திக் கேட்பதால் சொல்கிறேன். இப்போது ஒரு மீனவன் இங்கே வரப்போகிறான்”, என்று இழுத்தது கொக்கு.

“வரட்டுமே” என்றது மீன்.. “என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்” என்றது கொக்கு.

இதைக் கேட்ட மீன்கள் அனைத்தும் அதிர்ச்சியடைந்தன. அவை தங்களைக் காப்பாற்று மாறு கொக்கிடமே வேண்டின.

ஆனால் கொக்கு “நான் என்ன செய்வேன்? என்னால் மீனவனோடு சண்டை போட முடியாது. கிழவன் நான், வேண்டுமானால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகிறேன். அதனால் எனக்கும் நல்ல பெயர் வரும். நீங்களும் பிழைத்திருப்பீர்கள்”, என்றது மிகவும் இறக்கம் கசிய.

மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின.

“எங்கள் உயிரைக் காக்க நீங்களே உதவி செய்கிறேன் என்கிறீர்கள். அதன்படியே செய்யுங்கள்”, என்றன மீன்கள் எல்லாம் ஒருமித்த குரலில்.

கொக்குக்குக் கசக்குமா காரியம்?. நடைக்கு ஒவ்வொன்றாக குலத்திலிருக்கின்ற மீன்களை யெல்லாம் கௌவ்விக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்து.

குளத்திலிருந்த நண்டு ஒன்று இதைப் பார்த்துக் கொண்டே இருந்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது.

அந்த நண்டு கொக்கிடம் வந்து “வயோதிகக் கொக்கே! இந்த மீன்களையெல்லாம் எங்கே கொண்டு போகிறீர்களோ அங்கேயே என்னையும் கொண்டு போங்கள், என்னையும் மீனவனிடமிருந்து காப்பாற்றுங்கள்”, என்று கெஞ்சியது. நண்டு கெஞ்சுவதைப் பார்த்த கொக்கு அதன் மேல் இறக்கப்பட்டு நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது. பறக்கும் போது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதை கண்டது நண்டு.

அதைப் பார்த்த நண்டுக்கு ஒரே அதிர்ச்சி.

வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் சட்டென்று புரிந்துவிட்டது. தன் நிலையும் அப்படித்தானா? என்று நண்டு பயப்படத் துவங்கியது.

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பது போல் அதற்கு மூளை வேலை செய்தது. கொக்காரே! நீங்கள் என்மேல் இறக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். ஆனால் அங்கே என் உறவினர்கள் பலர் வரப்போகும் ஆபத்து தெரியாமல் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி அவர்களையும் உங்களுடன் வரத் தயார் செய்வேன்” என்றது நண்டு.

கொக்குக்கு ஒரே சந்தோஷம். இன்னும் நிறைய நண்டுகள் கிடைக்கப் போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்து.

“அப்படியா, இன்னும் இருக்கிறதா நண்டுகள்?”. என்று கேட்டுக் கொண்டே பழைய குளத்திற்கு மீண்டும் நண்டைக் கொண்டு போனது.

குளத்துக்கு நேராக வரும்போதும் அதுவரை அமைதியாக இருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டுக் குளத்து நீரில் வீழ்ந்து உயிர் பிழைத்துக் கொண்டது.

குளத்தில் மிச்சம் இருந்த மீன்கள் பிழைத்துக் கொண்டன.

பாடம்: மீனைத் தின்பது தான் கொக்கின் குணமே என்னும் போது, கொக்கு மீன்களைக் காப்பதாகச் சொன்னதை மீன்கள் நம்பியிருக்கக் கூடாது. வாஞ்சக மனத்தான் உதவி செய்தாலும் அது அபாயத்தில் முடியும் ஆபத்துண்டு. எனவே ஒருவரை நம்பும் முன்பாக அவரது இயல்பான குணத்தை நன்கறிந்தே நம்புதல் வேண்டும் என்ற கதையை மந்திரியார் இளவரசர்களுக்கு எடுத்துச் சொன்னார்.:

நமது பாரம்பரியக் கதைகளை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.

(நன்றி: இணையதளம்)

எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி 2018 விருது

Image may contain: 4 people, text

 

 

 

 

 

 

 

 

2018 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது மதிப்பிற்குறிய எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ” சஞ்சாரம்” என்ற நூலுக்காக வழங்கப்பட்டிருக்கிறது. 

இலக்கிய உலகில் அனைவரும் ஒருசேர இதை வரவேற்றிருக்கிறார்கள். 

தகுதி வாய்ந்தவருக்கும் தகுதி வாய்ந்த நூலுக்கும் கிடைத்த  விருது இது. 

இலக்கிய வாசகர்கள் அனைவரும் இந்த விருதைத் தாங்களே பெற்றதுபோல் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். 

புத்தக நண்பர்கள் குழுவில் இந்த நூலைப்பற்றி விமர்சனம் செய்தபோதே  இந்த நூலுக்கு விருதுகள் குவியவேண்டும் என்பதே அனைவரது எண்ணமாக இருந்தது. 

 திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு குவிகம் இதய பூர்வமான வாழ்த்துதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது! 

 இதற்கான அவரது ஏற்புரையை சுருதி டிவி  வழங்கியுள்ளது. அதை இங்கே பதிவுசெய்வதில் பெருமகிழ்வு எய்துகிறோம். 

(நன்றி சுருதி டிவி )

 

கார்த்திகை

Image result for கார்த்திகை திருவிழா

 

தீபாவளிக்குப் பிறகு நாம் சிறப்பாகக் கொண்டாடுவது கார்த்திகை!

கார்த்திகைக்கு  அவல் மற்றும் நெல்  பொரி உருண்டைகள் ,  வேர்கடலை உருண்டை , பொட்டுக்கடலை உருண்டை, அப்பம், சுகியன் , வடை பாயசம் செய்வார்கள்.
கார்த்திகை முருகப் பெருமானின் ஜன்ம நட்சத்திரம். முருகன் கோவில்களிலெல்லாம் அன்று அமோகமான அலங்காரம், அபிஷேகம்!அறுபடை வீடுகளில்  கார்த்திகை நாட்களின் தரிசனத்திற்கு வரும் கூட்டத்தின் அளவிற்கு எல்லையே கிடையாது. 

நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட…’, `கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்கைப் போன்றனவே….’ ஆகிய வரிகளின் மூலம் வீடுகளும் தெருக்களும் விளக்குகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ளன என்பதை சங்க இலக்கியங்களின்வழி அறியமுடிகிறது.

பன்னிரு தமிழ் மாதங்களுள் ஒன்று கார்த்திகை.  இந்த மாதத்தில் பெளர்ணமி, கார்த்திகை நட்சத்திரத்துடன் வருகின்ற நாளைத்தான் நாம் கார்த்திகை தீபமாகக் கொண்டாடுகின்றோம்.

கார்த்திகை என்பதற்கு `அழல்’, `எரி’, `ஆரல்’ போன்றவற்றைப் பொருளாகக் கொள்ளலாம். கார்த்திகை தீபம் என்றவுடன், நம் அனைவரின் கண்முன்னே வலம்வரும் காட்சி,  திருவண்ணாமலை தீபம் என்றால் அது மிகையில்லை.

இந்த கார்த்திகை விளக்கீடு எங்கெல்லாம் சொல்லப்பட்டிருக்கு நம் இலக்கியங்களில்?

கார் நாற்பது:

நலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட
தலை நாள் விளக்கின் தகை உடையவாகி,
புலம் எலாம் பூத்தன தோன்றி;-சிலமொழி!-
தூதொடு வந்த, மழை.

சீவக சிந்தாமணி:

தார்ப் பொலி தரும தத்தன்
தக்கவாறு உரப்பக் குன்றில்
கார்த்திக விளக்கு இட்டு அன்ன வியர்த்துப் பொங்கி
கடி கமழ் குவளப் பந்தா

நற்றிணை: பாடல் 58

“வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண் கோடு இயம்ப, நுண் பனி அரும்ப,
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்த

வீரை என்னும் ஊரிலிருந்துகொண்டு ஆண்ட வேளிர்குடி அரசன் வெளியன். அவன் மகள் தித்தன். அவன் முரசில் திரி போட்டு விளக்கேற்றி வைத்தான். மாலையில் அந்த விளக்கை ஏற்றியபோது வெண்சங்கு ஊதப்பட்டது. பனி பொழிந்தது. (இந்தக் காலத்தில் போருக்குச் சென்ற தன் தலைவன் மீள்வான் எனத் தலைவி நம்புகிறாள்.)

கார்த்திகைக்கு இன்னொரு பெயர் ஆரல்(ஆஅல்).

மலைபடுகடாம் – பாடல் 99-101

பெயலொடு வைகிய வியன்கண் இரும்புனத்து
அகலிரு விசும்பின் ஆஅல் போல
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை’

 

தமிழ் நூல்கள் குறிப்பிடுவது மட்டுமன்றி கல்வெட்டுகளும், கார்த்திகைப் பெருவிழா கொண்டாடியதை எடுத்துக்காட்டுகிறது. முதலாம் ராசேந்திர சோழனின் ஒன்பதாம் ஆட்சியாண்டில் (கி.பி.1021) வெட்டப்பட்ட கல்வெட்டில் கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் விளக்கெரித்ததற்கு பதினாறு நாழி நெய்க்காக பதினாறு ஆடுகளை திருப்பாற்றுத்துறை மக்கள் கோவிலுக்குத் தானமாகக் கொடுத்த செய்தியினைக் குறிப்பிடுகிறது.

தமிழ் மக்களின் பண்டைய விழாவான கார்த்திகை விழா, பிற்காலத்தில் புராணக் கதையோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. சமஸ்கிருத காவிய நாடகங்களில் கார்த்திகை பவுர்ணமி அன்று கவுமுதி மகோற்சவம் என்ற நிறைமதி விழா நடைபெற்றதை குறிப்பிடுகிறது. ஈராயிரம் ஆண்டுகளாக இப்பெருவிழா சிறப்புற நடைபெற்று வந்ததை இலக்கியங்களும், கல்வெட்டுகளும் துணைநின்று நமக்கு சான்று பகர்கின்றது.

கார்த்திகை என்பது கார் -அதாவது மேகம் திகையும் காலம்.

கார்காலம் (மழைக் காலம்) முடிந்து கூதிர்காலம் (குளிர் காலம்) ஆரம்பிப்பது. மழையும் நின்று, பனியும் துவங்கும் ஒரு மயக்கமான காலம்.

அந்நாளில் போர் நடக்கும்போது ஊரைவிட்டு, வீட்டைவிட்டுச் சென்ற வீரர்கள் கார் (மழைக்கு) முன்பே வீடு திரும்பிவிடுவர். மழைக் காலத்தில் போர் நடக்காது.

ஆனால் முக்கியப் பணி/களத்தலைவர் மட்டும் களம் நாட்டி இருந்து, கூதிர் காலம் வரும்போது திரும்பி வரல் மரபு!

பனி பெய்யும்முன் வரும், படைத் தலைவர்களை வரவேற்க விளக்கு ஏற்றி வைப்பது. சீக்கிரம் இருட்டிவிடும் காலமாதலால், ஒளி பழக தீபம் நிறைப்பதே விளக்கீடு!

ஆஅல் என்பது கார்த்திகை மாதத்தில் தோன்றும் கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டத்தைக் குறிக்கும். இந்த மீன் கூட்டத்தின் வெண்ணிறம் போல முசுண்டைப் பூ மலர்ந்ததாம்.

இவையெல்லாம் இயற்கை / பருவ கால மாற்றத்தைக் குறிக்கும் தீபங்களே. எதிலும் புராணக் கதைகள் இல்லை.

மெய்த் தமிழ் அறிவோம். கார்த்திகை விளக்கீடு வாழ்த்துக்கள் !

தலையங்கம்

 

Image result for election 2019

 

வரப்போகிற 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்  வருகிற 5 மாநிலங்களுக்கான தேர்தல் அதன் முக்கியத்துவத்தைக் கருதி அரை இறுதித் தேர்தல் ( செமி  பைனல்)  என்று சொல்லப்பட்டது.

அப்படிப்பட்ட தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.

அதன் முடிவுகள்பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி  மூன்று மாநிலங்களை இழந்துள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர்,மத்தியப்பிரதேசம் மூன்றும் பா ஜ க விற்கு தூண்கள் என்று சொல்லப்பட்டன.  அந்தத் தூண்கள் சரிந்துள்ளன.

தெலுங்கானாவின் சந்திரசேகர் ராவ் அமோக வெற்றிபெற்று காங்கிரஸ் மற்றும் தெலுகுதேசம் கூட்டணியை மண்ணைக் கவ்வச் செய்திருக்கிறார்.பா ஜ க மருந்துக்காக ஓரிரு  தொகுதிகளில்  வெற்றி பெற்றிருக்கிறது.

காங்கிரஸ் வசம் இருந்த மிசோரம் தற்போது உள்ளூர் கட்சியின் கையில்.

அதுமட்டுமல்ல;

பா ஜ க ஆண்ட  மூன்று மாநிலங்களிலும்  காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.

எந்த காங்கிரஸ் ? முழுதும் அழிக்கப்பட்டுவிட்டது என்று   பா ஜ கா வினால் அறிவிக்கபட்ட கட்சி!

பப்பூ என்று தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்ட ராகுலின் தலைமையில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.

இதை பா ஜ கவின் தோல்வி என்று குறிப்பிடவேண்டுமேதவிர காங்கிரஸின் வெற்றி என்று எடுத்துக்கொள்ள முடியாது.

பா ஜ க பல ஆண்டுகளாக இந்த மாநிலங்களில் ஆண்டு வந்ததால் மாற்றத்தை வேண்டி மக்கள் பா ஜ க வை நிராகரித்திருக்கலாம்.

அல்லது மாநில அளவில், மக்களின்  எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை என்ற நிராசையின் காரணமாயிருக்கலாம்.

அல்லது மதச்சார்பின்மையா இந்துஸ்தானா என்ற ஒற்றையா ரெட்டையா கேள்விக்கு மக்கள் அளிக்கும் பதிலாயிருக்கலாம்.

யாராலும் சொல்லமுடியாது.

முக்கியமான கேள்வி எல்லோர் மனதிலும் தற்சமயம் எழுவது:

இது 2019இல் வரப்போகும் பொதுத் தேர்தலை எப்படிப் பாதிக்கும்?

பாதிக்காது என்பது நம் எண்ணம்.

மாநில அரசியல் வேறு, மத்திய அரசியல்  வேறு.

கூட்டணி இல்லாத ஒரே கட்சி ஆண்டால்தான் நாட்டுக்கு நல்லது.

அதற்கு பா ஜ க தான் வரமுடியும்.

அதற்காக பா ஜ க வும் தங்கள் கொள்கையில் சரியான மாற்றங்கள் கொண்டுவரவேண்டும்.

செய்வார்களா?

 

 

இலக்கியச் சிந்தனை + இலக்கிய வாசல்

இடம்:  ஶ்ரீனிவாச காந்தி நிலையம், அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை

நாள்: 29.12.18 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில்

இந்த மாதம் இலக்கியச் சிந்தனை சார்பில் புதுவை ராமசாமி அவர்கள்

“ரசிகமணி  டி கே சி ” அவர்களைப் பற்றி பேசுகிறார்.

அதைத் தொடர்ந்து அதே இடத்தில் குவிகம் இலக்கியவாசல் சார்பில்  எஸ் கண்ணன்

அவர்கள் தீபாவளி மலர்களில் மிளிரும் இலக்கியத்தைப்பற்றி உரையாடுகிறார்.

அனைவரும் வருக.

 

சென்ற மாதம் நடைபெற்ற நிகழ்வுகள்:

 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

அனுபவம் !

விருட்சம் அழகியசிங்கர், ‘மனதுக்குப் பிடித்த கவிதைகள்’ – தொகுதி 1 ஐ பாரதி பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தார்! அதில் தனக்குப் பிடித்த கவிதைகளில் ஒரு நூற்றினைத் தொகுத்திருந்தார். நூறு கவிஞர்களின் கவிதைகளை ஒரு சேரப் படிக்கும்போது வித்தியாசமாக இருந்தது. எனக்குக் கவிதை எழுத வருமோ வராதோ, தெரியாது, ஆனால் ரசிப்பேன்! நூறாம் பக்கத்தில் உள்ள ஒரு கவிதை ‘அனுபவம்’ பற்றியது – ‘நீ மணி; நான் ஒலி!’ – படித்தபோது மனதில் தோன்றியவைகளை எழுதலாம் என்று தோன்றுகிறது! (கவிதையும் கவிஞரும் வியாசத்தின் கடைசியில்!).

அனுபவம் என்பது ‘பட்டறிவு’ – வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள், இடங்கள், நிகழ்வுகள், உணர்வுகள் இவை புதிதாய்த் தோற்றுவிக்கும் ‘அக அறிவு’ அல்லது ‘முன்னமேயே உணர்ந்திருத்தல்’ என்பதாய்க் கொள்ளலாம். இந்த வார்த்தையின் மூல வேர் சமஸ்கிருதத்திலிருந்து வருகிறது. “பவ” என்றால் ‘நிகழ்வது’, ‘ஆவது’ என இருபொருள் – நிகழ்வதை அறிவதும் ஆவதை உணர்வதுமே ‘அனுபவம்’ என்கிறது விக்கிபீடியா!

புரியும்படியாகச் சொல்லவேண்டுமானால், எக்ஸ்பீரியென்ஸ் (EXPERIENCE) தான் அனுபவம்!

ஐம்புலன்களுக்கும் அனுபவம் பெறும் அல்லது தரும் திறமை உண்டு – கேட்பது, பார்ப்பது, சுவைப்பது, உணர்வது என அனுபவம் நம்மை ஆக்ரமிக்கவல்லது.

படிப்பறிவைவிட, பட்டறிவு எப்போதுமே உயர்ந்ததாகப் படுகிறது. தனது அனுபவத்தினால் ஒன்றைச் செய்து முடிப்பவர், புதிதாய்ப் படித்து வரும் இளைஞரை விடச் சிறிது நன்றாகவும், நேர்த்தியாகவும் அந்த வேலையைச் செய்யக்கூடும். இதற்கு அவரது வயது மற்றும் அனுபவத்தினால் கிடைத்த திறமை காரணமாக இருக்கும். ஆனாலும், இன்றைய இளைஞர்களில் சிலர் இதற்கு விதிவிலக்காக இருக்கக்கூடும். ‘அனுபவம்’ ஒரு மனிதனை எப்படிப் புடம் போட்டு, முழுமையாக்குகிறது என்பதற்காக இதைச் சொன்னேன். (‘பெரிசுங்க எல்லாம் எப்பொவும் இப்படித்தான் பேசும்’ என்ற இளசுகளின் முணுமுணுப்பு காதில் விழுகிறது!)

குலம், தவம், கல்வி, குடிமை, மூப்பு எல்லாம் இருந்தாலும், உலகம் அறியாமை – அனுபவ ஞானம் இல்லாமை – என்பது நெய்யில்லாத வெண்சோற்றைப் போன்றதாகும் என்கிறது ‘பேதமை’ அதிகாரத்தின் பாடல் ஒன்று (நாலடியார் – 333 ஆம் பாடல்)!

அனுபவம் நம்மையறியாமலே நம்முடன் சேர்ந்துவிடுகிறது – நல்ல அனுபவங்கள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. கெட்ட அல்லது தீய அனுபவங்கள் மனதுக்கு வருத்தத்தை அளிக்கின்றன. எந்த அனுபவமானாலும், அது ஏதோ ஒன்றை மனிதனுக்குக் கற்றுக்கொடுக்கத் தவறுவதில்லை! கற்றுக்கொள்ள மறுப்பவன் முன்னேற்றம் காண்பதில்லை! கற்றுக்கொண்டு அனுபவசாலியானவன் ஞானத்தை அடைகின்றான்!

நம் அனுபவம் மட்டும் அல்ல – நம்மைச் சுற்றியுள்ள அனைவரின் அனுபவங்களும் நம்மை செம்மைப்படுத்துகின்றன. பிறருக்கு ஒரு நன்மையோ அல்லது தீமையோ நிகழும்போது, அந்த அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். நெருப்பு சுடும் என்பதை நாம் சுட்டுக்கொண்டுதான் அறிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை – பிறர் அனுபவத்திலிருந்தும் அறிந்துகொள்ளலாம். வாழ்க்கையில் அனுபவங்களைவிட வேறு சிறந்த ஆசான் இல்லை!

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் முழுவதும் அனுபவங்களின் படிப்பினைகள்தான் – வாழ்வின் அனைத்து அனுபவங்களையும், இந்து மத சித்தாந்தங்களுடன் இணைத்து அவர் சொல்லியிருக்கும் கருத்துக்கள் என்றென்றும், எல்லோருக்கும் பொருந்தி வருபவை!

‘பரமசிவன்  கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
‘கருடா செளக்கியமா?’
‘யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் செளக்கியமே’ கருடன் சொன்னது,
அதில் அர்த்தம் உள்ளது!

அவரது இந்தப் பாடல் அனுபவத்தின் வெளிப்பாடுதானே!

அனுபவங்கள் வாழ்க்கையைச் செப்பனிடுகின்றன – அனுபவங்களால் ஞானம் பெற்றவர்கள்தானே பட்டினத்தாரும், பத்ரகிரியாரும்?

எல்லாவற்றுக்கும் அனுபவம் தேவை என்கின்றன ‘வேலை வாய்ப்பு’ விளம்பரங்கள்!

அனுபவம் நிராகரிக்கப்படும் ஒரே விளம்பரம் “மணமக்கள்” தேவை என்னும் மேட்ரிமோனியல் விளம்பரம் மட்டுமே!

இப்போது அந்தக் கவிதையும் கவிஞரும்!

கவிதை:
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்;
……………….

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்;

‘அனுபவித் தேதான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!
-கவிஞர் – கண்ணதசன்.

அனுபவமே ஆசான். அனுபவமே கடவுள்! அனுபவமே நீயும். அனுபவமே நானும்!!

டாக்டர் ஜெ.பாஸ்கரன்.