இல்லாதவன் – நிலா ரவி

Image result for life after death

வெண்ணிலாவையும் விண்மீன்களையும் தொலைத்த தனிமையில் கருமை பூசிக்கிடந்தது வானம். காணும் யாவிலும் காரிருள் கவ்விக் கொண்டிருந்த ஓர் இரவு. காற்றின் தீண்டல் இல்லாது கற்சிலைகளாய் உறைந்திருந்தன மரங்களும் செடிகளும் . பகல் முழுவதும் சுட்டெரித்த அனலின் தாக்கம் நீறுபூத்த நெருப்பாக்கி இருந்தது இரவை.

தவளையின் குரலொன்று தனித்து ஒலித்தது இரவில். ஒரே மாதிரியான சப்தத்தையே மீண்டும் மீண்டும் எழுப்பியது அது. சற்று நேரத்தில் அடங்கியது சப்தம். ஒரு நிசப்தம் அதனை விழுங்கியிருந்தது.
அந்த நிசப்தம் ஒரு நீண்ட சர்ப்பமாயிருக்கலாம். இம்முறை ஆந்தையின் குரல். அந்தப் பறவையும் பறந்து செல்ல ஓசைகள் யாவும் அடங்கி மீண்டும் அங்கே அமைதி பாசியென சூழ்ந்து கொண்டது. பகலின் இரைச்சல்களற்ற யாமத்தின் மௌனத்தில் பூமி இயல்பாய் இருப்பதாகப்பட்டது அவனுக்கு.

படுக்கையில் நெளிந்தான் அவன். இமைப் போர்வைகள் போர்த்திக்கொள்ள மறுக்க நெடிய இரவாய் நீண்டு கொண்டிருந்தது காலம். உறக்கம் இன்றித் தவித்தவன் கட்டிலைத் துறந்து பாய் விரித்துப் படுத்துப் பார்த்தான் தரையில். ஏனோ அவனுக்குள் ஏதேதோ எண்ணங்கள். மீண்டும் மீண்டும் நெளிந்தான் உறக்கமின்றி. வீடு மாத்திரம் அல்ல, ஏனோ வீதியிலிருந்த விளக்குகள் யாவும் அணைந்திருந்தன. மொத்த உலகுமே ஒரு குகைக்குள் அடைபட்டதுபோல் .

அந்த நடுநிசியின் நிசப்தத்தையும் இருளையும் கிழித்து ஒலித்தது ஒரு குரல். அவன் இதுவரை கேட்டிராத ஒரு அதிசய குரல் அது.
தன் காது மடல்களைக் கூர்மையாக்கி மீண்டும் அந்தக் குரலைக் கேட்டான் அவன்.
யாரோ யாசகம் கேட்கிறார்கள், அவனது இல்லத்து வாசலில், இந்த நடு நிசியில்.
யார் இந்த நிசியில் அதுவும் தனது வாசலில். வியப்பில் விரிந்தன அவனது விழிகள்.

தானே நித்ரா தேவியிடம் யாசகம் கேட்கையில் தன்னிடமே யாரோ யாசகம் கேட்பது! களைப்பும் சோர்வும் அவனை கட்டிப் போட்டிருக்க எழுந்திட மனமில்லாமல் படுத்துக்கிடந்தபடியே “இல்லை” என்ற பதிலை மட்டும் உரக்கமாக உரைத்தான் அவன்.
“க்ளுக்” என்று சிரித்தது அந்தக் குரல். “எதை நீ இல்லை என்கிறாய்…?”
சிரித்துக் கொண்டே மீண்டும் கேட்டது…
“எதை நீ இல்லை என்கிறாய் இருப்பையா அல்லது
இன்மையையா…?”

“யார் நீ…?” என்றான் அவன்.
“உன்னை நீ அறிவாயா…?” என்றது அந்தக் குரல்.
“எனது உறக்கத்தை ஏன் இப்படிக் கலைக்கிறாய்…?” என்றான்.
“உறங்குபவனே விழிப்பை நீ அறிவாயா…” என்றது குரல்.
” கேள்விகளுக்குப் பதில் கேள்விகளா…”
அவனது புருவங்களை கவ்வி இழுத்துக் கைது செய்தன அந்தக் கேள்விகள்.

“கண்களால் எதையும் காண முடியாத இந்தக் காரிருளில் ஏன் வந்திருக்கிறாய்…” என்று கேட்டான் அவன்
“கண்கள் என்பது எது ? இருள் என்பது எது ?
இருள் என்று எதுவுமில்லை.
கூகையின் விழிகொண்டு காண்…இருளென்று ஏதுமில்லை…” என்றது.

சில நிமிடங்கள் மௌனமானான் அவன். நிசப்தம் நிரவியது மீண்டும் அங்கு .
“இல்லாதவனா நீ… இத்தனை நேரம் எனை ஏன் காக்க வைக்கிறாய்…?”
இம்முறை முதலில் வினவியது அந்தக் குரல்.

“யாமத்து யாசகனே, நாவடக்குகிறாயா. நானொன்றும் இல்லாதவனில்லை.
எனது இருப்பை அறிவாயா நீ. அதை நான் உனக்குச் சொல்வதற்கில்லை.
எப்போதும் கொடுப்பவன்தான் நான்.
இன்றுதான் உறக்க மயக்கம்”
பதிலுரைத்தான்.

மீண்டும் சிரித்தபடி…
அவனது வார்த்தைகளையே திரும்பச் சொன்னது அது.
“உண்மைதான்
நீ இல்லாதவனில்லை…
நானும் இல்லாதவனில்லை
நாம் இருவரும் இங்கிருப்பதால்…
எனில் இல்லாதவன் என்று யாருமில்லை…”

“அவ்வாறெனில் இவ்வாறு யாசகம் கேட்பது வெட்கமாக இல்லையா உனக்கு…”
“யாசகம் தருவதில் விருப்பம் இல்லையா உனக்கு…”
“பிச்சைக் கேட்கும் உன்னிடம் எவ்வளவு அகந்தை…”
“அகத்தைச் சுருக்கி தைப்பது “அகந்தை”…விரித்திடு உன் அகத்தை.”
“எல்லாவற்றுக்கும் பதில் தருகிறாய்…எனினும் இல்லாதவன்தானே நீ…”
ஏளனமாய் கேட்டான்.

“நீ “இருப்பை” மறுப்பதால்தானே
நான் இல்லாதவனாயிருக்கிறேன்…
“இல்லாதவன்” ஆகிய நானும் இங்கிருக்கிறேன்.
உனது கண்களின் முன்பே.
இல்லாதவர்கள் இருப்பது இருப்பை மறைப்பதால், இருப்பை மறுப்பதால்.
இருப்பைப் பகிர்வதால் இல்லாதவன் மறைவான், இருப்பை மறுப்பதால் இல்லாதவன் இருக்கிறான்.
ஆனால் உன்னிடம் விழிக்கவோ தேடவோ மனமில்லை. அதற்கான பொறுமையுமில்லை. அதனால் தான் உன் சௌகரியங்களில் எளிதாக விடைகொள்கிறாய்,
“இல்லை” யெனும் பொய்மையை…”
தீர்க்கமாய் ஒலித்தது அந்தக்குரல்.
பொறி தட்டினாற் போல்அவன் எழுந்து உட்கார்ந்தான்.
எதையோ பெற்றுக்கொண்ட விழிப்பு அவனுக்குள்.
இங்கு யாசகன் யார்…
அவனா இல்லை நானா..?
ஈதவன் யார்…?
ஈதவன் அவனெனில்
இல்லாதவன் யார்…?
அவனது உடலெங்கும் ஓடும் உதிரம் முழுவதும் ஒரு நொடி உறைந்து நின்று மீண்டும் ஓடியது.
துள்ளி எழுந்தான், துயில் துறந்தான்.
எழுந்து நின்று வாசலை நோக்கிக் கால்களை நகர்த்த எத்தனித்தான். நகர்த்த முடியாமல் கயிறாக அவன் கால்களை சுற்றியிருந்தது போர்வைகள்.
கைகளை அசைத்துப் பார்த்தான். கைகளையும் அந்தக் கயிறுகள்தான் பிணைத்திருந்தன. தன் உடல் முழுவதையும் அது பிணைத்திருந்ததையும் உணர்ந்தான்.
கைகளையும் கால்களையும் உதறினான். நீங்குவதாய் இல்லை அந்தக் கட்டுகள். தன்னை இறுக்கமாகப் பிணைத்திருந்த அந்தக் கட்டுகளை மிகுந்த பிரயத்தனத்திற்குப் பின் அவிழ்க்க முயன்றான். அவிழ்க்க அவிழ்க்க அது நீண்டுகொண்டிருந்தது. தொடர்ந்து கட்டவிழ்க்கக் கலைந்து கிடந்தவை மலைபோல் குவியத் துவங்கின. மலைத்து நின்றான் அவன்.
யுகயுகங்களாய், ஜென்மஜென்மமாய் தன்னை அவை பிணைத்திருப்பதாகவே நினைத்தான் அவன். கட்டவிழ்த்துக் கட்டவிழ்த்து களைத்துப்போனான் அவன்.
அப்போதுதான் எங்கிருந்தோ அந்த மாயக் கைகள் அவனது துகிலுரிக்கத்
துணையாக வந்தது.

இந்தக் கைகள்…
இந்தக் கைகள்…
நிறைந்த சபையில் மாதொருத்தியின் மானம் காக்க துகில் தந்த அந்தக் கைகள்…ஏனோ அவனது நினைவுக்கு வந்தது.
அவனது கட்டுக்களை பந்தங்களை விடுவிப்பதும் இன்று அந்தக் கைகள்தானோ.
போர்வைகள் அகல அகலக் கட்டுகளிலிருந்து விடுதலையாகி நிர்வாணமாய் நின்றான் அவன்.
வாசலை நோக்கி ஓடினான்
கதவுகளைத் திறந்தான்…
விழிகளை விரித்துப் பார்த்தான்.
யாசகன் மறைந்திருந்தான்.
அங்கு ஔி நிறைந்திருந்தது…

சற்று நேரம் அந்த ஒளியில் நனைந்தபடி நின்றான் அவன். சில மணித்துளிகளில் அந்த ஒளி மறைந்தது.

அறைக்குத் திரும்பியவன் அவனது கட்டிலில் யாரோ உறங்குவது கண்டு திகைத்தான்.
போர்வையை நீக்கி முகம் பார்த்தான்.
அவனது முகம் தெரிந்தது.

நிலாரவி.

4 responses to “இல்லாதவன் – நிலா ரவி

 1. துவக்கமே அருமை. அழகான வர்ணனை. இரவு எத்தனை அழகாக வர்ணித்துள்ளீர்கள். தத்துவ கதை தித்திக்குறது. காரணம் அழகான வரிகள். வாழ்த்துக்கள் தோழரே

  Liked by 1 person

 2. நள்ளிரவு நேரத்தை மிகவும் நேர்த்தியாக நயம்பட வருணித்திருப்பது அருமை!
  இருப்பை மறைப்பதால் இல்லாதவன் என்றும் கண்ணில் தென்படவில்லையென்பதால் இல்லையென்றாகாது என்ற இறை நம்பிக்கையையும் இலக்கிய நயத்துடன் வெளிப்படுத்தியுள்ளீர்கள்!! அருமை!!! அருமை!!! அருமை!!!

  Like

 3. தங்கள் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
  நிலாரவி.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.