கண்ணாடி மேனி முன்னாடி போக
தள்ளாடி உள்ளம் பின்னாடி போக
பூவிழி என்ன புன்னகை என்ன ஓவியம் பேசாதோ..
பேசாதோ.. ஓவியம் பேசாதோ.. உயிரோவியம் பேசாதோ..
பயிற்சி மையத்தின் முதல் அனுபவத்தில் சந்தித்த பலரை அதற்குப்பிறகு சந்திக்க நேர்ந்ததில்லை. வாழ்க்கையில் நன்றாகச் சாதித்த கோபதியை ஒருமுறை அலுவலக நண்பர் ஒருவர் திருமணத்தில் பார்த்தேன். அந்த நண்பர் தொழிற்சங்கத்தில் ஒரு முக்கியப் பதவியில் இருந்தார். அப்போதுதான் கோபதி எங்கள் நிறுவனத்திலிருந்து ராஜினமா செய்துவிட்டு ஐ.ஏ.எஸ்.பயிற்சிக்கு முஸ்ஸோரி செல்லவிருந்தான். அதற்குமுன் இயன்றவரை பழைய நண்பர்களைப் பார்ப்பதற்காக சென்னையிலிருந்து வந்திருந்தான்,
அடுத்தமுறை அவனைப் பார்த்தது மாவட்டத் தலைநகரில் ஒரு பெரிய அரங்கத்தில். அரசாங்கத்தால் மாவட்ட அளவிலான செயலாக்க மற்றும் திட்டங்கள் எந்த அளவிற்குச் செயலாக்கப்பட்டுள்ளன என்பதினை மதிப்பிடும் கூட்டம். எல்லாத் துறைகளையும் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களையும் சேர்ந்த மாவட்ட அளவிலான தலைமை அதிகாரிகள் கலந்து கொள்ளவேண்டிய கூட்டம்.. அந்தத் தலைமை அதிகாரியுடன் சில உதவியாளர்களும் தேவைப்படுவார்கள். எங்கள் நிறுவனத்தின் மாவட்டத் தலைமை அதிகாரி மூன்று உதவியாளர்களுடன் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எங்கள் நிறுவனத்திற்காக அந்த வரிசையில் நான்கு இருக்கைகள் ஒதுக்கி இருந்தார்கள். அதுபோன்ற கூட்டங்களில் தலைமை அதிகாரிமட்டுமே பேசுவார் என்றாலும், விவாம் தெரிந்த இரண்டு மூன்று உதவியாளர்கள் உடன் சென்று தேவைப்பட்ட புள்வி விவரங்களையோ , திட்டங்களின் தற்போதைய நிலவரத்தையோ எடுத்துக் கொடுக்க தயாராக இருப்பார்கள். விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் உதவியாளர்கள் அதற்குத் தேவைப்படுவார்கள். என்னை அது போன்ற முக்கியமான வேலைகளுக்குத் தகுந்தவனாக யாரும், நான் உட்பட, கருதவில்லை.
இம்முறை ஒரு நெருக்கடி நேர்ந்துவிட்டது. எல்லோரும் கிளம்புவதற்குக் கார்கூட வந்துவிட்டது. கூடப் போகவேண்டிய மூவரில் ஒருவருக்கு வயிறு சரியில்லாமல் போய்விட்டது. அவரால் இருக்கையில் ஒரு பத்து நிமிடம் உட்காரக்கூட முடியவில்லை. கூட்டத்திற்கு அவர் போவதற்கு வாய்ப்பே இல்லை. அதேசமயம் ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் ஒன்றை காலியாக விட்டால் பலர் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிவரும். காரணத்தைச் சொல்லவும் முடியாது. கடுமையான விமர்சனம் வருமோ என்று பயம் வேறு.
துரதிஷ்ட வசமாக வேறு யாரும் இல்லாததால், உப்புக்குச் சப்பாணியாக என்னை அழைத்துப்போகும்படி ஆகிவிட்டது. காலி இருக்கையை நிரப்புவது ஒன்றுதான் என்னால் உபயோகம்.
கூட்டம் தொடங்கியது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் முதலில் மாவட்ட அதிகாரி, அடுத்து மற்ற இரு உதவியாளர்கள் , கடைசி இருக்கையில் நான். எனக்கு முன்னாலும் ஓரிரு கோப்புகள் வைக்கப்பட்டன.
கூட்டம் தொடங்கியது. கூட்டத்தை நடத்தியவர் மாவட்ட ஆட்சித் தலைவர். சென்னையிலிருந்து வருவாய் துறை உறுப்பினர் வந்திருந்தார். ஒவ்வொரு துறையாக, ஒவ்வொரு நிறுவனமாக ‘ரெவ்யூ’ நடந்தது.
மாவட்ட ஆட்சித் தலைவர் சில கேள்விகள் கேட்பார். சென்னை அதிகாரி குறுக்கிட்டு, சில கேள்விகள் கேட்பார். பதில் சொல்லும் அதிகாரி மிகுந்த கவனத்துடன் பதிலளிப்பார். புள்ளி விவரங்கள் தேவைப்படும்போது உதவியாளர்களில் ஒருவர் ஒரு காகிதத்தைக் கொடுப்பார். அதிலிருந்து துறைத் தலைவர் பதிலளிப்பார். திருப்திகரமான பதில் இல்லாவிட்டால் சிலசமயம் மாவட்ட ஆட்சித் தலைவர் திட்டாத குறையாகக் கடுமையாகப் பேசுவார். சென்னை மேலதிகாரி வருவாய்துறை போர்ட் உறுப்பினர் என்று சொன்னார்கள். அவரும் ஏதேனும் கண்டனம் தெரிவிப்பார்.
தங்கள்முறை அதிக பிரச்சினைகள் இல்லாமல் போகவேண்டுமே என்று கவலையோடும் இறுக்கத்தோடும் இருந்தார்கள். எங்கள் நிறுவனம் நேரடியாக ஆட்சித் தலைவரின் அதிகார வரம்பில் கிடையாதாம். எங்கள் தலைவர் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில்களை அளித்தார். அதிகக் கடுமையோ, கண்டனமோ இல்லாமல் அது முடிந்தது. ஆனாலும், அவர் அமரும்போது அந்த ஏர் கண்டிஷன் அரங்கிலும் அவருக்கு வியர்த்துப் போய்விட்டது.
“நெக்ஸ்ட்” என்றார் ஆட்சித் தலைவர். அடுத்து பதில் அளிக்க வேண்டியர் எனக்கு அடுத்த இருக்கைக்காரர். இன்னொரு முக்கியமான துறையின் தலைவர். போர்டு உறுப்பினர் பார்வை அவரை அடையும் முன்பு என்னைக் கடந்து சென்றது. ஒருகணம் எங்கள் இருவர் கண்களும் சந்தித்தன.
அப்போது ஒரு அதிசயம் நேர்ந்தது. அதிகாரப் படிகளில் எங்கோ உயரத்தில் இருந்த அந்த சென்னை அதிகாரி என்னைப் பெயரிட்டுக் கூப்பிட்டு, “ஹவ் ஆர் யூ?” என்றார்.
கோபதி….
வந்திருந்த அதிகாரி கோபதி. வெகு நாட்களுக்கு முன் எங்கள் நிறுவனத்தில் வேலையில் இருந்த, என்னோடு பயிற்சி மையத்தில் பழகிய, திருமணத்தில் சந்தித்த அதே கோபதி.
அசட்டுச் சிரிப்புடன் தலையை அசைத்தேன். எழுந்திருக்க வேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை. முழுக் கூட்டமும் என்னைப் பார்வையால் துளைத்தது. கூட்டம் தொடர்ந்தது. என்றாலும் நூற்றுக் கணக்கான கண்கள் என்னைத் துளைத்த அந்த நொடி … இன்று நினைத்தாலும் உடல் பதறுகிறது.
கூட்டம் முடிவடைந்ததும் கோபதி என்னைக் கூப்பிட்டனுப்பினா(ன்)ர். என் அண்ணன் பற்றிக் கூட விசாரித்தார். ஏதோ பதில் அளித்தேன் என்று நினைக்கிறேன்.
என் வாழ்க்கையிலேயே நாடகத்தனமான நிகழ்ச்சி இதுதான் என்று நினைக்கிறேன்.
நான் சொல்ல நினைத்தது பயிற்சி மையத்தில் சந்தித்த இன்னொருவனைப்பற்றி. பேச்சுவாக்கில் பிற்கால நிகழ்ச்சிக்குப் போய்விட்டேன்.
நமது நண்பன் சற்று வித்தியாசமானவன். நிறையப் பொய்கள். சொல்லும்போதே அது உண்மையல்ல என்று கண்டுபிடித்துவிடக் கூடிய பொய்களைக் கூட அஞ்சாமல் ஒரு சஞ்சலமும் இன்றி சொல்வான்.
அவனது தந்தை ஒரு பிரபலம். பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக் கூடாது என்பார்களே அது இவர் விஷயத்தில் மிகவும் பொருத்தம். அரியக்குடி, செம்மங்குடி என்று சங்கீத வித்வான்கள் மட்டுமே ஊரின் பெயரால் விளிக்கப்பட்டு வந்திருந்த காலத்தில், இவன் தந்தை ஊரின் பெயரால் விளிக்கப்பட்டு வந்த எழுத்தாளர். (ஆங்கரை, விம்கோ நகர், திசையன்விளை , இரணியல் என்று சில ஊர்கள் பிற்காலத்தில் துணுக்கு எழுத்தாளர்களால் பிரபலமானது வேறு விஷயம்.) பல புனைபெயர் கொண்டவர். பொதுவான வார மாத இதழ்களில் எழுதிய குடும்பப்பாங்கான கதைகள் இவரது பலம்.
சென்னையிலேயே வசித்துவந்த நமது நண்பன் வீட்டுக் கட்டுப்பாடுகள் இல்லாமல் ஐந்து நாட்களுக்காவது வெளியே தங்க இந்தப் பயிற்சிக் காலத்தைப் பயன்படுத்திக்கொண்டான். உள்ளூர் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வரலாம் என்று இருந்தது. இவன் ஏதோ பொய்யைச் சொல்லி எங்களுடன் அந்த லாட்ஜில் ஒரு அறையில் தங்கினான்.
மதுவிலக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அமல்படுத்தப்பட்ட நேரம். எங்கிருந்தோ பாட்டில் வாங்கிக்கொண்டு தினம் ஒரு நண்பன் வருவான். சற்றுநேரத்தில் அங்கு நான்கைந்து பேர் வந்து சேர்ந்துகொள்வார்கள். இரவு 12 மணிக்குமேல்தான் கலைவார்கள்.
முதல் நாளன்றே எப்படி இந்த ஏற்பாடுகள் செய்தான் என்பதுதான் ஆச்சரியம். நண்பர்களில் யாரோ ஒருவர் கேட்கவும் செய்தார். எங்கே கிடைக்கும் என்பது பழக்கம் உள்ளவர்களுக்குத் தெரியும். யார் வீடு ஃப்ரீ என்றோ அல்லது எங்கே யார் இதற்காக அறை எடுத்திருக்கிறார்கள் என்றோ செய்தி இரண்டு மணி நேரத்தில் போய்ச்சேர வேண்டியவர்களுக்கு சேர்வது கடினம் இல்லையாம்.
கேள்விகேட்ட நண்பரிடம் “உங்கள் ஊரில் சரக்கு எங்கே கிடைக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.. தெரியாது என்று தலை அசைத்தார்.
“நான் உங்கள் ஊருக்கு வருகிறேன். ஒரு மணிநேரத்தில் இடத்தைச் சொல்கிறேன் .” என்றான் சவாலாக. தொடர்ந்து “இதில் ஒரு தொழில் ரகசியம் இருக்கிறது” என்றான்.
கிடைக்கும் இடத்திலும், எங்கே கிடைக்கும் என்கிற தகவல் சொல்லக்கூடிய கடைகளிலும் முட்டை விளக்கு என்று சொல்லப்படுகிற ஒரு விளக்கு இரவு பகல் எல்லா நேரமும் எரியுமாம். இது எல்லா ஊரிலும் பொதுவான விதியாம்.
எட்டுமணிக்கு மேல்தான் அந்த ஜமா கூடும். ஒருநாள் பயிற்சி மையத்திலிருந்து லாட்ஜிற்குப் போக நான் கிளம்பியபோது கொஞ்சம் காலார நடந்துவிட்டுப் போகலாம் என்று அவன் கூப்பிட்டான்.
நேராகச் சென்றால் பத்து நிமிட தூரத்தில் இருந்த இடத்திற்கு ஊரைச் சுற்றி நாற்பது நிமிடங்கள் நடந்தோம். திடீரென ஒரு கடை முன் நிற்பான். கடைக்காரரிடம் ஏதோ சொல்லிவிட்டு வருவான். ஒரு அலுவலகத்தில் நுழைந்தான். வரவேற்பில் இருந்த பெண்மணி இவனைப் பார்த்துவிட்டு இன்டர்காமில் யாருடனோ பேசினாள். இவன் நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டான். தகவல் பரப்பும் முறை கொஞ்சம் புரிந்தது.
அவனுடன் நடந்த அந்த நாற்பது நிமிடங்களில் உதை வாங்காமல் அறையை அடைந்ததே எந்தச் சாமியாரின் ‘அற்புதங்க’ளுக்கும் குறைவில்லை என்றுதான் தோன்றுகிறது. வழியில் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் முதலில் சொன்ன பாட்டைக் கீழ் ஸ்தாயியில் விசிலடிப்பான். சில பெண்கள் திரும்பி முறைப்பார்கள். ஒன்றுமே நடக்காததுபோல் இவன் அவளைத்தாண்டிப் போய்விடுவான். பெரும்பாலான பெண்கள் வேகமாக நடந்து போய்விடுவார்கள்.
அந்த ‘பக் பக்’ அனுபவத்திற்குப் பிறகு அவன் இருக்கும் பக்கமே நான் போவதில்லை. அவன் ஒய்வு பெறும்வரை அவனைப்பற்றிய வம்பு தும்பு சேதிகள் அவ்வப்போது காற்றுவாக்கில் வரும். பெரிய பிரச்சினையாக ஏதும் ஆகவில்லை.
எல்லோராலும் மதிக்கப்படும் ஒருவருக்கு இப்படி ஒரு மகன் இருப்பது சற்று வினோதம்தான் என்று நினைப்பேன். வெகு நாட்கள் கழித்து கேள்விப்பட்ட விஷயம் இன்னும் வினோதம். இவனது தந்தையான எழுத்தாளர் நிழலான பத்திரிகைகளில் ‘பலான’ கதைகளை வேறு பெயரில் எழுதிவந்தது அம்பலமாகி சலசலப்பு ஏற்பட்டது.
வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன் என்பார்களே. அதுபோல இவன் சகோதரன் சாதுவாம் இவன் அந்தக்கால வகைப்பாட்டில் ‘தறுதலை’யாம். பெயர் மாற்றிவைத்து விட்டார்களோ என்று சொல்லும்படி சாது அண்ணன் பெயர் லீலாகிருஷ்ணன். ‘தறுதலை’ இவனோ சீதாராமன்.
இன்னும் ஒரு முரண். ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத லீலாகிருஷ்ணன் நாற்பது வயதிலேயே போய்ச் சேர்ந்துவிட்டான். ரிட்டையர் ஆகி வாட்ஸ்ஆப்பில் நண்பர்களுக்குத் தினமும் ‘குட் மார்னிங்’ அனுப்பும் சீதாராமன் சௌக்யமாக இருக்கிறான் .
(இன்னும் எவ்வளவோ இருக்கு )