ராகு கதை சொல்லி முடித்தபின் அவனைத் தண்டிக்கவேண்டும் என்று விஷ்வகர்மா தீர்மானித்து யோசித்து முடிக்குமுன் ஆயிரக்கணக்கான பாம்புகள் அறைக்குள் வருவதை அறிந்து திடுக்கிட்டார். ராகுவைத் தான் சற்றுக் குறைவாக எடை போட்டுவிட்டோமே என்று வருந்தினார். அதுமட்டுமல்லாமல் மிகவும் சக்திவாய்ந்த நாகலோக இளவரசிகள் நாகவல்லியும் , நாககன்னியும் இருப்பதைப்பார்த்து கொஞ்சம் கலக்கத்திலும் ஆழ்ந்தார்.
இருப்பினும் விஷ்வகர்மா எதற்கும் கலங்காதவர். எதையும் சமாளிக்கும் ஆற்றல் படைத்தவர். பிரும்மரையே எதிர்த்துத் தான் நினைத்ததைச் சாதிக்க முயன்றவர். தேவ சிற்பி என்பதால் தேவர்களாலும் மிகவும் மதிக்கப்பட்டவர். அதனால் அவருக்கு அதீதமான சக்திகளையும் வரங்களையும் வாரி வாரி வழங்கி இருந்தனர் ! அவரும் அநாவசியமாக யார் வம்பிற்கும் போகமாட்டார். அதேசமயம் தான் நினைத்த காரியங்களைச் சத்தமில்லாமல் முடித்துக்கொள்ளும் சாமர்த்தியம் அவரிடம் நிறைய இருந்தது.
ராகுவை சமாளிப்பது அவருக்குப் பெரிய சவாலாகத் தோன்றவில்லை. அந்த அறையின் ஒவ்வொரு இடுக்கிலும் பாம்புகள் புகுந்து இருக்கின்ற இடத்தையெல்லாம் அடைத்துக்கொள்ள முயலுவதையும் பார்த்தார். ராகுவின் கண்களிலும் நாக இளவரசிகளின் கண்களிலும் தெரியும் குரூரப் புன்னகையைக் கண்டார்.
ராகுதான் முதலில் பேச்சை ஆரம்பித்தான்.
” விஷ்வகர்மா அவர்களே ! “
“என்ன ராகு ! மீண்டும் ஒரு புனைவுக் கதையா?” – விஷ்வகர்மாவின் குரலில் தெரிந்த ஏளனம் ராகுவை என்னவோ செய்தது.
” புனைவுக் கதை இல்லை, விஷ்வகர்மா அவர்களே!, நினைவைவிட்டு என்றும் மறக்க முடியாத கதை! உங்களுக்கு” என்றான் ராகு.
” உண்மைதான் ராகு! என்னை இந்த அளவிற்கு ஏமாளியாக்க யாரும் நினைத்ததில்லை. “
“அது கடந்த காலம், விஷ்வகர்மா அவர்களே , நிகழ் காலத்திற்கு வருவோம்”
” வந்துதானே ஆக வேண்டும். முதலில் உன்னைத் தண்டிக்க உன்னிடமே யோசனை கேட்டேன். இப்போது இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க என்ன வழி ராகு?”
” சரியாகக் கேட்டீர்கள்! எனக்கு இரண்டு வரங்கள் நீங்கள் தரவேண்டும்”
“இது என்ன புதுமையான வரம் கேட்கும் வித்தையாக இருக்கிறது? நீ தவமும் செய்யவில்லை, நானும் தேவன் இல்லை”
” வரம் என்ற சொல் தவறான பிரயோகம் என்றால் சத்தியம் என்று வைத்துக் கொள்ளலாம்”
” சத்தியமா ? எதற்காகச் செய்யவேண்டும்?”
” உங்களுக்கு வந்துள்ள ஆபத்து சரியாகப் புரியவில்லை என்று நினைக்கிறேன் “
” ஆபத்தா? எனக்கா? நீ கோபக்காரன் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு வேடிக்கையாகப் பேசக் கூடியவன் என்பது எனக்கு இவ்வளவு நேரம் தெரியவில்லை”
” உங்கள் வேடிக்கைப் பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள் ! நாக இளவரசிகளும் அவளுடன் வந்திருக்கும் இந்த ஆயிரக்கணக்கான தோழிப் பாம்புகளும் உங்களுடன் விளையாட வரவில்லை. அவர்கள் அனைவரும் அக்கினி தேவனின் மானசீகப் புதல்விகள். அவர்களின் திறமையைப் பார்க்கிறீர்களா? ” என்று சொல்லி அப்போதுதான் சாளரம் வழியாக வரும் ஒரு சிறிய பாம்பைப்பார்த்து ராகு ஏதோ கட்டளையிட்டான். .அந்தப் பாம்பும் சாளரத்தில் நின்றவாறு வானத்தைப் பார்த்து சீறியது. வானத்தில் மிகப்பெரிய நெருப்புக் கோளம் ஒன்று உருவாகி அரண்மனைக்கு வெளியில் வெடித்துச் சிதறியது.
” அடேடே! அந்தச் சின்ன அக்கினிக் குஞ்சிற்கே இத்தனை வலிமை இருக்கிறதென்றால் இங்கிருக்கும் பெரிய பாம்புகளுக்கும் நாக இளவரசிகளுக்கும் ஏன் உனக்கும்கூட எத்தனை சக்தி இருக்கக்கூடும்? “
“இப்போதுதான் உங்களுக்கு விவரம் புரிய ஆரம்பித்திருக்கிறது விஷ்வகர்மா அவர்களே!”
” இவற்றிலிருந்து என்னையும் இந்த அரண்மனையையும் காப்பாற்றிக்கொள்ள நான் உனக்கு இரண்டு வரம் அல்லது இரண்டு சத்தியம் செய்துதர வேண்டும். அப்படித்தானே ராகு?”
” நீங்கள் புத்திசாலி விஷ்வகர்மா அவர்களே”
” என்னைப் பாராட்டுவதை விட்டுவிட்டு அந்த இரண்டு சத்தியம் என்னவென்று சொல்லலாமே?”
” ஆஹா! சொல்கிறேன் கேளுங்கள்! இந்திரனுக்கு நீங்கள் கட்டிக்கொடுத்த தேவேந்திரப் பட்டணம்போல நாகலோகத்தில் ஒரு மாபெரும் பட்டிணத்தை உருவாக்கித் தரவேண்டும்”
” அது மிக எளிது. அடுத்தது?”
” உங்கள் மகள் ஸந்த்யாவின் மூன்று குழந்தைகளில் ஒன்றை என்னிடம் தந்துவிடவேண்டும். அதுவும் அந்தப் பெண்குழந்தையை”
” அது மிகவும் கடினம். அதற்கு என் சம்மதம் மட்டும் போதாது. சூரியனுடைய சம்மதமும் ஸந்த்யாவின் சம்மதமும் வேண்டுமே?”
” எப்படியாவது கொண்டுவருவது உங்கள் பொறுப்பு”
” அது சரி, இந்த இரண்டு சத்தியங்களையும் செய்யமறுத்தால் ? “
” மறுக்கும் நிலையில் நீங்கள் இல்லை. இந்த விஷ்வபுரி – உங்களுடைய இந்த அழகிய நகரம் -அதில் உள்ள மாந்தர்கள் – எங்கள் கணவர் ராகுதேவனைக் கத்தியால் வெட்டினார்களே ! உங்கள் மனைவி- ஏன் நீங்கள் உட்பட அனைவரும் எம்முடைய நெருப்புக் கோளங்களால் அழிந்துபடுவீர்கள்” – நாக இளவரசிகள் இருவரும் ஒருமித்துக் கூறினார்கள்.
ராகு அவனுக்கே உரிய கவர்ச்சிகரமான புன்னகையுடன் விஷ்வகர்மாவின் பதிலுக்காகக் காத்திருந்தான்.
விஷ்வகர்மா தொண்டையைக் கனைத்துக்கொண்டு மெதுவான குரலில் பேசஆரம்பித்தார்.
” அதில் பெரிய சிக்கல் இருக்கிறது ! நாக இளவரசிகளே !”
” என்ன சிக்கல்?” ராகு உண்மையான கோபத்துடன் கேட்டான்.
” அந்த அக்கினிதேவன் உங்களுக்கு மானசீக பிதாவாக இருக்கலாம் ! ஆனால் அவன் என் மானசீக சிஷ்யன். அவனுக்கு யாரும் மாளிகை கட்டித் தர இயலவில்லை. அவனுக்கு அவன் நெருப்பிலிருந்தே எரியாத மாளிகை கட்டிக்கொடுத்தவன் நான். அன்றிலிருந்து அவன் என் சிஷ்யனாகி விட்டான். அது மட்டுமல்ல அக்கினியினால் எனக்கு எந்தவித கஷ்டமும் வராது என்று வரம் இல்லை சத்தியம் இல்லை இல்லை குரு தக்ஷிணை கொடுத்தான். “
ராகுவின் முகம் மாறத் தொடங்கியது.
” இன்னும் சொல்கிறேன் கேள் ! அதையும் மீறி அக்னியால் ஏதாவது ஆபத்து வருவதாக இருந்தால் அந்த நெருப்பை ஏற்படுத்தும் காரணியைக் கட்டுப்படுத்தும் மந்திரத்தையும் சொல்லிக்கொடுத்திருக்கிறான். அதைச் சொல்லட்டுமா ?” என்று சொல்லி விஷ்வகர்மா சிரித்துக்கொண்டே தன்னிடமிருந்த சிறிய சிப்பி ஒன்றை எடுத்து ஊதத்தொடங்கினார். மெல்லிய இசையுடன் பலத்த காற்று வந்தது. நின்ற இடத்திலிருந்தே அந்த அறையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே ஊதினார்.
“இந்த தேவ சிற்பி ஏதோ சூழ்ச்சி செய்கிறான்! நெருப்புக் கோளங்களைக் கக்கிவிடுங்கள்” என்ற சீறிய ராகுவின் உடல் தடுமாறியது.
அவன் கழுத்துக்குக் கீழே இருந்த பாம்பு உடலில் விஷ்வகர்மாவின் காற்றுபட்டதும் அது அப்படியே பனிக்கட்டிபோல் மாறி உறைந்துவிட்டதை உணர்ந்தான். அவனால் முகத்தைமட்டும் அசைக்க முடிந்தது. ஆனால் அவன் மனைவிகளுக்கோ அறையில் இருந்த மற்ற பாம்புகளுக்கோ அந்தப் பாக்கியம்கூட இல்லை. அனைவரும் அப்படியே பனிக்கட்டியில் செய்த பாம்புகள்போல் உருமாறி உறைந்து கிடந்தனர். சாளரத்தில் நின்று கொண்டிருந்த அந்தக் குட்டிப்பாம்பும் அதை தொடர்ந்து வர முயற்சித்த அத்தனை பாம்புகளும் பனிக்கட்டிபோல் உறைந்துகிடந்தன.
ராகுவால் எல்லாவற்றையும் உணரமுடிந்தது. விஷ்வகர்மாவின் பலமும் புரியஆரம்பித்தது.
“இப்போது நீ எனக்கு இரு வரம் தரவேண்டும்” என்று விஷமத்துடன் பேச்சைத் துவங்கினார் விஷ்வகர்மா
(தொடரும்)
(இரண்டாம் பகுதி)
நாரதர் எமியைப் பார்க்க எமி நாரதரைப் பார்க்க முப்பெரும் தேவியரும் ஓருவரை ஒருவர் பார்க்க அங்கே ஒரு கனவு சீன் டூயட் ஆரம்பிப்பதற்கான சரியான வேளை தயாராகிக்கொண்டிருந்தது.
ரஹ்மான் இசையில் நீல மலைச் சாரல் மாதிரி ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. நடு நடுவே அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
நீ எமிதானே ! உன்னை நான் வேறு எங்கோ சில மாதங்கள் முன்பு பார்த்திருக்கேனே!
நீங்கள் நாரதர்தானே ! உங்களை நானும் ஒரு விழாவில் பார்த்துப் பேசிய ஞாபகம் வருகிறது !
ஆம்! டில்லியில் நடந்த உலகக் கலாசார விழாவில்தானே நாம் சந்தித்தோம் !
“உண்மை! ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் நடத்திய விழாவாயிற்றே ! நீ ஒரு ராஜஸ்தானிய இளவரசிமாதிரி வந்து நடனமாடி முதல் பரிசு பெற்றவள்தானே !
உண்மை. என்னுடைய இடத்தில் அதாவது யமுனை ஆற்றின் கரையில் நடைபெற்ற விழா ஆயிற்றே! நான் மாறுவேடத்தில் கலந்துகொண்டேன். நீங்கள் அங்கே வயலினில் விஷ்ணு சகஸ்ரநாமம் இசைத்து அனைத்துலக மக்களின் மதிப்பைப் பெற்றவர்தானே ?
” உண்மைதான். நானும் அந்த விழாவில் கலந்துகொள்ளவே வந்தேன். மாறுவேடம் பூண்டு வயலினில் வித்தை காட்டினேன். “
” பரிசுபெற்ற நாம் இருவரும் அப்படியே என் கரை ஓரமாக ஆக்ரா சென்று தாஜ்மஹால் பார்த்தோம். அந்தப் பௌர்ணமி இரவில் தாஜ்மகாலின் பளிங்கு மண்டபத்தில் ஒருவரை ஒருவர் விழுங்கி விடுவதுபோல் சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம்”
” சில நிமிடங்கள்தானா? ? ஆயிரம் ஆயிரம் வருடங்கள் இருந்தமாதிரி நினைவு.”
” திடீரென்று ஒரு மின்னல் ! நாம் இருவரும் மறைந்துவிட்டோம். நீங்கள் ஆகாயத்தில் சென்றீர்கள். நான் நதியாய்த் தவழ்ந்தேன்
“இப்போது உன்னை சந்திக்கும்வரை அந்த எண்ணங்கள் எல்லாம் என் மனத்திலிருந்து யாரோ பறித்து எறிந்ததுபோல ஒரு உணர்வு”
” எனக்கும் அதே உணர்வுதான். என் மனதிலிருந்த உங்கள் நினைவை யாரோ ஒளித்துவிட்டதுபோன்ற உணர்வு. என் அப்படி ஆயிற்று நம் இருவருக்கும் ?”
” அது என் தந்தை பிரும்மர் செய்த சதி என்பதை இப்போதுதான் உணருகிறேன். “
” உண்மையைச் சொல்லுங்கள் ! அந்த கலாசார விழாவினால் என் யமுனைக் கரைக்கு பங்கம் விளைந்துவிட்டது என்று முதல்நாள் கிளப்பிவிட்டதே தாங்கள்தானே ?”
” உணமைதான். ஏதாவது கலாட்டா செய்யவில்லை என்றால் எனக்குத் திருப்தியே கிடையாது. மாசு வாரியத் தலைவரிடம் கொஞ்சம் போட்டுவாங்கினேன். விஷயம் காட்டுத்தீ மாதிரி பரவி ரவிஷங்கருக்குப் பெரிய பிரச்சினையில் கொண்டுபோய் விட்டது. கடைசியில் நமது கலகம் நன்மையில்தான் முடிந்தது. அதன்பின்தான் கங்கை யமுனை போன்ற நதிகளில் குப்பைகளைக் கொட்டக்கூடாது என்று சட்டம் கொண்டுவந்தார்கள். “
” இங்கே எப்படி வந்தீர்கள்? உங்களுடன் வந்த முப்பெரும் தேவியர்கள் எங்கே? உங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் அவர்களை மறந்துவிட்டேன். அண்ணன் வந்தால் கோபித்துக் கொள்வார்.”
” அவர்கள் எங்கும் போகவில்லை. வாசலில் தோட்டத்தில் அமர்ந்து ஒரு அழைப்பிதழைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நம்மையெல்லாம் சுத்தமாக மறந்துவிட்டு அவர்கள் மறைந்து போய்விடுவார்கள் பாரேன். “
அதேபோல் முப்பெரும் தேவியரும் சட்டென்று மறைந்துபோனார்கள்.
அதற்குக் காரணம் நாரதர் பையிலிருந்து கீழே விழுந்த அந்த அழைப்பிதழ்.
அது விவாத நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் .
எது பெரியது? ஆக்கலா? காத்தலா ? அழித்தலா? சாலமன் பாப்பையா தலைமையில் நடைபெறப்போகும் விவாத மேடையின் அழைப்பிதழ்.
” எங்கே போனார்கள் அவர்கள்?
” என்னை அறியாமலேயே நானே ஒரு புது கலகத்திற்கு வழி வகுத்துவிட்டேன். நாராயணன் சொன்னது சரியாகிவிட்டது. இனி இவர்களுக்குள் நடக்கப்போகும் பூசலை சமாளிப்பது மிகமிகக் கடினம். வா! நாமும் அந்த விவாத மேடைக்குச் செல்வோம்” என்று நாரதர் எமியிடம் கூறினார்.
(தொடரும்)