கனவு காணும் உரிமையினைக்
கட்டுப் படுத்த யாருமில்லை.
மனமும் கேள்வி தொடுப்பதில்லை
வந்து விதியும் கெடுப்பதில்லை
சினவில் வேந்தன் கனவினிலே
திரிந்து பிச்சை எடுப்பதுண்டு.
தினமும் இரந்து வாழ்பவனோ
செல்வச் சிறப்பில் மிதப்பதுண்டு.
ஏக்கம், துயரம் நோயெல்லாம்
இருந்த போதும் தனைமறந்த
தூக்கம் தன்னில் வரும்கனவு
துய்க்க வைக்கும் இன்பத்தை.
வாய்க்கும் கனவு சிலநேரம்
வாட்டித் துன்பம் தருவதுண்டு..
யார்க்கும் புரியாது அதன்தன்மை.
எவரே அறிவார் முழுஉண்மை ?
சென்ற கனவில் பொறிவண்டு
தேனை மலரில் அமர்ந்துகொண்டு
நன்று பருக நான்கண்டேன்.
நண்ணும் ஐயம் ஒன்றுண்டு.
மன்றில் மயங்கும் ஓர்வண்டின்
மாயக் கனவில் மானிடனோ
இன்று வாழும் என்வாழ்க்கை ?
எதுவோ உண்மை யாரறிவார்?