தனித்து நின்றதால் ? – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

ராகேஷ் மற்றவர்களைப்பற்றிய சிந்தனை உள்ளவன். பலமுறை என்னைச் சந்தித்து ஆலோசனை கேட்பதுண்டு. அவன் படிக்கும் பள்ளியில் நான் மனநலம் மற்றும் கல்வி ஆலோசகராக இருந்தேன். மாணவர்கள், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு உணர்வு-உறவாடல் ஆற்றல்கள் (social emotional learning) பயிற்சி தருவது என் பொறுப்புகளில் ஒன்று. இதுவே என்னுடைய “வரும் முன் காப்போம்” கருவி. இதை ஏன் சொல்கிறேன் என்றால், இந்தக் கண்ணோட்டம் உள்ளதால்தான் எங்களால் ராதிகாவின் இன்னல்களைப் புரிந்து, அணுகி சீர் செய்ய முடிந்தது.

புதிதாகச் சேர்ந்த ராதிகா எட்டாவது வகுப்பு மாணவி. அவளுடைய அப்பாவிற்கு இந்த ஊருக்கு மாற்றலானது. மேலாளர். பெரிய பதவியில் இருந்ததால் மாளிகைபோன்ற வீடு. அவருக்குக் கீழே வேலை செய்பவர்களின் பிள்ளைகள் ராதிகாவின் வகுப்பில் இருந்தனர். இவர்களில் பலருக்கு அவளிடம் பேசுவதற்கோ, பழகுவதற்கோ தயக்கமாக இருந்தது. அதனால் அவள் தனியாகப் பள்ளிக்கு நடந்து வருவாள், சாப்பிடுவாள்.

இவளைப்போல ஆறு மாணவர்கள் புதிதாக எட்டாம் வகுப்பில் சேர்ந்திருந்தார்கள். அவர்கள் எந்தவித கஷ்டமும் இல்லாமல் வகுப்பு மாணவர்களுடன் பழகினார்கள், ஒருவேளை அவர்கள் எல்லோரும் அக்கம்பக்கத்தில் இருந்ததாலோ, அல்ல பெற்றோர்கள் சமநிலை வேலையில் இருப்பதாலோ என்னவோ. ஆனால் ராதிகாவிடம் மற்ற மாணவர்கள் மேலோட்டமாகவே பழகினார்கள்.

இதை ராகேஷ் கவனித்துவந்தான். அவனும் அதே வகுப்பில் படிப்பவன். யாரையும் என்றுமே துச்சமாகப் பேசாதவன், அவரவர் சூழ்நிலை புரிந்து அனுசரித்துப்போவான். இவற்றால், சக மாணவர்களுக்கும் இவனிடம் பழக எளிதாக இருந்தது. உதவி தேவை என்றால் ஆண் மாணவர்களும், பெண்களும் அவனை அணுகுவார்கள். தன்னால் முடிந்தவரை உதவி செய்வான்.

அந்த வருட ஆரம்பத்தில் முதல் இரண்டு மாதத்திற்கு நான் பள்ளிக்கு வரமுடியாத சூழ்நிலை. நான் திரும்பிய முதல் நாளே ராகேஷ் என்னைச் சந்திக்க ஓடோடிவந்தான். வந்ததும் ராதிகாவைப்பற்றி விவரித்தான், தான் கூர்ந்து கவனித்ததைப் பகிர்ந்தான். ராதிகா ஆசிரியர்களுக்குப் பதில் அளிக்கும்போது வியர்வை அதிகம் ஊற்ற, சொல்லவந்ததை முடிக்கத் தடுமாறுவதைப் பார்த்து பரிதாபப்பட்டான், ஆனால் என்னசெய்வதென்று தெரியவில்லை. அவளுடன் மற்றவர்கள் பழகத் தயங்குவதையும் விவரித்தான். வகுப்பில் எல்லோரும் அவளுடைய அப்பாவின் பதவிக்கு பயந்தே பேசத் தயங்குகிறார்கள் என்று தன் கணிப்பைப் பகிர்ந்தான்.

“ஸோஷியல்-எமோஷனல் லர்னிங்” பயிற்சி அளிக்க ராதிகாவின் வகுப்பிற்கு வந்தபோது நானும் அவளைச் சந்தித்தேன். அவளுடைய பதிமூன்றாம் வயதிற்குச் சரியான உயரம். பயம் அவளுடைய கயல்விழியில் தாண்டவம் ஆடியது. அவள் போட்டிருந்த கூன் அவள் வெட்கப்படுவதை மேலும் காட்டியது.

எப்படி உதவலாம் என்று ராகேஷும் நானும் யோசித்தோம். எளிதான ஒன்றைத் தொடங்க முடிவெடுத்தோம். எங்கள் யுக்தி, ராதிகா பள்ளிக்கு வரும் வழியில் செல்வதென்று. ராகேஷ் பலருடன் சைக்கிளில் போவது பழக்கம். ராதிகாவைக் கடந்து போகையில் அவளிடம் ஹலோ சொன்னான். நாளடைவில் தோழர்களும் செய்தனர். அடுத்த கட்டத்தில் ஐந்து ஆறு அடி அவளுடன் அவர்கள் நடந்து சென்றார்கள். செய்யச்செய்ய, பரிச்சயம் ஆரம்பமானது. இப்படி, பழக்கம் வளர, சில நாட்களுக்குப்பிறகு அவளையும் சைக்கிளில் வரப் பரிந்துரைத்தான். வியப்புடன் அவளும் வர ஆரம்பிக்க, மெதுவாகப் பலருடன் முதல்கட்ட சினேகிதம் தொடங்கியது.

வகுப்பு ஆசிரியர்களும், அவர்களுக்கு நான் பயிற்சி அளிக்கும்பொழுது, ராதிகாவின் இந்நிலைகளைப்பற்றி தாங்களும் கவனித்ததாகப் பகிர்ந்தார்கள். ஆங்கில ஆசிரியையும், பூகோள ஆசிரியரும், பதில் அளிக்கும்போது, குறிப்பாக தன்னைப்பற்றியோ, இல்லை பாடங்களைப்பற்றிய கேள்விகளாக இருந்தாலோ ராதிகாவின் கால்கள் நடுங்குவதை கவனித்ததாகச் சொன்னார்கள். பதில் சொல்லச்சொல்ல சரியாகிவிடும் என்ற ஒரு நம்பிக்கையில் அவளிடம் கேள்விகளை அதிகமாகத் திருப்பினார்கள் என்று ஒப்புக்கொண்டார்கள்.

 

Related image

 

ராதிகா போன்றவர்களுக்கு எப்படி ஆசுவாசப்படுத்த முடியும் என்று கணக்கு வாத்தியாரும் தமிழ் டீச்சரும் கேட்டார்கள். ஒரு வழியை விவரித்தேன். கேள்வி கேட்டதும் சில மாணவர் பெயரைச் சொல்லி, அதிலிருந்து யார் வேண்டுமானாலும் பதிலைச் சொல்ல அழைக்கலாம் என்றேன். அப்போது, ராதிகாபோன்ற பதட்டம் உள்ளவர்கள் தங்களைத் தயாராக்கிக்கொண்டு பதில் அளிக்கக்கூடும். வகுப்பு அமைப்பே, பாடங்களைப் படிக்கையில் நம்மை முழு மனிதனாக்கவும்தான்.

சில நாட்களுக்குப்பிறகு அவளுடைய அம்மா விமலா என்னைச் சந்தித்தார். புதிய மாணவர்களின் குடும்பச் சூழல் புரிந்துகொள்ள பெற்றோரைச் சந்திப்பது என் பழக்கம். அதனாலும் ராதிகாவின் நிலையைப்பற்றி ஆலோசிக்கவும் அவள் வந்திருந்தாள்.

தான் அவளுடைய மாற்றாந்தாய் என்றாள். என்னை ஆலோசித்துச் சிலவற்றை சரிசெய்ய விரும்புவதாகப் பகிர்ந்தாள். தன் வளர்ப்பில் எந்தவித குறையும் இருந்துவிடக்கூடாது என்பதால், ராதிகாவை எல்லாமே சரியாகச் செய்யவேண்டும் என்று தான் எப்பொழுதும் திருத்திச் சொல்வதாகப் பகிர்ந்தாள். கூடவே, தான் இவ்வளவு கவனித்துச்செய்தும் ராதிகாவிற்குப் பதட்டம் உண்டாகிறது என்று தெரிவித்தார். தன்மேல் ஏதோ குறையினால் ராதிகாவிற்கு இப்படியோ என்று எண்ணி, அது தனக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினாள்.

இதை மையமாக வைத்து அடுத்த சில ஸெஷன்களில் ஆராய்ந்தோம். விமலாவின் எண்ணம், தன்னால் பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் என்னேரமும் தானே வழிகாட்ட வேண்டும் என்று நினைப்பதினால் ஏற்படும் இடையூறுகளைப்பற்றிப் பேசினோம். ராதிகாவிற்கு எப்போதும் தன்னை ஒரு பூதக்கண்ணாடியில் கண்காணிப்பதைப்போல் தோன்றுவதால்தான் அவளுக்குப் பதட்டம் ஏற்படுகிறது என்பதை எடுத்துச் சொன்னேன். அதாவது நல்ல எண்ணத்தில் செய்தாலும், ஒவ்வொன்றுக்கும் சொல்வதால் ராதிகா தன்னம்பிக்கை இழந்துவிடும் நிலையானது. எங்கே முடியவில்லை என்று சொன்னால் அம்மாவின் மனம் தளருமோ எனப் பயந்து பதட்டமாகிவிடுகிறது. இதனால்தான் அவளின் சலனமும் பயமும்.

இதன் இன்னொரு நேர்விளைவு – இங்கு சேர்ந்ததுமுதல் ராதிகாவின் படிப்பு சரிந்துகொண்டே போவதைப்பற்றியும் விமலா கவலைப்பட்டார். அவர்கள் மதிப்பெண் வராததைப்பற்றிக் கூடக் கவலைப்படவில்வை. ராதிகா படிக்க உற்சாகம் காட்டாதது சங்கடப்படுத்தியது. அவளுக்குத் தெளிவுபடுத்தினேன், ராதிகா போன்றவர்கள், முன் பரிச்சயம் இல்லாத, பழகாத, புது இடத்தில், மற்றவர்களுடன் பழகிக்கொள்ளச் சங்கடப்படும்போது உண்டாகும் சஞ்சலத்தினால் பாதிக்கப்படுவது: படிப்பு-உணர்வு- மற்றவர்களுடன் உறவாடுவது. இந்த மூன்றும் தான் ராதிகாவிடமும் ஊசலாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம் என்றேன். இதைச் சரிசெய்யும் வழிகளை அடுத்த ஸெஷன்களில் பேசி, வழிமுறைகளை வகுத்தோம்.

மேலும் ராதிகா இருக்கும் பருவநிலையில் தானாகச் சிந்தித்து முடிவு எடுக்க எடுக்க, நல்லது-கெட்டதைத் தேர்ந்தெடுக்கும் திறன்களை வளர்த்துக்கொள்ளும் பருவம் இது என்றும் விளக்கினேன். விமலா இதைச் செயல்படுத்தப் பல வழிமுறைகளை நாங்கள் யோசித்தோம். நான் வகுப்பில் நடத்திவரும் “ஸோஷியல் எமோஷனல் லர்னிங்” பற்றியும் விவரித்தேன். தன் சந்தேகங்கள் தெளிவாக, முகம் மலர்ந்து விமலா பெருமூச்சுவிட்டாள்; தனக்குத் தெம்பு வந்ததைத் தெரிவித்தாள்.

வகுப்பில் மற்றவர்களுடன் நன்றாகப் பழக ஒன்றைச் செய்யச் சொன்னேன். எல்லோரும் வகுப்பில் ஒவ்வொருவரிடமும் இதுவரை மற்றவர்களுக்குத் தெரியாத ஒரு திறனைக் கண்டுபிடித்து அடுத்த வாரம் வகுப்பில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று.

நான் கணித்தபடி, இதிலிருந்து ராதிகாவை வகுப்பில் ஏற்றுக்கொள்வது ஆரம்பமானது! ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்தாக வேண்டும்! ராதிகாவிற்கும் அதே கதி, மற்றவருக்கும் அதே நிலை. எப்படியாவது மற்றவருடன் பேசவேண்டிய சூழ்நிலையைத் தெரிந்தே உருவாக்கினேன்.

ராதிகா சோப்பை விதவிதமாக செதுக்குவதை ஸௌதா கண்டுபிடித்தாள். வகுப்பில் எல்லோருக்கும் இது வியப்பைத் தந்தது. ஆச்சரியப்பட்டார்கள். எப்படிச் செய்வது எனக் கேட்டார்கள். ராதிகா அப்படியே வெட்கப்பட்டுச் சொல்ல முயன்றாள், முடியவில்லை. உடனே ராகேஷ் எழுந்து, “ராதிகா நாளை மேடத்தை வரச்சொல்லிக் கேட்டுக்கொள்வோம். நீ செஞ்சு காமிக்கறியா?” அவள் திகைத்தபடி அவனைப் பார்த்தாள். புன்னகையுடன், “ம்..என்ன?” என்றான். மெதுவாகத் தலையை அசைத்தாள், உடனே முழு வகுப்பும்,  ஒரே குரலில், “யெஸ், டூ இட்” என்றார்கள். ராதிகாவின் கண் கலங்கியது. அருகில் இருந்த சித்ரா அவள் கைகளைத் தழுவினாள். சமாதானம் செய்தாள்.

இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி ராதிகாவிற்கு “பியர் பட்டி” (peer buddy) அதாவது அவளுக்கென்று தோழர் ஒருவர் என்று தேர்ந்தெடுத்தேன். இதற்குத் திறமை, மனதிடம் உள்ள ஸௌதாவையே சேர்த்துவைத்தேன். ராகேஷ் எப்படியும் தன் பங்கைச் செய்துவந்தான். அதனால் இன்னொருவரைத் தேர்ந்தெடுத்தேன். இவளே ராதிகாவின் கவசமும்.  இந்த புது இடத்தில் பழகிக்கொள்ள, துணிச்சல், எடுத்துச் செய்யும் தன்மை எனப் பலவற்றை அவளிடமிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பாகும். இந்த வயதில் நண்பர்களின் பரிந்துரைகளைக் கேட்டுக்கொள்வது, அவர்களிடமிருந்து கற்பது பீயர் சப்போர்ட் என்ற ஒரு மேஜிக்கை நான் உபயோகித்தேன்!

ஸௌதாவுடன் வந்து என்னை அழைத்துச் சோப்பு செதுக்குவதைச் செய்துகாண்பித்தாள். மற்றவர்கள் கேள்வி கேட்க, விளக்கம் தர, மற்றவருடன் இன்னும் பேசத்தொடங்கினாள். எல்லோரும் செய்யவிரும்பியதால் அடுத்த வகுப்பில் சோப்பை எடுத்துவர, ராதிகா தயக்கம் கலந்த பரவசத்துடன் விளக்கினாள். பல அழகான வடிவங்களை அமைத்தார்கள். ஒவ்வொரு நாழிகையும் மிகச் சுகமாக இருந்தது!

கலந்து பேசிச்செய்வதென்று பலவகையான பாடங்களை, ப்ராஜெக்ட்களில் பீயர் ஸப்போர்ட்டை (peer support) தாராளமாக உபயோகிக்க ஆசிரியர்களுக்குப் பரிந்துரைத்தேன். ராதிகாவுக்கும் உதவும், மற்றவருக்கும் திறன்களை வளர்த்துக்கொள்ள நல்ல சூழலாக இருந்தன.

ராதிகா கைப்பந்து விளையாட்டில் பரிசுபெற்றவள் என்பதால் அவளை மற்றவருக்குப் பீயர் பட்டி ஆக்கினேன். முரளியும், ஹனீபாவும் கைப்பந்து வீரர்கள். அவர்கள் ஸ்கோர் பண்ணமுடியவில்லை என்றால் மனம் தளர்ந்துவிடுவார்கள். தன் மனோ தைரியம் வளர்த்துக்கொள்ள, இந்த இருவரை ராதிகாவுடைய பொறுப்பில் நியமித்தேன். அவர்களைத் தேர்ச்சி செய்வதிலிருந்து ஆரம்பித்தாள். தன் நிலையைமீறி அவர்களின் பயிற்சியில் கவனம் செலுத்தினாள். மிகமிக மெல்ல ராதிகாவிடம் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. ஸோஷியல் எமோஷனல் திறமைகள் வளர, நண்பர்கள் கூடின!

அவளுடைய முன்னேற்றத்தை வகுப்பில் வெளிப்படையாகப் பகிர்ந்தேன். எப்படி அவர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பால் இது நேர்ந்தது என்று.  ஏற்பு எந்த அளவிற்கு முக்கியம் என்பதையும், அதனால் புது நபர்களுடன் பழக உதவுவதையும் அவர்கள் செய்ததை வைத்தே உதாரணங்கள் கொடுத்து விவரித்தேன். அவர்களால்தான் ராதிகா திரும்பவும் பாடங்களில் கவனம் செலுத்தினாள் என்பதையும் வலியுறுத்தினேன்.  இதன் சிறந்த விளைவு, ராதிகாவை ஊக்குவித்து, கணக்கு ஒலிம்பியாடிற்குப் பயிற்சி ஆரம்பமானது!

ஆசிரியர்களுடன் கூடும்போது அவர்களுக்கும் பீயர் ஸப்போர்ட்டையும், பீயர் பட்டியினால் தெரியும் நன்மைகளையும் உதாரணங்களுடன் விவரித்தேன்.

மாலைவேளையில் ராதிகா வீட்டிற்கு ராகேஷ், சொளதா எனப் பல வகுப்பு மாணவர்கள் போகத்தொடங்கினார்கள். இதிலிருந்து இந்த வயதிற்குப் பொருத்த வரம்பாக, ஐந்து பேர்கள் கூட்டானது. இது ஆண்-பெண் கலந்த குழுவாக இருந்தது. இவர்கள் மாலை நேரம் இரண்டு கிலோமீட்டர் நடப்பது, இல்லை கைப்பந்து, கேரம் போர்ட், செஸ் விளையாடுவது, சில நாட்கள் தோட்டத்தில் உட்கார்ந்து பேசுவது வழக்கம். ஆரோக்கியமானது! தங்களை அறிந்துகொள்ள வாய்ப்பானது, உடலின் உணர்வைப் புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பானது.

கடந்த பதினைந்து வருடமாக ஒவ்வொரு வருடமும் இந்த ஐவர் சந்தித்து வருகிறார்கள், எனக்கும் அழைப்பு வந்துவிடும்! ஒவ்வொருமுறையும் இவர்களின் பெற்றோருக்கு மனதுக்குள் சபாஷ் சொல்வேன். ஆண்-பெண் குழுவை ஆமோதித்து, பழகச் சந்தர்ப்பம் அளித்தற்கு, நம்பிவிட்டதற்கு மிகப் பெரிய சபாஷ். நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை ஒரு சுமையாகும்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.