இந்த ஆண்டு (2018) மார்கழி மாதம் ஒரு மாபெரும் செயல் புரிந்ததற்காக எனக்குள் ஒரு மகிழ்ச்சி அலையே ததும்புகிறது.
குவிகம் -திருப்பாவை என்ற ஒரு வாட்ஸப் குழு அமைத்து அதில் தினம் ஒரு பாடலாக ஆண்டாள் எழுதிய திருப்பாவையின் மூலத்தையும் அத்துடன் நான் எழுதிய திருப்பாவையின் எளிய பதம் கொண்ட பாடலையும் ‘அழகிய பெண்ணே’ என்ற தலைப்பில் அனுப்பினேன்.
கிட்டத்தட்ட 200 நண்பர்களுடன் நானும் தினமும் திருப்பாவையைப் படித்துக் கலந்து உரையாட முடிந்தது நான்செய்த பாக்கியம்.
கூடிய விரைவில் இவற்றைத் தொகுத்து ஆண்டாளின் பாடல், என்னுடைய எளிய பாடல் மற்றும் ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் படங்கள் ஆகியவை சேர்த்துப் புத்தகமாக வெளியிட எண்ணியுள்ளேன். படங்கள் திருப்பாவையின் ஒவ்வொரு பாடலின் முழு அர்த்தத்தையும் பிரதிபலிக்கவேண்டும். அதற்காகக் காத்திருக்கிறேன்.
ஒருபானை சோற்றுக்கு ஒருசில பதங்கள்!
முதல் பாடல்:
அழகிய பெண்ணே -1
மார்கழி மாதம் ஒளி நிறைந்த நல்லநாள்
நீராடப் போவோம் வாருங்கள் தோழிகளே !
சீரான ஆய்ப்பாடியின் செல்வச் சிறுமிகளே !
கூர்வேல் போன்றவன் நந்தகோபன் குமரன்
பார்வைக்கு இனியவன் யசோதாவின் இளஞ்சிங்கம்
கார்மேகக் கண்ணன் கதிர்போன்ற முகமுடையான்
நாராயணன் அவனே நல்லருள் தந்திடுவான்
ஊரார் பாராட்ட வாருங்கள் பாவையரே !!
திருப்பாவை -1
மார்கழி(த்) திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராட(ப்) போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடி(ச்) செல்வ(ச்) சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழ(ப்) படிந்தேலோர் எம்பாவாய்
அழகிய பெண்ணே -30
பால்கடலைக் கடைந்த மாதவனை கேசவனை
பால்நிலா போன்ற முகத்தானை துயிலெழுப்பி
பாமாலை பாடி பரிசில் பெற்றவற்றை
பூமாலை சூட்டிய பெரியாழ்வார் சுடர்க்கொடி
கோதை சொன்ன திருப்பாவை முப்பதையும்
வேதப் பொருளென தப்பாது தினம் சொன்னால்
திருத்தோளும் திருக்கண்ணும் திருமுகமும் உருக்கொண்ட
திருமாலின் திருவருள் தினம்கிட்டும் பாவையரே !!
திருப்பாவை -30
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.