இன்று காலை (டிசம்பர் 30) தி.நகர் குவிகம் இல்லத்தில் குவிகம் பதிப்பகம் சார்பாக கவிஞர்.தில்லைவேந்தன் அவர்கள் எழுதிய ‘தில்லைத்தென்றல்’ நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. கவிஞர் ஏடகம் அவர்கள் நூலை வெளியிட திருமிகு.சங்கரிபுத்திரன் ஐயா அவர்கள் அதனைப் பெற்றுக்கொண்டார். கவிஞர்.தில்லைவேந்தன் அவர்களின் இரண்டாவது நூல் இந்தக் கவிதைத்தொகுதி. முதல் கவிதைத்தொகுதியான ‘வைகறைத்தென்றலையும்’ குவிகம் பதிப்பகம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
குவிகம் பொறுப்பாளர் திருமிகு.கிருபானந்தன் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கவிஞர் ஏடகம் அவர்கள் நூலைச் சிறந்த முறையில் திறானாய்வு செய்து, வெண்பாக்களிலும், விருத்தங்களிலும் மிகச்சிறந்த முறையில் கவிதைகள் தந்துள்ள கவிஞர்.தில்லைவேந்தன் அவர்களைப் பெரிதும் பாராட்டினார். கவிஞர்.தில்லைவேந்தன் என்ற R.நடராஜன் அவர்கள் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பள்ளி நாட்களிலேயே வெண்பாக்களைப் பள்ளியின் இறுதித் தேர்வுகளில் கூடப் பதட்டமில்லாமல் புனையும் ஆற்றல் பெற்றவர். தமிழ் இலக்கியங்களில் நல்ல பரிச்சயமுடையவர். எல்லோரிடமும் இனிய முறையில் பழகும் நண்பர்.
திருமிகு.பானுமதி, சென்னை நிலத்தகவல் திருமிகு.இரா.இராசு ஆகியோருடன் கவிஞர்.தில்லைவேந்தன் அவர்களை நானும் வாழ்த்திப் பேசினேன். கவிதை நூலானது மிக அருமையான முறையில் குவிகம் பதிப்பகத்தால் வடிவமைக்கப்பட்டு நல்ல தரத்தில் 160 பக்கங்கள் வெறும் 120 ரூபாயில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்காக திருமிகு.கிருபானந்தன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
கவிஞர்.தில்லைவேந்தன் அவர்கள் நூலில் தான் பாடியுள்ள கவிதைகளின் கருப்பொருட்கள் குறித்துப் பேசினார். பாரதி பாஞ்சாலி சபதம் பாடியுள்ளதுபோல தான் கடோத்கசக் காவியம் இந்தக் கவிதைநூலில் எழுதியுள்ளதையும் குறிப்பிட்டுப் பேசினார். வங்கமொழியில் உள்ள பாரதத்தைத் தமிழில் தரும் நண்பர் திருமிகு. அருட்செல்வ பேரரசன் Arul Selva Perarasan S அவர்களைப் பெரிதும் பாராட்டினார்.
தமிழன்னையின் வாழ்த்துகள் கவிஞருக்கு நிச்சயம் உண்டு.
(நன்றி : திரு மந்திரமூர்த்தி முகநூல் பக்கம்)