தை மாதம் முதல் நாள் !
அதற்கான குறிச் சொற்கள்:
பொங்கல் – அறுவடை – விழா – நெல் – கரும்பு – வாழை – பானை – இஞ்சி-மஞ்சள் – பூளைப்பூ -செழிப்பு – உழவர் – உத்தராயணம் – புண்ணியம் – மகரசங்கராந்தி – தர்ப்பணம் – சூரியன் – காளை – நன்றி- ஜல்லிக்கட்டு – விடுமுறை – சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், வாழ்த்து, போகி, புகை, சுண்ணாம்பு – புத்தாடை- திருவள்ளுவர்தினம் – காணும்பொங்கல் – மாட்டுப்பொங்கல் – கணுப்பொங்கல் -பொங்கலோ பொங்கல்
சங்க காலத்திலேயே இவ்விழா கொண்டாடப்பட்டது என்பதற்கு ஆதாரமான வரிகள்:
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையும்
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகையும்
”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும்
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறும்
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும்
கூறுகின்றன.
சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாவின் துவக்கத்தில், காவல்பூதத்திற்கு, புழுக்கலும், நோடையும், விழுக்குடை மடையும், பூவும் புகையும் சேர்த்து வழிபட்டதாக, குறிப்பிடப்படுகிறது. இதில் புழுக்கல் என்பதுதான் பொங்கல்.
சம்பந்தர், தன் மயிலாப்பூர் பதிகத்தில், ‘நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்’ எனக் கூறுகிறார் ,
திருப்பாவை, அதை சற்றே வேறுபடுத்தி, ‘பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிவார’ என்கிறது.
முதல் ராஜேந்திரனின், காளஹஸ்தி கல்வெட்டில், மகர சங்கராந்தி அன்று, பெரும் திருவமுது படைக்கப்பட்ட தகவல் சொல்லப்பட்டிருக்கிறதாம்.
தஞ்சை மராட்டியர் காலத்தில், மகர சங்கராந்தி அன்று, வாழை கட்டி, பொங்கல் விட்டு கொண்டாடியதாக, ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
17ம் நூற்றாண்டைச் சேர்ந்த வலங்கை இடங்கை வரலாறு என்ற நூலில், மகர சங்கராந்தி அன்று, சுவாமி புறப்பாடும், தேவதாசியர் நடனமும் நடந்ததாக குறிப்பு உள்ளது.
இருபதாம் நூற்றாண்டில், பெண்ணாகடத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், முதன் முதலாக, பொங்கல் வாழ்த்து அட்டை தயாரித்து அச்சிட்டார்.
23-1-2008 அன்று கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் தமிழகச் சட்டப்பேரவையில் “திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, தமிழ் அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ள உண்மை என்பதால்; தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது’ என்று அறிவிக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 23-8-2011 அன்று பேரவையில் கூறும்போது, “தமிழ்ப் புத்தாண்டை தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மன உணர்வைப் புண்படுத்தும்வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது” என்றார்.
ஒரு புராணக் கதை :
சிவபெருமான் ஒருமுறை நந்தியிடம் பூலோகம் சென்று மக்களை மாதம் ஒருமுறை சாப்பிடும்படியும் , தினமும் எண்ணை தேய்த்துக் குளிக்கும்படியும் சொல்லுமாறு கூறினாராம்.
நந்தி தவறுதலாக அதை உல்டா செய்து – தினமும் சாப்பிடும்படியும் மாதம் ஒருநாள் எண்ணைதேய்த்துக் குளிக்கும்படியும் கூறிவிட்டாராம்.
அதனால் கோபம் கொண்ட சிவன் பூலோக மக்கள் அதிக உணவு தயாரிக்க நிலத்தை உழவேண்டி, நந்திக்கும் அதன் சந்ததியருக்கும் ஆணையிட்டாராம்.
இது புதிதாக இருக்கிறதல்லவா?