ஹைக்கூ
கூவுதலை நிறுத்திவிட்டு
கேட்க ஆரம்பித்தது குயில்
சில்வண்டின் கீச்ச்ச்ச்
சறுக்கி சறுக்கி
மேலேற மேலேற
வழுக்குப்பாறையில் ஆட்டுக்குட்டி
குப்பையைக் கிளறிய
கோழிக்குஞ்சு மெல்ல அதிர்ந்தது
தாயின் இறகுகள்
கழுத்தை இறுக்கியது
தூக்குக் கயிறு
தரை தொட்டன பாதங்கள்
ஒற்றை விரலை உதட்டில் வைத்து
‘உஷ்’ அமைதி என்றார் குரு
ஆர்ப்பரித்தன குழந்தைகள்
எல்லையில் போர்
பக்கத்து வீட்டோடு சண்டையிடும்
படைவீரரின் மனைவி
தூக்கம் தப்பிய நாளொன்றில்
தனிமையை விரட்ட அருகிருந்தது
பசித்த கொசு
அறுந்த செருப்பைக்
கழட்டிவிட்டு நடந்தேன்
நின்றுபோனது பயணம்
நீண்ட நெடுநேரமாய்
பேசிக் கொண்டிருந்தோம்
சொல்வதற்கு ஒன்றுமில்லை
எல்லா வரிகளும் என் நெஞ்சை நிறைத்தவை ! வாழ்த்துக்கள் !
LikeLike