தனித்து நின்றதால் ? – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

ராகேஷ் மற்றவர்களைப்பற்றிய சிந்தனை உள்ளவன். பலமுறை என்னைச் சந்தித்து ஆலோசனை கேட்பதுண்டு. அவன் படிக்கும் பள்ளியில் நான் மனநலம் மற்றும் கல்வி ஆலோசகராக இருந்தேன். மாணவர்கள், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு உணர்வு-உறவாடல் ஆற்றல்கள் (social emotional learning) பயிற்சி தருவது என் பொறுப்புகளில் ஒன்று. இதுவே என்னுடைய “வரும் முன் காப்போம்” கருவி. இதை ஏன் சொல்கிறேன் என்றால், இந்தக் கண்ணோட்டம் உள்ளதால்தான் எங்களால் ராதிகாவின் இன்னல்களைப் புரிந்து, அணுகி சீர் செய்ய முடிந்தது.

புதிதாகச் சேர்ந்த ராதிகா எட்டாவது வகுப்பு மாணவி. அவளுடைய அப்பாவிற்கு இந்த ஊருக்கு மாற்றலானது. மேலாளர். பெரிய பதவியில் இருந்ததால் மாளிகைபோன்ற வீடு. அவருக்குக் கீழே வேலை செய்பவர்களின் பிள்ளைகள் ராதிகாவின் வகுப்பில் இருந்தனர். இவர்களில் பலருக்கு அவளிடம் பேசுவதற்கோ, பழகுவதற்கோ தயக்கமாக இருந்தது. அதனால் அவள் தனியாகப் பள்ளிக்கு நடந்து வருவாள், சாப்பிடுவாள்.

இவளைப்போல ஆறு மாணவர்கள் புதிதாக எட்டாம் வகுப்பில் சேர்ந்திருந்தார்கள். அவர்கள் எந்தவித கஷ்டமும் இல்லாமல் வகுப்பு மாணவர்களுடன் பழகினார்கள், ஒருவேளை அவர்கள் எல்லோரும் அக்கம்பக்கத்தில் இருந்ததாலோ, அல்ல பெற்றோர்கள் சமநிலை வேலையில் இருப்பதாலோ என்னவோ. ஆனால் ராதிகாவிடம் மற்ற மாணவர்கள் மேலோட்டமாகவே பழகினார்கள்.

இதை ராகேஷ் கவனித்துவந்தான். அவனும் அதே வகுப்பில் படிப்பவன். யாரையும் என்றுமே துச்சமாகப் பேசாதவன், அவரவர் சூழ்நிலை புரிந்து அனுசரித்துப்போவான். இவற்றால், சக மாணவர்களுக்கும் இவனிடம் பழக எளிதாக இருந்தது. உதவி தேவை என்றால் ஆண் மாணவர்களும், பெண்களும் அவனை அணுகுவார்கள். தன்னால் முடிந்தவரை உதவி செய்வான்.

அந்த வருட ஆரம்பத்தில் முதல் இரண்டு மாதத்திற்கு நான் பள்ளிக்கு வரமுடியாத சூழ்நிலை. நான் திரும்பிய முதல் நாளே ராகேஷ் என்னைச் சந்திக்க ஓடோடிவந்தான். வந்ததும் ராதிகாவைப்பற்றி விவரித்தான், தான் கூர்ந்து கவனித்ததைப் பகிர்ந்தான். ராதிகா ஆசிரியர்களுக்குப் பதில் அளிக்கும்போது வியர்வை அதிகம் ஊற்ற, சொல்லவந்ததை முடிக்கத் தடுமாறுவதைப் பார்த்து பரிதாபப்பட்டான், ஆனால் என்னசெய்வதென்று தெரியவில்லை. அவளுடன் மற்றவர்கள் பழகத் தயங்குவதையும் விவரித்தான். வகுப்பில் எல்லோரும் அவளுடைய அப்பாவின் பதவிக்கு பயந்தே பேசத் தயங்குகிறார்கள் என்று தன் கணிப்பைப் பகிர்ந்தான்.

“ஸோஷியல்-எமோஷனல் லர்னிங்” பயிற்சி அளிக்க ராதிகாவின் வகுப்பிற்கு வந்தபோது நானும் அவளைச் சந்தித்தேன். அவளுடைய பதிமூன்றாம் வயதிற்குச் சரியான உயரம். பயம் அவளுடைய கயல்விழியில் தாண்டவம் ஆடியது. அவள் போட்டிருந்த கூன் அவள் வெட்கப்படுவதை மேலும் காட்டியது.

எப்படி உதவலாம் என்று ராகேஷும் நானும் யோசித்தோம். எளிதான ஒன்றைத் தொடங்க முடிவெடுத்தோம். எங்கள் யுக்தி, ராதிகா பள்ளிக்கு வரும் வழியில் செல்வதென்று. ராகேஷ் பலருடன் சைக்கிளில் போவது பழக்கம். ராதிகாவைக் கடந்து போகையில் அவளிடம் ஹலோ சொன்னான். நாளடைவில் தோழர்களும் செய்தனர். அடுத்த கட்டத்தில் ஐந்து ஆறு அடி அவளுடன் அவர்கள் நடந்து சென்றார்கள். செய்யச்செய்ய, பரிச்சயம் ஆரம்பமானது. இப்படி, பழக்கம் வளர, சில நாட்களுக்குப்பிறகு அவளையும் சைக்கிளில் வரப் பரிந்துரைத்தான். வியப்புடன் அவளும் வர ஆரம்பிக்க, மெதுவாகப் பலருடன் முதல்கட்ட சினேகிதம் தொடங்கியது.

வகுப்பு ஆசிரியர்களும், அவர்களுக்கு நான் பயிற்சி அளிக்கும்பொழுது, ராதிகாவின் இந்நிலைகளைப்பற்றி தாங்களும் கவனித்ததாகப் பகிர்ந்தார்கள். ஆங்கில ஆசிரியையும், பூகோள ஆசிரியரும், பதில் அளிக்கும்போது, குறிப்பாக தன்னைப்பற்றியோ, இல்லை பாடங்களைப்பற்றிய கேள்விகளாக இருந்தாலோ ராதிகாவின் கால்கள் நடுங்குவதை கவனித்ததாகச் சொன்னார்கள். பதில் சொல்லச்சொல்ல சரியாகிவிடும் என்ற ஒரு நம்பிக்கையில் அவளிடம் கேள்விகளை அதிகமாகத் திருப்பினார்கள் என்று ஒப்புக்கொண்டார்கள்.

 

Related image

 

ராதிகா போன்றவர்களுக்கு எப்படி ஆசுவாசப்படுத்த முடியும் என்று கணக்கு வாத்தியாரும் தமிழ் டீச்சரும் கேட்டார்கள். ஒரு வழியை விவரித்தேன். கேள்வி கேட்டதும் சில மாணவர் பெயரைச் சொல்லி, அதிலிருந்து யார் வேண்டுமானாலும் பதிலைச் சொல்ல அழைக்கலாம் என்றேன். அப்போது, ராதிகாபோன்ற பதட்டம் உள்ளவர்கள் தங்களைத் தயாராக்கிக்கொண்டு பதில் அளிக்கக்கூடும். வகுப்பு அமைப்பே, பாடங்களைப் படிக்கையில் நம்மை முழு மனிதனாக்கவும்தான்.

சில நாட்களுக்குப்பிறகு அவளுடைய அம்மா விமலா என்னைச் சந்தித்தார். புதிய மாணவர்களின் குடும்பச் சூழல் புரிந்துகொள்ள பெற்றோரைச் சந்திப்பது என் பழக்கம். அதனாலும் ராதிகாவின் நிலையைப்பற்றி ஆலோசிக்கவும் அவள் வந்திருந்தாள்.

தான் அவளுடைய மாற்றாந்தாய் என்றாள். என்னை ஆலோசித்துச் சிலவற்றை சரிசெய்ய விரும்புவதாகப் பகிர்ந்தாள். தன் வளர்ப்பில் எந்தவித குறையும் இருந்துவிடக்கூடாது என்பதால், ராதிகாவை எல்லாமே சரியாகச் செய்யவேண்டும் என்று தான் எப்பொழுதும் திருத்திச் சொல்வதாகப் பகிர்ந்தாள். கூடவே, தான் இவ்வளவு கவனித்துச்செய்தும் ராதிகாவிற்குப் பதட்டம் உண்டாகிறது என்று தெரிவித்தார். தன்மேல் ஏதோ குறையினால் ராதிகாவிற்கு இப்படியோ என்று எண்ணி, அது தனக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினாள்.

இதை மையமாக வைத்து அடுத்த சில ஸெஷன்களில் ஆராய்ந்தோம். விமலாவின் எண்ணம், தன்னால் பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் என்னேரமும் தானே வழிகாட்ட வேண்டும் என்று நினைப்பதினால் ஏற்படும் இடையூறுகளைப்பற்றிப் பேசினோம். ராதிகாவிற்கு எப்போதும் தன்னை ஒரு பூதக்கண்ணாடியில் கண்காணிப்பதைப்போல் தோன்றுவதால்தான் அவளுக்குப் பதட்டம் ஏற்படுகிறது என்பதை எடுத்துச் சொன்னேன். அதாவது நல்ல எண்ணத்தில் செய்தாலும், ஒவ்வொன்றுக்கும் சொல்வதால் ராதிகா தன்னம்பிக்கை இழந்துவிடும் நிலையானது. எங்கே முடியவில்லை என்று சொன்னால் அம்மாவின் மனம் தளருமோ எனப் பயந்து பதட்டமாகிவிடுகிறது. இதனால்தான் அவளின் சலனமும் பயமும்.

இதன் இன்னொரு நேர்விளைவு – இங்கு சேர்ந்ததுமுதல் ராதிகாவின் படிப்பு சரிந்துகொண்டே போவதைப்பற்றியும் விமலா கவலைப்பட்டார். அவர்கள் மதிப்பெண் வராததைப்பற்றிக் கூடக் கவலைப்படவில்வை. ராதிகா படிக்க உற்சாகம் காட்டாதது சங்கடப்படுத்தியது. அவளுக்குத் தெளிவுபடுத்தினேன், ராதிகா போன்றவர்கள், முன் பரிச்சயம் இல்லாத, பழகாத, புது இடத்தில், மற்றவர்களுடன் பழகிக்கொள்ளச் சங்கடப்படும்போது உண்டாகும் சஞ்சலத்தினால் பாதிக்கப்படுவது: படிப்பு-உணர்வு- மற்றவர்களுடன் உறவாடுவது. இந்த மூன்றும் தான் ராதிகாவிடமும் ஊசலாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம் என்றேன். இதைச் சரிசெய்யும் வழிகளை அடுத்த ஸெஷன்களில் பேசி, வழிமுறைகளை வகுத்தோம்.

மேலும் ராதிகா இருக்கும் பருவநிலையில் தானாகச் சிந்தித்து முடிவு எடுக்க எடுக்க, நல்லது-கெட்டதைத் தேர்ந்தெடுக்கும் திறன்களை வளர்த்துக்கொள்ளும் பருவம் இது என்றும் விளக்கினேன். விமலா இதைச் செயல்படுத்தப் பல வழிமுறைகளை நாங்கள் யோசித்தோம். நான் வகுப்பில் நடத்திவரும் “ஸோஷியல் எமோஷனல் லர்னிங்” பற்றியும் விவரித்தேன். தன் சந்தேகங்கள் தெளிவாக, முகம் மலர்ந்து விமலா பெருமூச்சுவிட்டாள்; தனக்குத் தெம்பு வந்ததைத் தெரிவித்தாள்.

வகுப்பில் மற்றவர்களுடன் நன்றாகப் பழக ஒன்றைச் செய்யச் சொன்னேன். எல்லோரும் வகுப்பில் ஒவ்வொருவரிடமும் இதுவரை மற்றவர்களுக்குத் தெரியாத ஒரு திறனைக் கண்டுபிடித்து அடுத்த வாரம் வகுப்பில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று.

நான் கணித்தபடி, இதிலிருந்து ராதிகாவை வகுப்பில் ஏற்றுக்கொள்வது ஆரம்பமானது! ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்தாக வேண்டும்! ராதிகாவிற்கும் அதே கதி, மற்றவருக்கும் அதே நிலை. எப்படியாவது மற்றவருடன் பேசவேண்டிய சூழ்நிலையைத் தெரிந்தே உருவாக்கினேன்.

ராதிகா சோப்பை விதவிதமாக செதுக்குவதை ஸௌதா கண்டுபிடித்தாள். வகுப்பில் எல்லோருக்கும் இது வியப்பைத் தந்தது. ஆச்சரியப்பட்டார்கள். எப்படிச் செய்வது எனக் கேட்டார்கள். ராதிகா அப்படியே வெட்கப்பட்டுச் சொல்ல முயன்றாள், முடியவில்லை. உடனே ராகேஷ் எழுந்து, “ராதிகா நாளை மேடத்தை வரச்சொல்லிக் கேட்டுக்கொள்வோம். நீ செஞ்சு காமிக்கறியா?” அவள் திகைத்தபடி அவனைப் பார்த்தாள். புன்னகையுடன், “ம்..என்ன?” என்றான். மெதுவாகத் தலையை அசைத்தாள், உடனே முழு வகுப்பும்,  ஒரே குரலில், “யெஸ், டூ இட்” என்றார்கள். ராதிகாவின் கண் கலங்கியது. அருகில் இருந்த சித்ரா அவள் கைகளைத் தழுவினாள். சமாதானம் செய்தாள்.

இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி ராதிகாவிற்கு “பியர் பட்டி” (peer buddy) அதாவது அவளுக்கென்று தோழர் ஒருவர் என்று தேர்ந்தெடுத்தேன். இதற்குத் திறமை, மனதிடம் உள்ள ஸௌதாவையே சேர்த்துவைத்தேன். ராகேஷ் எப்படியும் தன் பங்கைச் செய்துவந்தான். அதனால் இன்னொருவரைத் தேர்ந்தெடுத்தேன். இவளே ராதிகாவின் கவசமும்.  இந்த புது இடத்தில் பழகிக்கொள்ள, துணிச்சல், எடுத்துச் செய்யும் தன்மை எனப் பலவற்றை அவளிடமிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பாகும். இந்த வயதில் நண்பர்களின் பரிந்துரைகளைக் கேட்டுக்கொள்வது, அவர்களிடமிருந்து கற்பது பீயர் சப்போர்ட் என்ற ஒரு மேஜிக்கை நான் உபயோகித்தேன்!

ஸௌதாவுடன் வந்து என்னை அழைத்துச் சோப்பு செதுக்குவதைச் செய்துகாண்பித்தாள். மற்றவர்கள் கேள்வி கேட்க, விளக்கம் தர, மற்றவருடன் இன்னும் பேசத்தொடங்கினாள். எல்லோரும் செய்யவிரும்பியதால் அடுத்த வகுப்பில் சோப்பை எடுத்துவர, ராதிகா தயக்கம் கலந்த பரவசத்துடன் விளக்கினாள். பல அழகான வடிவங்களை அமைத்தார்கள். ஒவ்வொரு நாழிகையும் மிகச் சுகமாக இருந்தது!

கலந்து பேசிச்செய்வதென்று பலவகையான பாடங்களை, ப்ராஜெக்ட்களில் பீயர் ஸப்போர்ட்டை (peer support) தாராளமாக உபயோகிக்க ஆசிரியர்களுக்குப் பரிந்துரைத்தேன். ராதிகாவுக்கும் உதவும், மற்றவருக்கும் திறன்களை வளர்த்துக்கொள்ள நல்ல சூழலாக இருந்தன.

ராதிகா கைப்பந்து விளையாட்டில் பரிசுபெற்றவள் என்பதால் அவளை மற்றவருக்குப் பீயர் பட்டி ஆக்கினேன். முரளியும், ஹனீபாவும் கைப்பந்து வீரர்கள். அவர்கள் ஸ்கோர் பண்ணமுடியவில்லை என்றால் மனம் தளர்ந்துவிடுவார்கள். தன் மனோ தைரியம் வளர்த்துக்கொள்ள, இந்த இருவரை ராதிகாவுடைய பொறுப்பில் நியமித்தேன். அவர்களைத் தேர்ச்சி செய்வதிலிருந்து ஆரம்பித்தாள். தன் நிலையைமீறி அவர்களின் பயிற்சியில் கவனம் செலுத்தினாள். மிகமிக மெல்ல ராதிகாவிடம் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. ஸோஷியல் எமோஷனல் திறமைகள் வளர, நண்பர்கள் கூடின!

அவளுடைய முன்னேற்றத்தை வகுப்பில் வெளிப்படையாகப் பகிர்ந்தேன். எப்படி அவர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பால் இது நேர்ந்தது என்று.  ஏற்பு எந்த அளவிற்கு முக்கியம் என்பதையும், அதனால் புது நபர்களுடன் பழக உதவுவதையும் அவர்கள் செய்ததை வைத்தே உதாரணங்கள் கொடுத்து விவரித்தேன். அவர்களால்தான் ராதிகா திரும்பவும் பாடங்களில் கவனம் செலுத்தினாள் என்பதையும் வலியுறுத்தினேன்.  இதன் சிறந்த விளைவு, ராதிகாவை ஊக்குவித்து, கணக்கு ஒலிம்பியாடிற்குப் பயிற்சி ஆரம்பமானது!

ஆசிரியர்களுடன் கூடும்போது அவர்களுக்கும் பீயர் ஸப்போர்ட்டையும், பீயர் பட்டியினால் தெரியும் நன்மைகளையும் உதாரணங்களுடன் விவரித்தேன்.

மாலைவேளையில் ராதிகா வீட்டிற்கு ராகேஷ், சொளதா எனப் பல வகுப்பு மாணவர்கள் போகத்தொடங்கினார்கள். இதிலிருந்து இந்த வயதிற்குப் பொருத்த வரம்பாக, ஐந்து பேர்கள் கூட்டானது. இது ஆண்-பெண் கலந்த குழுவாக இருந்தது. இவர்கள் மாலை நேரம் இரண்டு கிலோமீட்டர் நடப்பது, இல்லை கைப்பந்து, கேரம் போர்ட், செஸ் விளையாடுவது, சில நாட்கள் தோட்டத்தில் உட்கார்ந்து பேசுவது வழக்கம். ஆரோக்கியமானது! தங்களை அறிந்துகொள்ள வாய்ப்பானது, உடலின் உணர்வைப் புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பானது.

கடந்த பதினைந்து வருடமாக ஒவ்வொரு வருடமும் இந்த ஐவர் சந்தித்து வருகிறார்கள், எனக்கும் அழைப்பு வந்துவிடும்! ஒவ்வொருமுறையும் இவர்களின் பெற்றோருக்கு மனதுக்குள் சபாஷ் சொல்வேன். ஆண்-பெண் குழுவை ஆமோதித்து, பழகச் சந்தர்ப்பம் அளித்தற்கு, நம்பிவிட்டதற்கு மிகப் பெரிய சபாஷ். நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை ஒரு சுமையாகும்!

திருப்பாவை – அழகிய பெண்ணே – எஸ் எஸ்

Thiruppavai, Andal paadiya tamil version

 

இந்த ஆண்டு (2018) மார்கழி மாதம் ஒரு மாபெரும் செயல் புரிந்ததற்காக எனக்குள் ஒரு மகிழ்ச்சி அலையே ததும்புகிறது. 

குவிகம் -திருப்பாவை என்ற ஒரு வாட்ஸப் குழு அமைத்து அதில் தினம் ஒரு பாடலாக ஆண்டாள் எழுதிய திருப்பாவையின் மூலத்தையும் அத்துடன் நான் எழுதிய  திருப்பாவையின் எளிய பதம்  கொண்ட பாடலையும் ‘அழகிய பெண்ணே’ என்ற தலைப்பில்  அனுப்பினேன். 

கிட்டத்தட்ட 200 நண்பர்களுடன் நானும் தினமும் திருப்பாவையைப் படித்துக் கலந்து உரையாட முடிந்தது நான்செய்த பாக்கியம்.  

கூடிய விரைவில் இவற்றைத் தொகுத்து ஆண்டாளின் பாடல், என்னுடைய எளிய பாடல் மற்றும் ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் படங்கள் ஆகியவை சேர்த்துப் புத்தகமாக வெளியிட எண்ணியுள்ளேன். படங்கள் திருப்பாவையின் ஒவ்வொரு பாடலின் முழு அர்த்தத்தையும் பிரதிபலிக்கவேண்டும். அதற்காகக் காத்திருக்கிறேன். 

 

ஒருபானை சோற்றுக்கு ஒருசில பதங்கள்!  

முதல் பாடல்: 

அழகிய பெண்ணே -1 

மார்கழி மாதம் ஒளி நிறைந்த நல்லநாள்
நீராடப் போவோம் வாருங்கள் தோழிகளே !
சீரான ஆய்ப்பாடியின் செல்வச் சிறுமிகளே !
கூர்வேல் போன்றவன் நந்தகோபன் குமரன்
பார்வைக்கு இனியவன் யசோதாவின் இளஞ்சிங்கம்
கார்மேகக் கண்ணன் கதிர்போன்ற முகமுடையான்
நாராயணன் அவனே நல்லருள் தந்திடுவான்
ஊரார் பாராட்ட வாருங்கள் பாவையரே !!

 

திருப்பாவை -1 

மார்கழி(த்) திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராட(ப்) போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடி(ச்) செல்வ(ச்) சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழ(ப்) படிந்தேலோர் எம்பாவாய்

அழகிய பெண்ணே -30

பால்கடலைக் கடைந்த மாதவனை கேசவனை
பால்நிலா போன்ற முகத்தானை துயிலெழுப்பி
பாமாலை பாடி பரிசில் பெற்றவற்றை
பூமாலை சூட்டிய பெரியாழ்வார் சுடர்க்கொடி
கோதை சொன்ன திருப்பாவை முப்பதையும்
வேதப் பொருளென தப்பாது தினம் சொன்னால்
திருத்தோளும் திருக்கண்ணும் திருமுகமும் உருக்கொண்ட
திருமாலின் திருவருள் தினம்கிட்டும் பாவையரே !!

 

திருப்பாவை -30 

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன                                                                                                                                            சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

 

ஒலிப்புத்தகம்

தமிழில் ஒலிப்புத்தகங்கள்  தற்போது நிறைய வரத்தொடங்கிவிட்டன.

நண்பர் பாம்பே கண்ணன் அவர்களின் பங்கு இதில் மிக மிக முக்கியமானது.

கல்கியின் பொன்னியின் செல்வன் -ஒலிப்புத்தகம்

பொன்னியின் செல்வனை இவர் 78 மணிநேரம்  கேட்கக்கூடிய ஒலிப்புத்தகமாக மாற்றி வெற்றி கண்டது இவரது சிறப்பு. மேலும் எண்ணற்ற ஒலிப்புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். இன்னும் நிறைய புத்தகங்களை ஒலி வடிவில் கொண்டுவருகிறார்.

https://www.audible.in/  இல் நிறைய ஒலிப்புத்தகங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் இருக்கின்றன. அதற்கு சந்தாதாரராக வேண்டும். அதிகமில்லை மாதம் ரூபாய் 200 மட்டுமே. உங்கள் ஸ்மார்ட் போனில் இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டால் எங்கேயும் எப்போதும் கேட்கலாம்.  அசோகமித்திரன்,( வாசித்தளிப்பவர் திருப்பூர் கிருஷ்ணனாமே ?)   இந்திரா பார்த்தசாரதி ( குரல் அனுராதாவாம்) , கல்கி ,ஜெயகாந்தன்,புதுமைப்பித்தன் போன்றவை இருக்கின்றன.

 

இதோ இரண்டு ஒலிப்புத்தகங்கள் ! பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் வாண்டுமாமாவின் புத்தகங்கள். கேட்டு மகிழுங்கள் !

 

 

 

 

 

அம்மா கை உணவு (11)- சதுர்புஜன்

Image may contain: Baskar Ayer, smiling, eyeglasses and closeup

அம்மாவின் கை உணவு எழுதிக்கொண்டு வரும் திரு சதுர்புஜன் ( உண்மைப் பெயர் பாஸ்கர் ) அவர்களுக்கு பிப்ரவரியில்        ஸ்வீட் 60 .

வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் !

 

Image result for பஜ்ஜி

 

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

இதுவரை .வந்தவை :

1.  கொழுக்கட்டை மஹாத்மியம் , 2. இட்லி மகிமை, 3. தோசை ஒரு தொடர்கதை, 4. அடைந்திடு சீசேம், 5. ரசமாயம்

6. போளி புராணம் , 7. அன்னை கைமணக் குறள்கள் , 8. கலந்த சாதக் கவிதை , 9. கூட்டுக்களி கொண்டாட்டம்

10. சேவை செய்வோம்

இப்போது

 பஜ்ஜி பஜனை !

இடி இடிக்குது மின்னலடிக்குது
போடலாமா பஜ்ஜியை ?
கடலை மாவைக் கரைத்துக் கலந்து
வெட்டலாமா காய்களை ?

உருண்டு திரண்ட உருளைக் கிழங்கு
நான்கே நான்கு வேண்டுமே !
வெங்காயமும் இருந்துவிட்டால்
விறுவிறுப்பு கூடுமே !

வாழைக்காய் இல்லையெனில்
பஜ்ஜி என்பதில்லையே !
கத்திரி, மிளகாய் இல்லையெனில்
கதை முடிவதில்லையே !

அழகழகாய்க் காய்களையே
அரித்து எடுத்துக் கொள்ளுவோம் !
எண்ணைச் சட்டி காய வேண்டும் –
பொறுமை வேண்டும் மக்களே !

கடலை மாவில் தோய்த்தெடுத்து
காயைப் போட்டுத் திருப்பும்போது
இஸ்ஸ் என்ற சத்தம் வந்து
இனிய இம்சை செய்யுமே !

எண்ணையை வடிய வைத்து
எடுத்து எடுத்து போடுவாள் !
போடப் போடக் கணக்கு இன்றி
கபளீகரம் பண்ணுவோம் !

நாக்கு சுடும் என்று சொல்லி
நன்றாய் உள்ளே தள்ளுவோம் !
கண்களிலே கண்ணீர் வர
கணக்கு இன்றி உண்ணுவோம் !
சட்னி சாம்பார் சேர்ந்து விட்டால்
சுவை கூடிடும் உண்மையே !
ஒன்றுமில்லாமல் உண்பதென்றால்
அதுவும் எனக்கு சரி சரி !

சுடச்சுட சுட பஜ்ஜி உண்டு
சுவையில் திளைத்து ஆடுவோம் !
எடுக்க எடுக்க கைக்கும் வாய்க்கும்
போட்டி முடியவில்லையே !

இந்தியாவில் எங்கு சென்றும்
இந்த பஜ்ஜி உண்ணலாம் !
பக்கோடா என்று சொல்கிறான் –
பார்த்தால் நம்ம பஜ்ஜிதான் !

சுபா, கிரி, ரவி, பிரேமா –
எல்லோருமே வாருங்கள் !
பஜ்ஜியை ஒரு பிடி பிடிப்போம் –
கூடித் தின்போம் வாருங்கள் !

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

சிம்மவிஷ்ணு

Related image

தென்னிந்தியாவில் பல மன்னர்கள் கி பி 500 லிருந்து 600 ஆண்டுகள் ஆண்டனர்.

அவர்கள்…

பல்லவர், சாளுக்கியர், ராக்ஷ்ட்ரகூடர், கங்கர், களப்பிரர், சேரர், சோழர், பாண்டியர்- என்று பலர்.

அவர்கள் – கலை உணர்வுடன் கோவில்கள், சிற்பங்கள் அமைத்தனர்.

சைவ – வைணவ மத இலக்கியங்களை ஆதரித்து வளர்த்தனர்.

தோள்கள் தினவெடுத்து அருகிலிருந்த நாட்டின்மீது படையெடுத்தனர்.

தோற்றவர்கள் பதுங்கிப் பின் சமயம் கனிந்ததும் வென்றவன் நாட்டில் படையெடுத்தனர்.

பழிக்குப் பழி!!

இரத்தத்திற்கு இரத்தம்!

கூட்டணி அமைத்து –  கொடி பிடித்து – வாள் வீசி – ஒருவரை ஒருவர் கொன்றனர்.

மக்கள் நிம்மதியைக் கண்டிலர்.

 

இந்த சரித்திரப் பாடலுக்கு…

பல்லவன் பல்லவி பாடட்டுமே!

 

சரித்திரத்தில் பெரிய மாற்றம் நிகழும்போது … சில நாயகர்கள் அதற்குக் காரணமாயிருப்பர்.

களப்பிரரின் இருண்ட காலத்தை அழிக்கவந்து…சூரியன்போல ஒளியேற்றியவன் – பல்லவ நாட்டில் சிங்கமாக வந்த அந்த அரசன்…

மாவீரன்!

அவன் பெயரோ ‘சிம்ம விஷ்ணு’!

தந்தையோ சிம்ம வர்மன்!

பேரனோ நரசிம்மன்!

சிங்கம், சிங்கம்2, சிங்கம்3!!

கடிக்காமல்…கதைக்குச் செல்வோம்!

(மகாபலிபுரத்தில் உள்ள ஆதிவராகர் குடைவறைக் கோவிலில் காணப்படும் இராணிகளுடனான சிம்மவிஷ்ணுவின் சிற்பம். இச்சிற்பம் சிம்மவிஷ்ணுவின் பேரனான நரசிம்மவர்மனின் ஆட்சிக்காலத்தினது (630-668) எனவறியப்படுகிறது. நன்றி: விக்கிபீடியா )

  

கி பி : 575

அந்த நாள் …

சிம்ம விஷ்ணு அரசனான நாள்..

அது ஒரு பிரம்மாண்டமான முடியேற்கும் விழா அல்ல..

எளிய முறையில் நடந்த விழா…

முடியேற்றவுடன்… சிம்ம விஷ்ணு – மந்திரிகள் மற்றும் படைத்தலைவரை அழைத்து:

“நமது பல்லவ நாடு … இன்று ஒரு எலிவளைபோல் சிறியதாக இருக்கிறது…

நமது கண்ணான காஞ்சி இன்று நம்மிடம் இல்லை.

நமது பெரும்பாட்டனார் குமாரவிஷ்ணு காலத்தில் அடைந்த காஞ்சியை நாம் இன்று இழந்து நிற்கிறோம்.

காட்டில் சீதாதேவியைத் தொலைத்த ஸ்ரீராமனின் மனநிலையில்தான் நான் உள்ளேன்.

சாளுக்கியர்,கங்கர், களப்பிரர், சோழர், பாண்டியர் – இவர்கள் நம்மை நெருக்கி .. சுருக்கிவிட்டனர்.

கம்பளிப்பூச்சிபோல் நாம் கூட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறோம்.

வண்ணத்துப்பூச்சி போல நாம் சுதந்திரமாகப் பறந்து … பருந்துபோல உயர்ந்து… இவர்களை வென்று  நமது பல்லவ சாம்ராஜ்ஜியத்தை நிறுவவேண்டும்..

கலை, மற்றும் கவிதை, சிற்பம், ஓவியம், கோவில் என்று நாட்டை அலங்கரிக்கவேண்டும்.”

பேசிக்கொண்டே கனவு நிலையை அடைந்தாலும் … அவன் குரலில் இரும்பின் உறுதி தெரிந்தது..

“இன்றே படைதிரட்டி … காஞ்சியில் இருக்கும் களப்பிரனைத் துரத்தி…ஓடவைக்கவேண்டும்”.

படை பல திரண்டது…

நாட்கள் சில உருண்டது..

களப்பிரர் உள்ளம் மருண்டது…

காஞ்சி சிம்மவிஷ்ணுவின் வசப்பட்டது…

ஓடிய களப்பிரப் படையைத் துரத்தி – காவிரி ஆற்றுவரை சென்று… சோழர்களையும் வென்றான்.

அதில் களப்பிரர்களுடன் அவர்களது கூட்டாளி மழவ மன்னனையும் தோற்கடித்துத் துரத்தினான்.

களப்பிரர்களது ஆட்சிக்கு அது அஸ்தமன காலம்…

தென்னாட்டில் இருந்து பாண்டியன் கடுங்கோன் வேறு – படையெடுத்து – களப்பிரர்களை சிட்டெறும்புபோல அழித்தான். எஞ்சிய களப்பிரர்கள் தஞ்சையில் ஒடுங்கினர்.. வெகு விரைவிலே ‘ விஜயாலய சோழன்’ அவர்களை தஞ்சையிலிருந்து துரத்துவான்..

 

மூன்றாம் நந்திவர்மன் காலத்திய வேலூர்ப் பாளையப் பட்டயத்தில்:

“சிம்மவிஷ்ணுவின் புகழ் உலகெலாம் பரவியுள்ளது.

இவன் காவிரி பாயப்பெற்ற செழிப்பான சோழ நாட்டைச் சோழரிடமிருந்து கைப்பற்றினான்.”

இரண்டாம் நந்திவர்மன் காலத்துக் காசக்குடிப் பட்டயத்தில்:

“இப் பூவுலகில் சிங்கம்போன்ற சிம்மவிஷ்ணு தோன்றினான். அவன் பகைவரை அழிப்பதில் ஈடுபட்டிருந்தான், களப்பிரர், மழவர், சோழர், பாண்டியர் ஆகியவரை வெற்றிகொண்டான்”

 

வெற்றியாளனாக இருந்த சிம்மவிஷ்ணு காலத்தில் மற்ற அரசர்களும் சக்திகொண்டே விளங்கினர்:

சாளுக்கியநாட்டில் இரண்டாம் புலிகேசி அரசனாக இருந்தான்; அவன் கி.பி. 642வரை ஆண்டான். கங்கநாட்டைத் துர்விநீதன் (கி.பி. 605-650) என்பவன் ஆண்டுவந்தான். தெற்கே மாறவர்மன் அவனி சூளாமணி என்ற பாண்டியன் (கி.பி. 600-625) பாண்டிய நாட்டை ஆண்டுவந்தான். நாசிக்கிலும் வேங்கிநாட்டிலும் விஷ்ணுவர்த்தனன் என்பவன் (கி.பி.614-635) ஆண்டு வந்தான்.

 

காஞ்சியில் இன்னொரு அரசவைக் காட்சி:

சிம்மவிஷ்ணு புலவர்க்குப் புரவலனாக இருந்தான். ஒருநாள் ஒரு புலவன் அவைக்களத்திற்கு வந்து, நரசிம்ம அவதாரத்தைப்பற்றிய பெருமாள் துதி ஒன்றை வடமொழியில் பாடினான். அதில் இருந்த சொல்லழகும் பொருளழகும் அரசனை ஈர்த்தன. உடனே அவன் பாடகனை நோக்கி:

”இதனை இயற்றியவர் யார்?” என்று ஆவலோடு கேட்டான்.

பாடகன்: “மன்னா! வடமேற்கே அனந்தபுரம் என்னும் ஊரில்  நாராயணசாமி என்பவரது மகன்   தாமோதரன் என்பவர். அவர் சிறந்த வடமொழிப் புலவராகிப் பாரவி எனப் பெயர்கொண்டார். அப் புலவர் இன்று (கங்க அரசனான) துர்விநீதன் அவையில் இருந்துவருகிறார். நான் பாடிய பாடல் அப் பெரும்புலவர் பாடியதே ஆகும் என்றான்.”

சிம்மவிஷ்ணு: “ஆஹா…எனது மகன் மகேந்திரனுக்கு இன்று மகன் பிறந்துள்ளான். இந்த நரசிம்ம துதி என் மனதை உருக்கிவிட்டாது.. என் பேரனுக்கு நரசிம்மன் என்று பெயர் வைக்கிறேன். அவனது நாட்களில் பல்லவநாடு உன்னத நிலையை அடையும்..”

 உடனே சிம்மவிஷ்ணு ஆட்களை அனுப்பி பாரவியைத் தன் அவைக்கு வருமாறு வேண்டினான். பாரவி காஞ்சி நகரம் வந்து .. புலமையால் அரசனை மகிழ்வித்து, பாக்கள் இயற்றினார்.

 

சிம்மவிஷ்ணுவின்  மகனான முதலாம் மகேந்திரவர்மன், தான் இயற்றிய மத்தவிலாசத்தில் தன் தந்தையைச் சிறப்பித்துள்ளான்:

“சிம்மவிஷ்ணு பல்லவகுலம் என்ற உலகைத் தாங்கும் குலமலைபோன்றவன். நுகர்ச்சிப் பொருள்கள் அனைத்தையும் உடையவன்; பல நாடுகளை வென்றவன்;வீரத்தில் இந்திரனைப்போன்றவன்; செல்வத்தில் குபேரனை ஒத்தவன்.அவன் அரசர் ஏறு”

 

பின்னாளில் தண்டி என்ற வடமொழிப்புலவர் எழுதிய ‘அவந்தி சுந்தரி’ என்ற கதையில்:

“பல்லவர் மரபில் சிம்மவிஷ்ணு என்பவன் தோன்றினான்; கற்றவர் கூட்டத்தினின்று இறுதிப் பகைமையை அறவே நீக்கினான். அவன் தன்வீரத்தாலும்பெருந்தன்மையாலும் பகை அரசர்களுடைய அசையும் பொருள்களையும் அசையாப் பொருள்களையும் தனக்கு உரிமை ஆக்கிக்கொண்டான்”

Image result for சிம்மவிஷ்ணு

(மகேந்திரவர்மன் கட்டிய சிம்மவிஷ்ணு சதுர்வேதிமங்கலம்)

சிம்ம விஷ்ணு சீயமங்கலத்தில் உள்ள குகைக்கோவிலை அமைத்தான். சிங்க உருவங்களும் மகேந்திரன் கல்வெட்டும் உடைய அக் குகைக் கோவில் சிம்ம விஷ்ணுவின் காலத்ததாக இருக்கலாம்.

இதனைக் கண்ட பின்னரே மகேந்திரவர்மன் பல குகைக் கோவில்களை அமைக்கத் தொடங்கினான் போலும். வாகாடகர் அஜந்தாக்குகைகளில் வியத்தகு வேலைப்பாடுகளைச் செய்தனர். அவற்றை எல்லாம் சிம்ம விஷ்ணுவும் அவன் மகன் மகேந்திரவர்மனும் பார்வையிட்டு – அந்நினைவு கொண்டே மாமல்லபுரத்திலும் பிற இடங்களிலும் குகைக் கோவில்களை அமைத்திருத்தனர் போலும்.

 

சாம்ராஜ்யங்கள் தோன்றுகின்றன.

சாம்ராஜ்யங்கள் மறைகின்றன.

களப்பிரர் அழிந்தனர்.

பல்லவர் துவங்கினர்…

சில நிகழ்வுகள் கல்லிலோ, எழுத்திலோ பொறிக்கப்பட்டு சரித்திரமாகிறது…

ஆனால் – பல சுவையான நிகழ்வுகள் மௌனமாக நடந்து முடிந்திருக்கலாம்… அவை சரித்திரத்திலிருந்து நழுவியிருக்கலாம்..

என்றோ ஒரு நாள் அந்த சரித்திர ஆதாரங்கள் கிடைக்கலாம்…

இனியும்…

கண்ணில் எண்ணைவிட்டு சரித்திரத்தைத் தேடுவோம்.

 

 

தில்லைத் தென்றல் – மரபுக் கவிதைப் புத்தகம் வெளியீடு (குவிகம் பதிப்பகம்)

Image may contain: 3 people, including Natarajan Ramaseshan, people smiling, indoor

இன்று காலை (டிசம்பர் 30) தி.நகர் குவிகம் இல்லத்தில் குவிகம் பதிப்பகம் சார்பாக கவிஞர்.தில்லைவேந்தன் அவர்கள் எழுதிய ‘தில்லைத்தென்றல்’ நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. கவிஞர் ஏடகம் அவர்கள் நூலை வெளியிட திருமிகு.சங்கரிபுத்திரன் ஐயா அவர்கள் அதனைப் பெற்றுக்கொண்டார். கவிஞர்.தில்லைவேந்தன் அவர்களின் இரண்டாவது நூல் இந்தக் கவிதைத்தொகுதி. முதல் கவிதைத்தொகுதியான ‘வைகறைத்தென்றலையும்’ குவிகம் பதிப்பகம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Image may contain: indoor

குவிகம் பொறுப்பாளர் திருமிகு.கிருபானந்தன் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கவிஞர் ஏடகம் அவர்கள் நூலைச் சிறந்த முறையில் திறானாய்வு செய்து, வெண்பாக்களிலும், விருத்தங்களிலும் மிகச்சிறந்த முறையில் கவிதைகள் தந்துள்ள கவிஞர்.தில்லைவேந்தன் அவர்களைப் பெரிதும் பாராட்டினார். கவிஞர்.தில்லைவேந்தன் என்ற R.நடராஜன் அவர்கள் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பள்ளி நாட்களிலேயே வெண்பாக்களைப் பள்ளியின் இறுதித் தேர்வுகளில் கூடப் பதட்டமில்லாமல் புனையும் ஆற்றல் பெற்றவர். தமிழ் இலக்கியங்களில் நல்ல பரிச்சயமுடையவர். எல்லோரிடமும் இனிய முறையில் பழகும் நண்பர்.

திருமிகு.பானுமதி, சென்னை நிலத்தகவல் திருமிகு.இரா.இராசு ஆகியோருடன் கவிஞர்.தில்லைவேந்தன் அவர்களை நானும் வாழ்த்திப் பேசினேன். கவிதை நூலானது மிக அருமையான முறையில் குவிகம் பதிப்பகத்தால் வடிவமைக்கப்பட்டு நல்ல தரத்தில் 160 பக்கங்கள் வெறும் 120 ரூபாயில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்காக திருமிகு.கிருபானந்தன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கவிஞர்.தில்லைவேந்தன் அவர்கள் நூலில் தான் பாடியுள்ள கவிதைகளின் கருப்பொருட்கள் குறித்துப் பேசினார். பாரதி பாஞ்சாலி சபதம் பாடியுள்ளதுபோல தான் கடோத்கசக் காவியம் இந்தக் கவிதைநூலில் எழுதியுள்ளதையும் குறிப்பிட்டுப் பேசினார். வங்கமொழியில் உள்ள பாரதத்தைத் தமிழில் தரும் நண்பர் திருமிகு. அருட்செல்வ பேரரசன் Arul Selva Perarasan S அவர்களைப் பெரிதும் பாராட்டினார்.

தமிழன்னையின் வாழ்த்துகள் கவிஞருக்கு நிச்சயம் உண்டு. 

(நன்றி : திரு மந்திரமூர்த்தி முகநூல் பக்கம்) 

திரைக் கவிதை – பா விஜய் – ஆட்டோகிராப் – ஒவ்வொரு பூக்களுமே …

பாடலும் இசையும் படத்தில் அமைக்கப்பட்ட விதமும் நம்மை எங்கோ கொண்டு செல்லும் !

பாடலைப் படியுங்கள்! பிறகு கேட்டுக்கொண்டே பாருங்கள் ! 

Image result for ஆட்டோகிராப் பாடல்

 

படம்: ஆட்டோகிராப்

வரிகள்-பா.விஜய்

பாடியவர்-சித்ரா 

இசை- பரத்வாஜ்

 

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்கையென்றே
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மாறிப்போகும் மாயங்கள்

உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஓரு கனவு கண்டால்
அதை தினமும் என்றால்
ஓரு நாளில் நிஜமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானமளவு யோசிப்போம்
மகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போலே சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா?
துக்கம் என்ன என் தோழா?
ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு