நேற்றுவரை ஓடி ஓடி வட்டிமேல வட்டி போட்டு
சேர்த்ததெல்லாம் நீ தானே
ஈரெழுத்து ஓரெழுத்தாகி சேர்த்ததெல்லாம் செத்ததாகி
இன்று கட்டையாகிக் கிடப்பவனும் நீ தானே !
பயிற்சி மையத்தில் கிடைத்ததுதான் முதல் வெளி அனுபவம். அதற்குமுன் அலுவலகத்தில் சிலரைச் சந்தித்திருந்தேன். அப்போதெல்லாம் சற்று பயம் இருக்கும். செய்யவேண்டியவற்றைச் சரியாகச் செய்கிறோமா என்ற கேள்வி பின்னணியில் எப்போதும் இருக்கும். இங்கே அதெல்லாம் இல்லை. நிதானமாக நடப்பவற்றை வேடிக்கைபார்க்க நல்ல சந்தர்ப்பம்.
எல்லோரும் கிட்டத்தட்ட சம வயதினர். வேறுவேறு பின்னணியில் இருந்து வந்தவர்கள். அனைவருக்குமே முதல் பயிற்சிமைய அனுபவம் இதுதான். அவரவர் அலுவலக சூழ்நிலையில் இருந்து சற்று விடுபட்டு மீண்டும் பள்ளி, கல்லூரி வாழ்க்கையைப்போல் கவலையற்ற நிலை. எங்கள் வகுப்பிற்கான பொறுப்பில் இருந்த அதிகரிக்கும் இதுதான் முதல் அனுபவம்.
அப்போது சந்தித்தவர்களில் யார் யார் நினைவில் உள்ளார்கள் என்று யோசிக்கிறேன்.
பின்னாட்களில் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியாக, தொடர்ந்து ஒரு பன்னாட்டு நிறுவன இந்தியத் தலைமை அதிகாரியாக செல்வாக்குடன் வாழ்ந்த கோபதி, வாழ்வின் அர்த்தம் என்ன என்கிற ஞானத்தைத் தேடி சந்நியாசி ஆன ஞானப்பிரகாசம், ஜாலியாக இருப்பதே லட்சியம் என்று இருந்த சீதாராமன் ….
ஒய்வு பெறுமுன் இங்கே சந்தித்த சிலருடன் பணிபுரிந்திருக்கிறேன். பதவி உயர்வுபெற்று எனக்கு அதிகாரியாக வந்தவர்கள் இருவர். ஒருவன் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகப் பலமுறை எனது அலுவலகத்திற்கு வந்திருக்கிறான். ஒருவன் இன்னொருமுறை பயிற்சி மையத்தில் ஒரு நிகழ்வில் இருந்தான்.
பெண்கள் என்று பார்த்தால் மூன்று பேர். அதில் ஒருத்தி வேறு மாநிலத்தவள். யாருடனும் பழகாமல் எப்போதும் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு இருந்த அகிலா இன்னொருத்தி. கலகலப்பாகப் பழகும் மஞ்சுளா என்ற பெண், மூன்றாமவள். அதிகம் பேசிப் பழகும் வாய்ப்பு எனக்கு இருந்ததில்லை.
அம்மா, பாட்டி தவிர குடும்பத்தில் பெண் என்பவள் என் தங்கைதான். அவளை வீட்டில் எல்லோரும் குழந்தையாகவே பாவித்தார்கள். என்னுடன் வேலைபார்த்த எல்லாப் பெண் ஊழியர்களும் மரியாதைக்கு உரியவர்களாக இருந்தார்கள். வீட்டிலும் அலுவலிலும் திறம்பட கடமையைச் செய்துவந்தவர்கள். வெட்டி வம்பு, பொறாமை எதுவும் கிடையாது.
பெண்களின் எண்ண ஓட்டங்கள், விருப்பு வெறுப்புகள்பற்றி எனக்கு எப்போதுமே கவனம் இருந்ததில்லை.
அதற்கும் ஒரு வாய்ப்பு வந்தது. ஐந்து வருடங்கள் கழித்து அகிலா எங்கள் அலுவலகத்திற்கு மாற்றலாகி வந்தாள். திருமணம் ஆகியிருந்தது. கணவர் வேலை பார்க்கும் ஊருக்கு அருகில் என்பதால் விருப்ப மாற்றல் பெற்று வந்துசேர்ந்தாள். அடையாளம் தெரியாதவாறு குண்டாகி இருந்தாள். திருமணமாகி நான்கு வருடங்களில் இரண்டு குழந்தைகள். கேலியும் கிண்டலுமாகப் பேசுவாள். முன்பு பார்த்த அகிலாவிற்கு நேர் எதிர்.
ஆனால் தன் சொந்த விஷயத்தைப்பற்றிப் பேசும்போது ஒரே அலுப்பு தெரியும். தனது மாமியார் மற்றும் கணவன் குடும்பத்தைப்பற்றி எப்போதும் புகார். தன் கணவரை ‘அது’ என்றுதான் குறிப்பிடுவாள். ‘அது’ சாமர்த்தியம் இல்லாத ஜந்து என்பதுபோல் சித்தரிப்பாள்.
மற்றவர்கள் அனுதாபத்தைச் சம்பாதிப்பது நோக்கமாக இருக்கலாம். மற்றவர்கள் அனுதாபப்படுகிறார்களோ இல்லையோ ஒரு வம்பு கேட்டு ரசிப்பது நிச்சயம்.சிலருக்குக் குரூர ‘ஸாடிஸ்டிக்’ மகிழ்ச்சி கூட வெளிப்படையாகத் தெரியும். இது ஏன் அகிலாவிற்குப் புரியவில்லை என்று யோசிப்பேன்.
“அது சட்டுன்னு ஒரு வேலையை முடிச்சுடாது. சாரே தேவலாம்.” என்று என்னைக்காட்டி ஒருமுறை சொன்னாள். எனக்கு வருத்தப்படுவதா, சந்தோஷப்படுவதா என்று தெரியவில்லை. வேறு யாரவது அந்த நிலையில் இருந்தால், ஏதேனும் பதிலடி கொடுத்திருப்பார்கள். நான் மௌனமாக இருந்துவிட்டேன்.
பின்னர் ஒரு விஷயம் காதில் விழுந்தது. அகிலாவின் கணவர் வேலை பார்த்த இடத்தில் மேல் வரும்படி நிறையவாம். ஆனால் அகிலாவின் கணவன் அதில் நாட்டம் இல்லாதவர். சக ஊழியர்கள் கார், வீடு என்றெல்லாம் வாங்கினாலும், இவர் தன் பாதையில் இருந்து விலகியதில்லை.
அவருடன் வேலை பார்த்த ஒரு பெண்மணி அகிலாவிடம் எச்சரிக்கை செய்திருக்கிறாள். அகிலாவின் கணவர் ‘யோக்ய சிகாமணி’ ஆக இருப்பது சக ஊழியர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறதாம். அவர்கள் கடுப்பாக இருக்கிறார்களாம். இவருக்கு எதாவது பிரச்சினை ஏற்படுத்தவும் செய்யலாம்.
‘ஊரோடு ஒத்துவாழ முடியவில்லை என்றால் இப்படித்தான்’ என்று அகிலா சொல்லிக் கொண்டிருந்தாள் அங்கலாய்ப்புடன்.
சில வருடங்களில் ஒரு புகாரின் அடிப்படையில் கணவருக்கு மாற்றலானதும் அகிலாவும் இரண்டாவது விருப்ப மாற்றல் (பெரும் முயற்சிக்குப்பின்) வாங்கிக்கொண்டு போய்விட்டாள்.
அந்த இடைக்காலத்தில் அவள் புலம்புவது சகஜமாயிற்று. முதலில் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்த ஊழியர்கள் நாளடைவில் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். ஒருமுறை உதவி மேலாளர், “புலம்பாமல் போய் வேலையைப் பாருங்கள்.” என்று கோபித்துக்கொள்ளும் அளவிற்குப் போய்விட்டது.
அப்போது அலுவலகத்தில் இன்னும் ஒரே ஒரு பெண் ஊழியர்தான் இருந்தார், அவருக்குத்தான் பெரிய தலைவலி. அவருக்குத்தான் அகிலாவின் புலம்பல்கள் அதிகம் செவிமடுக்க நேரிட்டது. எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாத ஒரு முகபாவத்துடன் மௌனமாக இருக்கக் கற்றுக்கொண்டார். அந்தப் பெண்மணிதான் அனுதபத்துக்குரியவள் என்று தோன்றும்.
அகிலா மாற்றலானதும் எல்லோரும் பெருமூச்சு விட்டார்கள்.
பல வருடங்கள் கழித்துக் கிடைத்த சில தகவல்கள்.
முதல் தகவல்:
அகிலாவின் கணவர் வேலை பார்த்துவந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடந்தது. பெரிய அளவில் ஒரு மோசடி வெளிப்பட்டது. பல ஊழியர்கள் வெகு நாட்கள் சஸ்பென்ஷனில் இருந்தார்கள். இருவருக்கு வேலை போய்விட்டது. (அதில் எச்சரிக்கை செய்யவந்த பெண்மணியும் ஒருத்தி.) ஒருவர் சிறைத் தண்டனை பெற்றார்.
வழக்கு விசாரணை சமயத்தில் ஒரு வக்கீல் தெரிவித்த அபிப்பிராயம் எனக்கு விநோதமாகப்பட்டது. ..
(செய்யவேண்டிய வேலைகளைச் செய்வதற்கே ஐம்பதும் நூறும் தினம் கிடைக்கிறதே, இவர்கள் ஏன் பெரிய ஊழலில் ஈடுபடவேண்டும்? என்றார் அவர். அதிக வாடகை கேட்கும் ஆட்டோ ஓட்டியிடம் “வழக்கமாக இருபது ரூபாய்தான் அதிகம் கொடுப்பேன் – நீங்கள் ஐம்பது கேட்கிறீர்களே?” என்பதுபோல.)
மற்றுமொரு தகவல்:
பெரும்பாலும் ஆரோக்கியமாகவே இருந்துவந்த அகிலாவிற்கு அடிக்கடி மருத்துவமனையில் சேர்க்கும் அளவிற்கு உடல்நலம் குன்றியது. விடுப்பு எடுக்கக்கூட வழியில்லாமல் வேலையையே விடும்படி ஆகிவிட்டது. நாற்பது வயதிற்குள்ளாகவே இறந்தும் போய்விட்டாள்.
மூன்றாவது தகவல் :
வேலை போன அந்த ‘எச்சரிக்கை’ப் பெண்மணி தற்கொலை செய்துகொண்டாள்.
திருப்தியுடன் வாழப் பணம் தேவைப்படுகிறது. அந்தப் பணமே எல்லா மகிழ்ச்சிகளுக்கும் காரணமாக இருக்கமுடியாது. சில சமயம் அந்தப் பணமே எமனாக உருப்பெறலாம்.
மேலே சொன்ன பாட்டில் வருவதுபோல் ‘சேர்த்தது’ எல்லாம் ‘செத்த’பின் பயன்படாது.
ஒரே மரணச் செய்திகளாகப் போய்விட்டது. கொஞ்சம் சோக மனநிலையை மாற்ற ஒரு ஜோக். பிரபல பெண் எழுத்தாளர் ஒருவர் வெளியூரில் ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு சென்னை திரும்பினார். அவர் பேசிய அரங்கம் சுடுகாடாக இருந்த இடம் என்று கேள்விப்பட்டுக் கோபத்துடன் கூட்டம் ஏற்பாடு செய்தவர்களிடம் அது குறித்துக் கேட்டாராம்
“அதனால் என்ன மேடம். இங்கு வரணும்னு என்று ஒருத்தொருத்தன் உயிரையே விடறான்.” என்று பதில் வந்ததாம் .
(அட, இதுவும் சுடுகாடு..சாவு என்று ஆகிவிட்டதே..!
போதும் ….. நடு நடுவில் ஜோக், குட்டிக் கதை சொல்லும் டெக்னிக் பலருக்குக் கைவந்திருக்கிறது. எந்தக் குழுவிலும் ரசிக்கும்படியாக பேசுபவர்கள் பலர் இந்த டெக்னிக் பயன்படுத்துவார்கள். ஆனால் நமக்குச் சரியாக வராதுபோல் தெரிகிறது. விட்டுவிடலாம். இனி நேரடியாகவே சொல்வோம்…..)
மேலும்….