எங்கம்மா போன? – அருணா கதிர்

 

குவிகம் பெண்கள் சிறுகதைப்  போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற  கதை 

Image result for kakka muttai

 

“டேய்..டேய். எந்திரிங்கடா. டே தம்பி” என கால்களால் எத்தி எழுப்ப நினைத்தவன், அந்த இரு சிறுவர்களும் சுருண்டு படுத்திருந்த நிலைகண்டு மனமிரங்கி, முதுகில் தட்டி உலுக்கினான். “முகம் கழுகிட்டு வாங்க.பெரியய்யா விழிக்காரு” என்றபடிக்கு சிமெண்ட் தொட்டியில் நிரம்பியிருந்த தண்ணீரை கைகாட்டிச் சென்றான். திடீரென உறக்கம் கலையப் பெற்றிருந்த சேகர் மெதுவாகக் கண்விழித்துப் பார்த்தான். எங்கே படுத்திருக்கிறோம் என்று புரிபடவே சில நொடி பிடித்தது. அவன் அருகில் வாயில் விரல் போட்டவண்ணம் படுத்திருந்த தம்பியை மெல்ல எழுப்பினான், “குமாரு.. டே குமாரு. எழுந்திரிடா.” என்றவன், மெல்ல சிமெண்ட் தொட்டியை அடைந்தான்.

வாய் கொப்பளித்து, முகத்தை கழுவிக்கொண்டிருக்கும் தே, காலையில் எழுப்பியவன் திரும்ப வந்திருந்தான், “இன்னும் மேக்கப் முடியலையாடா. சுறுக்க வாங்க” என்று சேகரையும், குமாரையும் தரதரவென இழுத்துச் சென்றான். குமார் இன்னமும் தூக்க கலக்கத்திலேயே நடந்துவர, சேகரின் புலங்கள் விழித்திருந்தன. சுற்றத்தை கவனித்து, உள்வாங்கிக்கொண்டே நடந்தான். நேற்று இரவு படுத்திருந்த கொட்டகை, பழைய சாமானங்கள் அடுக்கும் குடோன் என புரிந்தது. நிறைய தட்டுமுட்டு சாமானங்களும், தேங்காய் நார் மூட்டைகளும் கிடந்ததை கவனித்தான். கொட்டகையை அடுத்து பெரிய தென்னத் தோப்பு ஒன்று வந்தது. அதன் மையப்பகுதியில் பெரிதாக நிழல் பரப்பிக்கொண்டு வீற்றிருந்த மாமரத்தின் கீழே சிலர் அமர்ந்திருந்தனர். கட்டை நாற்காலியில் கொஞ்சம் தோரனையாக வீற்றிருந்தவர் முன்பு, சேகரும், குமாரும் நிறுத்தப்பட்டனர்.

“இவனுகதானா”என்று வெள்ளை மீசை பெரியவர் வினவினார். இழுத்துவந்தவன், பவ்யமாக தலையசைத்தான்.

“டே, உண்மைய சொல்லணும். உங்க அம்மா எங்க போனா? உங்ககிட்ட ஏதும் சொல்லிட்டு போனாளா? என்ன தெரியுமோ சொல்லுங்க, உங்களை விட்டர்றேன்.” என்று கண்களைக் குறுக்கிக் கொண்டு மொழிந்தார். சேகரும், குமாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இரண்டு தினங்களுக்கு முன்னால், பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்த சமயம், காலையில் எழுப்பியவன் வழிமறித்தது சேகரின் நினைவில் ஓடியது.

“டே, ஆனந்தி பசங்க நீங்கதானடா” என்றான்.

சேகர் ஆமாம் என்று தலை அசைக்க, “உங்க அம்மா பண்ணை வீட்டில இருக்காவ, உங்களை அங்க கூட்டிட்டு வரசொன்னாவ.. வா” என்று பதிலுக்கு காத்திராமல், அவனது பைக்கில் குமாரை லாவகமாக ஏற்றி அமர வைத்திருந்தான். சேகருக்கு முதலில் எதுவுமே புரியவில்லை. தன் ஒன்பது வயது மூளையில் “ஏதோ சிக்கல்” என்று மட்டும் உதித்தது. சேகரை விடவும் இரண்டு வயது இளையவனான குமார், வண்டி சவாரியை அனுபவித்துக் கொண்டிருக்க, சேகர் குழப்பத்துடனேயே இருந்தான்.

இந்த தோப்பின் ஓரத்தில் இருந்த பண்ணைவீட்டிற்கு தருவிக்கப்பட்ட தினத்தில் இருந்து இரண்டு நாட்களாக, ஆள்மாற்றி ஆள் வந்து, “உங்கம்மா எங்க?” என்று கேட்டவண்ணம் இருந்தனர்.

“தெரியலைன்னே. வீட்டிலன் இருப்பாங்க. இல்லைன்னா ஏ.எம் குடோனில பீடி சுத்த போயிருப்பாக..” என்று தனக்குத் தெரிந்த விவரத்தை மறைக்காமல் சேகர் வந்த தினத்தன்றே சொல்லியிருந்தான். ஆனாலும் விடாப்பிடியாக தினமும் யார்யாரோ வந்து விசாரித்தவண்ணமே இருந்தனர். இன்று, இந்த பண்ணை வீட்டின் பெரியவர் முறை.

வெகு நேரம் வெயிலிலேயே நிற்கவைத்திருந்தார். “சார், என்னாச்சு சார்? ஏன் எங்க அம்மாவை தேடறீங்க? அவங்க வீட்டிலதான் சார் இருப்பாங்க. வீடு எங்க இருக்குன்னா..” என சேகர் வாயெடுக்கும் முன்னர், “வீட்டில இருந்தா இன்னேரம் உங்களைத் தேடி வந்திருக்க மாட்டாளாடா? அதெல்லாம் வீட்டில பார்த்தாச்சு, உங்கம்மா அங்க இல்லை.”

“எதுக்கு சார், எங்கம்மாவை தேடறீங்க”

“தேடாம என்னடா பண்ண சொல்லற? இருவது லட்ச ரூவா சரக்கு, பீடில சுத்தித்தர்றேன்னு வாங்கிட்டுப் போன உங்கப்பன் செத்துப் போயிட்டான். இழவு விழுந்த வீட்டில உடனே கேட்க வேண்டாம்னு இவ்வளவு நாளும் பொறுமையா இருக்கேன். உங்கம்மாவைக் கேட்டா தெரியவே தெரியாதுங்கறா. சரக்கும் கைக்கு வரலை, பணமும் வரலை. உங்கப்பன் அடக்கம் பண்ண செலவுக்குன்னு வாங்கின இருவதாயிரம் ரூபாவும் வரலை. உங்கம் இன்னைக்கு தரறேன் நாளைக்கு தர்றேன்னு இழுத்தடிக்கறா. சரி, பசங்கமேல இருக்கற பாசத்தில் காசை குடுத்திருவான்னு உங்களை புடிச்சுட்டு வந்தா, அவ ஆளு எஸ்கேப்பு. எங்க போனான்னே தெரியலை” என்று பொறருமிய வெள்ளை மீசை, கண்களால் ஜாடை செய்து, குமாரை அருகில் அழைத்தான்.

“உன் பேர் என்னடா?”

“எஸ்.செந்தில் குமார்.” என்று பள்ளியில் சொல்லிக் கொடுத்ததைப்போல் கைகளை மார்பின் குறுக்காகக் கட்டிக்கொண்டு மொழிந்தான் குமார்.

“என்ன படிக்கற?”

“ரெண்டாப்பு”

“உங்கம்மாவை எப்படா பார்த்த?”

அருகில் நின்றிருந்த அண்ணனை ஒருமுறை பார்த்த குமார், “அம்மா அன்னைக்கு காலையில் ஸ்கூல்ல எங்களை விட்டுட்டு, பிரின்சிபல் சாரைப் பார்க்கப் போனாக, அப்போ டாடா காட்டினப்போ பார்த்தேன் மாமா” என இன்னமும் மழலையின் சாயல் மாறாத குரலில் மொழிந்தான்.

“பிரின்ஸிபளை எதுக்கு பார்க்க போனா?” என்று கேட்ட கேள்விக்குக் குமாரிடம் பதிலில்லை.

“சார், ஸ்கூல்லை ஒரு பையன் இவனை அடிச்சுட்டான் சார், இவனும் திரும்பதத் தள்ளி விட்டுட்டான், அந்த பையனுக்குக் கீழ விழுந்து கைல அடிபட்டு ரத்தம் வந்திருச்சு சார். அம்மாவைகக் கூட்டிட்டு வந்தாதான் கிளாஸ்குள்ள விடுவேன்னு சொல்லிட்டாக. அதான் போயிருப்பாக” என்று திருதிருவென விழித்த குமாருக்குப் பதிலாக சேகர் மொழிந்தான்.

“டே கதை சொல்லறதை நிறுத்துங்கடா.. பரணி, இவனுகளுக்கு சாப்பிட ஏதாவது குடுத்து, குடோன்ல போடு..” என்று மேலோட்டமாக மொழிந்த வெள்ளை மீசை, அவ்விடம் விட்டு அகல முயல, “சார், முழுபரிட்சை நடக்குது சார். ஏற்கனவே ஒரு பரிட்சைக்கு போகலை, லீவ் எடுத்தா அடுத்த கிளாஸ் அனுப்பமாட்டாங்க சார்.” என்று தயங்கிக் தயங்கி சேகர் சொல்ல, அவனை நின்று நிதானமாக கவனித்தார் பெரியவர்.

கலைந்த தலைமுடியும், கசங்கிய சட்டையும், அழுது வீங்கிப் போயிருந்த கண்களும் என்னவோ செய்திருக்க வேண்டும். “டே, பரணி, இதுகள வீட்டில விட்டிரு.. எதுக்கும் ஒருகண்ணு வை, அவ அம்மா மாதிரியே ஓடிறப் போறானுக..” என்றபடிக்கு அவ்விடம் விட்டு நகர்ந்தார். பரணி என்று அழைக்கப்பட்டவன், சிறுவர்கள் இருவரையும் தன் பைக்கில் ஏற்றிக் கொண்டு, நெறிசலான எந்த குடியிருப்புப் பகுதியில் இறக்கிவிட்டான்.

“அண்ணே எங்க அப்பா என்ன சரக்குன்னே வாங்கினாரு. நான் வேணும்னா வீட்டில தேடிப் பார்க்கவாண்ணே” அக்கரையாக வினவிய சேகரின் தலையில் மெல்ல தட்டினான் பரணி.

“உங்கப்பா என்ன வேலை செஞ்சான்னு தெரியுமாடா?”

“ம்ம்.. புகையில் குடோனுக்கு அப்பாவும் அம்மாவும் வேலைக்குப் போவாங்க. ஏ.எம் குடோன். கடைவீதி கிட்ட இருக்கே அது..”

“அது, ஊருக்குக் தெரிஞ்சு செஞ்ச வேலை, ஊருக்குத் தெரியாம என்ன வேலைப் பார்த்திட்டு இருந்தான் தெரியுமா? கஞ்சா அடைக்கறது, பீடிக்குள்ள கஞ்சா அடைச்சு லாவகமா சுருட்டி கடைக்கு சப்ளை செஞ்சுட்டு இருந்தான்.” என்று பேசிக் கொண்டே வண்டியை செலுத்தியவன், நீலவண்ண பெயிண்ட் அடித்த சிறிய இரும்புக் கதவின் முன் நிறுத்தினான்.

“நான் வேணா வீட்டில இருக்கான்னு தேடிப் பார்க்கவாண்ணே”

“இன்னமுமா தேடாம இருப்பாங்க, அதெல்லாம் தேடியாச்சு.. ஒண்ணும் அகப்படல. இந்த பாரு ஒழுங்கா ஸ்கூலுக்குப் போனமா, பரிட்சை எழுதனுமான்னு இருக்கணும். உங்கம்மா மாதிரி ஊரைவிட்டு ஓடலாம்னு ப்ளான் பண்ண அவளோ தான் பார்த்துக்க. பெரியவர் ஏதோ நல்ல மூட்ல இருந்ததால உங்களை விட்டுட்டாரு. ஒருகண்ணு எப்பவும் உங்க மேல இருக்கும். ஜாக்கிரதை.. தினமும் உங்களை செக் பண்ண நான் வருவேன்.” என்று மிரட்டிவிட்டே சென்றான். அவன் சென்ற திக்கை வெறித்துக் கொண்டு நின்ற சேகர், ஒருகையால் குமாரை பிடித்துக் கொண்டு மூடியிருந்த இரும்புக் கதவின் மேல் கைவைக்க, “டிர்ர்ர்ர்” என்ற சத்தத்துடன் திறந்து கொண்டது.

பெரிய அறையினை இரண்டாகத் தடுத்து ஒருபக்கம், படுக்கை அறையாகவும், மற்றொன்றில் சமையல்கட்டும் கொண்டிருந்த சிறிய வீடு. பகல் வேளையில் விளக்கு எரிந்தால் மட்டுமே வெளிச்சம் கிடைக்கும் வண்ணம் பார்த்து கட்டப் பட்டிருந்தது. விளக்கை எரியவிட்ட சேகரையும் குமாரையும் வீடு முழுக்க கலைந்து கிடந்த சாமானங்கள் வரவேற்றன. “அதெல்லாம் தேடியாச்சு” என்று பரணி கூறிய வார்த்தைகள் மீண்டும் காதுகளில் ஒலித்தது.

கொஞ்சம் கொஞ்சமாக, சாமனங்களை ஒதுக்கிக் கொண்டிருந்தவனின் கைகளை, குமார் பிடித்துக் கொண்டான். “அப்பா சாமிக்கிட்ட போன மாதிரி, அம்மாவும் நம்மளை விட்டு போயிருச்சான்னா? அம்மா எங்கன்னா போச்சு?” என்று சேகரை கட்டிக் கொண்டு விம்மியவனை தேற்றவழி தெரியாமல் உடன் சேர்ந்து கண்கலங்கினான் சேகர்.

அழுது கொண்டே தூங்கிவிட்டிருந்த தம்பியை ஓரமாக படுக்க வைத்துவிட்டு, பக்கத்து வீட்டு, ராதா அத்தையின் கதவைத் தட்டினான். “எங்கடா போனீங்க.ரெண்டு நாளா ஆளையே காணோம்? வீட்டுக்கு வேற யார் யாரோ வந்து போனானுவ?” என்று உரிமையுடன் வினவினான் அம்மாவின் சினேகிதி ராதா.

“அத்தை, எங்கம்மா எங்க போனாங்கன்னு தெரியுமா? உங்ககிட்ட ஏதாச்சும் சொல்லிட்டு போச்சா?”

“இல்லையே சேகரு. ரெண்டு நாளா பீடி சுத்தக்கூட வரலை.. வீடும் பூட்டியே இருக்கவும் நீங்க எல்லாருமே எங்கையோ போயிருக்கீங்கன்னுல்ல நினைச்சேன். எங்கடா போனீங்க?” என்று ராதா கேட்டுக் கொண்டே இருக்க, “நான் வர்றேன்த்தை..” என்றபடிக்கு பதிலேதும் சொல்லாமல் சென்றிருந்தான்.

தம்பி இன்னமும் உறங்கிக் கொண்டிருக்க, மீண்டும் வீட்டினுள் முடங்கியவன், மீதி சாமானங்களை பத்திரமாக அதனிடத்தில் வைக்கத் துவங்கினான். ஒன்பது வயது மனம் கலங்கிப் போயிருந்தது. தந்தை கணேசன் இறந்து முழுதாக ஒருமாதம் கூட ஆகவில்லை. அதற்குள் அம்மாவையும் காணவில்லை.

“ஊர்ல எல்லாரும் சொல்லற மாதிரி நீ ஓடிப் போயிட்டியாம்மா? இனிமே திரும்பி வர மாட்டியாம்மா? நீயில்லாம நாங்க என்னம்மா பண்ணுவோம்”என்று முனுமுனுத்தவனின் கண்களில் தாரைத் தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கலைந்து கிடந்த பாத்திரங்களின் மத்தியில் அப்படியே அமர்ந்துவிட்டான்.

சமையல் சாதனங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிறிய அலமாறியை அப்போது தான் கவனித்தான். சமையல் சாதனங்கள் கொண்ட அலமாரியின் மேல் ஷெல்ஃபில் இருந்த முருகர் படத்தினைக் காணவில்லை. பரணியின் ஆட்கள் சரக்கு தேடும் போது, கீழே தள்ளிவிட்டிருக்கலாம் என எண்ணியவனின் கண்கள் தரையில் துளாவ, படம் அங்கும் இல்லை. கூடத்தில் பாடபுத்தகங்கள் வைக்கும் மூலையின் மேலே “யாமிருக்க பயமேன்” என்ற வாசகத்துடன் பழனியாண்டவர் சிரித்துக் கொண்டிருந்தார். கண் இமைக்காமல் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சேகர், அதன் கீழே குமார் எழுதிப் பழகவென தொங்கவிடப் பட்டிருந்த கருப்பு சார்டினை ஊன்றி கவனித்தான்.

“தினமும் பள்ளி செல்ல வேண்டும்”

“குமார் தமிழ் நீதிக்கதைகள் படித்தல் வேண்டும்” என்று அம்மாவின் கையெழுத்தில் கிறுக்கப் பட்டிருந்த வாசகங்களை கவனமாக திரும்ப வாசித்தான். படிக்கப்படிக்க இன்னமும் கண்களில் கண்ணீர் பெருகியது.

கீழே விழுந்திருந்த போதும் இன்னமும் ஓடிக் கொண்டிருந்த கடிகாரம் எட்டு முறை அடித்தது. ஒருமுடிவுடன் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்த சேகர், குளித்து பள்ளிக்குத் தயாரானான். “அத்தை, இன்னைக்கு எனக்கு முழுப்பரிட்சை. நான் ஸ்கூலுக்குப் போய்ட்டு வந்துடறேன். அதுவரைக்கும் குமாரை கொஞ்சம் பார்த்துக்கறீங்களா?” தம்பியை குளிப்பாட்டி ராதா அத்தையின் வீட்டில் கொண்டு விட்டான்.

ஓரே ஓட்டமாக பள்ளியை எட்டியவன், பரிட்சை ஹாலிற்குச் செல்லாமல், நேரே தலைமை ஆசிரியரை தேடிச் சென்றான். இவனது வருகையை ஒருவாறு அவர் எதிர்பார்த்தது போல் தோன்றியது.

“குட்மார்னிங்க சார். எங்க அம்மா உங்களைப் பார்க்க.” என்று அவன் இழுக்கும் முன்னரே, தலைமை ஆசிரியர், மேஜையின் மேல் வைத்திருந்த அந்த காகிதங்களை இவனிடம் நீட்டினார். “சாதாரணமா இப்படி செய்யறதில்லை. முழுப்பரிட்சை முடியாம, டி.சி குடுக்கக் கூடாது. இருந்தாலும் உங்க அம்மா அன்னைக்கு அவ்வளவு கெஞ்சி கேட்டதால இதை செய்யறேன். நீ நல்லா படிக்கற பையன், உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. நல்லா படி. தம்பியையும் அம்மாவையும் பார்த்துக்கோ. ஆல் த பெஸ்ட்” என்றார்.

சேகரின் மூளை கொஞ்சம் தெளிவது போல் இருந்தது. “சார் எங்கம்மா வேற ஏதாவது சொன்னாங்களா சார்?” என்றான் தயக்கத்தினூடே.

“உங்க பாட்டி வீடு திட்டக்குடில இருக்கறாதாகவும், இனிமே அங்க போய் படிக்கப் போறீங்கன்னு சொன்னாக. யார் வந்து கேட்டாலும் திட்டக்குடி போயிட்டோம்னு சொல்ல சொன்னாங்க. வேற எதும் சொல்லலியே சேகர்” என்றார். சிறிது நேரம் புரியாமல் விழித்தவன், தலைமை ஆசிரியருக்கு நன்றி உரைத்துவிட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்திருந்தான்.

ராதா அத்தையின் வீட்டு வாசலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த குமார், சேகரின் தலையைக் கண்டதும் ஓடிவந்தான்.

“சேகரு, உன்னை தேடிட்டு ஒரு ஆள் வந்துட்டுப் போனான்ப்பா.” என்று வீட்டின் வாசலில் பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்த ராதா தகவல் கூறினார்.

“யாருத்தே”

“அந்த பைக்ல கூட்டிட்டு வந்த மாமா”என்று ராதாவிற்கு பதிலாக குமார் பதிலளித்தான்.

“என்ன கேட்டாரு”

“நீ எங்கன்னு கேட்டாரு. ஸ்கூலுக்குப் போயிருக்க பரிட்சை எழுதன்னு சொன்னேன். உங்கம்மா வந்தாளான்னு கேட்டாரு, இல்லைன்னேன். சாயந்தரமா வர்றதா சொல்லியிருக்காரு” என்று சொல்லிக் கொண்டே இட்லிபானையை சுரண்டிக் கொண்டிருந்தாள். தம்பியை இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தவன், நேரே, குமாரின் புத்தகப்பையினை திறந்து, அவனது தமிழ்புத்தகத்தில் நீதிக்கதைகள் பக்கத்தினைப் பிரித்தான். மூன்று கதைகள் இருந்தன, முயலும் ஆமையும், காகமும் நாகமும், வேடனும் புறாவும் என்ற தலைப்பில் இருந்த கதைகள் மூன்றையும் வாசித்தான். அதில், காகமும் நாகமும் கதையில், நாகப்பாம்பின் புத்திற்குள், காகம் ராணியின் தங்கமாலையை உள்ளே போடுவது போன்ற படம் அச்சடிக்கப் பட்டிருக்க, அதன் அருகில் பெருக்கல் குறி காணப்பட்டது.

அண்ணன் தன் பாடபுத்தகத்தை புரட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குமாரை வெளியே அழைத்து வந்தான். குமாருக்கு விளையாட சில சமையல் பாத்திரங்களையும், கரண்டியையும் எடுத்துப் போட்டு, “வாசல்ல உட்காந்து ட்ரம்ஸ் விளையாட்டு விளையாடு. அண்ணா படிக்கனும்” என்று அமரவைத்தான்.

அடுத்த அரைமணி நேரம், குமாரின் டிரம்ஸ் வாசிப்பிற்குத் தகுந்தாற் போல் தானும் தட்டிக் கொண்டிருந்தான்.

மாலை சூழ்ந்ததும் குமாருக்கு முக்கு கடையில் இரண்டு புரோட்டா வாங்கிக் கொடுத்து, தானும் உண்டுமுடித்தான். “தூங்கு குமாரு.நாளைக்கு சீக்கரமா எந்திரிக்கனும்” என்று அம்மா வேணும் என்று சினுங்க ஆரம்பித்திருந்தவனை சமாதானம் செய்து, உறங்கச் செய்தான். வாசலில் பரணி வந்து இருவரையும் பார்த்துவிட்டுச் சென்றிருக்க, சேகர் அயர்வுடன் குமாரின் அருகில் சுருண்டான்.

மூன்று மணி வரையிலும் உறக்கம் வராமல் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவன், மெல்ல எழுந்து, புத்தகப்பையை ஒரு தோளிலும், அசதியாக உறங்கிக் கொண்டிருந்த தம்பியை மறு தோளிலும் போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளிப்பட்டான்.

வீட்டில் இருந்து இரண்டு மையில் தூரத்தில் ரயிலடியை நோக்கி சீராக நடந்தவன், நான்கு மணிக்கு சென்னை செல்லும் ரயிலில் இரண்டு டிக்கெட்டுகளுடன் அமர்ந்திருந்தான். மெல்ல பொழுது விடியத் துவங்கும் போது, ரயில் அந்த ஊரில் இருந்து சென்னை நோக்கி வெகுதொலைவு வந்துவிட்டிருந்தது.

அதே நேரம், ஆந்திர மாநிலத்தில் பெயர் தெரியாத கிராமம் ஒன்று, காலை நேரத்தின் பரபரப்பு ஏதுமின்றி சோம்பலாக விடிந்தது. அந்த சிறிய ஓட்டு வீட்டின் அருகில் டீக்கடையில் ஜரூராக வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தி, பாய்லர் துலக்கிக் கொண்டு அருகே அமர்ந்திருந்த தன் சின்னம்மாவிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.

“இன்னையோட நாலு நாள் ஆச்சு சின்னம்மா,,இதுகளை இன்னமும் காணம் பாரேன்.”

“ஆமாடீ இப்போ புலம்பு. எந்த அம்மாவாவது பெத்த புள்ளைகளை அம்போன்னு விட்டுட்டு ஓடிவருவாளா? வர்றதுன்னு ஆச்சு, அதுகளையும் கூட்டிட்டு வர்றதுக்கு என்ன?”

“புரியாம பேசற சின்னம்மா நீ. நான் என்ன வேணுமின்னா விட்டுட்டு வந்தேன். அதுக்கிட்ட சொல்லிக்க கூட நேரமில்லை சின்னம்மா. இருவதாயிரம் கடனுக்கு வட்டி அஞ்சாயிரம் ஆயிருச்சுன்னு தினமும் கதவை தட்டறான். கடன் வாங்கி ஒருமாசம் கூட ஆவலை. இன்னும் பத்து மாசம் போனா ஒரு லட்சம் குடுன்னு கேட்பான். நான் எங்க போவேன். சரக்கு எங்க, சரக்கு எங்கன்னு தினமும் ஓரே ரகளை”

“அதுக்கு, ஊரை விட்டு ஓடு வந்துருவியா ஆனந்தி. ஏதாவது வித்துகித்து கடனை அடைக்கப்பார்ப்பாளா?”

“என்னத்தை விக்க, ஒரு பொட்டு தங்கம் கிடையாது. விக்கனும்னா என்னைத் தான் விக்கனும். அடுத்து அப்படித்தான் நூல்விட்டு பார்பானுவ எடுப்பட்டவுனுக.” என்று இன்னும் நிறைய கெட்ட வார்த்தைகள் கொண்டு அர்ச்சித்தவள், கண்களை கவனமாக ரோட்டில் பதித்திருந்தாள்.

“ஏண்டி, இங்க இருக்கேண்ணு உன் பசங்களுக்குத் தெரியுமா? எப்படி வருவானுக. உனக்கே நான் இந்த ஊர்ல இருக்கன்னு ஒரு மாசத்துக்கு முந்தி தான் தெரியும்.”

“அதெல்லாம் வருவானுக சின்னம்மா. சேகரு கையில் அகப்படற மாதிரி ஒரு இடத்தில உன் விலாசம் எழுதி வச்சிட்டு தான் வந்திருக்கேன்.”

“இந்த விலாசம் எழுதியிருந்தா, சேகரு படிக்கறதுக்கு முந்தி, அந்த கோஷ்ட்டி கையில் சிக்கியிருக்குமே ஆனந்தி.”

“அவ்வளவு கூட யோசிக்கமாட்டனா. அதெல்லாம் சேகரு மட்டும் கண்டுபிடிக்கர மாதிரிதான் வச்சிருக்கேன். எனக்கு என்ன பயம்னா, நான் போயிட்டேங்கற துக்கத்தில எங்க நான் எழுதிவச்சதை கண்டுபிடிக்காம போயிருவானோன்னு தான்.ஆனா சேகரு விவரமானவன், சின்னதுக்கு அவ்வளோ சாமர்தியம் பத்தாது. ஆனா சேகரு கெட்டி. கண்டுபிடிச்சிடும்.” என்று சொல்லிக் கொண்டிருந்த ஆனந்தியின் முகம் பெறுமையில் மிளிர்ந்தது.

“என்னமோ நீயும் படத்துல நடக்கறாப்ல கதை சொல்லற. பார்க்கலாம் உன் மகனுக வரானுகளான்னு” என்று சின்னம்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“இதோ வர்றானுகள்ல” என்று கையில் பிடித்திருந்த டீ கோப்பைகளை மேடையில் வைத்துவிட்டு, புழுதி பறந்த சாலையில் கடந்து சென்ற பேருந்தில் இருந்து, குமாரை ஒருகையில் பிடித்துக் கொண்டு இறங்கிய சேகரை நோக்கி தடதடவென ஓடினாள் ஆனந்தி.

சேகருக்கு அம்மா ஓடிவருவது தெரிந்து, தம்பியை முன்னே ஓடவிட்டு, பின்னாலேயே தானும் வேகமாக நடந்தான்.

“கண்ணு ராசா” என்று மாறி மாறி இருவரின் முகத்திலும் முத்தம் பதித்தவள், குமாரை நெஞ்சுடன் அணைத்துக் கொண்டாள். அருகில் நின்றிருந்த சேகரின் கண்களை கள்ளச் சிரிப்புடன் ஏறிட்டாள். “கண்டுபிடிச்சிட்ட என் போலீசு.” என்று பெரிய மகனை இறுக்கமாக அணைத்து முத்தமிட்டாள்.

“அம்மாவைக் காணோம்னு ரொம்ப தவிச்சுப் போயிட்டீங்களாடா. கண்கொத்தி பாம்பு மாதிரி எங்க போறோம் வற்றோம்னு ரொம்ப கவனமா பார்த்தானுகடா. என்னால அவனுகளை ஏமாத்திட்டு உங்களை கூட கூட்டியார முடியலை. ஒருதடவை தான் சான்ஸு. தப்பிக்கபாக்கறோம்னு தெரிஞ்சுது கொன்னுடுவானுக.. அதான் சேகரு அப்படி யோசிச்சேன். அம்மாவை மன்னிச்சிருடா.”

“சே, போம்மா, எங்கிட்ட ஜாடையாவாது சொல்லிய இருக்கலாம்ல.. கொஞ்ச நேரம் நீ நெஜம்மாவே போயிட்டன்னு நினைச்சு பயந்துட்டேன்ம்மா.”

“இல்லடா கண்ணு, உனக்கு தெரிஞ்சா, அவனுக மிரட்டி கேட்டா எங்க சொல்லிடுவியோன்னு பயந்துட்டேன். அதான் உனக்கு மட்டும் புரியற மாதிரி எழுதிவச்சிருந்தேனே”

“ம்ம்ம்ம் முருகர் படம் சமையல் அலமாரில இல்லாம இருக்கறதைப் பார்த்து தான் கண்டுபிடிச்சேன். ஒரு பொருள் எடுத்த இடத்தில எப்பவுமே வைக்கற நீ, படத்தை மாத்தி வச்சது ஏன்னு யோசிச்சேன்”

“என் அறிவாளி போலீஸ். சரி, ஸ்கூலுக்குப் போனியா? ஹெட்மாஸ்டரைப் பார்த்தியா?” என்று ஆனந்தி வினவ, கையில் பிடித்திருந்த புத்தகப்பையினுள் கைவிட்டு, இருவரது டி.சியையும் வெளியே எடுத்துக்காண்பித்தான்.

“ஏம்மா இனிமே இந்தூர்ல தான் இருக்கப் போறமா?” என்று சேகர் வினவியதை ஆனந்தி காதில் போட்டுக் கொள்ளவில்லை. நேரே சின்னம்மாவின் வீட்டிற்குச் சென்றவள், தயாராக வைத்திருந்த தன் பேக்கினை மட்டும் எடுத்துக் கொண்டு வெளிப்பட்டாள்.

“ஏண்டி, இப்போ தான வந்தானுக, அதுக்குள்ள இழுத்துகிட்டு ஓடனுமா.ரெண்டு நாள் இருந்துட்டு அப்பறமா போகலாம்ல.” என்று சின்னம்மா எவ்வளது தடுத்தும் ஆனந்தி கேட்கவில்லை.

“சரி எங்க போறேன்னு எங்கிட்ட கூட சொல்லக்கூடாதாடீ.”

“எங்க போறேன்னு எனக்கே தெரியாதப்போ உனக்கு என்ன சொல்லறது சின்னம்மா.. எங்க போனாலும் என் பையனுகளோட நான் சந்தோஷமா இருப்பேன். அவ்வளோ தான் சொல்ல முடியும் இப்போதைக்கு” என்றவள், இருமகன்களையும் பிடித்துக் கொண்டு, பயணமானாள்.

வெளிக்காற்று சுகமாக முகத்தில் பட, சட்டென குமார் உறங்கி விட்டிருந்தான். “ஏம்மா வெளியூர் போனா கையில பணம் வேணாமா? அதுக்கு சின்னப்பாட்டி வீட்டிலையே இருக்கலாம்ல.” என்று மெல்லிய குரலில் சேகர் வினவினார். அவனது தலையை மெதுவாக வருடிய ஆனந்தி அந்த சிறிய பேக்கினுள் கைவிட்டு, மஞ்சள் பை ஒன்றினை எடுத்துக் சேகரின் கையில் வைத்தாள்.

அதனுள் இரண்டு பெரிய நோட்டுக்கட்டுகள் தட்டுப்பட்டன. “ஏதும்மா இது?” என்று கண்களை அகல விரித்தவனிடம், “நாகப்பாம்பு குடுத்துச்சு.” என்று சொல்லி கண்சிமிட்டினாள்.

“பொந்துக்குள்ள இருந்துச்சா?”

“ம்ம்ம் மழைக்கு பாம்பு வந்தப்போ செவுத்தை அடைச்ச பொந்துக்குள்ள உங்கப்பா சரக்கு வித்த பணத்தை பத்திரப்படுத்தி வச்சிருக்காரு. உனக்கு விலாசம் எழுதி உள்ள போட நான் தோண்டினப்போ இது கிடைச்சிது.”

“இதை அவனுக்கிட்ட குடுத்திருந்தா பிரச்சனை முடிஞ்சிருக்குமேம்மா.எதுக்கு இவ்வளோ கஷ்டம்.”

“உங்கப்பா எவ்வளோ வாங்கினாருன்னு தெரியலை சேகரு. இதுல இருக்கறது வெறும் ஒரு லட்சம் தான். மீதிப்பணம் எங்கண்ணு தொல்லை பண்ணுவானுக.. அதான். நாம புதுவாழ்க்கையைத் தொடங்க இது போதும்னு கிளம்பிட்டேன். சின்னதா ஒரு சாப்பாட்டு வண்டி போடலாம். உன்னை பக்கதில இருக்கற பள்ளிக்கூடத்தில சேர்த்துவிடரேன். படிச்சு பெரிய போலீஸ் ஆகனும்” என்று கண்களில் மின்னலடிக்க ஆனந்தி சொல்லிக் கொண்டிருந்தாள். தடதடவென ஓடிக் கொண்டிருந்த ரயில், மெல்ல விடிவெள்ளி பூத்திருந்த இரவுக்குள் பயணிக்கத் துவங்கியிருந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.