சாருகேசி அவர்களுக்கு அஞ்சலி !

திரு சாருகேசி மறைந்தார் – மூத்த பத்திரிக்கையாளர், எழுத்தாளர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத்தன்மை வாய்ந்த மனிதநேயப் பண்பாளர் மறைவு இயல், இசை,நாடக, பத்திரிகை உலகிற்கு ஈடு செய்யமுடியாத இழப்பாகும்.
13-2-2019 மாலை தமிழ்ப் புத்தக நண்பர்கள் சார்பில் நடத்தப்பட்ட நினைவேந்தல் கூட்டத்தில் டேக் மையம் சாரி, திருப்பூர் கிருஷ்ணன், கீழாம்பூர் சங்கரசுப்ரமணியம், சுஜாதா ரங்கராஜன், யோகா, சீதா ரவி, ராமநாராயணன் மற்றும் சாருகேசி அவர்களின் சகோதரி ஆகியோர் தமது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். ஆர் வி ராஜன் தயாரிப்பில் சாருகேசியின் பன்முகத்தன்மையையும், மனிதநேயத்தையும் போற்றும்வகையில் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறும்படம்போல் ஒளிபரப்பப்பட்டன.
அறுபது ஆண்டுகளில் குழந்தைகளுக்கான மூன்று கதைத் தொகுப்புகள், இரண்டு நகைச்சுவைக் கதைத் தொகுப்புகள், ‘நகை’ என்ற ஒரு சீரியஸ் கதைத் தொகுப்பு ( இதுவே ‘JEWELS’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது – மொழிபெயர்த்தவர் திரு C.G.ரிஷிகேஷ்) என எழுதிக் குவித்தவர்.
மற்றொரு புத்தகம் – கட்டுரைத் தொகுப்பு – ‘மம்முட்டி முதல், மன்மோகன்சிங்வரை’. இவரது இயல்பான நகைச்சுவை பல கட்டுரைகளில் வெளிப்பட்டுத் தெறிப்பதைக் காணலாம்.
ஆரம்ப காலத்தில் இவரது நகைச்சுவை எழுத்துக்களை ஊக்குவித்தவர் கல்கண்டு திரு தமிழ்வாணன் அவர்கள். பின்னர் கல்கி
ராஜேந்திரன் அவர்கள், இவரது கதைகள், பேட்டிகள், கட்டுரைகள் சிறப்புடன் வெளிவரக் காரணமாயிருந்தார்.
ஆங்கிலத்திலும் எழுதும் திறமையினால், தி ஹிந்து, எக்ஸ்பிரஸ், எகனாமிக் டைம்ஸ், ஸ்ருதி, மெட்ராஸ் மியூசிங்ஸ், போன்ற ஏடுகளில் இவரது கட்டுரைகள் வாரம் தோறும் வெளிவந்தன. ’சிறந்த மொழி மாற்று எழுத்தாளர்’ விருதை திரு காஸ்ரீஸ்ரீ வழங்கினார்.
இவரது அண்ணாதுரைபற்றிய நூல், குருபக்தி போன்றவை புகழ் பெற்றவை.


மஹாசுவாமிகள், சீனப் பயண அனுபவம் ஆகிய புத்தகங்கள் பல பதிப்புகள் பெற்றவை. 8000 க்கும் மேல் கட்டுரைகள், இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகள் எழுதியிருக்கும் இவர், இனி எழுதப்போவதில்லை, மொழிமாற்றம் மட்டும் செய்ய உத்தேசம் என்று கூட்டம் ஒன்றில் சொன்னது, அரங்கத்தில் யாருக்கும் ஏற்புடையதாய் இல்லை !
இது நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
இனி அவர் சொன்னபடியே எழுதப்போவதில்லை.
தன் புத்தகங்கள் விற்றுவரும் தொகையை. ‘ஆட்டிஸம்’ பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கிவிட்டார் –
அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது சிலருக்குச் செய்தியாக இருக்கக்கூடும். ஒரு சாலை விபத்தில் இறந்த தன் சகோதரனின் உடல் உறுப்புகளைத் தானம்செய்த அருமையான குடும்பம் அவருடையது (Jewels புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் இந்த வேதனையை சாருகேசி விவரித்திருப்பதப் படிக்கும் எவர் மனமும் கசிந்துருகும்). அவரது குடும்பத்தார் அவரை குடும்பத்தின் ‘பீஷ்மர்’ என்று குறிப்பிடுவார்களாம்!
அசோகமித்திரன்பற்றி எழுதிய கட்டுரையை மெட்றாஸ் ம்யூசிங்ஸில் படித்து, அவருடன் பேசினேன். ரத்தினச்சுருக்கமான வார்த்தைகளில் என்ன ஒரு அடக்கமாக மேதமை. அன்று எனக்கு அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருந்தன.
தமிழ்ப் புத்தக நண்பர்கள் கூட்டத்தில் என்னையும் ஒரு புத்தக விமர்சனம் செய்யவைத்து, பாராட்டிய (ஆசீர்வதித்த) அபூர்வ மனிதர் அவர். என் புத்தக வெளியீட்டு விழாக்களுக்கும், மற்றைய இலக்கியக் கூட்டங்களுக்கும் தவறாமல் நண்பர் ஆர் வி ராஜனுடன் வந்திருந்து வாழ்த்தியவர்.
என் டாக்டர் நண்பனிடம் அவ்வப்போது அவர் உடல்நிலையைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஆனாலும் அவர் யாரும் தன்னை வந்து பார்ப்பதை விரும்பவில்லை என்று அறிந்தேன். தன் சோகங்களை அவர் யாருடனும் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை –
அவர்தான் சாருகேசி என்னும் மனிதநேயர்.
கோபுலுவின் சித்திரம்போல், எப்போதும் கையில் சிறு பேப்பருடன் இசை, நாடக, இலக்கியக் கூட்டங்களில் அமைதியாய் வளையவரும் சாருகேசி !
சார் – WE WILL MISS YOU FOREVER.