நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.
- கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018 .
- இட்லி மகிமை – ஏப்ரல் 2018
- தோசை ஒரு தொடர்கதை – மே 2018
- அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
- ரசமாயம் – ஜூலை 2018
- போளி புராணம் – ஆகஸ்ட் 2018
- அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
- கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
- கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
- சேவை செய்வோம் – டிசம்பர் 2018
- பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
- பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
வெண்பொங்கல் வேண்டுதல்
இட்லி தோசை என்று எதை நீட்டினாலும்
இருக்கட்டும் என்று சொல்லி சற்றுத் தள்ளி வைப்பேன்.
பொங்கலென்று சொல்லிவிட்டால் போதுமடா போதும்
பொங்கி வரும் பசி எனக்கு பிடுங்கித் தின்னத் தோணும்.
பொங்கலன்று நாம் பொங்கும் தித்திப்(பு) பொங்கலன்று –
நான் சொல்லும் பொங்கல் நல்ல விறுவிறு வெண்பொங்கல்.
பார்த்தாலே பசி எடுக்கும் கப கபவென எரியும் –
உண்ண உண்ண உயிர் சிலிர்க்கும் ருசி உனக்குத் தெரியும்.
கொதிக்க கொதிக்க வேணுமடா வெண்பொங்கல் எனக்கு –
கரண்டி நெய்யை மேலே விட்டு கிளறிக்கொண்டு கொட்டு !
உப்பும் மிளகும் தூக்கலாக இருக்க வேணும் எனக்கு –
சப்புக் கொட்டி சாப்பிடவே செய்யும் இந்த சரக்கு.
குளித்து முடித்து வந்து விட்டால் பசியும் வந்து சேரும் –
பொங்கல் வாசம் வந்து விட்டால் கையும் வாயும் பேசும்.
சட்னி சாம்பார் எதுவென்றாலும் சேர்த்தடிக்கத் தோணும்
கொத்சு என்று சொன்னால் மனசு குட்டிக்கரணம் போடும்.
பெருமாள் கோயில் பொங்கலென்றால் பெருமை உனக்குப் புரியும்
பக்தி கொஞ்சம் பசியும் கொஞ்சம் போட்டு வயிற்றைக் கிளறும்
அம்மா கையால் செய்த பொங்கல் மீண்டும் எனக்கு வேணும்
தவம் இருந்தால் கிடைத்திடுமோ மீண்டும் அந்தச் சொர்க்கம்.
பொங்கலோ பொங்கல் என்று உரக்க நீயும் சொல்லு
வெண்பொங்கல் வீட்டில் செய்தால் வயிறும் மனமும் நிறையும்
முந்திரியைப் போட்டு நெய்யில் வறுவறுன்னு வறுத்து
வெண்பொங்கல் வேண்டுமம்மா – வேண்டுதல் நிறைவேற்று.