வாழ்வென்றும் தாழ்வென்றும்
வளமென்றும் குறைவென்றும்
சக்கரம் சுழல்கின்றது அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது
யாருக்கும் வாழ்வுண்டு அதற்கொரு நாளுண்டு
பின்னாட்களில் என்னுடன் வேலை பார்த்த ஊழியர்களில் ஒருவர் பயிற்சி மையத்தில் அறிமுகமான தங்கப்பன். எங்கள் நிறுவனத்தில் பல தங்கப்பன்கள் இருந்ததால் இவரை இங்க்லீஷ் தங்கப்பன் என்று கூறுவார்கள்.
கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே தந்தையை இழந்தவர். அவர் தந்தை எங்கள் அலுவலக ஊழியர். கருணை அடிப்படையில் இவருக்கு வேலை வழங்கப்பட குடும்ப சூழ்நிலையை முன்னிட்டு அந்தக் கால புகுமுக வகுப்பிலிருந்து விலகி பணியில் சேர்ந்தவர்.
ஆங்கிலம் தவிர மற்ற பாடங்களைத் தமிழ்மொழியில் படித்துவிட்டு கல்லூரியில் எல்லாம் ஆங்கிலமயம் என்று தடுமாறுவது மிகவும் இயற்கை. தங்கப்பனின் உறவினர் ஒருவர் இந்தத் தடுமாற்றத்தில் கிட்டத்தட்ட மனநோய்க்கு ஆளாகிவிட்டார். அதனால் பதினோராம் வகுப்பு முடிந்து முடிவுகள் வருவதற்குள் தங்கப்பனை ஆங்கிலம் பயில சென்னையில் ஒரு பயிலகத்தில் சேர்த்திருந்தார்கள். ஆர்வத்துடன் இவர் கற்றாலும் மொழி இவருக்குப் பிடிபடவே இல்லை.
அவர் கற்ற ஆங்கிலம் கல்லூரிப் படிப்பிற்கு உபயோகப்படவில்லை. ஆனாலும் தேவை இருக்கிறதோ இல்லையோ இவர் அலுவலகத்தில் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பேசுவார்.
பயிற்சி மையத்தில் சிறு குழுக்களைப் பிரிப்பார்கள். ஒவ்வொரு குழுவிற்கும் ஏதேனும் தலைப்பைக் கொடுத்து கலந்துரையாடச் செய்வார்கள். குழுவில் ஒருவர் நடந்த உரையாடல்களின் கருத்துக்களை எல்லோருக்கும் சொல்வார்கள். தனது குழுவிற்காக அந்தப்பணியை தங்கப்பன் ஏற்றார். தமிழில் யோசித்து ஆங்கில மாற்றம் செய்து தப்பும் தவறுமாகப் பேசி சமாளித்துவிட்டார்.
வகுப்பில் மற்றவர்கள் அந்தக் காலகட்ட மனமுதிர்ச்சியில் சற்று அதிகமாகவே தங்கப்பனைக் கலாய்த்து விட்டார்கள். முகம் எல்லாம் சிவந்து சிறுத்துப் போய்விட்டது இவருக்கு.
உங்கள் ஊகம் சரிதான் அந்த கேலியில் பங்கெடுக்காத ஒரே நபர் நான்தான். சாதாரணமாகப் பேசுவதே சொற்பம். (நல்ல நாளிலேயே தில்லைநாயகம் என்பார்களே அதுபோல்) தங்கப்பன் அன்று மாலையே ஒரு தமிழ் ஆங்கிலம் அகராதி ஒன்றும் ஒரு ட்ரான்ஸ்சிஸ்டர் ஒன்றும் வாங்கிவிட்டார். எப்படியாவது தான் சிறந்த ஆங்கிலப் பேச்சாளனாக வரத்தான் போகிறேன் என்று என்னிடம் மட்டும் சொன்னார். அதில் அவர் வெற்றி பெற்றாரோ இல்லையோ முயற்சியை மட்டும் எப்போதும் விடவில்லை. அவர் என்னுடன் இரு அலுவலகங்களில் இரு வேறு சந்தர்ப்பங்களில் வேலை பார்த்திருக்கிறார்.
வேலையில் கெட்டிக்காரன் என்று எப்போதும் பெயர் வாங்கியதில்லை. என்னையும் தங்கப்பனையும் தராசில் வைத்தால் எந்தத் தட்டு தாழும் என்று சொல்லமுடியாது என்று அலுவலகத்தில் பேசிக்கொள்வார்கள். ஒரே பிரிவில் இருவரையும் வைத்தால் அதோகதி என்று எண்ணியோ என்னவோ வேறுவேறு பிரிவுகளில்தான் நாங்கள் இருப்போம்.
சில்லறைச் சச்சரவுகள் அலுவலகத்தில் அவ்வப்போது எழத்தான் செய்யும். என்னை யாராவது எதாவது சொன்னால் அவர்களைக் கலங்கடிக்க எனக்கு ஒரு வழிதான் தெரியும். பதிலுக்கு ஒரு வெற்றுப் பார்வைதான். மேலே என்ன சொல்வது அல்லது செய்வது என்று தெரியாமல் தலையில் அடித்துக்கொண்டு போய்விடுவார்கள். எனக்கு அதில் ஒரு குரூர மகிழ்ச்சி இருந்திருக்க வேண்டும்.
தங்கப்பன் நேர் எதிர். இங்கிலீஷ் தங்கப்பன் என்றாலே ‘யார் அந்தச் சண்டைக் கோழியா?” என்று கேட்பார்கள் தன்னை சம்பந்தப்படுத்தி ஏதேனும் சச்சரவு வரக்கூடும் என்று தெரிந்தாலே, சகட்டுமேனிக்கு ஆரம்பித்துவிடுவார்.
“வாட் நான்சென்ஸ்..! தேர் இஸ் எ லிமிட் டு எவரிதிங். ஆல் யூஸ்லெஸ் பீபுள் ஆர் ட்ரையிங் டு ஆக்ட் ஸ்மார்ட். ஐ வில் டீச் தெம் அ லேசன்.” என்று ஆங்கிலத்தில் ஆரம்பிப்பார். உடனே தமிழுக்கு மாறிவிடுவார். “தலைக்கனம் பிடிச்சவன், அகராதி புடிச்சவன் எல்லாருக்கும் இந்த ஆபீசுல இடம் கொடுத்துட்டாங்க … “என்றெல்லாம் சற்று பலமாகவே முனகுவார். எதிராளி ஆரம்பிக்கும் முன்பே பின்வாங்கிவிடுவார்.
ஆனால் இயல்பாகவே மென்மையானவர். பிச்சை எடுக்கும் குழந்தைகளைப் பார்த்தாலே நெகிழ்ந்துவிடுவார். அவர் வீட்டருகில் பல எளியவர்களுக்கு யாருக்கும் தெரியாமல் உதவி செய்துவந்திருக்கிறார்.
ஒருமுறை அவர் நண்பர் ஒருவர் இவரை ஒரு உணவகத்திற்கு அழைத்துக் கொண்டுபோனார். என்ன காரணமோ நானும் உடனிருந்தேன். நண்பர்.வடநாட்டு முறைப்படி சப்ஜி ஆர்டர் செய்தார். அதுவரை இந்த நடைமுறை எனக்குத் தெரியாதே என்று வெளிப்படையாகச் சொன்னார். பல சமாச்சாரங்களைக் கற்றுக்கொள்ளாமலேயே வளர்ந்துவிட்டேன் என்று சொல்லிக்கொண்டார். அலுவலகத்தில் தன் வேலையில் யாரேனும் தப்பு கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்று தெரிந்தாலே பாயும் தங்கப்பன் இவர்தானா என்று எனக்குத் தோன்றியது.
அவருக்கு இரு மகன்கள். வீட்டில் கணினி வாங்குவது அப்போதுதான் தொடங்கியிருந்த நேரம். பிள்ளைகள் கணினி வாங்கித்தரச் சொல்லிக் கேட்டார்களாம். அதற்குக் கணிசமான தொகை செலவு செய்வதற்குமுன் பலரிடம் விசாரித்து வந்தார். அலுவலக நண்பர்கள் மேல் இவருக்கு நம்பிக்கை இல்லை. எங்கள் அலுவலகக் கணினிக்கு பேப்பர், ரிப்பன் போன்றவற்றை கொடுத்துவரும் நபர் மூலமாக ஒரு கணினி வியாபாரம் செய்யும் என்ஜினீயர் ஒருவரைப் பிடித்தார்.
எந்த வகைக் கணினி வாங்கலாம் என்று இவர் கேட்டிருக்கிறார். ஆனால் அந்தப் பொறியாளர், “உங்கள் பிள்ளைகள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதற்கேற்ற கணினிதான் வாங்க வேண்டும். உங்கள் வீட்டிற்கு வருகிறேன்.” என்று சொல்லிவிட்டார். அதுபோலச் செய்யவும் செய்தார். அவர்கள் தேவைக்கேற்ப சரியான தேர்வு செய்து கணினி விற்றார்.
அவர் அப்போது சொன்னதை தங்கப்பன் அடிக்கடி சொல்வார்.
“எனக்கு நல்ல லாபம் கிடைப்பது என் நோக்கமல்ல. உழைத்துச் சம்பாதித்த காசு அதற்கேற்ற பயனைத் தரவேண்டும். நீங்கள் இன்னும் இரண்டு மூன்றுபேரிடம் என்னைப்பற்றிச் சொல்வீர்கள் அல்லவா? அதுவே எனக்கு பெரிய லாபம்.” என்றாராம்.
தனது தாழ்வு மனப்பான்மையை ஆவேசத்தால் மறைப்பது ஒரு வழி என்று எங்கோ படித்தபோது எனக்கு நினைவிற்கு வந்தது தங்கப்பன்தான்.
நானும் தங்கப்பனும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில்தான் ஒய்வு பெற்றோம். நான் எந்தப் பதவி உயர்வும் பெறாமலே வேலைக்குச் சேர்ந்த அதே பதவியில் ஒய்வு பெற்றேன். தங்கப்பன் தாமதமாக முதல் பதவி உயர்வு பெற்றார். ஒய்வு பெறுவதற்குச் சற்றுமுன் இரண்டாவது பதவி உயர்வும் கிடைத்தது. ஓய்வூதியம் சற்று அதிகமாகக் கிடைக்க இது காரணமாயிற்று.
ஒரு மகன் திருமணத்திற்கு நான் போயிருக்கிறேன். அவர் மனைவி கனிவும் பாசமும் மிக்கவர். எனது அலுவலக நண்பர்கள் குடும்பத்திலேயே தங்கப்பன் குடும்பம் ஒன்றுடன்தான் என் மனைவி மக்களுக்குப் பழக்கம்.
பெரிய மகன் வளைகுடா நாட்டில் குடும்பத்தோடு இருக்கிறான். இரண்டாவது மகன் பேராசிரியராக ஒரு கலாசாலையில் பெரும் மதிப்போடு பணியாற்றுகிறான். முனைவர் ஆய்வுகளுக்கு இவனை கெய்ட் ஆகக் கிடைப்பது பெரும் அதிர்ஷ்டம் என்று சொல்லும் அளவிற்கு புகழுடன் இருக்கிறான். பெற்றோர்கள் அவனுடன்தான். செய்தித் தாள்களில் முனைவர் மனோகரன் தங்கப்பன் என்ற பெயர் அடிபடும் போதெல்லாம் எனக்குப் பெருமையாக இருக்கும்.
கிட்டத்தட்ட எங்கள் வயதுக்காரரான சேஷாத்ரி என்ற சக ஊழியர் இருந்தார். எங்களுக்கு சிலவருடங்களே சீனியர் ஆன அவர் படிப்படியாகப் பதவி உயர்வுகள் பெற்றுவந்த திறமைசாலி. எங்கள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் அரசு நியமித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இருப்பார். நிறுவனத்திற்குள் ஊழியர்கள் பெறக்கூடிய அதிக பட்ச பதவி உயர்வாக இரண்டாவது பெரிய பதவிவரை உயர்ந்து ஓய்வுபெற்றார். அவரை நான் சில நாட்கள் முன் சந்தித்தேன்.
“தங்கப்பன் இருமகன்களும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். நான் பெரிய பதவி வகித்தவன். ஆனால் எனது பிள்ளைகள், என் கவனக் குறைவு காரணமாகவோ என்னவோ, இன்னும் செட்டில் ஆகவில்லை. எங்கள் இருவரில் வாழ்வில் வெற்றி பெற்றவன் யார் என்று இப்போது புரிகிறது.” என்றார்.
நான் வேலைக்குச் சேர்ந்தபோது மனதாரப் பாராட்டியது வேம்பு என்கிற எதிர்வீட்டுப் பையன் என்று நான் முன்னமேயே சொல்லியிருக்கிறேன். நான் இந்த நிறுவனத்தில் சேர இருப்பதைத் தெரிவித்தவுடன் என்னைவிட அவன் மிகவும் சந்தோஷப்பட்டதாகத் தோன்றியது. அவன் எவ்வகையிலோ இந்தத் தங்கப்பனுக்கு உறவினன்.
தங்கப்பன் என்னும் தன் உறவினன் சில நாட்கள் முன்புதான் இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தான் என்று சொன்னான். அந்தத் தங்கப்பனை பயிற்சி மையத்தில் சந்திப்பேன் என்றோ ஒரே அலுவலகத்தில் வேலை செய்வோம் என்றோ தெரியாது.
ஏதோ ஒரு சமயத்தில் வேம்புவைப் பற்றி தங்கப்பன் விசாரித்தார். வேம்புவைப் பற்றி எனக்குத் தெரியாத சில விவரங்களையும் தெரிவித்தார். தங்கப்பன் விவரித்தபோது கண்களில் தெரிந்த வியப்பும் கனிவும் இன்றும் நினைவிருக்கிறது. சொல்லப்படுபவரின் குணநலன்களோடு சொல்பவரின் குணநலன்களும் இது போன்ற சமயங்களில் வெளிப்படும்.
வேம்புவின் தந்தை சங்கரலிங்கம் தன் தகப்பனார் பெயரான பொன்னுலிங்கம் என்பதைத்தான் அவனுக்குப் பெயராகச் சூட்டினார். கிட்டத்தட்ட தவமிருந்து பெற்ற பிள்ளை. அதற்கு முன் இரு குழந்தைகள் பிறந்திருந்தாலும் நாள் கணக்கிலேயே இறந்துவிட்டன. பெரியவரான தாத்தா பெயரை வைத்துக் கூப்பிடமுடியாது என்பதால், கூப்பிட வேறு பெயர் தேவைப்பட்டது. குழந்தைகள் தக்கவில்லை என்றால், பிச்சை, குப்பன், வேம்பு என்று பெயரிட்டு அழைப்பது வழக்கம். அதனால் குழந்தை பொன்னுலிங்கம் ‘வேம்பு’ ஆகிவிட்டான்.
அரிசி மற்றும் தேங்காய்தான் குடும்ப வியாபாரம். நல்ல செயலான குடும்பம். மேலும் கோவில் குளம் என்று தர்மம் செய்வது அவர்கள் வழக்கம். ஆனால் அதற்கான புகழ் தேடிக்கொள்வது அவர்கள் விருப்பமில்லை. சற்றுத் தொலைவில் இருந்த ஒரு கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு ஒரு பெரும் தொகையினை அளித்திருந்தார்கள். ஆனாலும், கூட்டத்தோடு கூட்டமாகத்தான் அந்த நிகழ்வில் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டார்கள்.
பல உறவினர்களுக்கு, முக்கியமாகக் கல்விச் செலவுகளுக்கு, உதவுவதில் தயங்கியதே இல்லை. சுற்றத்தில் இந்தக் குடும்பம்தான் பசையுள்ள குடும்பம். ஆனால் எளிமையான வாழ்க்கையும் ஆழமான பக்தியுமாக இருந்தார்கள்.
திருமணம் ஆகி பல வருஷங்களுக்குப் பின்பிறந்தவன் வேம்பு. ஒருமுறை பெற்றோரை அழைத்து வருமாறு வேம்புவிடம் சொல்லியிருந்தார்கள். சங்கரலிங்கம் மகனுடன் போயிருந்தார். தலைமை ஆசிரியர் புதியதாக வேலைக்கு வந்தவர். “அப்பா ஊரில் இல்லையா? தாத்தாவை அழைத்து வந்திருக்கிறாயே?” என்று கேட்டாராம்.
தாத்தா பொன்னுலிங்கம் வியாபாரத்தில் கெட்டிக்காரர். கொள்முதலிலும் ஏலம் எடுப்பதிலும் நல்ல அனுபவம். அவர் காலத்திற்குப்பிறகு அப்பா சங்கரலிங்கம் குடும்பத் தொழிலைத் தொடர்ந்தாலும் அவ்வளவு வெற்றிகரமான வியாபாரி என்று சொல்ல முடியாது.
கிராமப் பக்கங்களில் ஒரு சொல்வழக்கு உண்டு. ஒரு கண் உள்ள நெல்- இரு கண் உள்ள மாடு- மூன்று கண் உள்ள தேங்காய் மூன்றுமே வியாபாரியை எப்போது வேண்டுமானாலும் கவிழ்த்துவிடும் என்பார்கள்
ஒரு பெரும் தென்னந்தோப்பை ஏலம் எடுத்த விவகாரத்தில் பெரும் நஷ்டம் வந்துவிட்டது. இயற்கையின் ஆவேசத்தில் தோப்பு பாழாயிற்று. அந்தக் காலத்தில் காப்பீடு போன்ற வசதிகள் இல்லை. முழு நஷ்டத்தையும் தந்து இதர சொத்துக்களை விற்று ஈடு செய்தார். கொஞ்சமும் வருத்தப்படவில்லை.
வேம்புவின் தாய் நோய்வாய்ப்பட்டார். துரதிருஷ்டம் ஒன்றன்பின் ஒன்றாக வரும் என்று சொல்வார்களே, அதுதான் இந்தக் குடும்பத்திற்கு ஏற்பட்டது. சில நாட்களில் தாயும் தொடர்ந்து தந்தையும் மறைய வேம்பு அனாதையாக ஆனான். சுற்றத்தினர் தங்களால் இயன்றவகையில் உதவத்தான் செய்தார்கள்.
இலவச கல்விக்கும் ஹாஸ்டலுக்கும் யாரோ ஏற்பாடு செய்துகொடுத்தார்கள். வேம்புவிற்கு ஒரு தாய் மாமன் உண்டு. அவர் இளம் வயதிலிருந்தே உடல்நலம் குன்றியவர். அவரும் இவனுடன் சேர்ந்துகொண்டதால், ஹாஸ்டலை விடும்படியாகிவிட்டது, உறவினர்கள் ஒன்றுகூடி இவர்கள் செலவுகளை கவனித்துக்கொண்டார்கள். இவையெல்லாம் தங்கப்பன் எனக்கு அளித்த தகவல்கள். நானே கவனித்த சில விஷயங்களும் உண்டு.
சரித்திரம் நிகழ்ந்ததோ இல்லையோ, ‘வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும் சக்கரம் சுழல்கின்றது’ என்பது வேம்புவிற்கு மிகவும் பொருத்தம்.