புத்தம்புது பொருள்கேட்கும் சின்னஞ்சிறு குழவியும்
பெற்றவரைக் கேட்பதுவும் என்னதான் முடிவு?
பகலின்றி இரவின்றி ராப்பகலாய்ப் படித்துவிட்டு
தேர்வெழுதிக் கேட்பதுவும் என்னதான் முடிவு?
கால்சோர மெய்சோர கண்களுமே பூத்துவர
கற்படிகள் தேய்ந்திடவே பணிமனைகள் மீதேறி
‘காலியில்லை’ போர்டுகண்டு மனமுருகிக் கேட்பதுவும்
‘கடவுளே அடியேனுக்கு என்னதான் முடிவு?’
காதலிலே தோல்வியினைக் கண்டவக் காளையவன்
கருத்துடனே நோக்குவதும் என்னதான் முடிவு?
கடிமணம் கொண்டவன் பேதங்களைக் கண்டுவிட்டு
கதறிக் கேட்பதுவும் என்னதான் முடிவு?
வயிறொன்று பசியினை யள்ளிச் சொரிந்திட
வறுமை கோலத்தில் குழந்தைகள் கலங்கிட
வற்றிய வயிறுடனே ஏழையவன் கேட்பதுவும்
‘வறுமைக்கு ஆண்டவனே என்னதான் முடிவு?’
வாழ்வின் சாரமே தொக்கியே நிற்பது
வளமிக்க கேள்வியாம் ‘என்னதான் முடிவில்?’
இகத்தின் முதல்வன் இறைவனை நாடும்
இவ்வேழை கேட்பதுவும் ‘என்னதான் முடிவு?’