திவாகர் தயக்கத்துடன் என்னை அணுகினான். இந்த 24 வயதுடையவன், வசதியான குடும்பத்தைச் சார்ந்தவன். ஏன் இப்போது என்னை அணுகினான் என்ற கேள்வி எழுந்தது. எதற்காக ஒரு ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கரைத் தேடி வரவேண்டும்?
திவாகர் கல்லூரியிலிருந்து கேம்பஸ் தேர்வு வழியாக வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம்தான் ஆகிறது. அவனுடன் ஐந்துபேர் தேர்வானவர்கள். நல்ல இடம், அதிக சம்பளம். திவாகர் அப்படியே பூரித்துப்போனான்.
அவன் பெற்றோர் இருவரிடமும் ஏற்பட்ட சில மாற்றங்களினால் வேலையில் சேர்ந்த முதல் வாரத்திலேயே இந்த மகிழ்ச்சி கரைந்துபோக ஆரம்பித்தது. அவனுடன் வித்தியாசமாகப் பேசுவது, ஏதேதோ கேள்விகள், அவர்களின் மனப்பாங்கு ஏனோ மாறியுள்ளது எனத் தோன்றியது. இருவருமே தான் கிளம்பும் நேரத்தையும், திரும்பி வரும் நேரத்தையும் மிகக் கூர்மையாகக் கவனிப்பதை உணர்ந்தான். வேலையினால் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தால், அம்மா அழுதுகொண்டு, அப்பா குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு, தம்பி சிடுசிடுவென்று இருப்பதைக் கவனித்தான். இதுவரைக்கும் இப்படி ஒரு பொழுதும் இருந்ததில்லை.
அம்மாவைச் சமாதானப் படுத்தவோ, நம்ப வைக்கவோ முடியவில்லை. பக்கத்து வீட்டுப் பெண் ஏதோ கேட்டதற்குப் பதில் சொன்னதை அம்மா பார்த்தாள். வீட்டிற்கு வந்ததும் மிகவும் திட்டினாள் என்றான். இதுவும் முதல் தடவையே. இன்னொரு நாள் கோவிலில் தெரியாத பெண்ணிற்குப் பைக்குள் பிரசாதம் போட உதவியதைப் பார்த்த அம்மா அங்கேயே சத்தம் போட்டாள். வெட்கமானது. இந்த இரு சம்பவங்களுக்குப் பின்பு, கைப்பேசியில் யார் அழைத்தாலோ, குறுஞ்செய்தி அனுப்பினாலோ யார், என்ன என அம்மா கேட்டுக்கொண்டே இருப்பாளாம். எவ்வளவு சொன்னாலும் அவளுக்குச் சந்தேகங்கள் இருந்துகொண்டே இருந்தது.
நாளாகநாளாகத் தன்னால் கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலவில்லை என எண்ணியதில் சலிப்புத் தட்டியது. அதுவரையில் வராத கோபம் வந்தது. கோபத்தில் சுருக் எனப் பேசினான். சந்தேகங்கள் அவன் குழப்பத்தை அதிகமாக்கியது. ஒரு அமைதியற்ற நிலை உணர ஆரம்பித்தான். இப்படித் தான் இருப்பதை வெறுத்தான். அப்பாவிடம் பேசுவது அர்த்தமற்றது என நினைத்து அவரை அணுகவேயில்லை.
ஒன்று மட்டும் எனக்கு மிகத் தெளிவாக, வெளிப்படையாகத் தெரிந்தது- மேற்சொன்ன ஒவ்வொன்றும் மன அழுத்தம் கொடுக்க, வேலையில் முழு கவனத்தைச் செலுத்தமுடியவில்லை. வேலையை நேரத்திற்கு முடித்துத் தராததை அவனுடைய மேல் அதிகாரிகள் ரசிக்கவில்லை.
அதிகாரிகள் அவனை எச்சரிக்கை செய்தார்கள். திவாகரின் ட்ரைனிங் ப்ரோபேசன் காலத்தில் இப்படி நேர்வது நல்லது அல்ல. அபாயகட்டம். திவாகர், வேலைக்கு ஆபத்து வந்துவிடுமோ எனக் கவலைப்பட்டான். வேலையிலிருந்து போகச் சொன்னால்? தலைகுனிவு. இந்தத் தருணத்தில்தான் திவாகர் ஒரு மனநல ஆலோசகரைப் பார்க்க முடிவெடுத்தான்.
திவாகரின் கல்லூரியில், பல ஆளுமை நிபுணர்களை அழைத்து, அவர்களின் தொழில், அந்தத் துறையில் நடத்தும் சாதனைகளைப்பற்றி மாணவர்களுக்குப் பகிர்ந்துகொள்ளச் செய்திருந்தார்கள். அப்படி ஒரு மனநல ஆலோசகர் பகிர்ந்ததும், மாணவர்கள் மனதில்பதிந்தது – நம் உள்ளிலோ, அல்ல வெளியிலோ, தாளமுடியாத அனுபவிப்பு / சூழ்நிலைகளினால் (திவாகரின் இப்போதைய குடும்பச் சூழல்போன்று) ஸ்தம்பித்து விட்டால், தெளிவு பெற மனநல நிபுணர்களின் உதவி நாடுவது நல்லது, அவமானம் அல்ல, பெரும்பாலும் இதற்கு மருந்துகள் தேவையில்லை என்பதையும் புரிந்துகொண்டார்கள்.
மனநல ஆலோசகரை நாடுவதால் மனத்திடத்தை வளர்த்துக் கொள்ளமுடியும் என்பதற்குச் சான்றாக, சில வகுப்புத் தோழர்களும், நெருங்கிய நண்பர்களும் இருந்தார்கள். இவர்கள் அப்படி நாடி, தம் பிரச்சினைகளுக்குத் தெளிவுபெற்றார்கள். பல நன்மை தரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இந்த நண்பர்கள் திவாகரை மனநல ஆலோசகரை ஆலோசிக்கப் பரிந்துரைத்தார்கள்.
என்னை அணுக அச்சம் இருந்தது. திவாகரின் படிப்பு முழுவதும் ஆண்கள் படிக்கும் இடமாகவே இருந்தது. கூடப் பிறந்தவரும் தம்பி. உள்மனத்தின் ஊக்கத்தில் வந்தான்.
ஆமாம், எது திவாகரின் மனதைத் துளைத்தது? பிரதானமாக நின்றதோ, அம்மாவுடன் அவன் உறவு ஊசலாடுகிறதோ என்ற அச்சம்தான். அம்மா, திவாகர் செய்யும் ஒவ்வொன்றையும் விசாரிப்பது, கேள்வி கேட்பது, அவனை சதா சஞ்சலத்தில் வைத்தது. அம்மாவின் இந்த திடீர் மாற்றத்தினால் தன் இதயம் படபடப்பதாக உணர்ந்தான். சந்தேகம் சூழ்ந்துகொண்டதில் தவறுகள் அதிகரித்தது. கூட வேலை செய்வோரும், டீம் ஹெட்டும் பொறுமை இழந்தார்கள். இவை முதல் மாதத்திலேயே!
நான் திவாகர் கூறுவதை எதிர்க்காமல், குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டதால், தன்னை ஏற்றுக்கொண்டதாக அவனுக்குத் தோன்றியது. தன் சூழல் நேர்ந்ததற்கான காரணிகளை, தன்னைப்பற்றிய அந்தரங்கத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டான். இங்கு பகிரும் ஒவ்வொன்றும் வம்பு-தும்பு அல்ல, அவசியம் என்பது தெளிவானது. சொல்வதைக் கோர்த்து அதிலிருந்து பல விஷயங்களுக்கு அர்த்தம் விளங்க அவற்றை உபயோகித்தேன் என அறிந்தான்.
அவன் உள் மனதை உறுத்தியது, “நான் நல்ல மகனாக இல்லையோ?” என்பது..
இதை நாங்கள் ஆராய்ந்தது திவாகருக்குத் தன் அம்மாவின் பதட்டத்தின் காரணியைப் புரிந்துகொள்ள வாய்ப்பானது. அவன் அம்மா அவன் புது சூழலில் இருப்பதைப் பார்த்து “நான் அவனுக்கு வழி காட்டாவிட்டால், என் குழந்தை எப்படிச் சமாளிப்பான்?” என்று எண்ணி அவனுடைய ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து ஆராய்ந்தாள். கேள்விகள் கேட்டாள். அம்மா, ‘தன் குழந்தை’ எந்தவிதமான தொல்லைகளும் இல்லாமல் இருக்கப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்தால் இப்படி இயங்கினாள்.
இதனால் திவாகரின் அம்மாவுடன் நான் ஸெஷன் ஆரம்பித்தேன். அவளிடம் திவாகரைப்பற்றிக் கேட்க, அம்மா அளித்த பதில், “என் பிள்ளை நல்லவன். இந்த உலகை அறியமாட்டான். அதுவும் பெண்கள் வஞ்சகம், தந்திரமானவர்கள் என்பது அவனுக்குத் தெரியாது. கேள்விகள் கேட்டால், யோசிப்பான். அதான் கேட்டேன்”. அவன் அம்மாவை அவளுடைய சித்தி வளர்த்தாள். அந்த சித்தி தன் வாழ்க்கையில் வெவ்வேறு பெண்மணிகளினால் ஏமாற்றம் அடைந்திருந்தார். சித்தி, அம்மாவிடம்., “பெண்ணை மட்டும் நம்பாதே” என்று அடிக்கடி சொல்லுவாள். அது சரியா? இப்படி எண்ணுவதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்காமல், ஆராயாமல் சித்தி சொன்னதை அவன் அம்மா அப்படியே ஏற்றுக்கொண்டாள். தான் பெண்ணாக இருந்தும் இப்படி ஒரு எண்ணம்! அதிலிருந்து அவர்களின் அபிப்பிராயம் இப்படி மாறியது.
அம்மாவுடன் இதைப்பற்றிப் பல வாரங்கள் உரையாடவேண்டியதாயிற்று. அம்மா, தான் நினைப்பதையும், அந்த சித்தி பகிர்ந்ததையும், இதனால் தனக்குத் தோன்றும் எண்ணங்களையும் ஒரு தாளில் எழுதி விட்டு, மறு பக்கத்தில் இதற்கான தன் கடந்தகால வாழ்கையில் கண்ட ஆதாரங்களையும், இப்பொழுது தினசரி வாழ்வில் காணும் ஆதாரங்களையும் குறித்து எழுத வேண்டும். பல வாரங்கள் தேடியும் அப்படி ஆதாரம் எதுவும் அவளுக்குக் கிடைக்கவில்லை.
செய்யச் செய்யப் புரிந்து ஏற்றுக்கொண்டார் – ஒன்று நடந்துவிட்டால் மற்ற நேரங்களிலும் அச்சு அடிப்பதுபோல் அப்படியே நடக்கும் என்பதில்லை. அதே மாதிரி, ஒருமுறை ஒருவர் ஒன்று செய்தால் அடுத்த முறையும் அப்படியே செய்வார் என்பது இல்லை. எல்லோரும் இப்படி என்று நினைத்தால், தவறானது.
அம்மாவிற்குத் தெளிவானது. ஒருவரின் அனுபவத்தில் சூழலின் தாக்கம் உள்ளடங்கும். அதனால்தான் ஒன்றை வைத்து எல்லாவற்றையும் அப்படியேதான் எனச் சொல்லமுடியாது என்பதை ஆதாரபூர்வமாகப் பார்த்தாள். நாளடைவில், அவர்களையும், மற்றவர்களையும் இது பாதிக்கிறது எனப் புரியவர, அடுத்த ஸெஷன்களில் இந்த மனப்பான்மையால் அவர் கண்ணை மூடிக்கொண்டு இருந்ததையும், அதன் பாதிப்புகளையும் ஆராய்ந்தோம்.
திவாகரின் அம்மா தன் சிந்தனைகளைச் சுதாரித்துவர, அப்பாவை ஸெஷனுக்குள் சேர்த்துக்கொள்ள நேரம் வந்தது. அவருடைய அச்சங்களைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார். அவரின் மிகப் பெரிய அச்சம்: திவாகருக்கு அதிக அனுபவம் இல்லை, வெளி உலகம் தெரியாதவன். இதன் விளைவாக, எந்தப் பெண்ணாவது அவனிடம் பரிவுடன் பேசிப் பழகினால் அவளிடம் மனதைப் பறிகொடுத்து விடுவானோ என்று. திவாகரின் படிப்பு முழுவதும் ஆண்கள் படிக்கும் இடமாகவே இருந்ததாலும் அவருக்கு இந்த அச்சம். அவனைக் கடுமையாகத் திட்டி, கேள்வி கேட்டு மடக்கினால் அதைச் சந்திக்க திவாகருக்குதத் தைரியம் வளரும் என முடிவு எடுத்திருந்ததால்தான் அவனிடம் கடுமையாகப் பழகுவதாகச் சொன்னார்.
எங்கள் உரையாடல்கள் வளர, அவருக்குப் புரியஆரம்பித்தது, திவாகரின் யோசிக்கும், முடிவு எடுக்கும் திறன்தான் தனக்குக் கேள்விக்குறியாக இருந்தது என்று. இதை அறியாமல், வேறு எதற்கோ அவனைக் கோபித்துக்கொண்டோம் என உணர்ந்தார்.
மேலும் தெளிவு பெறுவதற்கு ஆலோசித்தோம். அப்பாவை நிஜ வாழ்க்கையில் தனக்கு நடந்தவற்றை எடுத்து திவாகருடன் பேசப் பரிந்துரைத்தேன். அவைகளைப்பற்றி அவன் தன் அபிப்ராயங்களைப் பகிர்ந்துகொள்ள, அவன் நிலை, சிந்தனை ஆற்றல், மனப்பான்மை, அவருக்குத் தெரியவரும். அவனுக்கும் அப்பாவிடமிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும்.
இதையே திவாகரைச் சற்று வேறுவிதமாகச் செய்யவைத்தேன். கலந்துரையாடலில் எழும் சிந்தனைகள், ஒரு தலைப்பட்ட கருத்துகள், ஓரவஞ்சனை, மனச்சாய்வு, என்பதை எல்லாம்பற்றி எழுதியபிறகு, அதன் பக்கத்தில் அதற்கு எதிர்வாதமும், அவன் அப்பாவின் கண்ணோட்டத்திலிருந்து தோன்றுவதையும் எழுதி வரச்சொன்னேன். இதைச் செய்ய, அவன் சிந்தனைத் திறன் நன்றானது. பிரச்சினைகளை மிகச் சுலபமாகச் சந்திக்க ஆரம்பித்தான். அப்பா-பிள்ளை பந்தம் இணைப்பு அதிகரித்தது. இதை “மேஜிக்” என்றே சொன்னார்கள்.
அப்பாவை திவாகருடன் தினம் ஒருமணி நேரம் கழிக்கச்சொன்னேன். அவருக்கு திவாகருடன் விளையாட்டுப் போட்டிகள் பார்ப்பது பிடிக்கும். முன்பு செய்ததுதான். அதையே இப்பொழுதும் துவங்கினார்கள். இருவரின் நெருக்கத்திலும், புரிதலிலும் பல திருப்பங்கள் வந்தன. இவர்களின் இணைப்பு கூடுவது பளிச்சென்று தெரிந்தது! பார்க்க மனதுக்கு இதமாக இருந்தது.
திவாகர், அவன் அம்மா, அப்பா, மூவரும் தங்களின் அனுபவங்களை மற்றவர்களின் சூழலிலிருந்து பார்க்க, மேலும் தெளிவு பெற்றார்கள். மூவரும் கடந்த மாதத்தில் வெளிப்படுத்தியது அவரவர் பயத்திலிருந்து என்பது அவர்களுக்குப் புரிந்தது. இதில் பரிதாபம் என்னவென்றால் அவர்கள் பாசமான குடும்பத்தினர். ஏனோ இந்தமுறை தங்களுக்குள் நிலவி வரும் அச்சத்தை நேரடியாகப் பகிர்ந்துகொள்ளவில்லை.
என்னுடன் பகிர்வதை முழுமையாக ஏற்றதினால், தன் உள்ளுணர்வைப் பகிரங்கமாகப் பகிர்ந்தார்கள். என்மேல் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையுடன், நானும் அவர்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கை கை கொடுத்தது. இதனால்தான் அவர்கள் சந்தித்த பல இடையூறுகளைச் சரிசெய்ய முடிந்தது.
அடுத்த கட்டமாக மூவரையும் ஒன்றாகப் பார்த்த ஸெஷன்கள். தங்கள் உணர்வு, விருப்பம், வேறுபாடுகளை, மற்றவருடன் பகிர்ந்துகொள்ளும் விதங்களைச் சரிசெய்யும் சந்தர்ப்பமானது. வேறுபாடுகள் நிலவியபோதெல்லாம் சரிசெய்யப் பல வழிகளை ஆராய்ந்தோம். பிரச்சினை ஒன்றுக்குப் பதில்கள் பல்வேறு, அவற்றைத் தேட வழிகள் பல உண்டு என்ற புரிதல் வந்தது.
இப்போதெல்லாம் திவாகர் தன் வேலை, அதன் சலிப்பு, சிரிப்பு, சிறப்பைத் தானாக வீட்டில் பகிர்ந்தான். அப்பா இரு விஷயத்தை மிகவும் பாராட்டினார்: இதையெல்லாம் திவாகர் பகிர்ந்துகொள்ளும்போது, தன் நிறுவனத்தை இழிவுபடுத்திப் பேசாததையும், நிறுவனத்தின் இரகசியம் பாதுகாத்த விதத்தையும். அம்மா, முழுமையாக ஏற்றக் கொண்டாள் – எந்தவித அச்சமோ, பயமோ இல்லாமல் தன் மகனோடு எல்லா வயது பெண்களும் சகஜமாகப் பழகிவருவதை. தன் ஆண்பிள்ளையை நம்பினாள். மிகவும் பெருமைப்பட்டாள்.