சூரிய தேவனுக்கோ, விஷ்வகர்மா தன்னை மயக்கத்தில் ஆழ்த்தித் தம்மை ஒன்றும் செய்யஇயலாதவனாக மாற்றிவிட்டாரே என்ற கோபாக்னி அவன் கண்களில் கொழுந்துவிட்டு எரிந்தது. ஸந்த்யாவின் மீது தான் கொண்டிருந்த அளப்பரிய காதல் தன்னை விஷ்வகர்மாவின் கைப்பாவையாக மாற்றிவிட்டதே என்ற ஆத்ம நிக்ரகம் அவனை வாட்டிஎடுத்தது.
அந்தக் கோபத்தில்தான் அருணனிடம் யாரும் தன்னைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று கடுமையான உத்தரவைப் பிறப்பித்துவிட்டுத் தன் கோபத்தை எரித்துக்கொள்ளும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான்.
சுற்றிலும் நெருப்புக் கோளங்கள், எரிவாயுக்கள் கொதிக்கும் கொப்பறையிலிருந்து குமிழி குமிழிகளாக வந்துகொண்டிருந்தன. நெருப்பு ஆறு சுற்றிலும் ஓடிக்கொண்டிருந்தது. நடுவே ‘ஓம்’ வடிவில் அமைந்த மாபெரும் ஹோம குண்டம். அதிலிருந்தும் வருகின்ற தழல்கள் தாமரை வடிவில் எரிந்து கொண்டிருந்தன. அதன் நடுவே கைலாய பர்வதத்திலிருந்து கொண்டுவந்த கல் இருக்கை . அந்த சிம்மாசனத்தில் எரியும் நெருப்புக்களின் மத்தியில் அமர்ந்து அழிக்கும் கடவுளான பரமசிவனை தியானித்துக்கொண்டே தன் மனதில் பொங்கிப் பிரவாகம் எடுக்கும் கோபத்தை ஹோம நெருப்பில் விழச்செய்து தன்னைச் சாந்தப்படுத்திக்கொண்டிருந்தான் சூரியதேவன். கிட்டத்தட்ட அது முடிவடையும் சமயத்தில்தான் அதைத் தடை செய்யும் விதத்தில் கதவு தட்டப்பட்டது.
எந்தக் கோபத்தை எரிப்பதற்காக அவன் அங்கே கடும் முயற்சி எடுத்துக்கொண்டிருந்தானோ அது பாதியில் தடைபெறும்படி கதவைத் தட்டியதால் அவன் கோபாவேசம் மீண்டும் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தோன்றின.
கதவைத் திறந்தால் அங்கே ஸந்த்யா நின்றுகொண்டிருந்தாள்.
எவளுக்காகத் தன் ஆற்றலையே காந்தச் சிகித்சையின் மூலம் குறைத்துக்கொள்ளத் தயாராய் இருந்தானோ அதே ஸந்த்யா எப்பொழுதும்போல் அவனை மயக்கும் விதத்தில் நின்றுகொண்டிருந்தாள்.
பனிமழையில் குளிர் நிலவென இருக்கும் தடாகத்தில் பொன்மலர்போலக் குளித்துக்கொண்டிருந்த அவளைக் கண்ட பிறகுதானே அவன் மனதில் புதுவித ஆசை என்னும் அக்னி உதித்தது. நெருப்பையே எரிக்கும் புதுவித காம அக்னி அல்லவா அது? குளிர்த்தீ !
அவளுடன் அவன் கூடியிருந்தபோது அவன் அதுவரைத் தீண்டிராத புதுவித சுகத்தை அனுபவித்தான். அதற்காக அவன் எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யத் தயாராயிருந்தான். அதைச் சாதகமாய்ப் பயன்படுத்திக்கொண்ட விஷ்வகர்மாவின் வலையில் தான் விழுந்ததுபற்றி எண்ணும்போது அவனுக்குத் தன்மேலேயே ஆத்திரம் பிறந்தது. காந்தச் சிகித்சை சாந்துக்குளியல் என்று தன்னை அவர் சிக்கவைத்ததை நினைக்கும்போது அவன் கோபம் வீசிவிட்ட நெருப்புபோல் வளர்ந்துகொண்டேயிருந்தது.
ஆனால் ஸந்த்யாவின் அழகு உருவத்தைக் கண்டதும் அவனுடைய கோபாக்னி குறைவதை உணர்ந்தான். ‘இவள் என் அருகே இருந்துவிட்டால் எனக்கு நெருப்பாற்றில் கோபத்தை எரிக்க வேண்டிய அவசியமே இல்லை ‘ என்பதை உணரத்தொடங்கினான். அவளைப் பிரிந்ததுதான் தன்னிலை தடுமாறச் செய்தது என்பதை உணர்ந்துகொண்டான். அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.
அதனைக் கண்ட அருணன் ‘இனி பயமில்லை’ என்று உணர்ந்துகொண்டு சூரியதேவனை வணங்கிவிட்டு ரதத்தை எடுத்துக்கொண்டு சென்றான்.
ஸந்த்யா தன் வலது காலை எடுத்துவைத்து சூரியதேவனின் அரண்மனைக்குள் சென்றாள்.
அவள் காலடி பட்டதும் அந்த அறையில் இருந்த வெப்பச் சலனங்கள் எல்லாம் மறந்து குளிர்த் தென்றல் உலாவத் தொடங்கியது.
ஆனால் ஸந்த்யாவின் முகத்தைப்பார்த்த சூரியதேவன் திடுக்கிட்டான். அவள் முகத்தில் ஏன் இந்த கோபாக்னி? குளிர் முகத்தில் எப்படி வந்தது இந்த அக்னிச் சீற்றம்?
” என்ன தைரியம் உங்களுக்கு? சூரியதேவன் அக்னியின் சாட்சிதானே? அந்த அக்னி சாட்சியாக நாம் புரிந்த காந்தர்வ மணத்தில் ஜனித்த குழந்தைகளை அழிக்க ஆணையிட்ட நீங்கள் ஒரு நல்ல தந்தையா?”
ஸந்த்யாவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் சூரியதேவனை அப்படியே நிலைகுலையச் செய்தன.
(தொடரும்)
இரண்டாம் பகுதி
“எனதருமை எமபுரிப்பட்டணவாசிகளே!” என்று அவருக்கே உரிய கணீர் குரலில் ஆரம்பித்தார் ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களில் நடுவராக இருந்து அமர்க்களமாகப் பேசிவந்த சாலமன் பாப்பையா அவர்கள்.
மதுரைக்காரரின் குரலில் அந்த ஊருக்கே உரிய நக்கலும் நையாண்டியும் சேர்ந்து கொட்டும். தமிழ் அறிஞர், இலக்கிய விரிவுரையாளர், கலைமாமணி என்று பட்டங்கள் பல இருந்தாலும் பட்டிமன்ற நடுவர் என்பதுதான் அவருக்கே உரித்தான பெயர்.
இனிய தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்த பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக்கொண்டு பட்டிமன்றங்களை நடத்துபவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் .
உதாரணமாக அவருடைய சமீபத்திய பொங்கல் விழா சிறப்பு பட்டிமன்றத்தைப் பார்த்த பின்னர்தான் அவரையும் அவரது குழுவையும் எமபுரிப்பட்டணத்துக்கு அழைத்து வரவேண்டும் என்று எமனும் சித்திரகுப்தனும் பெரிதும் விரும்பினார்கள்.
சாலமன் பாப்பையா அவர்களிடம் இதுபற்றி சித்திரகுப்தன் பேசியபோது அவரும் அவருக்கே உரிய பாணியில், ” அழச்சுக்கிட்டுப்போய் மறுபடியும் இங்கனே இட்டுகிட்டு வருவீகளா? இல்லே அங்கனேயே பிடிச்சு வைச்சிறுவீகளா? ” என்று கேட்டார். ராஜாவும் ” ஐயா கேட்டது ரொம்ப சரியான கேள்விங்க! எதுக்கும் நீங்க கொடுக்கப்போகிற செக்கை எங்க புள்ளைங்க பேரிலேயே கொடுத்திடுங்க, பின்னாடி எந்தப் பிரச்சினையும் இருக்கப்பிடாது பாருங்க” என்றார்.
திண்டுக்கல் லியோனியும் , ” எங்களுக்கு எந்த தண்டனை காத்துக்கிட்டிருக்கு? அந்தகூபமா? கும்பிபாகமா ? ” என்று கேட்க ” பட்டிமன்றம் அமைத்து ஐயா தீர்ப்புப்படி தேர்ந்தெடுத்துக்கலாம்” என்று பாரதி பாஸ்கர்கூற அப்போதே விவாதமேடை களைகட்டிவிட்டது.
முதலில் அந்தப் பொங்கல் விழாப் பட்டிமன்றத்தைப் பாருங்கள். அதன் பின் விவாதமேடையில் அவர்கள் பேசியதைக் கேட்போம். .
(தொடரும்)