பங்களூரில் ஸிந்துஜாவைத் தேடி….
பங்களூருவில் நாளைய டிராஃபிக்கைக் குறைக்க, இன்றைக்குச் சாலையின் மத்தியில் அரக்கர்கள்போல் நிற்கும் கான்கிரீட் தூண்களும், அதன்மேல் தொண்ணூறு டிகிரியில் உட்கார்ந்திருக்கும் பெரிய பீடமும், நாளை ஏதோ ஒரு முதன் மந்திரியால் பச்சைக் கொடி அசைத்து வெள்ளோட்டம் விடப்படும் மெட்ரோ ட்ரெயினுக்காகக் காத்திருக்கின்றன! இன்றைய சாலைகளைக் குறுக்கி ஒற்றையடிப் பாதைகளைப்போல மாற்றி, எல்லாவகை வாகனங்களையும் ஊர்வலம் செல்ல வைத்திருக்கின்றன. உள்ளே நடப்பது தெரியா வண்ணம், சுற்றிலும் தகர பேனல்கள் – இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அநேகமாக இதே நிலைதான் – ‘நான் வளர்கிறேனே மம்மி’ என்று சொல்வதைப்போல இருக்கின்றன!
தடைகளின்றி சில கிலோமீட்டர்கள் ஏதாவதொரு வாகனத்தில் செல்லமாட்டோமா என்ற ஆதங்கத்துடன், கன்னடத் தமிழில் பேசிய வெங்கடேசனுடன் (பேக்கு, பேக்கு என்ற போதெல்லாம் திரும்பிப் பார்த்து, ‘என்னை இல்லை’ என்று உறுதி செய்துகொண்டேன்!) மேலும் கீழும் குதித்தவாறு ( பாலைவன சஃபாரி இதைவிட குலுக்கலும், வயிற்றைக் கலக்கலும் குறைவாயிருந்த நினைவு!) பென்னர்கட்டாவிலிருந்து சுமார் 20 கிமீ தள்ளியிருந்த கோத்தனூர் நாராயணபுரா கிராஸ் சென்றேன்.
மூன்று பேருடன் குறுக்கே வேகமாய்ப் போகும் ஸ்கூட்டர், முதுகில் பல்லியைப்போல ஒட்டிக்கொண்டு, பாய் ஃப்ரண்டின் காதைக் கடித்தவாறு, கழுத்தைச்சுற்றி, முகம் மறைத்த ஓட்னியுடன், பல்சரில் பவனிசெல்லும் புதுமைப் பெண், புரியாத கெட்டவார்த்தையில் திட்டியவாறு ராங் சைடில் ஓவர்டேக் செய்யும் கருப்பு, மஞ்சள் ஆட்டோ, நாட்பட்ட அழுக்குடன் அசமஞ்சமாய் நின்று, புகை கக்கிக் கிளம்பும் நகர பஸ், விதவிதமான கலர், சைசுகளில் அரை இன்ச் இடைவெளியில் ஊரும் கார்கள் – ஐம்பதடிக்கு ஒரு சிக்னல், சிக்னல் இல்லாத ஜங்க்ஷன்களில் குழப்படியான ட்ராஃபிக் ஜாம், வாயில் வெற்றிலை பாக்குடன், வித்தியாசமாகக் கட்டிய புடவையுடன் பெண்கள், நீலநிற யூனிஃபார்மில் ஆண்கள் (குறுக்கும் நெடுக்குமாக வண்டிகளுக்கு நடுவில் சாலையைக் கடந்தபடி மெட்ரோ வேலை), நான்கு சக்கர வண்டிகளில் சப்போட்டா, கிர்னீர் பழம், ஆப்பிள், கொய்யா, திராட்சை – பாதி சாலையை அடைத்தவாறு வியாபாரம்!
ஒரு காலத்தில் மரங்களும், பார்க்குகளும் நிறைந்திருந்த பெங்களூர், இன்று ராட்சச வடிவில் விண்ணைத்தொடும் அடுக்குமாடிக் கட்டிடங்களுடன், வெயில் சுட்டெரிக்க, புழுங்கித் தொலைக்கிற பங்களூருவாக மாறியுள்ளது வருத்தமளிக்கிறது – இயற்கையை அழிப்பதில் நமக்கு ஈடு நாம்தான்!
20 கிமீ தூரத்தை இரண்டரை மணியில் கடந்தேன்! இரண்டு யூ டர்ன், ஒரு ராங் ஒன் வே, மூன்று முறை நிறுத்தி வழிகேட்டது எல்லாம் இதில் அடக்கம். (கூகுள் மேப் போட்டிருக்கலாமே என்னும் அறிவு ஜீவிகள், எனக்கு அந்த அளவுக்கு விபரம் பத்தாது என்பதையும், டிரைவர் வெங்கடேசனுக்கு வயது அறுபதுக்குமேல் என்பதால் அவருக்கும் இதெல்லாம் தெரியாது என்பதனையும் அறியவும்!)
இவற்றையெல்லாம் கடந்து, அந்தப் பெரிய அடுக்குமாடி குடியிருப்பை அடைந்து, செக்யூரிடியிடம் என் ஜாதகம் பதித்து, பின்னால் இருந்த ‘ஏ’ ப்ளாக்குக்குச் சென்றேன்! குழந்தைகளைப் பள்ளியிலிருந்து கூட்டிவந்த பிறகு, லிஃப்ட் ஏறுமுன், ஆராம்ஸாய் அரட்டை அடித்துக்கொண்டிருந்த நான்கைந்து நாரீமணிகளைத் தாண்டி, லிஃப்டில் 7 ஆம் நம்பரை ஒத்தி, தானாய் மூடித் திறந்த கதவுகளைவிட்டு வெளியேவந்தேன். சிரித்த முகத்துடன் வாசலிலேயே வரவேற்றார் ஸிந்துஜா – எழுத்தாளரும் என் நண்பருமான, ட்டிஆர் நடராஜன்!
அழகிய சிங்கர்தான் ஸிந்துஜாவை எனக்கு அறிமுகம் செய்தார் ‘ஸிந்துஜா கதைகளை படிங்க – ஸிம்பிளா கதை சொல்வார்’ என்றார்! விருட்சத்தில் ஓரிரண்டு கதைகள் படித்திருந்தேன். தினமணிக் கதிர் ஆசிரியர் பாவைசந்திரன் அவர்கள் என் கதையைப் படித்துவிட்டு, அவரது ‘நல்ல நிலம்’ நாவலுடன், எம் வெங்கட்ராம் கதைகள், ஸிந்துஜா சிறுகதைகள் புத்தகங்களைக் கொடுத்தார் – அறிமுகமே இல்லாத எனக்கு, அவர் கொடுத்த ஊக்கம் வியப்பையும், உற்சாகத்தையும் கொடுத்தது! சென்ற புத்தகக் கண்காட்சிக்கு ஸிந்துஜாவுடன் சென்றிருந்தேன். கே வி ராஜாமணி, சிங்கர், ‘தென்றல்’ சுவாமினாதன், சந்தியா நடராஜன், வண்ணதாசன் என ஏராளமான எழுத்தாளுமைகள் – பார்த்துப் பேசினோம்!
அவரது சிறுகதைகள் இயல்பான நடையில் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும்(தனி பதிவுதான் போடவேண்டும்). எழுத்துக்களும் அவரைப்போலவே – எளிமையும், நேர்மையும் கொண்டவை!!
ஏகாந்தமான, ஏழாவது தளத்தில் கலை நயத்துடன் ஒரு ஃப்ளாட். மகள் கொண்டுவைத்த மிக்சர் வகையறாக்களுடன், ‘சில்’லென்ற லெமன் ஜூஸ் – அன்றைய, இன்றைய பத்திரிக்கைகள், தீபாவளி மலர்கள், இன்று சிறுகதைகள், போட்டிகள், முகநூல் பதிவுகள், எப்போது, எப்படி எழுதுகிறோம், தனி வாழ்க்கையில் சில நிகழ்வுகள் என நாற்பது நிமிட உரையாடல் (அரட்டை அல்ல!). மனதுக்கு நிறைவாக இருந்தது.
நா பா வின் குறிஞ்சி மலருடன் விடைபெற்றுக்கொண்டேன். கார் வரை வந்து வழியனுப்பிவைத்தார்.
மாலை ஐந்துமணிக்குமேல் ஆகிவிட்டதால், அதிகமான டிராஃபிக்கில் மூன்றுமணி நேரத்தில், ஊர்ந்தபடி வீடு வந்துசேர்ந்தேன்!
இனிமேல் பங்களூரு வந்தால் ‘ககன’ மார்க்கத்தில்தான் வரவேண்டும் என நினைத்துக் கொண்டேன் (உடலைச் சுருக்கி, காற்றுபோல் ஆக்கி, நினைத்த இடத்திற்கு நினைத்த மாத்திரத்தில் ஆகாயமார்க்கமாகச் செல்வது! – மேல் விபரங்களுக்கு கோமலின் ‘பறந்து போன பக்கங்கள்’ பக்கம் 72 – -73 – குவிகம் பதிப்பு – பார்க்கவும்!).